செவ்வாய், 25 நவம்பர், 2014

நான் நடிக்க போகிறேன் (டத்தோ லீ சோங் வேய்)

டத்தோ லீ ஆட்டக்களத்தில்
நாட்டின் நற்பெயருக்கு பாடுபட, போட்டி விளையாட்டுகளும்  சிறந்தத் தளமாக அமைந்திருக்கிறது. அப்படியான விளையாட்டுப் போராளிகளான டத்தோ நிக்கோல் டேவிட், கராத்தே வீரார்கள்,  நீச்சல் வீராங்கனை பண்டேலேலா ரினோங் உட்பட தங்களது விளையாட்டுத் திறமையால் நம் நாட்டின் வாசத்தை உலகம் மணக்கச் செய்தவர்கள் பலர். அதில் நாட்டில் குறிப்பாக  முதல் நிலை ஆட்டக்காரர்  டத்தோ லீ சோங் வேய். அவரின் உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. உலக அரங்கிலும் மிகவும் புகழ் பெற்றவர் டத்தோ லீ.
பூப்பந்து அரங்கின் வழி நமது நாட்டிற்கு  வெற்றிமாலை சூட்டி அழகு பார்த்தவர். தனது அபார விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி  லீ சோங் வேய்  உலக நாடுகளின் கண்களுக்கு மங்கலாக தெரிந்த மலேசியாவை இன்னும் தெளிவாக  வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
டத்தோ லீ தனது விளையாட்டு எதிரியான
லின் டான்னுடன்
பினாங்கு மாநிலத்தில் 1982-ஆம் ஆண்டு பிறந்தவர் லீ சோங் வேய். 1996-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி லீ சோங் வேய்க்கு  மட்டுமல்ல, மலேசியாவுக்கே மிக முக்கியமானதாகவும் மேலும் சோதனையாகவும் அமைந்தது. காரணம் மலேசியாவுக்கு எந்த ஒரு பதக்கமும் கிடைக்காத நிலையில், பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் விளையாட்டின் வழி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்ற முதல் மலேசியராகவும் லீ சோங் வேய் இருந்தார். அந்த கணமே மலேசியா ஓர் நம்பிக்கை நட்சத்திரத்தை பார்க்கத் துவங்கிய நாளாகும்.  2008-ஆம் ஆண்டு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
உண்மையில் அவர் குறிவைத்து விளையாடிய தங்கப் பதக்கத்திற்கான அந்தப் போட்டி, அரங்கம் தீ பற்றி எரியாத ஒரே குறைதான். அந்த அளவுக்கு சூடு பிடித்த விளையாட்டு அது. இறுதியில் சீனாவின் முதல் நிலை ஆட்டக்காரரான லின் டான் தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொள்ள லீ-க்கு வெள்ளிப் பதக்கம்தான் கிடைத்தது. அன்று முதலே பூப்பந்து விளையாட்டின் எதிரிகளாக லின் டானும், லீயும் ஆனார்கள் எனலாம். நாட்டிற்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுதந்ததைப் பாராட்டி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், லீ-க்கு டத்தோ விருது வழங்கிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து, டத்தோ லீ பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிமாலைகளை சூடினார். அவருக்கு மற்றுமொரு எதிரியாக ஜப்பான் விளையாட்டாளர்கள் வந்தார்கள். டத்தோ லீக்கு சீனாவும், ஜப்பானும்தான் போட்டி விளையாட்டாளர்களாக அமைந்தார்கள்.
டத்தோ லீயின் வெற்றி வாய்ப்புக் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்ட ஆண்டாக 2011-ஆம் ஆண்டைச் சொல்லலாம். காரணம் தோமஸ் கிண்ணப் பூப்பந்தாட்டம் அது. நமது சொந்த நாட்டில் நடந்த அந்த பூப்பந்தாட்டத்தில் டத்தோ லீ தங்கத்தை பெற்றுத் தருவார் என்று மலேசிய வாழ் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், மிகப் பெரிய தோல்வியை டத்தோ லீ சொங் வேய் சந்தித்ததை அந்த விளையாட்டைப் பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே வேளையில், தேசிய பூப்பந்தாட்ட ஆணையத்தின் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பூப்பந்தாட்டத்திற்காக பல்வேறு வசதி வாய்ப்புகளையும் ஊக்குவிப்புத் தொகைகளையும்  அரசாங்கம் மானியமாக வழங்கும்போது ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்று கேட்கப்பட்டதோடு, டத்தோ லீயைக் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கியது. அவரின் செல்வாக்கும், அவரின் மீதான நம்பிக்கையும் குறையத் தொடங்கிய நாளென்றுகூட சொல்லலாம்.
அதன் பிறகு டத்தோ லீக்கு அமைந்தது அனைத்தும் சோதனைக் களமாகவே அமைந்தது. அவர் வெற்றி பெறுவார் என்றும் தோல்வியடைவார் என்றும் விளையாட்டில் ஈடுபடும் முன்பே விமர்சிக்கப்படத் தொடங்கினார்.
இவ்வருடம் முழுதுமே டத்தோ லீ பல விமர்சனங்களைச் சந்தித்தார். அதன் உச்சக் கட்டம்தான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியது.  கடந்த ஆகஸ்டு மாதம் டென்மார்க்கில் நடைபெற்ற உலகப் பூப்பந்து கூட்டமைப்பின் அனைத்துலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது, டத்தோ லீ சோங் வேய் உடலில் ‘dexamethose' என்ற ஊக்கமருந்து  கலந்திருப்பது இரு வாரங்களுக்கு முன்பு, நார்வே, ஆஸ்லோவில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து  அவருக்கு எதிரான முடிவு கிடைத்ததையடுத்து உலகப் பூப்பந்து கூட்டமைப்பு அவரை இடைநீக்கம் செய்தது யாரும் எதிர்பார்க்க்காத ஒன்றாகும்.
இதனையடுத்து இவ்விவகாரத்தை உலகப் பூப்பந்து கூட்டமைப்பு ஊக்கமருந்து விளக்கமளிப்பு குழுவிடம்  கொண்டு சென்றது.  ஆனால், டத்தோ லீ, தாம் போட்டியில் வெல்ல எந்தப் போதை மருந்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என கருத்து வெளியிட்டார்.
இளைஞர் விளையாட்டுத் துறையமைச்சர்
கைரி ஜமாலுடின்
இந்த விவகாரத்தில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுடின்  முதன்மையாளராக விளக்கம் கொடுத்தார். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான கடப்பாடும் அவருக்கு இருக்கிறது. இருந்த போதிலும் லீக்கு ஆதரவான பதிலை கைரி கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.   தமது பத்திரிகை செய்தியில் கைரி, ஊக்க மருந்தை செலுத்தியது தேசிய விளையாட்டு மையத்தின் மருத்துவர்கள் அல்ல என்றும், கோலாலம்பூரில் உள்ள விளையாட்டாளர்களுக்கான தனியார் நிபுணத்துவ மருத்துவமையம் (கிளினிக்) ஒன்றிலேயே காயங்களுக்கான மரபணு சிகிச்சை ஒன்றின்போது அவருக்கு அம்மருந்து செலுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார். அதோடு, ‘dexamethose' மருந்தை காயங்களுக்காக அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயன்படுத்த அனுமதியுண்டு. இம்மருந்து 10 நாள்கள் மட்டுமே உடலில் நீடித்திருக்கும். ஆனால் சொங் வேயின் உடலில் அதற்கும் மேற்பட்ட காலம் அம்மருந்து நிலைத்திருந்ததற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தது, லீயின் அபிமானிகளுக்கும் கேள்விக்குறியாக அமைந்தது.
டத்தோ லீ தனது பயிற்றுனரான
ரசிட் சிடேக்வுடன்
அதனைத்தொடர்ந்து டத்தோ லீக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான முன்னாள் தேசியப் பூப்பந்து வீரர் ரசிட் சிடேக் அதிர்ச்சிதரும் தரும் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதாவது  தடை செய்யப்பட்டிருந்த குறிப்பிடப்பட்டிருக்கும் ஊக்க மருந்தை உலகின் முதல் நிலை வீரரான டத்தோ லீ சோங் வேய் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாகவும், மலேசிய, பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு லீ சோங் வேய் அம்மருந்தைப் பயன்படுத்துவது தெரியும் எனவும்  இது நீண்ட காலமாக நடந்து வரும் விஷயம் என்றும் பகிரங்கடுப்பத்தினார்.
டத்தோ லீ தனது பயிற்றுனரான
மிஸ்புன் சிடேக்வுடன்
நாட்டின் மூத்த வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் இளம் வீரர்களுக்கும்கூட இவ்விஷயம் லேசாக தெரியும் என்றாலும், முதல் நிலை ஆட்டக்காரர் என்ற காரணத்திற்காக வாய் மூடி இருந்தனர் என்று ரசிப் சிடேக்கூறியிருந்தது மலேசியப் பூப்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், இது குறித்து டத்தோ லீயின் தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை என்பதையும் நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டிதான் உள்ளது.
இதற்கிடையில், டத்தோ லீ மீது  இருமுறை மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனைகளில், சோங் வேய் அம்மருந்து பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் காணப்பட்டது உறுதிப் படுத்தப்பட்டது என பூந்துபந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டது. மேலும், டத்தோ லீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளார், என உலகப் பூப்பந்து கூட்டமைப்பு (பிடபள்யஃஎப்) தெரிவித்தது.  தன்மேல், விழுந்த பழியைத் துடைப்பதற்குத் தவறிய டத்தோ லீ நிலைகுலைந்துதான் போனார். இந்நிலையில்தான் கடந்த வாரம் தனது நிலைப்பாட்டை வெளிபடுத்தினார் டத்தோ லீ சொங் வேய்.
“நான் மருத்துவர்களை முழுமையாக நம்பினேன். தற்போது காலம் கடந்து யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து விளையாட்டாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம். நான் மருத்துவம் அறியாதவன்; பூப்பந்தில் எத்தனை இறகுகள் இருக்கும் என்பதும், களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே அறிந்தவன் நான்” என்று டத்தோ லீ தெரிவித்துள்ளார்.
தேசிய அணியில் டத்தோ லீ சோங் வேய்க்கு அடுத்து சிறந்த இளம் ஒற்றயர் ஆட்டக்காரர்களை மலேசியப் பூப்பந்து சங்கம் கண்டறிய வேண்டிய கடப்பாட்டினை தற்போது கொண்டுள்ளது.  உண்மையில், இந்தத் தேடலை பல ஆண்டுகளுக்கு முன்பே  பூப்பந்து சங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும் . இதுகுறித்து பல தடவை வலியுறுத்தப்பட்டுவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை. பூப்பந்து என்றால், ஒற்றையர் பிரிவில் டத்தோ லீயையும், இரட்டையர் பிரிவில் கூ கின் கீட்- தான் புன் ஹியோங்    ஆகியோர் நாட்டிற்கு பதக்கத்தை வென்று தருவார்கள்ன் என்பது மலேசியாவின் எதிர்பார்ப்பாக அவர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது.  இந்த எதிர்பார்ப்பும்  நம்பிக்கையும் அவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும்,  தர்ம சங்கடத்திற்கும் ஆளாக்கும் என்பது நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
கூ கின் கீட்- தான் புன் ஹியோங்
தற்போது டத்தோ லீயின் மீதான தடை நீடித்தால், அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. அதற்கும் அவரே பதிலளித்துள்ளார். அதாவது, தொடர்ந்து தனக்கு விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டால், கவர்ச்சியான தோற்றம் கொண்டதால் நடிப்பு துறைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறினார். டத்தோ லீ எத்தனை மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தால் இப்படி கூறியிருப்பார்? உண்மையில் நடிக்கத் தெரியாத மனிதர் டத்தோ லீ.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக