செவ்வாய், 25 நவம்பர், 2014

தீப்பொறியும் அவரின் புகைப்படமும்



புகைப்படங்கள் நமது வாழ்வின் அல்லது நிகழ்வின் அல்லது வரலாற்றின் பதிவுகளாகவும் சாட்சிகளாகவும் உள்ளன. என்னை இதுபோன்ற சில புகைப்படங்களில் சிலர் மிகவும் தொந்தரவு செய்வதுண்டு. கடந்த சில நாள்களில் என்னை மிகவும் பாதித்த புகைப்படமாக, நான் எடுத்த  கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியின் புகைப்படம் அமைந்துவிட்டது.
‘தீப்பொறி பொன்னுசாமி' இது நான் மலேசிய இலக்கிய உலகுக்கு வந்த காலம்தொட்டே கேட்கத்தொடங்கிய பெயர். மரபுக்கவிதைகளில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லாததால், பெரிய எதிர்பார்ப்புகளோடு நான் மரபுக்கவிதையை வாசித்தது இல்லை. அதே வேளை, மரபுக்கவிதை கவிஞர்களுடனான நட்பும் எனக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்ததில்லை. அண்மையில் இறையடிச் சேர்ந்த இறையருள் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் இரங்கல் கூட்டம் சோமா அரங்கில் நடந்தது. செய்தி சேகரிப்புக்காக நான் சென்றிருந்தேன். அப்போதுதான் தீப்பொறி அவர்களை முதன் முதலாகச் சந்தித்தேன். நிகழ்வை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த என்னை அழைத்து தன்னை புகைப்படம் எடுக்கும்படி கூறினார். நானும் எடுத்தேன். எனது டிஜிட்டல் கேமராவில் ஃபிளாஷ் வரவில்லை. ஆனால், அவரின் படம் மிகத் தெளிவாகப் பதிவாகியது. இருந்த போதிலும் நான் அவரை புகைப்படம் எடுத்ததில் அவருக்கு நம்பிக்கை இல்லை.
நீ ஏமாற்றுகிறாய், ஃபிளாஷ் வரவில்லை, புகைப்படம் எடுக்கவில்லை என்று அவர் கூறியவேளையில், நான் திரும்ப திரும்ப 3-4 படங்களை எடுத்து அவரிடம் காண்பித்தேன். ஆனால், ஒரு நம்பிக்கையின்மையே அவரிடம் இருந்தது. எனக்கு எனது முன்கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்த வேளையில், பொன் கோகிலம் வந்து, நிலைமையைச் சரி செய்தார். பிறகு தனது அப்பாவுடன் ஒரு படம் எடுக்கச்சொல்லி கேட்டார். நானும் எடுத்தேன். அதை தனது முக நூலுக்கு அனுப்பி வைக்கும்படி பொன் கோகிலம் கேட்டுக்கொண்டார். ஆனால், நான் அனுப்பி வைக்கவே இல்லை.  அன்று கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் இரங்கல் கூட்டத்தில் எடுத்த தீப்பொறி அவர்களின் புகைப்படம், கடந்த புதன்கிழமை அவரின் இறப்புச் செய்திக்காக ‘நம் நாடு' நாளிதழில் பயன்படுத்தப்பட்டது. ஒரு புகைப்படம் எம்மாதிரியான வரலாற்றையும் பெற்றிருக்கலாம். ஆனால், இது போன்ற ஒரு பதிவு, ஒரு படைப்பாளனை மிகவும் துன்புறுத்தக்கூடியது. என்னுடன் அலுவலகத்தில்  வேலை செய்த ராமக்கிருஷ்ணன் என்பவரிடமும் தீப்பொறி அந்தப் படத்தை பலமுறை வாங்கித் தரும்படி கேட்டிருந்தார். நான் கொடுக்கிறேன் என்று கூறினேனே தவிர, வேலைப் பளு காரணமாக அக்கறையோடு அதை செய்துகொடுக்கவில்லை. இன்று அதைக் கொடுப்பதற்கு அவர் இல்லை.
இறுதியாக  தீபொறியின் பூத உடல் கடந்த வெள்ளிகிழமை (21.11.2014),  செலாயாங்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து மரியாதை செய்யப்பட்டு, செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது. நானும் எனது நண்பரும் தீப்பொறி அவர்களின் வீட்டுக்கு செல்லமுடியாத காரணத்தினால், செராஸ் மின்சுடலைக்குச் சென்றோம். அவரின் உடலை பார்ப்பதற்கு எனக்கு இறுதி வாய்ப்பு கிடைத்தது. அமைதியாக, அவரிடம் கொடுக்க தவறிய அந்த புகைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக