செவ்வாய், 4 நவம்பர், 2014

யோகியின் நேர்காணல்

2012-ஆம் ஆண்டு நான் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலக்கட்டம். மலேசிய இலக்கிய உலகில் யோகி ஓர் ஆணா அல்லது பெண்ணா என்ற குழப்ப நிலை பல வாசகர்களுக்கு இருக்க நான் என் வழிபார்த்து போய்க்கொண்டிருந்தேன். நண்பர் பால முருகன் அவரின் அநங்கம் சிற்றிதழுக்கு எனது நேர்காணலை பலமுறை கேட்டிருந்தார். நான் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறேன். காரணம், எனக்கே தெரியவில்லை. ஆனால், தினக்குரல் நாளேட்டின் ஞாயிறு பதிப்பு ஆசிரியரிடமும் நல்ல சினேகம் உண்டு. அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் அவர். அவர்மேல் மரியாதையும் உண்டு. என்னால் மறுத்துக்கூற முடியவில்லை. 2012-ஆம் ஆண்டு வெளிவந்த எனது இரண்டாவது நேர்காணல் இது.


நவீன பெருவெளியில் ஒரு கவிக்குயில்...!

சந்திப்பு: தினக்குரல் ஞாயிறு பதிப்பு ஆசிரியர் ராஜ சோழன் (2012)


யோகி என்று படைப்புலகில் அடையாளம் காணப்படும் இவர், நவீன இலக்கிய வெளியில் தன்னை நிலையாக நிறுத்திக்கொண்டவர். இலக்கிய தாகம் கொண்டு எழுத வந்த இவர் ஆரம்ப காலங்களில் பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதை, கதை,  கட்டுரை என எழுதிக்கொண்டிருக்கும் இவரின் பத்திகள் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்' என்ற நூல் வடிவில் வல்லினம் பதிப்பகம் மிக சமீபத்தில் வெளியிட்டுள்ளது. வாழ்வின் நகர்த்தலில் தான் கண்டடைவதை மிக எதார்த்தமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.துணிச்சலான பெண் படைப்பாளி இவர். ஓவியர் சந்துரு இவரது கணவர் என்பது இலக்கிய வட்டம் அறிந்த ஒன்று. இணையத்தில் துரிதமாக எழுதிக் கொண்டிருக்கும் இவரை இணைய வழி நேர்காணல் கண்ட போது...


-வணக்கம் யோகி, நாட்டின் முன்னணி வகிக்கும் நவீனத்துவ பெண் கவிஞரில் நீங்களும் ஒருவர். நீங்கள் எத்தனை ஆண்டு காலமாக இலக்கியத் துறையில் இருக்கிறீர்கள்?

2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதயம் இதழில் ‘பாரசம்' என்ற பகுதியில்  வெளிவந்த ‘கருணையோடு கொல்வீர்' என்ற கவிதையின் வழிநான் என்னை மலேசிய இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்துக்கொண்டேன். ஆனால், 2006-ஆம் ஆண்டு கவிஞர் மனுஷ்யபித்திரன் மலேசிய வருகைக்குப் பின் நவீன இலக்கியத்தில்  பரிச்சியம் ஏற்பட்டது. அதுவரையிலும் நவீன இலக்கியத்தை நெருங்க முடியாமல் விழுந்திருந்த முடிச்சுகள் அவரின்  இலக்கிய உரை தகர்த்தெரிந்தது.  அந்த நிகழ்வுக்கு பின் நான் எழுதிய ‘மகாத்மாவின் ஓவியம்' என்ற கவிதையே எனது முதல் நவீன கவிதையாக கொள்வேன். அது காதல் என்ற மலேசிய சிற்றிதழில் பிரசுரம் கண்டது. 

-இலக்கியத்திற்குள் உங்கள் நுழைவு  தற்செயலாக ஏற்பட்டதா அல்லது ஏற்கெனவே திட்டமிடப்பட்டதா? 

தற்செயலாக ஏற்பட்டதுதான். நான் கம்பத்தில் வசிக்கும் வரை எனது பெயர் அச்சில் ஏறும் பத்திரிகையில் பிரசுரம் ஆகும் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் அப்பாவின் கண்டிப்பு அசூரத்தனமாக எங்களை ஆட்டிப் படைத்திருந்தது. அவரின் மறைவிற்குப் பின் பிழைப்புக்காக வந்த பட்டண வாழ்கைதான்  எதார்த்தத்தைக் கற்றுக் கொடுத்து என்னை அடையாளப் படுத்தவும் செய்தது. 

-உங்கள் குடும்பத்தைப் பற்றி?

அம்மாவும் அப்பாவும்  ஆரம்பக் கல்வியே முறையாக கற்காதவர்கள்.செம்பனை மர தொழிலாளர்கள். என் உடன் பிறந்தவர்கள் என்னையும் சேர்த்து  4 பேர். நடுதர வசதி கொண்ட குடும்பம்தான். அப்பாவின் ஊதியம் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். இந்நிலையில் எங்களில் ஒருவராவது அரசாங்க வேலைக்கு  சென்றுவிட வேண்டும் என அப்பா லட்சியம் கொண்டிருந்தார். ஆனால், நாங்கள் இடைநிலை பள்ளியை முடிக்கும் முன்பே அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட காலமாற்றத்திடம் மிகவும் சிரமம்பட்டு போராடி வந்திருக்கோம். ஓவியர் சந்துருவும் நானும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம்.  அழகான வாழ்கை அமைதியாக நகர்கிறது. 

-குடும்ப சூழல் காரணமாக உங்கள் கல்வியை இடையிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஒரு பெண்ணாக எப்படி ஏற்றீர்கள்?

இந்திய சமுதாயத்திற்கு கல்வி எத்தனை முக்கியம் என்பதைச் சொல்லி தெரிவதல்ல. நம்மிடம் எந்த பலமும் இல்லாதபோது கல்வி மட்டுமே ஒரு கருவியாக நம் சமுதாயத்திற்கு பலமாக இருக்கிறது. அதை நிறுத்தும் சூழல் ஏற்பட்டபோது ஒரு பெண்ணாக கேள்விக்குறியாகதான் நின்றேன். நாளை என்பது நம் கையில் இல்லாதபோது நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், நான் என் பொறுப்பில் இருந்து பின்வாங்கவில்லை. எதையும் சந்திக்கும் ஒரு அசட்டு தைரியம் அப்போதும் சரி இப்போதும் சரி மாறாமல் என்னோடு பயணிபுட் வருகிறது. என்னுடைய பலமும் பலவீனமும் அதுதான் என்று நினைக்கிறேன்.

-கவிதை என்பதை நீங்கள் எப்படியாக பார்க்கிறீர்கள்?

ஒரு கதையோ, அல்லது நாவலையோ, நான்கே வரிகளில்  அல்லது அதைவிடவும் குறைவான வார்த்தைகளில் அல்லது சில வரிகளில் சொல்வதற்கு கவிதையால் மட்டுமே சாத்தியப்படும். உதாரணத்திற்கு கனிமொழியின் ஒரு கவிதை.

“எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்கு பெண்கள் மட்டும் 
ஆவதே இல்லை”

இந்துத்துவ அடிப்படையில் பெண்களுக்கு இழைக்கப்படும் ஒடுக்கு முறையை நேரடியாக பேசும் கவிதை இது. அதைவிடவும் குறைவான சொற்களில்  நகுலனின் ஒரு கவிதையை பார்க்கலாம்.

“இருப்பதற்கு என்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்”

தத்துவாத்தமாகவும்  யதார்த்தமாகவும் இருக்கும் இந்த கவிதைக்குள்  நகுலனின் பல கதைகளோ அல்லது நாவல்களோ விரிந்து திரியலாம். ஆனால், நகுலன் அதை கதையாகவோ அல்லது நாவலாகவோ வடித்திருந்தால் கவிதையில் இருக்கும் அழுத்தம்   இருந்திருக்குமா தெரியவில்லை. அந்த வகையில் யதார்த்தத்தின் வெளியாகவே நான் கவிதையை பார்க்கிறேன். தனக்கு நிகழ்வது கவிதையாக மாறும்போது அது பொதுவான குரலில் ஒலிக்கும் எனவும் நம்புகிறேன்.

-ஒரு கவிஞராக உலா வருவது மகிழ்ச்சியை தருகிறதா? நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்கு பிடித்தது?

ஒரு படைப்பாளியாக இருக்கவே நான் என்றும் விரும்புகிறேன். எழுத்தில் இருக்கும் வீரியமும் தெளிவும் உரையில் அளிக்க முடியாது என்று நம்பும் பெண்நான். வாய்மையே வெல்லும் என்பதிலும் முரண்படவில்லை. இரண்டும் வெவ்வேறு தளங்கள் அவ்வளவே. நான் எழுதும் ஒவ்வொரு கவிதையும்  எழுதுவதற்கு குறைந்தது ஒரு மாதம் அவகாசம் எடுத்திருக்கும். எதுவுமே குறைந்த நேரத்தில் எழுதப்படவில்லை. குறைந்த நேரத்தில் என்னால் எழுதவும் முடியாது. மேலும்  நிகழ்ந்து என்னை  பாதித்தே அவை கவிதை வடிவம் பெறுகின்றன. ஆதலால் எல்லாமும் எனக்கு பிடித்த கவிதைதான். இவைகளில் ‘ஒரு நாள் கடவுளுடனும் மிருகத்துடனும் வாழ நேர்ந்தது' என்ற கவிதையும், ‘என் மரணத்தை நானே சம்பவிக்க' என்ற கவிதையும் என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் கவிதைகள். 

-நவீன கவிஞராக தாங்களின் கவிதைகள் புது மொழியினை கொண்டுள்ளது. யாருடைய கவிதைகளை உங்களின் முன்மாதிரியாக  வைத்துள்ளீர்கள்? 

ஆரம்ப நிலையில் கவிஞர் மனுஷ்யப்புத்திரனின் கவிதைகளில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அவரின் கவிதை  நவீனக் கவிதைகளாக இருந்தாலும் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் எளிமையாகவும் முன்மாதிரியாகவும் இருந்தன. அடுத்து கோகுலக் கண்ணன் கவிதைகளை குறிப்பிடுவேன். ஆனால், எனக்கென்று இருக்கும் பாணியில் இயங்குவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஒருவரின் பாணியை காப்பியடிப்பதும், ஒருவர் கவிதையை அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சமாக மாற்றி  தனது பெயரை இட்டுக்கொள்வதும் நமக்கு நாமே செய்துக்கொள்ளும் துரோகம்.

-தமிழக கவிஞர்களாகிய மாலதி மைத்திரி, குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகள் உடல் மொழியினை கொண்டிருப்பதை நீங்கள் ஆதரிக்கீன்றீர்களா?

பெண் உடல் என்பது ஆண்கள் துய்க்கப்படும் ஒரு பொருளாகத்தான் இதுநாள் வரையிலும் இருந்து  வருகிறது. ஆணுக்கும் தாய்மை உணர்வு வேண்டும் என தொடர்ந்து கூறி வருபவர் மாலதி மைத்திரி. கவிதை என்பது ஆண்பால், பெண்பால் கடந்து இயங்க வேண்டும் என தமிழச்சி தங்க பாண்டியன் கூறிவருகிறார். ஆணாதிக்க சிந்தனைகளை மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சல்மா தன் கருத்தை முன் வைக்கிறார். ஆணிடமிருந்து பெண் உடலை மீட்டெடுக்கும் போராட்டத்தை பாலியல் கவிதைகள் என்று சர்ச்சைக்குள்ளாக்குகிறார்கள் என்று சுகிர்தராணி ஆதங்கப்படுகிறார். சககால படைப்பாளரான எஸ்.ராமகிருஷ்ணனால்,  குட்டி ரேவதி ‘சண்டை கோழி படத்தில் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டார்.  இந்நிலையில் பெண்ணியம் பேசுவதும் பெண் மொழியும் அவசியம் என்றே படுகிறது. தனக்கு விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையைத்தானே பெண் எழுத்து மொழிப்படுத்திக் கொள்கிறது. அதை நான் ஆதரிக்கிறேன். 

-மறைக்கப்பட வேண்டியதை வெளிப்படையாக காட்டுவது  நல் இலக்கியமாகுமா?

அதை அத்தனை குறுகிய பார்வையில் பார்ப்பது அறமாகாது. ஆணாதிக்கப் பார்வையில் பல மாதிரியான விமர்சனங்களால் பெண் கவிஞர்கள் தாக்கப்படுகிறார்கள். தன் விடுதலை வேண்டியும் பெண் உடல் கொண்டாட வேண்டிய ஒன்று என்ற வழியுறுத்தலும் மலிவான விஷயமோ மலிவான இலக்கியமோ கிடையாது. அதன் வலியை சுறுக்கென்றும் நச்சென்றும் சொல்ல கவிதையால் மட்டுமே சாத்தியப்படுகிறது. இரட்டை அர்த்தம் உள்ள வரிகளாளும் ஆபாச வார்த்தைகளாளும்  திரப்படங்களில் வரும்  பாடல்களும் கவிதைகளும் ஆண் கவிஞர்களால் எழுதப்பட்டிருந்த போதிலும்  யாரும் அதை சட்டை செய்யதது ஏன்? ஆண் என்ற காரணத்தினாலா? இது என்ன இலக்கிய தார்மீகம்?

-நவீன கவிதைகள் பல சமையங்களில் புரியாத மொழியை அதாவது ஒரு  இருண்மையைக் கொண்டிருப்பதாக  சொல்லப்படுகின்றதே?

மேலை நாடுகளில் நவீனத்துவம், பின் நவீனத்துவம், அதி நவீனத்துவம் என இலக்கியம் அடுத்தடுத்த கட்டத்துக்கு பயணித்துக்கொண்டிருக்கிறது. நான் இன்னமும் பழைய பாட்டையே படிக்கொண்டிருக்கிறோம். ஒரு கவிதை புரியக்கூடாது என்ற நோக்கத்தில் யாரும் புனைவது இல்லை.  யாருக்கும் புரியாத கவிதையால் ஒரு கலைஞனுக்கு என்ன நன்மை இருக்கப்போகிறது? தொடர் வாசிப்புக்குப் பிறகு அந்த இருண்மை அகலலாம். அப்போதும்  புரியவில்லை என்றாலந்தக் கவிதை அந்த வாசகனுக்கானதில்லை என கவிஞர் மனுஷ்யப்புத்திரன் கூறியதை இங்கே முன்வைக்கிறேன். சில கவிதைகளில் சில வரிகள் இயல்பாகவே இருண்மை கட்டமையலாம்.அது ஒரு கவிஞனின் மன ஓட்டத்தின் வெளிபாடே ஆகும். ஆனால், நவீனக்கவிதை புரியாத மொழி எசூழ் வரையருப்பது வாசகனின் மனத்தடையே முதல் காரணம் என நினைக்கிறேன். 

-சமீபத்தில் வெளியீடுக் கண்ட உங்களது ‘துடைக்கப்படாத ரத்தக் கரைகள்' என்ற தொகுப்புக்கு வரவேற்ப்பு எப்படி உள்ளது?

புத்தகத்தை படித்தவர்கள் நல்ல மாதிரியான விமர்சனத்தையே முன் வைக்கின்றனர். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மற்றபடி வரவேற்க்கவும் வணிக  நோக்கத்துக்காகவும் அது எழுதப்படவில்லை.

-‘வரைபவனின் மனைவி' என்ற  கவிதையினை சிறப்பாக எழுதி இருந்தீர்கள். ஓவியரின் மனைவி என்பது ஒரு பெண் படைப்பாளியான உங்களுக்கு மகிழ்ச்சியினை தரவில்லையா?

நான் ஒரு படைப்பாளியாக இருந்த போதுதான் ஓவியர் சந்துருவை மணம் செய்துக்கொண்டேன். இன்னமும் அதே படைப்பாளியாகத்தான் இருக்கிறேன். எனக்கென ஒரு தனித்த அடையாளம் இருக்கையில் சந்துருவின் ஆளுமையை  எதற்காக நான் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்? ஒரு படைப்பாளரான எனக்கு அதில் என்ன சந்தோஷம் இருந்திடப் போகிறது? நான் நானாக வாழ்வது எவ்வளவு முக்கியமோஎனது அடையாளமும் அவ்வளவு முக்கியம். என நினைக்கிறேன். ஓவியரின் துணைவியாக அவரின் முன்னேற்றத்திற்கு உடன் இருப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல் என் ஆளுமையை வைத்து என் துணைவரை அடையாளப்படுத்துவதையும் நான் மறுக்கிறேன்.

ஆர் :
ஒரு படைப்பாளிக்கு நெஞ்சுரம் வேண்டும். எந்த

சக்திக்கும் வளைந்துக் கொடுக்காத படைபாளிக்கு எதிர்ப்புகள் முளைப்பது ஆச்சரியமல்ல. எந்த எதிர்ப்பையும் கண்டுக்கொள்ளாமல் தன் கொள்கைப் பிடிப்பிலிருந்து  விட்டுவிலகாது நடைப்போட்டு துணிச்சலாய் பேசுவதில் யோகி வலிமை நிறைந்த பெண் என தெரிகிறத. இவரது இலக்கியம் பிறரை ஒரு கணம் திரும்பி பார்க்க வைக்கிறது. நல் இலக்கியத்தை உயர் கல்வி கற்றவரால்  மாத்திரமே  தரமுடியும் என்பதல்ல. கலை மனம் கொண்டவர்களால் மாத்திரம்தான் தர இயலும் என்பதை யோகியில் எழுத்துகள் நிரூபிக்கின்றன. ஆயினும் சொற்களில் மட்டுமல்ல, சொல்ல முடியாத விஷயத்தைக் கூட முகம் சுழிக்காமல் சொல்ல தகுந்த வளத்தினை தனக்குள் கடலென கொண்ட நம் தமிழ் மொழியில் பெண்மொழி என்று உடல் சார்ந்த உணர்வினை பார்வையில் வைக்கும் போக்கு நம் நாட்டு சூழலில் அவசியமா? இருப்பினும்  உண்மையொளி உள்ள எந்த எழுத்தும் வெல்வது நிச்சயம். யோகி வெல்வார்?!





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக