திங்கள், 17 நவம்பர், 2014

“நான் தோல்வி அடைந்தவன்”

“நான் தோல்வி அடைந்தவன்”. ஆம், இப்படித்தான் கூறினார் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பி.உதயகுமார். இந்நாட்டில் இந்தியர்களுக்காக நடந்த மிகப் பெரிய போராட்டம், பேரணி எனப் பட்டியலிட்டால் நிச்சயமாக ஹிண்ட்ராஃப் பேரணிக்குத்தான் முதல் இடம் கிடைக்கும். அந்த அளவுக்கு இந்திய மக்களிடத்தில் பெரிய மாற்றத்தையும் திருப்பு முனையையும் அந்தப் பேரணி ஏற்படுத்தியது. 

நாடு சுதந்திரம் அடைந்த 50 வருட வரலாற்றில் ஹிண்ட்ராஃப் ஏற்படுத்திய பேரலை, நாட்டில் நடந்த பொதுத்தேர்தலிலும் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது என்றால் அது மிகையில்லை. ஹிண்ட்ராஃப் எந்த ஒரு கட்சியையும் சாராத அமைப்பு என தன்னை அடையாளப்படுத்துகிறது. ஆனால், நான் தோல்வியடைந்தவன் என்று கூறிய பி.உதயகுமார், எனது தோல்வி மக்களிடத்தில் விழிப்புணர்வை மட்டுமல்ல, எனக்கும் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது என்று ‘நம் நாடு' அலுவலகத்துக்குச் சிறப்பு வருகை புரிந்த அவர் தெரிவித்தார். 

தான் சிறையில் இருந்தபோதும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோதும் ‘நம் நாடு' பத்திரிகை நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட்டது. அதற்கு நான் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன் என்று கூறியவர், நமது நேர்காணலுக்கும் தயார் நிலையில் வந்திருந்தார். அவரிடம் பல கருத்து பரிமாற்றங்க்களும் கேள்விகளும் கேட்கப்பட்டது. அதிலிருந்து சில கேள்விகள் உங்களுக்காக 

* நீங்கள் கலந்துகொண்ட முதல் போராட்டத்தைப் பற்றி நினைவு கூற முடியுமா?

- நான் 1984-ஆம் ஆண்டு லண்டனுக்கு வழக்கறிஞர் படிப்புக்காகச் சென்றேன். 1985-ஆம் ஆண்டு அங்கு High Park Corner என்ற இடத்திலிருந்து Trafalgar Square வரை ஒரு பேரணி நடந்தது. அங்குத்தான் தென் ஆப்பிரிக்காவின் தூதரகம் இருந்தது. சுமார் 1,500 பேர் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். காரணம் தென் ஆப்பிரிக்க மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக அந்தப் பேரணி நடந்தது. அங்கு நடக்கும் எந்தப் பேரணியிலும் ஆதரவாக மலேசியர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், நானும் எனது நண்பர் ஒருவரும் அந்தப் பேரணியில் பங்கெடுத்தோம். அதுவே எனது முதல் போராட்டமாக கொள்ளலாம். மனதில் பதிந்த இந்தச் சம்பவம்தான் பின்னாளில் ஹிண்ட்ராஃப் போராட்டம் நடப்பதற்கு வித்திட்ட நாள். ஒரு போராட்டத்தில் உள்ள தார்மீகத்தையும் உணர்ந்துகொண்ட நாள் அது. அதாவது வெள்ளையர்கள் கருப்பர்களை அடிமைகளாக நடத்துவது தவறு என்று போராட்டத்தில் ஈடுபட்ட 99 சதவிகிதத்தினர் வெள்ளையர்கள்தான். இனவாதத் தனம் இல்லாத ஒரு பேரணி அது. ஜனநாயக அடிப்படை என்பது அதுதானே.

* 2007-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்திற்கு முன்பும், இப்போதும் ஹிண்ட்ராஃப்பின் ஆதரவு குறித்து கொஞ்சம் விளக்குங்கள்?

- 2007-ஆம் ஆண்டுக்கும் முன்பு ஹிண்ட்ராஃப்  சந்திப்பு என்று ஒரு குறுஞ்செய்தியை நான் அனுப்பினால், ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு 50 பேர் எதிர்பார்க்கும் இடத்தில் 200 பேர் கூடிவிடுவார்கள். அப்படி இருந்தது ஹிண்ட்ராஃப்பின் ஆதரவு. இப்போது அப்படி யாரும் வருவதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் யாரும் ஹிண்ட்ராஃப்பின் ஆதரவாளர்கள் என்றுதான் கூறிக்கொள்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக நான் விடுதலை பெற்ற ஒரு வாரத்தில் ஒரு சம்பவம் நடந்தது. நான் கடைக்குச் சென்றிருந்தபோது என்னை அடையாளம் கண்டுவிட்ட μர் இளைஞர் குழு என்னை நெருங்கி நலம் விசாரித்து உபசரணை செய்தது. நான் லண்டனுக்குச் செல்ல விருப்பதை அறிந்திருந்த அவர்கள் நீங்கள் இங்கேயே இருந்து சேவை செய்யலாமே, நீங்கள் ஏன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கேட்டனர். அவர்களிடமும் நான் இங்கேயே இருந்து சேவை செய்தால் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று கேட்டேன். அவர்களின் பதில் மௌனமாகவே இருந்தது. மக்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. ஆனால், பங்களிக்கத்தான் மாட்டேன் என்கிறார்கள்.

* ஹிண்ட்ராஃப் அமைப்பின் வெற்றி என்ன? 

- 1. நவம்பர் 2007-ஆம் ஆண்டுக்கு முன்பான காலகட்டத்தில் இருந்த இந்தியர்களின் நிலையும், விழிப்புணர்வும் வேறு. இப்போது இருப்பது வேறு.

2. 2007-ஆம் ஆண்டுக்கு முன், தடுப்புக்காவலில் இரு வாரங்களுக்கு ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டது. அதில் 20% இந்திய இளைஞர்களாக இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் போலீசின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 635 பேர். (இதில் μப்ஸ் சந்தாஸ் நடவடிகையில் இறந்தவர்கள் சேர்க்கப்படவில்லை)

3. 10 நாள்களில், ஒரு கோயில் உடைப்பு நடந்தது.

4. இந்தியர்கள் மீதான அதிகாரிகளின் அராஜகம்.

நான் மேற்கூறிய அனைத்தும் நவம்பர் 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு 95% குறைந்துள்ளன. இந்திய மக்களிடத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். இவை அனைத்தும் ஹிண்ட்ராஃப்பின் வெற்றி என்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் எம்மக்களிடத்தில் பிரச்னைகள் இன்னும் நிரந்தரத் தீர்வு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. 8% இந்திய மக்களுக்கு 70% பிரச்னை என்பது ரொம்ப அதிகம். எங்கு இருக்கிறது நடுநிலை?


* சிறையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் என்ன?

- சிறைக்கு அதிகாரி ஒருவர் வந்தார். அவர் என்னைத் தாக்க மட்டும்தான் இல்லை. மற்ற எல்லாவகையான உளவியல் பிரச்னைகளையும் தந்தார். நம்மால் ஒரு கைதியாக எதையும் செய்ய முடியாது. இப்படிச் சிறுகச் சிறுக ஒவ்வொரு தடவையும் நான் பல பிரச்னைகளை சந்தித்தேன். அதை ஊடகங்கள்தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. சிறையில் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குத் தற்போது வழக்குப் போட்டுள்ளேன். அதன் விசாரணை தற்போது நடந்துகொண்டிருக்கிறது.


* மக்கள் உங்களிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி என்ன?

- அடுத்த உங்களின் திட்டம் என்ன? இதுதான் அனைத்து மக்களின் கேள்வியாக உள்ளது. இந்தியர்கள் மட்டுமல்ல பிற இனத்தவர்களும், என்னை அறிந்த வெளிநாட்டவர்களும் ஊடகத்தார்களும்கூட இதே கேள்வியைத்தான் என்னிடத்தில் கேட்கின்றனர். நான் சிறையில் இருக்கும்போதுகூட, ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் என்னைப் பார்த்து இதே கேள்வியைத்தான் கேட்டனர். இது உண்மையில் நியாயமான கேள்விதான். ஒரு போராட்டவாதியிடம் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு கேள்விதான் இது. ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்கிறது சிவபுராணம். 

அதுபோல, அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பவர்கள், உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவர்கூட கேட்கமாட்டேன் என்கிறார். ஆக மக்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்றால், ஒரு போராட்டவாதி அதிசயத்தை நிகழ்த்திக்காட்ட முடியும் என்று நினைக்கிறார்கள். செய்ய முடியாததை எல்லாம் என்னால் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையாகும். நான் ஒரு தனி மனிதன். இந்தத் தனி மனிதனால் அரசாங்கத்தையே கவிழ்க்க முடியும் என்று நம்புவது மக்களின் அறியாமையைக் காட்டுகிறது. மக்கள் ஆதரவு என்னவோ இருக்கத்தான் செய்கிறது. என்னைச் சந்திக்கும், நான் பார்க்கும் அனைவரும் தன்னை ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பங்களிப்பவர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள்.

* மலேசியாவில் ‘சத்து மலேசியா' கோட்பாடு குறித்து உங்கள் விளக்கம் என்ன?

- இங்கு ‘சத்து மலேசியா' கோட்பாடு தலைப்பு செய்தியாக மட்டும் இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த நாட்டின் குடிமகனாக சிறைச்சாலை தவிர வேறு எங்கேயும் நான் ‘சத்து மலேசயா' கோட்பாட்டைப் பார்க்கவில்லை. மலாய், சீனர், இந்தியர் என்று எல்லா குற்றவாளிகளையும் ஒரே மாதிரிதான் நடத்துகிறார்கள். ஒரே சலுகையைத்தான் தருகிறார்கள். எனது பார்வையில் ‘சத்து மலேசியா' என்ற கோட்பாட்டை அங்குதான் பார்த்தேன். வெளியில் ‘சத்து மலேசியா' கோட்பாடு இல்லாததால்தான், அதை விளம்பரப்படுத்துகிறார்கள். சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் இல்லாத ஒரு கோட்பாடு ‘சத்து மலேசியா' ஆகாது. அதற்காக எல்லாரும் சிறையில் இருக்க முடியாதே.


* அரசாங்கத்தின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

- நமது நாடு 1957-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு யாரும் ‘சத்து மலேசியா' கோட்பாடுகளை வரையறுக்கவில்லை. ஆனால், அனைவரின் ரத்தத்திலும் அது இருந்தது. ஆனால், கடந்த 50 வருடங்களாக அது இல்லை. நடைபெற்றிருக்கும் சம்பவங்கள் அரசாங்கத்தின் இனவாத தன்மையைத்தான் காட்டின. அது என்னை வெகுவாகப் பாதித்தது. பாதிப்பு, செயலாக இயங்கின; இயக்கம் போராட்டமாக வெடித்தது;  போராட்டம் மாற்றத்தைக் கொண்டுவந்தது.


* அரசாங்கம்தான் இந்தியர்களுக்கும் மானியம் வழங்குகிறதே?

- அரசாங்கம் மானியம் வழங்குகிறதுதான். ஆனால், கணக்கு வழக்கு (odit) காட்டுவதில்லையே.2012-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 100 மில்லியன் தமிழ்ப்பள்ளிகளுக்காக மானியம் ஒதுக்கப்பட்டது. ஆனால், 2012-ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் 100 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் கணக்கும் எங்கே? நாம் எங்குச் சென்று அதைச் சரி பார்ப்பது? μர் அரசியல் பார்வையாளராக நான் எப்படி அதை நம்புவது? ஒரு செய்தியில் படித்தேன். அரிசி உள்ளிட்ட சில பொருள்களின் விலை ஏறிவிட்டதால், அரசு சொன்ன வெ.100 மில்லியனைக் கொடுக்க முடியவில்லை என்று. ஆனால், பட்ஜெட்டில் வெ.100 மில்லியன் கொடுப்பதாக பதிவு செய்யப்பட்டுவிட்டதே. இதை நன்கு படித்தவர்கள் உட்பட அரசு சாரா இயக்கம் வரை யாருமே கேள்வி எழுப்பமாட்டார்கள். காரணம் பாதிக்கப்பட்டது இந்திய சமுதாயம்தானே. இந்த அலட்சியம் இன்னும் தொடர்ந்து வருவது நமது சாபக்கேடுதான்.

* அப்படி என்றால் அரசாங்கத்திடம் எம்மாதிரியான கோரிக்கையை வைக்க வேண்டும்?

- நாம் ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டிருதால், உலகம் அழிந்தாலும் கோரிக்கை முடியாமல் இருக்கும். நாம் இந்த நாட்டின் சிறுபான்மை பட்டியலில் இருக்கிறோம். ஆதலால் நமக்குச் செய்வது அரசாங்கத்திற்கு அத்தனை சிரமமான காரியம் அல்ல. நமது நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. ஏன் அந்த 524 பள்ளிகளிலும் பாலர்பள்ளியை அமைக்கக்கூடாது. இந்தியர்களுக்கென்று பாலர் பள்ளிகள் மிகக்குறைவு. சில தமிழ்ப் பள்ளிகளில் பெர்மாத்தா பாலர் பள்ளியை அரசு அமைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிரதமரின் துணைவியாரான டத்தின்ஸ்ரீ சித்தி ரோஸ்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். உங்கள் கோரிக்கையின் பேரில் ஒவ்வொரு பாலர் பள்ளியாக கட்டித்தருவதைவிட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளியை அமைப்பதற்கு ஆவணம் செய்யலாமே என்று. அதற்கு அவரிடமிருந்து பதில் கடிதமும் வந்தது. ஆனால், தற்போது இருக்கும் பாலர்பள்ளிகள் குறித்த விவரம்தான் இருந்ததே தவிர, நான் பரிந்துரைத்த கோரிக்கைக்கான பதில் இல்லை. சிலாங்கூர் அரசாங்கமும் இப்படிதான் நடந்துகொள்கிறது.  இப்படி நாம் ஒவ்வொன்றாகக் கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்தால், இன்னும் பல  ஜென்மங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டும். நமக்குத் தேவை முழுமையான தீர்வுதான்.


நீங்கள் பக்காத்தான்  கட்சியை ஆதரிப்பவர் என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளதே?

-நான் தேர்தலில் போட்டியிடும்போது, பிரச்சாரங்களில் மக்களைச் சந்தித்து, நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் என்று கூறியிருந்தேன். பெரும்பான்மையான இந்தியர்கள் பக்கத்தானுக்குதான் வாக்களித்தார்கள்.  நான் கடும்தோல்வி அடைந்தேன். அந்தக்  காலக்கட்டத்திலும் சரி, இப்போதும் சரி, மக்கள் பிரச்னை என்று சொல்லும்போது நான் அவர்களை  லிம் கிட் சியாங், அன்வார் இப்ராஹிம் மற்றும் அடி அவாங்கைப் போய்ச் சந்தித்துப் பிரச்னையைக் கூறுங்கள் என வழியுறுத்துகிறேன். காரணம், பக்கத்தானில் 89 நாடாளுமன்ற அதிகாரிகளும், 229 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். அது ஒரு பெரிய குழுவாகும். அவர்களால் மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியும். மக்களும் அதை நம்பிதானே அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். இதை கூறுவதால் நான் எப்படி பக்காத்தான் ஆதரவாளர் ஆவேன்?


*உங்களது போராட்டத்தில் மக்கள் சக்தி தலைவர்  டத்தோ தனேந்திரன் எப்படி இணைந்தார்?

-ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் ஒரு வாரத்திற்கு முன்புதான் நான் முதல்முறையாக தனேந்திரனைச் சந்தித்தேன். ஒரு வாரத்திற்குப்பிறகு  ஐ.எஸ்.ஏ சட்டத்தில்  4 வழக்கறிஞர்களைக் கைது செய்தவுடன்  ஹிண்ட்ராஃப்பை வழி நடத்துவதற்கு ஆள் இல்லாமல்போனது. அப்போது வேதமூர்த்தியும் லண்டனில் இருந்தார்.  அந்த நேரத்தில் தனேந்திரன் என்னை தொலைபேசி வழி தொடர்புகொள்ளும்போது, நாங்கள் வரும்வரை நீங்கள்தான்  ஹிண்ட்ராஃபைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவர்  தேசிய ஒருங்கிணைப்பளராக எப்படிச் செயல்பட்டார் என்பதை இப்போது வரலாறு சொல்கிறது. 


*ஹிண்ட்ராஃப்பிற்கு ஒரு தலைவர் தானே இருந்தார். பிறகு ஏன் 5 தலைவர்களை நியமித்தீர்கள்?

-1990-ஆம் ஆண்டு தொடக்கம் 2006-ஆம் ஆண்டுவரை ஹிண்ட்ராஃப்பிற்கு ஒரே தலைவராக நான் மட்டுமே இருந்தேன். எனது தலைமைத்துவத்தில்தான் எல்லாத்  திட்டங்களும் செயலாக்கம்  கண்டன.  இரண்டாவது நிலை தலைவராக நான் யாரையும் நியமிக்கவில்லை. 

2006-ஆம் ஆண்டுதான் வழக்கறிஞர் வேதமூர்த்தி ஹிண்ட்ராஃப்பில்  தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.  போராட்டத்திற்கு 3 மாதங்கள் இருக்கும்போதுதான்  கணபதிராவ், மனோகரன் மலையாளம் என 2 வழக்கறிஞர்கள் இணைந்தார்கள். அப்போது ஹிண்ட்ராஃப் தீயாய் வேலை செய்துகொண்டிருந்தது.  25 நவம்பர் போராட்டத்தை முன்னெடுத்த நாள், அன்றும் நானே தலைவராக இருந்தேன். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட  வழக்கறிஞர்கள் 13 டிசம்பர் 2007-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட போது  போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ மூசா முதல் முறையாகப் பத்திரிகையில் செய்தி வெளியிட்டார். ஹிண்ட்ராஃப் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்று. எல்லா பத்திரிகைகளும்  அதைத் தலைப்பு செய்தியாக்கிப் பிரசுரித்தன. அன்று தொடக்கம் ஹிண்ட்ராஃப்பிற்கு 5 தலைவர்கள் என மக்களும் முடிவு செய்தனர். 

*நீங்கள் 13-வது பொதுத்தேர்தலில் ஏன் போட்டியிட்டீர்கள்?

-நான் முன்பே எனது ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த மலேசியாவில் இந்தியர்கள்  வாழவேண்டும் என்றால், இந்தியர்களுக்கென ஒரு பெரும்பான்மை கட்சி இருக்க வேண்டும்.  அதாவது வாக்காளர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அதை முடிவு செய்ய வேண்டும். அதை உருவாக்கினால்தான் நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பதை நான் ஆய்வுப்பூர்வமாகக் கண்டடைந்தேன். அதன் அடிப்படையில்தான் நான் கிள்ளான் அண்டலாஸில் போட்டியிட்டேன். ஆனால், அது எனக்கு மாபெரும் தோல்வியைத்தான் கொடுத்தது.  ஆனால், இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. இந்தியர்கள் பல இடங்களில் வசிக்கின்றனர். அவர்கள் ஓட்டுப் போடுவதற்கு ஒரே இடத்தைத் தேர்வு செய்து  வாக்களிக்கவேண்டும்.  இந்தியர்களுக்கு மட்டுமான ஒரு பெரும்பான்மை இருந்தால், நமக்கு வேண்டியதை நாமே செய்துகொள்ளலாம். அதற்குத் தகுதியான ஆளை மக்களே தேர்வு செய்யவேண்டும். ஆனால், இதை மக்களுக்குத் தெரியப்படுத்தத்தான் நான் தேர்தலில் நின்றேன் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  ஒன்று அந்தச் சலுகையை அரசாங்கம் வழங்க வேண்டும் அல்லது நாமே உருவாக்க வேண்டும். இந்திய பெரும்பான்மைதான் நமது விடிவு காலத்தை உறுதி செய்யும்  என்பதை நான் இப்போதும் நம்புகிறேன். 


*ஹிண்ட்ராஃப் கூட்டணியில் எப்படிப் பிளவு ஏற்பட்டது?

-ஒரு கூட்டணியை உடைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. பெண்ணைக் கொண்டும், பணத்தைக் கொண்டும் ஒரு கூட்டணியை உடைக்கலாம். எங்களிடத்தில் பெண்களும் போராட்டவாதிகளாகவே இருந்தனர். மக்களிடம் வசூலித்த பணம் இருந்தது. அதைக்கொண்டே எங்கள் கூட்டணியை உடைக்க   போலீஸ் உளவாளி  ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என நீதிமன்ற ஆணை இருப்பதால், நான் அவரின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.  எங்களுக்கு நம்பிக்கையான அந்த உளவாளி, தனது உளவாளி வேலையைச் செம்மையாகச் செய்து  ஹிண்ட்ராஃப் கூட்டணியின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி மிகச் சுலபமாக உடைத்தார். 


*நீங்கள் தேசிய முன்னணி விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதான் விடுதலை பெற்றதாகச் சொல்கிறார்களே?

-நான் இருமுறை சிறைக்குச் சென்றது உட்பட 13 தடவை போலீஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். சிறையில் முழு தண்டனையும் அனுபவித்துத்தான் விடுதலை ஆயிருக்கேன். இப்போதும் நான் தேசிய முன்னணியைத் தற்காத்துப் பேசியது இல்லை. பிறகு எப்படி நான் தேசிய முன்னணியை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்கிறார்கள்?















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக