வியாழன், 1 மார்ச், 2018

வாரணாசி 5


பூர்வ ஜென்மங்களில் தெய்வ சிந்தனையுடன் இறை வழிபாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்களால்தான் இந்த ஜென்மத்தில் வாரணாசி செல்வதற்கான கதவு திறக்கும் என்று சிவபுராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு அதிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. முழு மனதோடு முயற்சி செய்தால் யாராலும் நிச்சயமாக வாரணாசியை தரிசித்துவிட்டு வரமுடியும்.

வாரணாசி இந்து சமயத்துக்கு மட்டும் உரிய ஒரு நகரமா? என்றால் நிச்சயமாக அதில் உண்மையில்லை என்றே என் அனுபவத்தின் மூலமாக சொல்வேன். கௌதம புத்தர் ஞானம் பெற்றபின் காசியில் தான் தன் உபதேசத்தை தொடங்கினார் என்றும், சமணத்தைச் சேர்ந்த மகாவீரரின் முன்னோடியான தீர்த்தங்கரர் காசியில் அவதரித்தவர் என்றும் சொல்லப்படுவதால் பெளத்ததை பின்பற்றுபவர்களுக்கு சமணர்களுக்கும்கூட காசி நகரமும் கங்கை நதியும் புனிதத் தலமாக ஆன்மிக பயணம் வருகின்றனர்.
நான் வியந்த விஷயமே இஸ்லாமியர்களும் கங்கை நதியில் நீராடுவதுதான். மாலையில் கங்கை ஆர்த்தி பார்க்க செல்லும்போது, ஒவ்வொருபடித்துறைகளாக பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். நானும் நண்பர் சாகுலும் ஒரு நிமிடம் அந்த காட்சியை கண்டு ஆச்சரியத்தில் நின்று விட்டோம். அவர்களை பார்த்தாலே தெரியும் இஸ்லாமிய மதத்தை தீவிரமாக கடைபிடிப்பவர்கள்தான் அவர்கள். ஒரு சின்ன பையனை கங்கை நதியில் குளிக்கவைத்துக்கொண்டிருந்தனர்.

 மலேசியாவில் இஸ்லாமியர்கள் யோகா செய்யக் கூடாது என்றும், (சில ஆண்டுகள் கழித்து ) இந்தியர்கள் பயன்படுத்தும் நெய்யை பயன்படுத்த கூடாது என்றும் சில இசுலாமிய போதகர்கள் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தினர். அதற்கு அவர்கள் சொன்ன ஒரே காரணம் இந்திய ஆன்மிகத்தோடு அவை தொடர்பில் இருக்கிறது என்ற காரணம்தான். மிகவும் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது அந்த சர்ச்சை.
ஆனால், காசி நகரில் கோயில்கள் இருக்கும் அளவுக்கு பள்ளிவாசல்களும் இருக்கின்றன. தேவாலயங்களும் இருக்கின்றனஇங்கு இஸ்லாமியர்களும் பெருமளவில் வசித்து வருகிறார்கள். காசியை பணாரஸ் என்றே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். பெருவாரியான இஸ்லாமியர்கள் பட்டு நெய்தலை தொழிலாக செய்கிறார்கள். உலக பிரசித்தி பெற்ற பணாரஸ் பட்டு இவர்கள் நெய்வதுதான்.



 (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக