ஞாயிறு, 25 மார்ச், 2018

வாரணாசி 14 ராம் நகர் அரண்மனை (கோட்டை) Ramnagar Fort



காசி பயணத்தில் பலரும் பார்ப்பதற்கு பரிந்துரைக்கும் மற்றுமொரு இடம் ராம் நகர் அரண்மனை என அறியப்படுகிற  கோட்டையாகும். அதை "மெஜஸ்டிக் கோட்டை" என்றும் சொல்கிறார்கள். வாரணாசி நகரிலிருந்து புறப்பட்டு  14 கிலோ மீட்டர் தூரம் கங்கை நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்தால் மனிதர்கள் இயந்திரங்களோ என்று சொல்லும் அளவுக்குப் பரபரப்பான ஒரு தொழில் நகரம் நமக்குத் திறக்கிறது.

ஆட்டோ ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்கு முன்பே, அரண்மனையோடு சேர்த்து  நம்மைப் புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள்  சுற்றி வளைக்கிறார்கள்.  இதற்கு முன்பு பிடித்த புகைப்படங்களின் ஆல்பத்தை காட்டி நம்மை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். இருக்கிற குறுகிய நேரத்தில் என் புகைப்படக் கருவிக்குள் அந்த அரண்மனை எப்படி அடங்கப்போகிறது என்ற என் எதிர்பார்ப்பு அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. உறுதியாகப் புகைப்படம் வேண்டாம் என மறுத்துவிட்டு உள்ளே நுழைந்தால், சுற்றுப்பயணிகள் அரண்மனையைப்  புகைப்படம் எடுக்கக் கூடாது எனக் கடுமையான சட்டம் வைத்திருக்கிறார்கள். இது என்ன வம்பு எனத் தெரியவில்லை. கோயிலைப் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பதற்கு ஒரு நியாயம்   இருக்கிறது. கொஞ்சம் கூட பராமரிப்பு இல்லாத இந்த அரண்மனையை ஏன் புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தாலும் பதில் சொல்ல அங்கு ஆள்தான் இல்லை. ஆனால், நம்மைக் கண்காணிக்க நான்கு பக்கமும் கண்கள் இருக்கின்றன. இந்தியில் மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். என்றாலும்  அரண்மனை தொடர்பாக எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மறுக்கிறார்கள்.



கங்கை நதியின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கும் ராம்நகர்  கோட்டை 1750 ஆம் ஆண்டில் காசி நரேஷ் ராஜா பல்வந்த் சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது அவர் பயன்படுத்திய கலைநயமிக்க ஆடம்பர பொருள்கள் எந்த பராமரிப்பும் இல்லாமல் போட்டது போட்டபடியே உள்ளது. அவற்றை ஒரு பெரிய அருங்காட்சியகம் அமைத்து வைத்திருக்கிறார்கள். அந்த அருங்காட்சியகத்திற்கு 'சரஸ்வதி பவன்' (Saraswati Bhawan) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  அந்தக் கோட்டையே தூசியில் முக்கி எடுத்ததுப் போல இரண்டு இஞ் அளவுக்குத் தூசியால் தடித்துப் போய் இருக்கின்றது.


மகாராஜா பயன்படுத்தியிருக்கும் பழைய  ஆங்கிலேய பாணியிலான  கார்கள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட பல்லக்குகள், இதுவரை பார்த்திராத துப்பாக்கிகள், பெரிய பெரிய யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பொருள்கள்,  சொல்வதற்கு இன்னும் பல பொருள்கள் இருந்தாலும் அவை தூசியில் சிக்கி அதன் பொலிவை இழந்து நிற்கும் நிலையில் ஆழ்ந்து பார்க்கவும் ரசிக்கவும் சிரமமாகவே இருக்கிறது. 




 
இந்தக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பது வேறு எங்கேயும் காணமுடியாத காட்சியாக அமையும் எனவும் கங்கை நதியில் விழுந்து மறையும் சூரிய அஸ்தமனத்திற்கு இணையாக வேறு எதையும் கூற முடியாது எனவும்   வர்ணிக்கப்படுகிறது.



முகலாய காலத்தின் கட்டிட பாணி எனப் பார்த்ததும் தெரிந்துகொள்ள எந்தச் சிரமமும் நமக்கு இல்லை. பல அறைகளையும் மாடங்களையும் கொண்டிருக்கும் இந்தக் கோட்டை இயங்கிக்கொண்டிருக்கும்போது எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை செய்தால் இப்போது அது கொண்டிருக்கும் வெறுமை நமக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திவிடும். 

இந்தக் கோட்டையின்  பொக்கிஷங்களில் ஒன்று 'Dharam Ghari' என்று சொல்லப்படுகிற சுவர்க் கடிகாரம். 1852-ஆம் ஆண்டில் வாரணாசியின் புகழ்பெற்ற வானிலை நிபுணர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது Dharam Ghari.  நேரம், நாள், மாதம், மற்றும் வருடங்களை மட்டும் இந்தக் கடிகாரம் காட்டிடாது. நட்சத்திரங்களின் வானியல் விவரங்களையும் காட்டக் கூடிய நுட்பமான கடிகாரம் இது. Dharam Ghari குறித்து நாம் தேடா விட்டால் அது ஒரு ஆங்கிலேய கடிகாரம் என முடிவு செய்து கடந்து போய் விடுவோம்.


இந்தக் கோட்டையை படப்பிடிப்புக்காகப் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் என்ற விவரங்கள் இணையத்தில் இருந்தாலும் எந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவில்லை. அரசு குடும்பத்தினர் இன்னும் இந்த அரண்மனையில்தான் வசிக்கின்றனர் என்றும் அந்தப் பகுதியானது  சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படவில்லை என்றும் அறியமுடிகிறது.  


குறிப்பு :
சாகுலுடைய ஒத்துழைப்போடு உள்ளே இரண்டு புகைப்படங்களை மட்டும் என் கைத்தொலைப்பேசி வழி எடுக்க முடிந்தது. கோட்டையின் வெளிப்புறத்தை புகைப்படம் எடுப்பதில் எந்த தடையும் இல்லை.

2 கருத்துகள்:

  1. ஓர் அணில்
    காடிடையே ஓடி அதை நுகர்வதுபோன்று
    யோகியுடன் யாம் ஆத்மத்துடன் காசிக்குள் பிரவேசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் இந்த பதில் என்னை இன்னும் உற்சாகப்படுத்துகிறது சரா.. அன்பும் மகிழ்ச்சியும்

      நீக்கு