வியாழன், 15 மார்ச், 2018

வாரணாசி 11 (கௌடி மாதா கோயில்) Kaudi Mata Mandirவாரணாசியில் கங்கை படித்துறையைத் தவிர்த்து வேறு என்னென்ன காணலாம்? ஆன்மீக நகரத்தில் காணும் அனைத்திற்கும் ஏதோ ஒரு பின்னணி கதை உண்டு. கோயிலோ பள்ளிவாசலோ தேவாலயமோ மத - இனத்தைப் பார்க்காமல் வருபவர் போகிறவர்களை ஆதரித்துக்கொண்டே இருக்கிறது காசி நகரம்.

சுற்றுப்பயண முகவர்களை நம்பி காசியை சுற்றிபார்ப்பதைக் காட்டிலும், ஒரு ரிக்‌ஷாகாரரையோ அல்லது ஆட்டோக்காரரையோ நம்பி பயணத்தை திட்டமிடலாம். நமக்குத் தேவையெல்லாம் கொஞ்சம் பேச்சு திறமைதான். நிமிஷத்துக்கு 10 ஆட்டோ...க்கள் ஓடும் அந்தச் சாலையில் இரண்டு மூன்று ஆட்களிடம், விசாரித்து பேரம் பேசி பயணத்தை திட்டமிடலாம். சாகுல் ஒருவரைப் பேசி அழைத்துவந்தார். பொதுவாக வாரணாசியில் மக்கள் தேடிப்போகும் இடங்களோடு மேலும் சில இடங்களுக்கு அவர் அழைத்துச் சென்று காண்பிப்பதற்குச் சொற்ப பணம்தான் வாங்கினார்.


அந்த வகையில் நாங்கள் முதலில் சென்றது, கௌடி மாதா கோயில். சின்ன தெருக்கோயில் மாதிரி இருக்கிறது.  சோழிக்காய்கள், துணி, குங்குமம் எனச் சின்ன தட்டில் அர்ச்சனைக்கு வைத்திருக்கிறார்கள். நான் கேள்விப்பட்ட வரையில் இப்படியான அர்ச்சனை தமிழ்நாட்டிலும் சரி வேறு எந்த நாட்டிலும் சரி இருப்பதாக அறிந்ததில்லை.
ஒரு குறுகிய சந்தில் நுழைந்து கோயிலுக்கு நாங்கள் போயிருந்தபோது யாருமே அங்கு இல்லை. அர்ச்சகர் மட்டுமிருந்தார். புகைப்படங்களை எடுக்க அவர் அனுமதிக்கவில்லை. மேற்கொண்டு எந்தத் தகவலையும் அவர் கொடுக்க மறுத்துட்டார். திருவிழாக் காலங்களில் பெரிய விசேஷமாக முன்னெடுக்கப்படுகிறது என்று கூறினாலும் மேற்கொண்டு எந்த தகவலையும் பெற முடியவில்லை

1 கருத்து: