வெள்ளி, 23 மார்ச், 2018

வாரணாசி 13 (Durga Mandir)





வாரணாசி-யை சுற்றிப்பார்க்கச் செல்பவர்களுக்கு அங்கிருப்பவர்கள் சிபாரிசு செய்யும் கோயில்களில் ஒன்று ராம்நகர் பகுதியில்  குரங்கு கோயில் என்று பிரபலமாக அறியப்படுகிற துர்கா கோயில் ஆகும்.



செந்நிற வண்ணத்தில் இருக்கும் அந்தக் கோயிலில் நிறையப் பக்தர்கள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடும் இருக்கிறது. சுற்றிலும் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை மீறி புகைப்படம் எடுப்பது கொஞ்சம் ரிக்ஸ் என்ற படியால் நான் என் புகைப்பட கருவியை வெளியில் எடுக்கவே இல்லை. சில போக்குகள் காட்டி கைதொலைப்பேசியில் புகைப்படம் எடுத்து விடலாம் என நானும் சாகுலும்  முயற்சித்தாலும் அது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்ததால் அந்த முயற்சியை கை விட்டு கோயிலை சுற்றிப் பார்க்க தொடங்கினோம். இருந்தாலும் தேவையான சில புகைப்படங்களை எடுத்துவிட்ட திருப்தி ஏற்பட்டது. அதற்காக அந்த துர்கை எங்களை மன்னிப்பாராக..




'குரங்கு கோயில்' என்று சொல்வதற்கு அடையாளமாக எந்தக் குரங்கையும் அங்குக் காண முடியவில்லை. இருந்தாலும் ஆலமரங்களும் பெரிய தெப்பக்குளமும் இருந்தது. அந்தக் குளத்திற்கு துர்கா கந்த் என்று பெயர் சொல்கிறார்கள். அது கங்கையோடு இணையும் குளமாகும். நேரடியாக அங்கு  செல்லமுடியாத அளவுக்கு அடைத்தும் வைத்திருக்கிறார்கள்.  நாங்கள் கோயிலை பார்த்துவிட்டுக் கிளம்பி செல்கையில் எங்களின் ஆட்டோக்காரர்   இந்த விவரத்தைச் சொன்னார். 


18-ஆம் நூற்றாண்டில் பெங்காளி  மகாராணி ஒருவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது பனாரஸ் ராஜ குடும்பத்தினரின் ஆளுமையின் கீழ் உள்ளது. கோயிலின் பல இடங்களில் பிரமாண்ட மணிகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. கர்ப்பகிரகத்தில் இருக்கும் துர்க்கை அம்மனின் நாக்கு வெளியில் நீட்டிய படி காளி ரூபமாக காட்சியளிக்கிறாள். இருந்தபோதும் அந்தச் சிலை உக்கிரமாக இல்லை. செந்நிற ஆடை துர்கையம்மனுக்கு உடுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிலை சுயம்புவாக உருவானதென்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

















1 கருத்து: