திங்கள், 26 மார்ச், 2018

வாரணாசியில் கதவுகள் 16கதவுகளை  ஊர்ந்து பார்க்கும்   பழக்கம் எனக்கு எப்படி வந்ததென்று தெரியவில்லை. மனதை, எப்போது கதவோடு  ஒப்பிடத் தொடங்கினேனோ அப்போதிலிருந்துதான் கதவுகளை உன்னிக்கத் தொடங்கினேன் என நினைக்கிறேன். எனக்கு 9 வயதிருக்கும். நாங்கள் மாற்றலாகிப்போன வாடகை வீட்டின் கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை. அதன் திறப்பே ரொம்ப வித்தியாசமானது. மரத்தாலான அந்தக் கதவுக்கு மரதுண்டாலயே  பூட்டு செய்திருந்தார்கள். குறுக்காலே ஒரு மரசட்டத்தை சொருகி கதவை சாத்தவேண்டும். எனக்குப் பெரிய பொழுதுபோக்காகவே  இருந்தது  அந்தக் கதவு. காலையில் திறப்பதற்கும் இரவில் மூடுவதற்கும் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது.  கிட்டதட்ட 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்தோம். ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.    

நான் வயதுக்கு வந்து ஓலைமட்டையில் அமர்த்திய 21 நாட்களுக்கு மட்டும் அந்தக் கதவு என்னிடமிருந்து அந்நியமாகிவிட்டிருந்தது. என்னுடைய அறையில் இருந்துகொண்டே அந்தக் கதவை பார்ப்பேன்.  தீபாவளியின்போது வாசற்கதவுக்கு மாட்டிய அலங்கார மணி சிணுங்கும்போதெல்லாம் நான் வரேன் வரேன் எனக் கூறிக்கொண்டு கதவுக்குச் சமாதானம் சொல்லுவேன்.  வேறு வாடகை வீட்டுக்கு மாற்றலாகிப் போனபோது, நான் ரசிக்கும்படியான எந்தக் கதவும் புதிய வீட்டில்  அமையவே இல்லை. ஒரு கனவுபோல அந்த மரக்கதவு என் ஞாபகத்தில் வந்து வந்து போகிறது இப்போதும்.
விலையுயர்ந்த பிரமாண்ட ஆடம்பர கதவுகளை எந்நாட்டில் காணமுடிந்தாலும் பழம்பெரும் பாரம்பரிய கதவுகள் கொண்டிருக்கும் வாசத்தை அவை இழந்தவையாகவே இருக்கின்றன. ரசிக்கும்படி இதுவரை  எந்த நவீன கதவுகளையும் கண்டதே இல்லை நான். என் பல ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது அண்மையில் சென்று வந்த இந்தியாவின் வடநாட்டுப் பயணம். ஆன்மிக நகரம் என்று சொல்வதற்கு பதில் கதவுகளின் நகரம் என்று சொல்லலாம். எத்தனை வகை கதவுகள்? மூப்பின் வாசம் காற்றோடு கலந்து அலைகிறது அங்கிருக்கும் கதவுகளுக்கு.  குறிப்பாகக் காசி நகரில் கட்டிடங்களும் அதற்கு அமைந்திருக்கும் கதவுகளும் பெரிய கலை நுட்பங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் அதனிடம் பேசுவதற்கு நமது  கண்கள், வார்த்தைகள் கொண்டிருக்கின்றன. எலிப் பொந்தாக இருந்தாலும் அதனுள் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் அவற்றுக்கு நூற்றுக்கும் அதிகமான வாசற்கதவுகளும் ஜன்னல் கதவுகளும் வெவ்வேறு வடிவத்தில் அல்லது ஒரேமாதியான வடிவத்தில், வெவ்வேறு அளவுகளில் அமையப்பெற்றிருக்கிறது.  சில கதவுகள்  பூவும் பொட்டுமாகவும், மாலையும் கழுத்துமாகவும்  சாமி படங்கள் சாத்தி மங்களகரமாகவும் அலங்கரிப்பட்டிருந்தன. சில கதவுகள் மனித உயரத்திற்கு இல்லாமல் குனிந்து வீட்டிற்குள் நுழையக்கூடிய  குட்டையான வாசல்களும் கதவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. எங்கு காணினும் கதவுகளும் ஜன்னல்களும்தான். பழுதாகிய நிலையிலும் ஜன்னல் கதவுகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காண முடிந்தது. அங்கிருந்தும்  எட்டிப்பார்க்கும் கண்களும் கதவுகளாகவே மாறிவிடுகின்றன. பலருடைய பொதுவான கருத்து,  வீட்டின்  பாதுகாப்புக்குத்தான் கதவு என்று சொல்லப்படுகிறது. பொருளாதாரத்தைத் தேடி ஓடும் மனித இயந்திரங்கள் மத்தியில் கதவிடம் அழகியலைத் தேடுதல் என்பது நகைக்கக் கூடிய விஷயமாகவே தெரியும். ஆனாலும், இந்த வாழ்க்கையை உயிர்ப்புடன் நகர்த்திசெல்ல நம்மைச்  சுற்றியிருக்கும் சின்ன சின்ன காட்சிகளும் அடையாளங்களும்தானே  ஆதாரமாக இருக்கின்றன.

நான் நிருபர் பணியில் இருக்கும் போது ஹிண்ராப் தலைவர் உதயகுமாரை சிறையில் சென்று நேர்காணல் செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. மிகச் சவாலான காரியம் அது. அந்தச் சிறை கதவுக்குப்பின்னால் ஏற்பட்ட பதட்ட  மனநிலை,  அதைவிட்டு வெளியே செல்லும் வரை அடங்கவே இல்லை. சிறைக்கதவு வெறும்  இரும்பு கதவு மட்டுமல்ல. அது பிசாசுகளின்  இரும்புக்கரங்கள். இருண்மையின் நிழல்.  கதவுக்குப்பின்னால் தொழில் ரீதியில்  விதி மீறலோடு சந்திப்பைப் பதிவு செய்திருக்கும் என்னை சிறைக்கதவுகள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது இன்றும் நினைவில் உள்ளது. கதவு என்பது ஒரு மதில்சுவர்போல எழுந்துநின்று என்னை விழுங்கிக்கொண்டிருப்பதாக பிரமை ஏற்படவே மிகவிரைவாக  நேர்காணலை முடித்துவிட்டு சிறைக்கதவை தாண்டி ஓடினேன்.நீண்ட நாட்களுக்குப்பிறகு காசியில் பார்த்த கதவுகள் என்  பழைய ஆர்வங்களைக் கிளறிவிட்டிருந்தன. காசியின் பல்லாண்டு வரலாற்றின் எச்சமாக நின்றுகொண்டிருக்கின்றன கதவுகள். மூடிய கதவுகளுக்கு முன்னாலும் பின்னாலும் , திறந்திருக்கும் கதவுகளுக்கு முன்னாலும் பின்னாலும் பலநூறு கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன. கதவுகள் பார்த்திருக்கும் கண்ணீர் கங்கை நீரைவிட ஆழமானது. வீட்டின்  அமைப்பும் பொருள்களும் மாற்றினாலும்  கதவுகளை வாரணாசி மக்கள் மாற்றவில்லை.இரும்பாலும் மரப்பலகைகளாலும் ஆன பாரம்பரிய கதவுகள் நிரந்தரமான இருப்பைக் கொண்டிருக்கின்றன.


கொஞ்சம் கூர்ந்து சிந்தித்தால் கதவு கொண்டிருக்கும் உளவியலை உள்வாங்க முடியும். ஒருவர் கதவை தட்டும் விதத்தை வைத்தே ஓரளவு நம்மை அழைப்பதின் காரணத்தை யூகிக்க கதவு நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.  அசம்பாவிதத்தின்போதும் மரணத்தின் போதும் சுபக்கரியத்தின்போதும் தட்டப்படும் கதவுகளின் ஓசை வேறுபடுவது ஒரு உதாரணம்.


கலை மற்றும் இலக்கியத்தில் ஒரு மாற்றத்திற்கான அடையாளமாகவும் கதவு  உருவகப்படுத்தப்படுகிறது. கதவை மையமாக எந்நெற்ற கவிதைகள் இருக்கின்றன. ஆனால், கி.ரா எழுதிய 'கதவு' சிறுகதை  தமிழ் இலக்கியத்தில் இன்றும் பேசப்படும் அளவுக்குத் தனித்த அடையாளத்தைக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.  

ஹென்ரிக் இப்சன்  பேய்கள் என்றொரு நாடகத்தை எழுதியிருக்கிறார். கணவனை விட்டு, குடும்பத்தை விட்டுவிட்டு வெளியேறுவாள் அதன் நாயகி. போகும்போது பின் காலால் கதவை எத்திவிட்டுப் போவாள். கதவு ஆடிக்கொண்டே இருக்கும். நாடகம் அப்படியே நிறைவடையும் அந்தக் கதவு ஐரோப்பாவில் இன்னும் நிற்கவில்லை என்று விமரிசகர்கள் சொல்வார்கள். நிற்கவில்லை என்று மட்டுமல்ல; நிற்கவே இல்லை என்று நம்புகிறார்கள்.  அதுதான் ஐரோப்பியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வாங்கிக் கொடுத்தது என்பது வரலாறு.


காசி நகரில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்னாளிருக்கும் கடவுள்களுக்குத்  தனித்த கதை உண்டு. பெருவாரியாக அந்தக் கதைகளும் கதவுகளும் காவி தேசத்தில்  பேசப்படுவதில்லை. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக