திங்கள், 28 மே, 2018

வாரணாசியிலிருந்து பம்பாய் வரை (ரயில் பயணத்தில்)

வாரணாசியிலிருந்து பம்பாய் வருவதற்காக ரயில் பயணம் முன்பதிவு செய்திருந்தேன். நல்ல வேளையாக என் நண்பர் சாகுல் ac coach முன்பதிவு செய்துகொடுத்திருந்தார். 1511 கிலோ மீட்டர் பயணம் அது. முதல்நாள்
காலை காசியில் 11  மணிக்கு ரயில் ஏறினால் மறுநாள் மதியம் 2 மணிக்கு மேல்தான் பம்பாயில்   இறங்க முடியும். நீண்ட ரயில் பயணங்களுக்கு மனம் தயாராகியிருந்த நிலை. மொழி உணவு என எதுவும் எனக்கு சரியாக அமையா விட்டாலும், மனம் மட்டும் பயணத்திற்கு தயாராக இருந்தது. இதற்கிடையில் மூன்று வெவ்வேறு அனுபவங்களை அந்த பயணம் எனக்கு கொடுத்தது.


சம்பவம் 1

நிறைய இளைஞர்கள் அந்த பிரயாணத்தில் இருந்தனர். நான் இருந்த ரயில் பெட்டியில் இளம் ஜோடியும், ஒரு திடகாத்திரமான இளைஞரும் இருந்தனர். சற்று நேரத்தில் பெரிய குடும்பம் ஒன்று அந்த பெட்டியில் ஏறியது. கணவன் மனைவி, அவர்களது நான்கு குழந்தைகள், கணவனது தங்கை ஒருத்தி. இத்தனை பேருக்கும் அவர்கள் மூன்று இருக்கைகளை மட்டுமே வாங்கியிருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்கள் நிற்பதற்கே போதாமல் இடத்தை அடைத்துக்கொண்டது.
நான் குறுகலாக அமர்ந்தவாறு கண்ணாடி ஜன்னல் வழியே பார்வையை செலுத்திக்கொண்டிருந்தேன். பெரிய குடும்பத்து ஆண், என்னிடம் நீங்கள் தனியாக தானே வந்திருக்கீங்க. வேறு இடத்திற்கு மாறிக்கொள்ள முடியுமா என்றார். நான் உறுதியாக முடியாது என்று கூறிவிட்டேன். அடுத்த நிலையத்தில் ஒரு இளைஞன் ஏறினான். விளையாட்டு வீரர் போல தோற்றம். உடையும் அவ்வாறே இருந்தது. அதற்குள் இளம் ஜோடிகள் சாப்பிட்டு கீழ் பெஞ்சில் கணவனும், இரண்டாவது பெஞ்சை பூட்டி மனைவியும் படுத்து விட்டார்கள். என்னுடைய எண் அவர்களுக்கு மேலே மூன்றாவது இடத்தில் இருந்தது.

நானோ இரவில்தானே படுக்க போகிறோம் என உட்கார்ந்து இருந்தேன். திடகாத்திரமான இளைஞரும் எதிர் திசையில் இருந்த மேல் இருக்கையில் படுத்துவிட்டார்.
புதிதாக வந்த இளைஞன் நான் இப்போ தூங்கணும், நீ உன் இடத்திற்கு போகிறாயா என்று கேட்க வில்லை, உடனே போய் விடு என்றான். ஆனால், எனக்கு தூக்கம் வரலையே இரவுதான் தூங்கணும் என்றேன். அது உன் பிரச்னை. நான் தூங்கணும் என்றான். பெரிய குடும்பத்து பெண்கள் அவனுக்கு இடம்விட்டு மௌனமாக எழுந்து சென்று விட்டனர். நானும் எழுந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 முதல் நாள் மதியம் இரண்டு மணிக்கு படுத்த அந்த வாலிபன் மறுநாள் இரண்டு மணிவரை படுக்கையை எடுக்கவும் இல்லை, விழித்திருந்தாலும் எழுந்து கொள்ளவும் இல்லை. நான் அந்த மூன்றாவது தளத்திலேயே அமர்ந்திருந்தேன் ஒன்றரை நாளும். எனக்கு எதிர்திசையில் படுத்திருந்த இளைஞனுக்கும் என் நிலைதானே. எங்கள் கண்கள் சந்தித்து கொண்டன. அவனே கேட்டான்,

*எங்கிருந்து வருகிறாய்?
-மலேசியா
*இங்கே இப்படித்தான்,
-இது தவறுதானே
*தவறுதான். ஆனால் என்ன செய்ய முடியும்?
அந்த இளம் ஜோடியும் அவ்வாறே நடந்துகொண்டனர் என்பது வேறுகதை.

 
சம்பவம் 2

ரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு கழிவறைகளை கொடுத்திருக்கிறார்கள். அதை ஆணுக்கு பெண்ணுக்கு தனி தனியாக பிரித்திருக்கலாம். அப்படி இல்லாததும் தவறு இல்லை. கழிவறை இருப்பதுவே பெரிய விஷயம்ஆனால், அங்கே இருக்கும் டாய்லட்களை பயன்படுத்த தேவை வரும்போது உடலே கூசுகிறது. மலஜலங்கள் தேங்கி இருக்க அதன் மேலேயே போக வேண்டியிருக்கிறது. ஆண்கள் பெண்கள் என அங்குமட்டும் பேதமில்லை.
பெண்களும் டாய்லட்களை பயன்படுத்துகிறார்கள்தான். ஆனால், சுத்தமாக அவர்களுக்கும் பயன்படுத்த தெரியவில்லை. இதுவே இப்படி என்றால் AC இல்லாத பெட்டிக்கு சென்று பார்த்தேன். எனக்கு அதுகுறித்து சொல்ல தெரியவில்லைஎனது அந்த பயணத்தில் மூன்று முறை மட்டுமே சிறுநீர் கழிக்கக் சென்றேன். தண்ணியே குடிக்கவில்லை. ஒரு முறைகூட சாப்பிடவே இல்லை. 130 கோடி மக்கள் வாழும் இந்தியா. எல்லாரையும் திருப்தி படுத்த முடியாதுதான்.

 

சம்பவம் 3
சரியாக நான் இறங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு என் தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. THANE என்ற இடத்தில் இறங்க வேண்டும் நான். IGATPURI நிலையத்தை கடந்து போய்கொண்டிருந்த போதுதான் நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்ததை உணர்ந்தேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. கவலை அதிகமாகவே வந்தது.

 என் எதிர் தோழனிடம் கேட்டேன்.
*இங்கே ரயில்வே போலீசாரை எப்படி தொடர்பு கொள்ளவேண்டும்?
-என்ன பிரச்னை
*என் தங்கச் சங்கிலி காணவில்லை
-நல்லா தேடினாயா
*தேடிவிட்டேன்.
-நான் உனக்கு உதவுகிறேன். கவலை படாதே - என முயற்சியில் இறங்கினான். முதலில் நாங்கள் தங்கியிருந்த பெட்டியில் விசாரித்ததும் ஆளாளுக்கு கலவரமாக தொடங்கிவிட்டனர். விஷயம் அடுத்தடுத்த பெட்டிக்கு போகவே ஒருவர் என்னை தேடி வந்தார். ஒருவன் பாக்கெட்டிலிருந்து சங்கிலி கீழே விழுவதை பார்த்தோம். நாங்கள் பார்த்துவிட்டதை உணர்ந்ததும் இது உங்களுடையதா என அவன் கேட்டான். பிறகு எங்கே போனான் என தெரியல. அவனின் இருக்கை எண் இதுதான். டிடி மாஸ்டரிடம் புகார் கொடுக்கலாம் என்றார். நான் டிடி மாஸ்டரிடம் அழைத்து செல்ல பட்டேன். அவர் சில தகவல்களை கேட்டுக்கொண்டார். சம்பந்தப்படட நபரின் பெயர் இறங்க வேண்டிய இடம் அனைத்தும் ஆராயப்பட்டது. கல்யாண் ஸ்ட்டேஷனுக்கு வருவதற்கு முன்பே சங்கிலியை எடுத்திருந்த நபர் அகப்பட்டுக்கொண்டார். சங்கிலியை திருப்பி கொடுத்தார். சில பேர் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கல்யாண் ஸ்டேஷன் போலீஸ்க்காரர்கள் அந்த நபர்மீது புகார் கொடுக்கிறாயா என்றனர். வேண்டாம். அவர் திருப்பி கொடுத்துவிட்டார். என் பொருள் கிடைக்காது என நினைத்தேன். ஆனால், கிடைத்துவிட்டது என்றேன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக