செவ்வாய், 6 மார்ச், 2018

வாரணாசி 8

காசி நகரில் தவறவிடக்கூடாத காட்சிகளில் ஒன்று கங்கை ஆர்த்திக் காண்பது. அதைக் காண்பதற்கு ஆன்மிகவாதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கலையையும் இயற்கையையும் ரசிக்கத் தெரிந்த யாருக்கும் கங்கை ஆர்த்தியும் பிடிக்கும். இமயமலையில் தொடங்கி கல்கத்தா கடலில் கலக்கும் கங்கை, அது பாயும் இடங்கள் கொண்ட கரைகளில், எளியவர்கள் துணி வெளுத்தும், படகைச் செலுத்தியும், பிணமெரித்தும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். பலநூறு ஆண்டுகளாக வற்றாத கங்கையை, தெய்வமாக ஆர்த்தி எடுத்து வணங்குவதும் மரியாதை செய்வதும் ஆன்மிகத்தையும் தாண்டிய உணர்வாக எனக்குத் தெரிகிறது.

மாலை நெருங்க நெருங்கக் காசியின் வண்ணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. விளக்குகளும் ஒவ்வொன்றாக விழிக்கத் தொடங்குகின்றன. கங்கை ஆர்த்தியைப் பார்க்க சுற்றுப்பயணிகளும் பத்திமான்களும் அதிகமாகவே ஒன்று கூடுகின்றனர். படித்துறைகளில் இடம்பிடித்து சிலர் நேரமே அமர்ந்துவிட்ட வேளையில், படகில் அமர்ந்தபடி ஆர்த்தியைப் பார்ப்பதுதான் அழகும் விஷேசமும் எனப் படகோட்டிகள் நம்மை உசுப்பிவிடுவார்கள்.உண்மையில் அது ஒரு சுக அனுபவம்தான். கங்கை நதியில் அமர்ந்துகொண்டே கங்கை ஆர்த்தியை ஒருமுறை பார்க்கத்தான் செய்வோமே என்ற ஆசை எழவே செய்கிறது. அதற்காகவே தயாராக வைத்திருக்கிற கை துடுப்பு படகுகளையும், மோட்டார் படகுகளையும் சாமர்த்தியமாக பேரம் பேசுகிறார்கள் படகு முதலாளிகள். பெரிய சந்தைப்போலவே அதன் பேரம் பேசப்படுகிறது. வேண்டாம் என்றாலும் அட்டைபோலவே ஒட்டிவந்து வேறு படகுகாரரோடு பேசவிடாமல் தடுக்கிறார்கள். அல்லது இவர்கள் தொடர்ந்து வருவதைப் பார்க்கும் வேறு படகுக்காரர்கள் நம்மைத் தவிர்க்க முயல்கிறார்கள்.

காத்துக்கிடக்கும் பலநூறு படகுகளில் எந்தப் படகு நம்மை தேர்ந்தெடுக்கப் போகிறதோ என நான் காத்திருக்கையில் சாமர்த்தியமாக சாகுல் ஒரு படகோட்டியிடம் பேரம் பேசி முடித்திருந்தார். துடுப்பு போடும் படகு அது. செலவை இருவரும் பகிர்ந்துகொண்டோம். பல ஆண்டுகளாகக் காசியில் படகோட்டும் தொழில் செய்யும் அந்தப் படகோட்டி கொஞ்சம் நியாயமாகவே நடந்துகொண்டார். எல்லாப் படித்துறைகளையும் படகில் பயணித்தபடி ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னார். புகைப்படங்கள் எடுக்க வசதி செய்துகொடுத்தார். கேட்டுக்கொண்டதின் பேரில் சில படித்துறைகளில் நிறுத்திச், அங்கு சென்றுவர அனுமதியும் கொடுத்தார். அனுபவசாலிகள் கொஞ்சமாவது அனுமானிக்கிறார்கள். தேடிவருபவர்களையும் சுற்றிப்பார்க்க வருபவர்களையும்.


வெள்ளைத்திரைசீலையால் அலங்கரித்த ஒரு பெரிய மோட்டார் படகில் ரோஜாப்பூ மாலை அணிந்திருந்த ஒரு பெரிய ஐரோப்பிய குழு குதூகலமாகப் பவனிவருவதை காண முடிந்தது. திருமண வண்டி மாதிரி அலங்கரித்திருந்த ஒரு படகு, வாடிக்கையாளர் கிடைக்காமல் வெறிச்சோடி கிடந்தது. ஜோடியாகச் செல்லும் படகுகளும் வெவ்வேறு அலங்காரத்துடன் தேவைப்பட்டால் சோமபானம் அருந்தும் வசதியோடும் இருந்தது.


ஆளுக்கு 100-200 கொடுத்து ஆட்களைச் சேர்த்து, குழுவாகப் பயணிக்கும் வசதியும் இருக்கவே செய்கிறது. யாருக்கு என்ன வசதியோ அதை பெற்றுக்கொள்ளாம். யாரையும் அந்தக் கங்கையும் ஆர்த்தியும் ஏமாற்றவில்லை. குட்டிபடகில் அகல் விளக்குகளை அடுக்கிப் பயணிப்பவர்களிடம் விற்பனை செய்யும் சிறுவன் என்னை நெருங்கி வந்தான். அவனையும் ஏமாற்ற விரும்பவில்லை. இரண்டு அகல் விளக்குகள் கங்கை ஆர்த்திப் பார்க்கும் முன்பே நானும் சாகுலும் கொளுத்தி நதியில் விட்டோம். எனக்கு் எந்த வேண்டுதலும் இல்லை. அந்தப் பையன் பள்ளிக்கூடம் போகிறானா இல்லையா என்ற கேள்வியை தவிர...
(தொடரும்)

1 கருத்து: