திங்கள், 5 மார்ச், 2018

வாரணாசி 7



நான் ஒரு டீ-காப்பி பிரியை என என்னை தொடர்பவர்களுக்கு நல்லாவே தெரியும். சாதாரணமாகவே 6-7 முறை அருந்திவிடுவேன். காசி நகரில் இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தேனீர் அத்தனை ருசியா? என்று கேட்டால் அது சாதாரணம்தான். ஆனாலும், அங்கே பயன்படுத்தும் அடுப்பும் -குவளையும்தான் எனக்கு ஸ்பெஷல்.



சிறு உணவு கடைகளிலும், தேனீர் கடைகளிலும் கரி அடுப்புகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நல்ல உயரமாக அடுப்பை வைத்து கரியை உடைத்துப்போட்டு, தணலை அதிகரிக்க அடுப்பின் கீழே ஒரு சின்ன காற்றாடியை முடக்கி விடுகிறார்கள். தணல் அதிகரித்ததும் காற்றாடியை நிறுத்திவிடலாம். இந்த அடுப்பை எரிக்க பயன்படும் கரியை நொறுக்கி உடைத்து வைத்துக் கொள்கிறார்கள். எந்த மரத்தின் கரி என தெரியவில்லை. அடுப்பு நல்லாவே எரிகிறது.


பாலைக் காய்ச்சி தயாரிக்கும் தேநீரும் டீயும் நமக்கு மண் குடுவையில் தருகிறார்கள். அகல் விளக்குமாதிரி கொஞ்சம் குழி அகலமாக உள்ளது குவளை . அதை பார்க்கும்போதே எனக்கு சந்தோசம் வந்துவிடுகிறது. அது ஏனோ தெரியவில்லை. மண் குடுவை தேனீர் என்னை அவ்வளவு கவர்ந்துவிட்டது. சுவையே இல்லை என்றாலும் சுவையாகவே இருக்கிறது.
கிட்டதட்ட வடநாடுகளில் அவர்கள் மண் குடுவையைத்தான் பயன்படுத்துகிறார்கள். சில இடங்களில் நெகிழிகளையும் பயன்படுகிறார்கள்தான். அது வேண்டாம் என்றால் கண்ணாடி குவளையை மாற்றி தருகிறார்கள். மண் குடுவையில் தேனீர் குடித்துவிட்டு தூக்கி குவளையை வீசிவிடுகிறார்கள்.



மேலும் அங்கு பாக்கெட்  பால் பயன்பாடு மிக குறைவு. எருது அல்லது பசுவின் பாலை கறந்து அப்போதே தேநீர் கடைகளுக்கு கொண்டுவந்து கொடுத்து விடுகிறார்கள். தேநீர் சுவைக்கு அதுவும் ஒரு காரணம்.
காப்பியின் விலை ஏழு அல்லது எட்டு ரூபாய்தான். கண்ணாடி கப்பில் தழும்ப தழும்ப தருகிறார்கள். இந்த மண்குவளையில் தரும் தேநீர் விலை ஐந்தே ரூபாய்தான்.  



நான் தேனிர்க்குடித்த குடுவைகளை மொத்தமாக சேகரித்து மலேசியாவுக்கு கொண்டு வந்துவிட்டேன். அவைகளை கழுவி வைத்திருக்கிறேன். இதழ் உடைந்த குவளைகளை சாம்பராணி கொளுத்தி வைக்கவும் , சில குவளைகளை சந்துருவுடைய ஓவிய வேலைக்காகவும், உடையாத குவளைகளை வீட்டுக்கு வருவோரிடம் காட்டவும் வச்சியிருக்கிறேன்

1 கருத்து: