ஞாயிறு, 25 மார்ச், 2018

வாரணாசி 15 (கங்கை படித்துறையின் அக்கரை)




காசி பயணத்தில் என்னால் மறக்க முடியாத மற்றொரு  தருணம் அதன் காலை வேளையாகும். சூரியன் மெல்ல எழும்போது  அந்தக் கங்கை நதியில் கூட்டம் கூட்டமக பறவைகள் சங்கமிக்கின்றன. அலை அலையாக அவை பறந்து திரிவது மனதிற்கு அத்தனை குதூகலமாக இருக்கிறது. அந்தக் காட்சியை கரையில் இருந்து பார்த்தாலும் படகில் பயணித்தவாறு பார்த்தாலும் மனதிற்கு அத்தனை சுகமாக இருக்கிறது.
நீர்ப் பறவைகளுக்கான தீவனம் அங்கு விற்கிறார்கள். அதை வாங்கி கங்கையில் போடும்போது கூட்டமாக பறவைகள் நம்மைச் சுற்றி குழுமுகின்றன. மிக அழகான தருணம் அது. நான் வேண்டும் மட்டும் பறவைகளை  புகைப்படங்களை எடுத்தேன். 


காலை நேரத்தில் பலரும் படகில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். படகில் பயணம் செய்வது என்பது வெறுமனே பறவையையும் படித்துறைகளையும் கண்டு களிப்பது அல்ல. படகோட்டிகள் நம்மை படகில் அமர்த்தி மறுகரைக்கு அழைத்துச் சென்று தூய்மையான கங்கை நீரைக் காட்டுகிறார்கள். அது தூய்மையானதுதானா என்ற சந்தேகம் எனக்கு இருந்தாலும் பலர் அதில் இறங்கி நிம்மதியாகக் குளித்துக்கொண்டிருந்தனர்.



ஆண்கள் பெண்கள் எனத் தண்ணியில் முங்கி எழுவதும் பின் பிராத்திப்பதும் பின் மீண்டும் முங்கி எழுவதுமாக இருந்தனர். குளித்து முடித்து உடை மாற்றுவதற்காக எந்த வசதியில் இல்லை. ஈரத் துணியோடு மேலே ஒரு துண்டைச் தூற்றி ஆடைகளைக் களைந்து பின் உடை மாற்றுகிறார்கள். தமிழ் நாட்டுப் பெண்களை போல எந்தக் கூச்சமோ சங்கோஜமோ அவர்களுக்கு இல்லை. வேடிக்கை பார்ப்பவர்கள் குறித்தும் எந்த எதிர்வினையும் இல்லை. இயந்திர வேகத்தில் வந்த வேலையை முடித்துக் கிளம்புகிறார்கள். நான் இதையெல்லாம் ஒரு பார்வையாளராக கண்காணித்தபடி இருந்தேன்.

டீ காப்பி விற்பவர்கள் ஒரு புறமும் சுடச் சுடச் பூரி தயாரித்தபடி ஒரு புறமும் பாசி மணிகள் விற்பவர்கள் ஒரு புறமும் அந்த  அக்கரையில் சின்ன சின்ன வியாபாரங்கள்  காலை நேரப் பயணிகளுக்காகவே செய்யப்படுகிறது. கரைக்கு அப்பால் இருக்கும் மணற்தரையில் இந்த சிறு வியாபாரங்களைத் தவித்து ஒட்டகம் மற்றும் குதிரை விசாரி செய்து பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கும் சாகுலுக்கும் கங்கையில் குளிக்க தோணவில்லை. என்றாலும் கால் நனைத்துக்கொண்டோம்.


எனக்கு ஒட்டகத்தில் சவாரி செய்ய விருப்பம் இருந்தது. அதன் உயரத்திலிருந்து அக்கரையில் இருக்கும் படித்துறையை புகைப்படம் எடுக்க ஆசையும் இருந்தது. அதை சாகுலிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒட்டக சவாரி நான் நினைத்ததுபோல சுலபமாக இல்லை. ஏணியைப் போட்டுத்தான் அதன் மீது ஏற வேண்டும்.  அதன் மீது அமரவும் சவாரி செய்து இறங்கவும் சரியான வாட்டம் இருக்க வேண்டும். அத்தனையும் ஒருவாராகச் சமாளித்து  விட்டாலும் ஒட்டகம் அசைந்து அசைந்து நடக்கும்போது நமக்கு முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளுகிறது. அதைவிடவும் ஒட்டகத்தின் முதுகெலும்பு  உட்காரும் இடத்தில் குத்துகிறது. ஒட்டக சவாரிக்கு ஆசைப்பட்டால் இத்தனையையும் சமாளிக்க வேண்டுமா என்ற பிரக்ஞை எனக்கு பிறகுதான் வந்தது. எப்படியோ நான் ஆசைபட்ட இரண்டு விஷயங்களும் இனிதே நிறைவேறியது.
















 
 
 
 
 
 
 





 
 
 

1 கருத்து: