திங்கள், 15 பிப்ரவரி, 2016

சம்பவங்கள்...

சம்பவம் 1
டிசம்பர் 24
மறுநாள் கிறிஸ்மஸ். எந்த கொண்டாட்டமுமற்ற நிலையில் இருந்த தேவாலயத்தை கடந்து போகையில் நுழைவாயின் எதிர்புறத்தில் சிலை போல அமர்ந்திருந்தவரை மனது ஈர்த்தது. என்ன வசீகரமான கிழவர் இவர்... O my god.
Shahul வண்டியை நிறுத்த முடியுமா என்றேன். அது ஒரு வளைவு சாலை. அந்த கிழவர்தானே காரணம் என்றார் சாகுல். சிரித்தேன்.
* உங்கள் பெயர் ?
- டேவிட்.
* உங்களோடு படம் எடுக்க முடியுமா?
- முடியும்.. 20 ரூபாய் தருவியா?
* 200 ரூபாய் தருகிறேன். உங்களுக்கு கிறிஸ்மஸ் பரிசாக. உங்கள் தோள்மீது கை போட்டுக்கொள்ளட்டுமா?
- போட்டுக்கொள்ளேன். நானும் கை போட்டுகொள்ளவா? (சிரிப்பு அவருக்கு)
* வேண்டாம் வேண்டாம்.
(தாத்தா நீங்க விவரம்தான் என நாங்களும் சிரித்தோம். அழகான வடிவான முகம் டேவிட் அங்கிலுக்கு. புகைப்படம் எடுத்துக்கொண்டு பரிசு கொடுத்து விடை பெற்றோம். இப்போதும் டேவிட் என் நினைவுகளில் வந்து வந்து போகிறார். )

சம்பவம் 2

நான் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் log house. அருகில் நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. பறவைகளின் பேச்சு சத்தம் இடை விடாது கேட்டுகொண்டே இருந்தது. Wow... So beautiful என என்னையும் அறியாமல் கூறிக்கொண்டிருந்தேன். வேறு எந்த சத்தமும் இல்லை. அப்போது..
பெரிய குரல் எடுத்து மிரட்டும் சத்தம் கேட்டது. கூடவே யானை பிலிரும் ஒலியும்.....
நதிக்கு மேலே ஓடிக்கொண்டிருந்த கல்பாலத்திலிருந்து சத்தம் வந்தது. உற்று நோக்கினேன். என் உயரமும் மெல்லிய உடம்பும் கொண்ட யானை பாகன், நீண்ட தந்தமும் மிகப்பெரிய உடம்பும் கொண்ட யானையும் தெரிந்தனர். உண்மையில் மிகப்பெரிய யானை. அதன் வாயில் கௌவி வந்த மரத்துண்டை கணம் தாங்காமல் (அப்படி தான் நினைக்கிறேன், தெரியவில்லை) கீழே போட்டு விட்டது. அதை மீண்டும் எடுக்கச்சொல்லி மிரட்டல் விட்டுக்கொண்டிருந்தார் யானை பாகன்.
யானை மரத்துண்டை எடுக்கவில்லை. கையில் வைத்திருந்த கோலைக்கொண்டு ஓங்கி ஒரு அடி யானையை. அந்த அடி என் மேலே பட்டது போலே கண்களை மூடிக்கொண்டேன். என் கையை நானே இறுக பிடித்திருந்தேன்.
அடிபட்டதும் யானை மீண்டும் சத்தத்தை எழுப்பியது. அதன் சத்தம் ஒரு வகை கேவல்போல கேட்டது. அதை சொல்லத் தெரியவில்லை. பின்
யானை அந்த மரத்துண்டை கௌவிக்கொண்டு நடக்க துவங்கியது. சபாஷ் கொம்பா... யானைக்காக துள்ளி
குதிக்க தோன்றியது.
Log house சில் பணி புரியும் எஸ்டர் அம்மா டீயோடு என்னை நோக்கி வந்தார்.
யோகி: அம்மா அந்த பாகன் மகா கெட்டிக்காரர். அந்த யானைக்கு என்ன அழகாக பயிற்சி கொடுக்கிறார். யானையின் காலுக்கு பாதிகூட இல்லை அவர், எத்தனை தைரியம்.
எஸ்டர் அம்மா: இல்ல மா. அது பயிற்சி அல்ல. அது பயிற்சி பெற்ற யானைதான். பாவம் எவ்வளவு தொலைவில் இருந்து அந்த மரத்துண்டை தூக்கி வருகிறதோ... அதற்கும் வலிக்கும் தானே. என்ன செய்யும் அது. அது நினைத்தால் அந்த பாகனை தூக்கி அடித்து விட்டு போக எவ்வளவு நேரம் ஆகும்? அந்த யானைக்கும் இருப்பது அன்பு தானே மா. பாவம் அதை அடிக்ககூடாது இல்லையா..
எஸ்டர் அம்மா பேச பேச நான் அவர் கையை பிடித்துக்கொண்டேன். நீங்கள் சொன்னது எத்தனை பெரிய விஷயம் தெரியுமா? எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க மா....
யானை பாகன், யானை, எஸ்டர் அம்மா என ஒரே நேரத்தில் இவர்கள் என்னில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது. அன்பு வழி(லி)யது. யானையைப் பார்த்தேன். அது எங்கோ போய்கொண்டிருந்தது. கழுத்தில் கட்டிய அதன் மணிச்சத்தம் சன்னமாக கேட்டுக்கொண்டிருந்தது.

சம்பவம் 3
இடம்: பசார் செனி (மலேசியா)
தேதி: 7.2.2016
போதை பித்தர்களும், போக்கிடமில்லாதவர்களும் இளைப்பாறும் ஓர் இடத்தில் பார்த்தேன் அவளை. அவள் ஒரு வெள்ளைக்காரி. முழுகால் சிலுவார், சட்டை அணிந்திருந்தாள். எந்த ஒரு சலனமும் இல்லாமல் ஒரு கையில் பியர் டின்னுடனும் மறுகையில் சிகரெட்டுடனும் அமர்ந்திருந்தாள். அந்த நேரத்தை அனுபவித்த படி அவள் மட்டுமே இருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்தேன். மேலை நாட்டவர்கள் எங்கு போனாலும் அவர்கள் அவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள் என கூறிக்கொண்டேன். அவளை புகைப்படம் எடுத்தால் அவளின் privacy கெடும் என தோன்றியது. புன்னைகைத்தவாறு அவளை கடந்துச் சென்றேன்.
நானும் எனக்கு பிடித்ததை தான் செய்கிறேன். ஆனால், அது ஒரு கட்டுக்குள் இருப்பதை மறுக்கமுடியாது. அதற்காக நான் மதுவையும் புகையையும் கேட்கிறேனா என நினைத்தால், உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு தேவையில்லை...
இடம்: temple park நீர் வீழ்ச்சி (மலேசியா)
தேதி : 8.2.16
ஆண்கள் எல்லாம் ஒரு உயரமான இடத்திலிருந்து குளத்தை நோக்கி குதித்துக்கொண்டிருந்தனர். அது ஒரு சாகசம் மாதிரிதான். திடீரென 20 வயதுக்கும் குறைவான அந்த தமிழ் பெண் அங்கு போவதாக அவள் வீட்டாரிடம்
கேட்டாள். வேணாம் என மறுத்தனர். எனக்கோ அவளின் தைரியத்தை பார்க்க ஆசை. அந்த நேரத்தில் அவள் நானாக மாறுவது போல் இருந்தது. ஏதோ யோசித்தாள், ஏறினாள் அந்த உயரமான இடத்தில். அங்கு வரிசையில் இருந்த ஆண்கள் சிலருக்கு சிரிப்பு-ஆச்சரியம். எந்த பின்வாங்கலும் இல்லாமல் குதித்தாள். அவ்வளவு திருப்தி அவள் முகத்தில். அத்தனை பெருமை என் முகத்தில்.
நாம் நாமாக வாழ எல்லா நேரமும் வாய்ப்பது இல்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக