செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 10



வரதெப்பக்காடு வரவேற்பு மையத்திற்கு வெளியே இருளர் சமூகத்தினர் நிறையப் பேரைக் காண முடிந்தது. ஆனால், அவர்கள் நவீனமாகி இருந்தனர். பழங்குடிகள் என்ற அடையாளம் பெயரளவில் மட்டுமே இருக்கும் அளவுக்குப் பெரிய மாற்றம் இருந்தது. அங்கு இருக்கும் ஒரு டீக் கடையை நடத்தி வருவதும் அவர்களாகத்தான் இருக்கக்கூடும் என நினைக்கிறேன். வனத்தில் வசிக்கும் இருளர்களோடும், காட்டு நாயக்கர்களோடும் சில மணி நேரம் உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில் அவர்களது வாழ்கையையும் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

மக்கள் வாழும் பொதுப்பகுதிகளில் வாழாமல் இருண்ட, அடர்ந்தக் காட்டுக்குள் சென்று வாழ முற்பட்ட மக்கள் ‘இருளர்கள்’ என்றழைக்கபட்டனர். இருளர்கள் ‘அரைநாடோடிகள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் குடியிருப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்களாம். உணவுச் சரிவரக் கிடைக்காத நிலையிலும் மூலிகைகள் கிடைக்காவிட்டாலும் இடப்பெயர்சி செய்வார்கள் எனக் காரணம் கூறப்படுகிறது.

அவர்களுடனானப் பேச்சு வார்த்தையின்போதுதான் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் முதுமலைப் புலிகள் காப்பகத்தில் அந்த வனத்தில் வசிக்கும் பழங்குடிகள் அதிகமானோர் கூலிக்கு வேலைச் செய்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. குறிப்பாக அந்த வனத்தில் இருளர், காட்டு நாயக்கர், குறும்பர் என மூன்று பழங்குடிகள் ஒரே குடியிருப்பில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வனத்தில் வேலைச் செய்து கூலிப் பெறுகிறார்கள். காடுகளைச் சுத்தப்படுத்துதல், புதர்களை வெட்டி அப்புறப்படுத்துதல் உள்ளிட்டச் சில வேலைகள் அதில் அடங்கும். அவர்களின் ஆதி அடையாளங்களான வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் உள்ளிட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லையா? என்று நான் கேட்டபோது அவர்களிடத்தில் சரியான பதில் இல்லை. வீட்டில் சிறிய அளவில் பயிர் செய்வதாக மட்டும் கூறினார்கள்.

இருளர் சமூகம் என்பது என்ன? கொஞ்சம் பார்ப்போம்..

எரிலைக்கிழங்கு எனக்கூடிய சர்க்கரை வள்ளிக்கிழங்கைத் தோண்டி உண்பவர்கள் என்பதால் மலையடிவார மக்கள் இருளர்களை 'எரிளிகாரு' (எரிளி = கிழங்கு, காரு= மக்கள்) என்றே அழைக்கப்பட்டனர். எரிளிகாரு என்பது 'எருளர்' என்றாகி அதுவே பின்னர் இருளர் என்றானது. இருளர்களில் இரண்டு பிரிவினர் உண்டு. நீலகிரி இருளர்கள் ஒரு பிரிவினர். தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மேற்கு தர்மபுரி மாவட்டம் வரையிலும் சமவெளிகளில் வாழும் இருளர்கள் மற்றொரு பிரிவினர். இவ்விரு பிரிவினருக்குமான வரலாற்று ரீதியான தொடர்புகள் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது.
நீலகிரி இருளர்களுக்குள் 8 குலங்களும் கோவை இருளர்களிடம் 12 குலங்களும் உள்ளன. நீலகிரி புரிவினர் எலி சாப்பிடுவதில்லை. கோவை இருளர்கள் எலியைப்  பிடித்துச் சாப்பிடுவார்கள். இவ்வாறாக இன்னும் பல வேறுபாடுகளைச் செங்கோ 'வனாந்தரப் பூக்கள்'எனும் நூலில் ஆராய்ந்து எழுதியுள்ளதாகப் பக்தசத்சல பாரதி கூறுகிறார். நீலகிரி இருளர்கள் மேல்நாடு இருளர், கசபர், வேட்டக்காடு இருளர், ஊராளி, காடு பூஜாரி என ஐந்து வகைப் படுத்தலாம். சமவெளி இருளர்கள் வில்லி, வேடர், வேடவர், வேட்டைக்காரன் போன்ற பெயர்களில் மற்ற சாதியால் குறிப்பிடப்படுவார்கள்.

இருளர்கள் அறிதிறன்

ஒவ்வொரு பழங்குடியும் தம்மைச் சுற்றியுள்ள நிலம் தாவரங்கள், விலங்குகள், இயற்கை கூறுகள், பருவங்கள், பிரபஞ்ச அமைப்பு, அதன் நிகழ்வுகள் என அனைத்தையும் அவர்தம் பார்வையில் இனங்காண்பர்; விளக்குவர்; வகைப்படுத்துவர். இத்தகு பார்வை அம்மக்களின் அறிவாலும் அனுபவத்தாலும் உண்டானது. இதனையே ‘உலகப் பார்வை’ என மானிடவியர்கள் கூறுகிறார்கள். இருளர்களின் உலகப்பார்வையின்படி அவர்கள் தம் நிலங்களை ஐந்து வகைகளாகவும், மலை விவசாயத்தின் பருவங்களை இரண்டாகவும் பாகுபடுத்திக் காண்கிறார்கள்.
1.பெட்ட : உயர்ந்த மலைப்பகுதி, அடர்ந்தகாடுகளும் கொடிய காட்டு விலங்குகளும் உள்ள பகுதி. இருளர்கள் ;பெட்ட’க்களை அதிகம் பயன்படுத்துவதில்லை.
2.குட்டபெட்ட: பெட்டாவுக்குக் கீழ் உள்ள மலைப்பகுதி. இது குடியிருப்புக்கருகாமையில் உள்ளது. இங்குக் குறுங்காடுகளும் மரங்களற்ற குன்றுகளும் இருக்கும். அங்குக் கால்நடைகளை மேய்க்கவும் தேன் எடுக்கவும் விறகு சேகரிக்கவும் செல்வார்கள்.
3.காடு: குடியிருப்புக்கருகில் உள்ள ஓரளவு சம நிலங்களில் உள்ள வளமான காட்டுப்பகுதிகளில் ஆண்கள் வேட்டைக்கும் பெண்கள் காடுபடு பொருள்களைச் சேகரிக்கவும் செல்கிறார்கள்.
4. மல (மலை): புல்வெளியுடன் கூடிய மலைப்பகுதி.காட்டெரிப்பு விவசாயம் செய்தபின் தரிசாக வடப்பட்டுள்ள இடம். இங்கும் கால்நடைகள் மேய்க்க விரும்புவார்கள்.

இத்தகவல்கள் யாவும் பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டதாகும்.

இருளர்கள் ஓலையைக் கொண்டு தாங்கள் தங்குவதற்குக் கட்டிக்கொள்ளும் குடிசைகள் தற்போது மூங்கில், கல் மற்றும் இன்னும் பிற பொருள்களைக் கொண்டு கட்டப்படுகிறது. இது மற்ற மற்ற பூர்வக்குடிகளுக்கும் பொருந்தும் என்றாலும் சிலர் நவீனமயமாக்களிலும் இன்னும் தங்களின் மரபை மறக்காமல் பின் பற்றியும் வருகின்றனர். காலங்காலமாக மண்ணுடனும் வனத்துடனும் மற்ற உயிரினங்களுடனும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு தற்சார்பாக வாழ்ந்திருந்த இருளர் மக்கள், கூலித் தொழிலாளிகளாக மாற்றப்பட்டதற்கான காரணத்தை யாரை நோக்கி கைக்காட்டுவது?
காடு, மலைகளில் வசிக்கும் இருளர் பழங்குடிகள் மதம், சாதி போன்ற எந்த முன்னொட்டும் பின்னொட்டும் இல்லாமலேயே பிறந்து வாழ்ந்து வருபவர்கள் என்றும் முன்னோரையும் இயற்கையையும் வழிபட்டு வருபவர்கள் என்றும் கூறப்பட்டாலும் அவர்களில் பலர் கிருஸ்துவ மதத்தைத் தழுவி இருப்பதாகத் தெரிவித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

பூர்வக்குடிகளாக இருந்தாலும் வழிபாடு விஷயத்தில் இருளர்கள் மிகவும் கண்டிப்புடன் இருக்கின்றனர். அதாவது அவர்களுடைய கோயிலை தவிர வேறு இடங்களில் வழிபாடு செய்ய அவர்கள் விரும்புவதில்லை. இதை எல்லா இருளர்களும் இன்னும் பின் பற்றுகிறார்களா என்று தெரியவில்லை. குறிப்பாக இருளர்கள் கன்னி தெய்வத்தை வழிபடுகின்றனர்.  இத்தெய்வத்தை வழிபட்டால் தனக்கு நேரிடும் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்துபோகும் என்பது இம்மக்களிடம் உள்ள பொதுவான நம்பிக்கையாகும். ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசி மகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுரக் கடற்கரையில் கூடித் தங்கள் குல தெய்வமான கன்னியம்மாவிற்குப் பூஜை செய்து வழிபடுகின்றனர். கன்னியம்மாவை ‘ஆயம்மா’ என்றும், சிலர் குறிப்பிடுகின்றனர். கிராமச்சிறு தெய்வங்கள் மனிதர்களுடன் மனிதராய் வாழ்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காகப் போராடி உயிர் நீத்தது போல, இருளர்களின் தெய்வமான கன்னியம்மாவும் இருளர் இனப் பெண்ணாக இருந்து, இவர்களுக்காகப் போராடி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு சு. சத்யா என்பவர் இருளர் சமுகம் குறித்து எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதை இன்னும் உறுதி செய்யும் வகையில் முதுமலையில் இருளர், காட்டு நாயக்கர், குறும்பர் ஆகியோர் ஒரே இடத்தில் வசிக்கும் பகுதியில் அவர்கள் வழிபாடு செய்ய ஒரு சிவன் கோயில் உள்ளது. அந்தச் சிவன் கோயில் மூன்று பழங்குடிகளும் வழிபடுவதற்கு அமைக்கப்பட்டாலும் இருளர்கள் சாமி கூம்பிட வருவது குறைவு எனக் காட்டு நாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த கிரிஜா தெரிவித்தார். பூர்வக்குடி என்றாலும் அவர்கள் மத்தியிலும் ஜாதி அல்லது இனம் சம்பந்தப்பட்ட ஆதிக்கம் நிறைய உள்ளது என்பது அவர்களின் பேச்சின் போதே அனுமானிக்க முடிந்தது.

இருளர்களின் திருமண முறை என்று வரும்போது, திருமணம் நிச்சயமான பின் ஒரு வருடத்திற்கு மணமாகாமலே சேர்ந்து வாழ்கின்றனர். பின் அவர்களுக்குள் பிடிக்கவில்லை அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வேறு நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது. இருளர்கள் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இருளர் சமுகத்தில் மிக முக்கியமாகப் பெண்ணின் விருப்பமே திருமணத்தின் மிக முக்கியமாதாகக் கருதப்படுகிறது என்றுக்கூறிய போது எனக்கு அது பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருளர் சமூகத்தில் விதவைப்பெண்கள் இல்லையாம். விதவைப் பெண்கள் தாங்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை அளிக்கப்படுகிறதாம். திருமணத்தின் போது தாலி அணியும் பழக்கம் இவர்களிடத்திலும் உண்டு. முன்பு திருமணத்தின்போது கருக மணி அணிந்தார்களாம். இப்போது தாலிக்கு மாறிவிட்டார்கள். இவர்களின் நிறையச் சடங்குகள் தற்போது தமிழர்கள் பின்பற்றும் சடங்குகளோடு மிக நெருக்கத்தில் உள்ளது.
இருளர்களைப் பற்றி லெட்சுமணன் எழுதிய  'ஒடியன்' என்ற புத்தகத்தில்  அணிந்துரை எழுதியுள்ள கவிஞர் ச.பாலமுருகன், அம்மக்களைப் பற்றிக் இப்படி குறிப்பிடுகிறார்.  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவை வனப்பகுதியை கோவன் என்ற இருள தலைவன் ஆண்டு வந்தான். அக்காலத்தில் சின்னஞ்சிறு கிராமமாக விளங்கிய கோவன்பதி சோழ மன்னர்களின் எல்லை விரிவாக்கத்திற்காகச் சேர பகுதி மீது படையெடுத்தபோது, தங்கும் இடமாக இந்தக் கோவன்பதி என்ற மலைகள் சூழ்ந்த பகுதியை பயன்படுத்தியுள்ளான்.

இதை எதிர்த்த இருள தலைவன் கோவன் அழிக்கப்பட்டான். தலைமை அழிக்கப்பட்டதால் மக்கள் சிதறி ஓடிப்போய் இருண்ட கானகத்தில் தஞ்சம் புகுந்தனர். தங்கள் இன்னல் தீர வனதேவதையிடம் மக்கள் முறையிட வனதேவதை சோழ மன்னனிடம் வந்து நியாயம் கேட்டபோது, தெய்வத்திற்குப் பலி கொடுத்து அவளை விரட்டினான். குடிகளை இழந்த அவள் பழங்குடிகளைத் தேடி அலைந்தாள். அவளுக்குப் புதுப்புது பெயர்கள் அதன் பின் வந்த மன்னர்கள் வைத்தனர். வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்று ஓடி இருண்ட காடுகளில் ஒளிந்த மக்களை இன்றளவும் ஏதோ ஒரு வகையில் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அம்மக்களும் இன்றும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் என்றும் அவர் எழுதியிருக்கிறார்.


சிலர் வசையின் போது அல்லது யாரையாவது ஏசும்போது இருளர் கூட்டம் அல்லது இருளச்சி என்று கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். இருளர்களில் ஆண்-பெண் யாரும் பயமறியாதவர்கள். தங்களுக்கென்று ஒரு விதிமுறையை வகுத்து வாழ்கிறவர்கள். அதில் பலர் நவீன மயத்தை விரும்பாமல் காட்டின் உள்பகுதிகளில் மறைவாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காக நானும் சாகுலும் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஆனால், எல்லா விவரங்களும் சுலபமாகக் கிடைத்துவிட்டால் அதில் என்ன சுவாரஷ்யம் இருந்திட போகிறது இல்லையா? மறுக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து விரிகிறது பார்வையும் தேடலும்.

நாங்கள் காட்டு நாயக்கர்கள் எனப் பேச தொடங்கினார் அண்ணன் மான்பா. அவர்களை அடுத்தத் தொடரில் காணலாம்.



(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக