வெற்றி
பெற்றால் ஒன்றாக வெற்றி பெறுவோம், தோல்வியடைந்தால் ஒன்றாகவே தோல்வியடைவோம்’
இதுதான் ‘ஓலாபோலா’ திரைப்படத்தின்
தாரக மந்திரமாக இருக்கிறது. ‘ஓலாபோலா’ திரைப்படத்தின்
இயக்குனர் சியு
கேங் குவானுக்கு இது இரண்டாவது படமாகும்.
முதல் படத்திலேயே இவர் முத்திரை பெற்ற இயக்குனர் என பெயர் பெற்றவர்.
இவரின் முதல் படமான
‘the journey ‘ இதுவரை வந்த மலேசிய திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சியு கேங் குவான் இயக்கியிருக்கும் இந்தப் படம், அவர் நினைத்தவுடன் எடுத்தப் படம் இல்லை.
அதற்காக அவர் கிட்டதட்ட இரண்டரை வருடங்கள் உழைத்திருக்கிறார். அந்த உழைப்பு சாதாரண உழைப்பு இல்லை என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிந்துக்கொள்ளலாம்.
1970 ஆம் ஆண்டு நடப்பதைப்போன்று கதை கலத்தைக் கொண்டு போயிருப்பது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் நாட்டில் புழக்கத்தில் இருந்த பொருள்கள், வாழ்வியல் முறை
என அனைத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் சில புதுமுகங்களை தேர்வு செய்ய 2 வருடங்களை செலவு செய்திருக்கிறார். பிரேசிலில் நடந்த உலக காற்பந்து போட்டியை நேரில் காணச்சென்றவருக்கு இந்த திரைப்படத்திற்கான எண்ணம் உதித்ததாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேங் குவான் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் படத்துடன் இணைந்து வரும் ‘அரேனா சாகாயா’ என்ற பாடலை புகழ்பெற்ற பாடகி ஜி அவி பாடியிருக்கிறார். அந்தப் பாடல் படத்தின் கருவை பேசக்கூடியது. தொடர்ந்து இரண்டாவது பாடலான we will believe again என்ற பாடலை விருது வென்ற புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஒன் சான் இசையமைக்க, பிரபல உள்ளூர் பாடகர்களான அரில், கணேசன் மனோகரன், ஜெரால்டின் கான் மற்றும் நிக்கோல் லாய் என மிகப் பெரிய கூட்டணி மொழி இனம் பேதமின்றி பாடலை பாடியிருக்கின்றனர். மலேசிய இளைஞர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் குதூகலத்தை ஏற்படுத்தக்கூடியது இந்தப்பாடல். அப்படி பதிவு செய்வதில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பட இயக்குனருடன் |
ஓலாபோலா
மலேசியாவில் வாழும் மூவின மக்கள் குறித்தும் இந்த தேசத்தைக்குறித்தும், அதன் மதிப்புகளையும் சித்தரிக்கும் விதத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. 1970-ஆம் மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில், மலேசியாவின் ‘ஹரிமாவ் மலாயா’ காற்பந்து அணி
எதிர்நோக்கிய வேற்றுமைகள் மற்றும் சவால்களை மிக கவனமாக இயக்குனர்
படமாக்கியிருக்கிறார்.
தொடர்ந்து
தமது வாழ்வியலுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒத்து வராத ஒரு விளையாட்டை, நிராகரிக்கச்
சொல்லும் ஓர் இந்தியக் குடும்பம், அண்ணனுடைய
பந்துவிளையாட்டுக் கனவுக்காக தனது எதிர்காலத்தையே தொலைத்த தங்கையைக் கொண்ட சீனக்குடும்பம், தேசிய
கால்பந்து அணியில் சிறந்த ஒரு ஆட்டக்காரராக வலம் வர வேண்டும் என ஆசையோடும் கனவுகளோடும்
இருக்கும் மலாய் இளைஞன், வானொலியில் விளையாட்டு வர்ணனையாளராக ஆவதற்கு கனவு கொண்டிருக்கும் மற்றொரு மலாய் இளைஞர் என இவர்களின் குடும்ப பின்னணிகளின்
துணையுடன் கதை பின்னப்பட்டுள்ளது.
இந்தத்
திரைப்படம் குறித்து முன்னதாக நடந்த ஒரு
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனருடன் பேசுவதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது. 80-ஆம் ஆண்டை
மையப்படுத்தியதுபோல் இல்லாமல் இன்றைய காலத்தை காட்டும் காட்சிகளாகக் காட்டுவதற்கு
சில தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியதாக அவர் கூறினார். இந்தப்
படத்தில் முக்கியமான ஒரு காட்சியாக விளையாட்டாளர்கள் இராணுவத்தில் பயிற்சி எடுப்பதை சொல்லலாம். அந்தப் பயிற்சியின்
தொடக்கத்தில் ராணுவ அதிகாரி பேசும் வசனம் மிக முக்கியமானது.
(என்ன வசனம் என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்).
ராணுவ பயிற்சியின் போது, ராணுவ விமானத்தில்
போட்டியாளர்கள் ஏறிச் செல்வதைப்போன்று ஒரு காட்சி
உள்ளது. உண்மையில் அந்தக் காட்சி பச்சை திரை தொழில்நுட்பம் பயன்படுத்தி எடுக்கப்பட்ட
காட்சி என இயக்குனர் கூறினார். திரையில் அந்தக் காட்சியை காணும்போது அது
தொழில் நுட்பம் என நம்ப முடியவில்லை.
1980-ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், மலேசிய
அணி கலந்துகொள்ள எதிர்கொள்ளும் சவால்களை படம் முழுவதும் நிலை நிறுத்தியிருக்கிறார்
இயக்குனர். சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில்
அழுத்தமாகவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இரண்டு
இந்திய கதாபாத்திரங்கள் நம்மை கடந்த கால நினைவுகளை தட்டி எழுப்பவதாக உள்ளது. ஒன்று
முத்து கதா பாத்திரத்தை ஏற்றிருக்கும் சரண்
குமார் மனோகரன். 1980-களில் நமது தேசிய காற்பந்து குழுவில் கோல்
கீப்பராக இருந்த ஆறுமுகத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். மலேசிய
‘ஸ்பைடர் மென்’ என பெயர் பெற்ற கோல் கீப்பர் ஆறுமுகம் அளவுக்கு வேறு
எந்த மலேசிய கோல்கீப்பரும் கிடைத்த்தில்லை என்பது குறிப்பிடதக்கது.
மற்றொரு நபர் எஎம்ஆர் குழுவைச் சேர்ந்த பெருமாள். இந்தப்படத்தில் அவரின் கதா பாத்திரம் பெரிய அளவில் பதிவாக்கப்படவில்லை என்றாலும் 1990-களில் காற்பந்து நேரடி வர்ணனைகளை
செய்து வந்த அறிவிப்பாளர்களான ஆறுமுகம், மைதீ சுல்தான் ஆகியோரின் நினைவுகள் வராமல் இல்லை. வானொலிக்கும் மலேசியர்களுக்கும் அது ஒரு பொற்காலம்தான்.
“ரஜினி பந்தை எடுத்துச் செல்கிறார். அவர் இன்னாருக்கு அதை தட்டி
விடுகிறார். எதிராளி அருகில் வந்துவிட்டார். பந்து கோல் வலைக்கு அருகில் இருக்கிறது.
இடது புறத்தில் பந்தைத் தற்காக்க இருவர் இருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களே உள்ளது.
‘கோல்’. பந்து கோல் வலையில் சீறி பாய்ந்தது. ஒன்றுக்கு பூஜ்ஜியம். இப்படியான வர்ணனைகளை
சின்ன வயதில் நான் என்ன என்றே தெரியாமல் ரசித்து கேட்டிருக்கிறேன். இப்போது அதற்கான
வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன.
‘ஓலாபோலா’ படத்தில் ரஹ்மான் என்ற கதாபாத்திரம் பந்து
விளையாட்டின் நேரடி வர்ணனை செய்யும்போது நம்மையும் அறியாமல் மனதின் பக்கத்தில் வந்துவிடுகிறார். புரூஸ்லி
பற்றி கூறி குதூகலிக்கும் காட்சிகள் மிக அழகு, மிக எதார்த்தம். 1970-80 காலக்கட்டங்களில்
சீனப்படங்களும் சில தமிழ் இந்திப்படங்களையும் கூட மலாய்க்கார்ரகள் திரையில் கண்டு களித்திருக்கின்றனர்.
எல்லாம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக அமைகிறது.
படத்தில் காட்சிகளையும் மலேசியாவின் இயற்கை அழகையும் அத்தனை
அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக புரோக்கா மலையில், பயிற்சியாளர்கள்
ஓடும் காட்சியை ‘லோங் சோட்’-டிலிருந்து எடுத்திருக்கிறார். இறுதி காட்சியில் ரயில்
வண்டி போவதை காட்டும் காட்சியும் அவ்வாறுதான். தோட்டப்புறத்தை காட்டுவதிலிருந்து, அதிகாலை
ரப்பர் மரத்தில் வேலை செய்யும் காட்சிகள் வரை அனைத்தும் அசத்தல்தான்.
மிகவும் உணர்ச்சி பூர்வமாக எடுத்திருக்கும் இந்தத் திரைப்படத்தை மூவின மக்களையும் இணைத்து உயிர் கொடுத்த்துடன் மலாய், சீனம், தமிழ் , ஆங்கிலம் என 4 மொழிகள் இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, மொழியைத்
தாண்டி ஒரு மலேசிய படம் என்பதற்கான காரணத்தை பெருகிறது. ‘ஓலாபோலா’ ஒரு ஹீரோ அம்சம் கொண்ட படம் அல்ல. ஆனால், நடித்திருக்கும் அனைவரும் ஹீரோக்களாக இருக்கிறார்கள்.
அதுவே
‘ஓலாபோலா’ தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றமாதிரி
படமாக்கியிருந்தால் அது நிச்சயமாக மிகைபடுத்தியதாக தெரிந்திக்கும். ஒரு காலத்தில்,
ஏன் 15 வருடங்களுக்கு முன்புகூட நாட்டில் பல்லின மக்களிடையே ஒரு அனுக்கமான ஒற்றுமை
இருந்தது. சுயநலமற்ற ஒற்றுமை அது. தற்போது அது சுயநலமாக உள்ளது என்பதில்
மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
-யோகி
12.2.16
“ரஜினி பந்தை எடுத்துச் செல்கிறார். அவர் இன்னாருக்கு அதை தட்டி விடுகிறார். எதிராளி அருகில் வந்துவிட்டார். பந்து கோல் வலைக்கு அருகில் இருக்கிறது. இடது புறத்தில் பந்தைத் தற்காக்க இருவர் இருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களே உள்ளது. ‘கோல்’. பந்து கோல் வலையில் சீறி பாய்ந்தது. ஒன்றுக்கு பூஜ்ஜியம். இப்படியான வர்ணனைகளை சின்ன வயதில் நான் என்ன என்றே தெரியாமல் ரசித்து கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்கு