ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

குழந்தை வரம் கொடுக்கும் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன்

கோலாலம்பூரிலிருந்து விரைவுச் சாலையை எடுத்தால் ஏறக்குறைய 40 நிமிடங்களில் கோலசிலாங்கூரை அடையலாம். அங்கிருந்து புக்கிட் பெலிம்பிங் செல்லும் சாலையை எடுத்துப் புக்கிட் தாலாங் தோட்டத்தை அடைவதற்கு 20 நிமிடங்கள் எடுக்கும். அந்தச் சாலையை அடையும் போது சாலை ஓரத்தில் தமிழ்ப்பள்ளியும் எதிர்புறம் ஒரு முருகன் வட்டார ஆலயத்தையும் பார்க்கலாம். அங்கேதான் செம்பனை தோட்டத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயம்.


இந்த ஆலயத்திற்கு நான் மூன்றாவது முறையாகச் செல்கிறேன். முதல் முறை செல்லும்போது எனக்கு 16 வயது. அப்போது மண்ணில் இருக்கும்பேச்சியம்மன் சிலை மட்டுமே இருந்தது. அங்காள பரமேஸ்வரி என்று வேறு சிலை இல்லை. இருந்தபோதும் அது பேச்சியம்மன் கோயில் என்று யாரும் அடையாளப்படுத்தவில்லை. அங்காளம்மன் கோயில் என்றுதான் கூறினார்கள்.
முன்னதாக அந்தக் கோயிலைப் பற்றி எனக்குக் கூறப்பட்ட கதை இதுதான். இந்தக் கதையை இன்னும் சிலர் கூறிக்கொண்டிருக்கலாம்.
ஒரு பெண்ணை 4 ஆடவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யத் துரத்திச் சென்றதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்க அவள் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறினார்கள். அதற்கு ஏற்றமாதிரி அந்த உருவம் படுத்த நிலையில்தான் உள்ளது. பின், அவள் காவல் தெய்வமாக மாறிவிட்டதாகவும் அவளை நாடிச் சென்று வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறுவதாகவும் கூறினர்.
நான் இரண்டாவது முறையாக 7 வருடங்களுக்கு முன்புச் சென்றேன். அப்போது என் தோழி நிறைமாத கர்பிணியாக இருந்தார். அவருக்காக உடன் சென்றேன். செம்பனை தோட்டத்தை அடைந்தவுடன் அர்ச்சனைப் பொருள்களை வாங்கச் சொல்ல இரண்டு மூன்று பேர் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் விடுவதாக இல்லை. ஆனால், கோயிலில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் சென்ற அந்த நேரத்தில் கோயில் விஷேசமாகத்தான் இருந்தது. அங்காள அம்மனுக்குத் தனியாகச் சிலை இருந்தது. அந்தச் சிலை அம்மன் திரைப்படத்தில் வருவது போன்று இருந்தது. மேலும், அம்மனுக்கு வைத்திருக்கும் கண் நிஜக்கண்ணைப் போன்றே பயமுறுத்தியது.
தற்போது 21.2.2016-ல் சென்ற போது கோயிலில் கொஞ்சமாக மாற்றம் தெரிந்தது. புதிதாக ஆதிபராசக்திக்கு  ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. பேச்சியம்மன் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்த மாதிரியே இருந்தார். அவளின் காலடியில் இரண்டு ஆடுகளின் தலைகள் இருந்தன. அதன் முன்பு, வலையல்கள், பழங்கள், பால் என அர்ச்சனை பொருள்களை அடுக்கி வைத்திருந்தனர். ஆட்டை பலியிட்ட அருவாள் என நினைக்கிறேன், அது பேச்சியம்மனின் கால்களுக்கு இடையே இருந்தது. பத்தர்கள் பேச்சியம்மன் உருவத்திற்கு மஞ்சளும் குங்குமமும் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஆலயத்தில் புகைப்படம் எடுக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கோயில் 116 ஆண்டு வரலாற்றைப் பேசுகிறது. மண்ணில் சுயம்புவாக உருவான பேச்சியம்மனுக்குக் கோயில் இல்லை. மழையிலும் வெயிலிலும் இருப்பதைக் கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் ஒரு மேற்கூரையைக் கட்டாமல் இல்லை. ஆனால், மறுநாளே கூரைகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும். பலமுறை கோயில் கட்ட எடுத்த முயற்சியில் அடைந்த தோல்வியில் அம்மன் அதை விரும்பவில்லை எனத் தெரியவந்தது. தொடர் மழையிலும் மண், மஞ்சள், குங்குமம் என அலங்கரித்திருக்கும் தன் மேனியை ஒரு பொட்டளவும் சேதாரம் ஆகவிடவில்லை. இதுவே பெரிய அதிசயமாகவும் அம்மனின் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது அதிசயம்தான்.

ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன்  கோயிலின் வரலாறு என்ன?

அங்காளம்மன் பிறந்தது மணியனூர் என்ற கிராமத்தில். இக்கிராமம் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அம்மனை பரம்பரை பரம்பரையாக வணங்கி இன்றுவரை பராமரித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவரான மாரிமுத்து முதலியார் கருப்பாயி தம்பதிகள், மலேசியா வந்தபோது அவர்களின் வீட்டில் வைத்து குலதெய்வமாக பூஜித்ததனர். கருப்பாயி என்பவரின் அதீத பக்தியால் அம்மன் புற்றாக (சுயம்புவாக) மண்ணில் தோன்றியதாக கூறப்படுகிறது. மணியனூரில் உள்ளதைப்போலவே இங்கேயும் படுத்த நிலையில் நீண்ட புற்றாக வளர்ந்து பின், அம்மனின் உருவம் வெளிப்பட்டது. அதைப் பேச்சியம்மனைப் போன்று வடிவமைத்து கருப்பாயி மாரிமுத்து பரம்பரையினர் இன்றுவரை பராமரித்து வருகின்றனர். மேலும், மணியனூரில் உள்ள கோயிலில் செய்யப்படும் பூஜைகளைப்போலவே இங்கேயும் அதே ஐதீகம் மாறாமல் பூஜைகள் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டது. அங்காள பரமேஸ்வரிக்குத் தனியாகப் பூஜையும் பேச்சியம்மனுக்குத் தனியாகப் பூஜையும் செய்கிறார்கள். பேச்சியம்மனுக்குப் பன்றி, ஆடு பலிகொடுக்கிறார்கள். சந்தனம் குங்குமம் எனப் பேச்சியம்மனுக்குத் தூவி தங்கள் வேண்டுகோளை வைக்கின்றனர். பக்கத்தில் முனீஸ்வரன் முகச்சிலை ஒன்றும் உள்ளது.  அங்காள பரமேஸ்வரிக்கு மாமிசம் படைப்பது இல்லை.
பல பேரின் வேண்டுதல்களை இந்த அம்மன் தீர்த்து வைத்திருப்பதாக அங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டி வருபவர்கள்தான் இங்கு அதிகம். அதற்கென தனி பூஜையையே இங்கு நடத்துகிறார்கள். சிறு வழிபாட்டு தெய்வங்களாக வணங்கப்படும் இந்தப் பெண் தெய்வங்களுக்கு பொதுவாகக் குழந்தை பிறந்தால் பிரத்தியேக பூஜைகளை வைப்பதை பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் குசுனியில் (அடுப்பறையில்) அந்தப் பூஜையைச் செய்வார்கள். அதில் அவித்த முட்டைகள் பிரத்தியேகமாகப் படைக்கப்படும்.

அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் கோயிலில் குழந்தை வரம் கேட்டு வருபவர்களின் வேண்டுதலுக்காக அங்குத் தொட்டில் மரம் இருந்தது. மஞ்சள், சிவப்பு வர்ணம் கொண்ட துண்டு துணிகளிலும்,  குட்டி குட்டியான தொட்டில்களிலும் குழந்தை வரங்கள் தங்களின் முறைக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தன. நான் அந்த மரத்தை பார்த்துக்கொண்டே இருக்கும் போது ஒருவர் அதில் தொட்டில் கட்டுவதைப் பார்த்தேன். பொதுவாகப் பெண்கள்தானே இதுபோல விஷயங்களைச் செய்வார்கள்? அவரின் நம்பிக்கை பலிக்கட்டும் எனக் கூறிக்கொண்டேன். அழகாக நிறைந்து இருக்கிறது அந்தத் தொட்டில் மரம்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கிறது. அதன் பிறகு அங்கு யாரையும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை. தெரியாமல் வந்துவிட்ட சிலர் சலங்கை ஒலியை கேட்டு மிரண்டு போனதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் சின்னக் குழந்தையைத் தனிமையில் கண்டதாகவும் அது அம்மன்தான் என நம்புவதாகவும் கூறுகின்றனர். குழந்தைகளைப் பார்த்தால் அம்மன் குழந்தையாக இருப்பாள் என்றும் ஆங்காரமாக எண்ணினால் அவள் அங்காள அம்மன் என்றும் அங்கு எழுதிவைத்திருக்கும் குறிப்பில் நான் வாசித்தேன்.
தொடர்ந்து ஆட்டுக்கறி - கோழிக்கறி வாசம் நாசியைத் துளைக்க வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு திரும்பினோம். சிறு தெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும் வேறுபட்டாலும் இதுபோலச் சில கோயில்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாவதற்கு என்ன காரணம் என மனம் சிந்திக்கத் தொடங்கியது.
 மார்ச் மாதத்தில் வரும் மாசித் திருவிழா இங்குப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குழந்தை இல்லாத தம்பதியர்கள்
கலந்துகொண்டு செய்யும் சிறப்புப் பூஜை நடைபெறும் எனக் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இந்தக் கோயிலுக்கு மீண்டும் தனது குடும்பத்துடன் வர வேண்டும் என என் தோழி கூறிக்கொண்டிருந்தார். நான் குழந்தை இல்லாதவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.2 கருத்துகள்: