செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 8

மறுநாள் காலையில் பாலகோபால ஸ்வாமி கிருஷ்ணன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார் சாகுல். நான் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும் முதன் முதலாக பார்க்க போகும் கோயில் அது. எனக்கும் அந்த பரந்தாமன் என்பவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்குதான் போல

‘ஹிம்வாட் கோபால ஸ்வாமி பெட்டா’ கோயில் (Himvad Gopalaswamy Betta) கர்நாடகா மாநிலத்தின் எல்லையில் உள்ளது. (பெட்டா என்றால் கன்னட மொழியில் மலைக்குன்று என்று அர்த்தமாம் (முதுமலை வனத்திலிருந்து வெளியாகி ஏறக்குறைய ஒரு மணி நேரம் பயணம் செய்தால் கர்நாடக பாதுகாப்பு சாவடியை அடையலாம். நிறைய விவசாய நிலங்களைக் கடந்து செல்கிறது அந்தச் சாலை. மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு அதில் ஓர் ஆளையும் ஏற்றிக்கொண்டு, மேலும் இரு மாடுகளை  மேச்சலுக்குக் கொண்டு வந்திருந்த ஒரு வண்டிக்காரர், கவனத்தை ஈர்த்தார். மாட்டு வண்டியில் ஏறுவதற்கு எனக்கு ஆசை ஏற்பட்டது. சாகுல் வண்டிக்காரரிடம் கேட்க அவர் சரி என்று சொன்னாரே ஒழிய மாட்டு வண்டியை நிறுத்தவே இல்லை. நாங்களும் இது வேலைக்கு ஆகாது என்று அந்த ஆசையை விட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

சாமராஜநகர் வட்டாரத்தில் இருக்கிறது அந்த மலை. மலைமேல் இருக்கும் அந்தக் கோயிலுக்குச் செல்வதற்கான நுழைவாயிலை அடைந்தோம். சொந்த வாகனம் மலையில் ஏறுவதற்குத் தடை விதித்திருந்தார்கள். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில்தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன்பு இருமுறை சொந்த வாகனத்தில் அந்தக் கோயிலுக்குச் சென்றிருப்பதாகச் சாகுல் கூறினார். இப்போது அதற்குத் தடை விதித்திருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று கூறியவாறுப் பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம். பொது விடுமுறையாக இருந்ததினால் ஆட்கள் நிறையவே இருந்தார்கள். குறிப்பாக மலையாளிகள். கன்னடம், மலையாளம், ஹிந்தி, தமிழ் எனப் பல மொழிகள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

பேருந்து ஒன்று ஸ்வாமித் தரிசனத்திற்குப் பிறகு மலையிலிருந்து ஆட்களை இறக்குவதற்கு வந்துக்கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தக்கூட இல்லை; காத்திருந்த ஆட்கள் முண்டியடித்துக்கொண்டு பேருந்தை நோக்கி ஓடினர். சிலர் கைப் பை, துண்டு எனக் கையில் இருக்கும் பொருள்களைக் கொண்டு பேருந்தின் ஜன்னல் வழியே உட்காருவதற்கு இடத்தைப் பிடித்தனர். சிலர் இன்னும் கொஞ்சம் அட்வான்சாக அவர்களின் குழந்தைகளை ஜன்னல் வழியே நுழைத்துக்கொண்டிருந்தனர். பேருந்து இருக்கைகளுக்கு இத்தனை பிரயாசையா? இன்னும் சிலர் உயிரைப் பணயம் வைத்து ஜன்னல் வழியே அவர்களே உள்ளே குதிக்க முயற்சிசெய்துக்கொண்டிருந்தது பார்க்கப் பயமாக இருந்தது. ஆண்-பெண் பேதமின்றி இடத்தைப் பிடிக்க முண்டியடித்துப் பேருந்தில் ஏறியது எனக்கு உண்மையில் அதிர்ச்சியளித்தது. எவ்வளவு முயன்றும் என்னால் பேருந்தில் ஏறமுடியவில்லை. பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருந்தேன்.

சாகுல் எனக்கு முன்பே போட்டிகொடுத்துப் பேருந்தில் ஏறியிருந்தார். அவர் நான் அமர்வதற்கு இடத்தைப் பிடித்து வைத்திருப்பார் என்ற எண்ணம் இருந்தது. எப்படியோ இறுதியில் நான் பேருந்தில் ஏறினேன். சாகுல் கலவரத்தோடு என்னை வலைவீசித் தேடிக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர் கண்ணுக்கு அகப்படும் அளவுக்குக் கையை அசைத்து நான் பேருந்தில் ஏறிவிட்டேன் என்பதை உறுதிப் படுத்தினேன். அந்தக் கரடு முரடான சாலையில் பேருந்து வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து நிறைய ஆட்கள். ஆயிரம் கோழிகளை ஒரு கூட்டில் போட்டு அடைத்தால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது. என்னோடு ஒட்டியிருந்தவர்கள் அல்லது நான் எத்தனை பேரோடு ஒரே நேரத்தில் ஒட்டியிருந்தேன் என்பதைக் கணக்குப் பண்ணக்கூட முடியவில்லை. இதில் டிக்கெட் கொடுப்பவர் அனைத்து உடல்களோடும் புதைந்து, திமிரி வெளியேறிக்கொண்டிருந்தார். வளைவுகளில் வளைந்தபடியும், மேடுகளில் எகிறியபடியும்.

எனக்கு இடம் பிடித்து வைத்திருப்பார் என்று நினைத்திருந்த வேளையில் சாகுலும் அமர இடமில்லாமல் நின்று கொண்டுதான் இருந்தார்.
கீழே இருந்து சுமார் 1,454 மீட்டர் உயரத்தை நோக்கிப் பேருந்து போய்க்கொண்டு இருந்தது. வனம் என்றால் அப்படி ஓர் அடர்ந்த வனம். கட்டுமானங்கள், கட்டிடங்கள் என எதுவும் இல்லாது நீல வானத்திற்குக் கீழே பச்சை நிறம் மட்டுமே எங்கும் காண முடிந்தது. ஏகாந்த நிலையில் பறவைகள் கூட்டமாகப் பறப்பதை அந்தக் கூட்டத்திலேயும் காண முடிந்தது. அதை ரசிக்கும் மனநிலை எனக்கும் இருந்தது.
இறுதியில் கோயிலின் வாசலில் பேருந்து நின்றது. எவ்வளவு வேகத்தில் பேருந்தில் மக்கள் ஏறினாங்களோ அதே வேகத்தில் இறங்குவதற்கும் அவர்கள் பிரயத்தனப் பட்டனர். முண்டியடித்து இறங்குவதற்கு அவசரம் காட்டுவதற்கான காரணம் என்ன? சாகுலிடம் கேட்டேன். இந்தியாவின் பிரத்தியேகக் குணங்களில் இதுவும் ஒன்று என்றார். சிரித்துக்கொண்டோம்.
அத்தனை பெரிய உயரத்தில் அந்தக் கோயிலும் இயற்கையும் மட்டுமே இருந்தன. வன விலங்குகள் வந்து போனதற்கான சில தடயங்களும் காணப்பட்டன. குறிப்பாக யானைகள். அதன் எச்சம் கோயில் வாசல்வரை இருந்தது.

ஒரு காலத்தில் பண்டிப்பூர் வனப்பகுதி மைசூர் மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய காடாக இருந்ததாம். ஸ்ரீ ஹிமவத் கோபால ஸ்வாமி ஆலயத்தை 1315- ஆம் ஆண்டு ஹொய்சாள வம்சத்தின் கடைசி மன்னனான வீர பல்லாலன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மைசூரு சாம்ராஜ்ய மன்னர்களான உடையார்கள் இந்த ஆலயத்தை நன்கு பராமரித்து வந்தார்களாம். ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள சிறிய ஏரியான ஹம்ச தீர்த்தக் கரையில்தான் அகத்திய மகா முனிவர் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார் என்றும் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ மஹா-விஷ்ணு இத்தலத்தில் ஸ்ரீ வேணுகோபாலராகக் கோயில் கொண்டுள்ளார் என்பதும் தலபுராணக் கதையாகும். ஆலயத்தைச் சுற்றிலும் ஒரு காலத்தில் 77 புண்ணியத் தீர்த்தங்கள் இருந்தனவாம். ஹம்ச தீர்த்தம் தவிர மற்றவை ஏதும் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த ஏரியில் ஏராளமான அன்னங்கள் இருந்ததாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்தப் புனிதத் தீர்த்தத்தில் ஒரு முறை காகம் ஒன்று நீராடி அன்னமாக மாறியது என்றும், அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ஹம்ச தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
எனவே, இப்பகுதியில் காகங்கள் காணப்படுவதில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையில் அங்குக் காகங்கள் காணப்படவில்லைதான்.
கருவறையில் ஸ்ரீ வேணுக் கோபால ஸ்வாமி நின்றத் திருக்கோலத்தில் கரங்களில் புல்லாங்குழலை ஏந்தி வேணுகானம் இசைக்கும் பாவனையில் காட்சித் தருகிறார். கருங்கல் சிலை அது. புல்லாங்குழல் பொன்னிறத்தில் இருந்தது. வசீகர விக்ரகம். ஒருவகையான ஈர்ப்பு இருந்தது அதில். அதை ஒருவாறு உணரவும் முடிந்தது. அந்தக் கருமை நிறத்தின் பளபளப்பு வைத்த கண்ணை மீட்பதற்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்தது.
அப்போதுதான் சாகுல் சொன்னார், இந்தக் கோயிலின் பிரபலமே கருவறை நுழைவாயிலின் மேலிருந்து சொட்டுச் சொட்டாக விழும் தண்ணீர் என்று. அந்தக் தண்ணீர் எங்கிருந்து வடிகிறது என்பது மர்மம். அதன் மூலம் கட்டுப் பிடிக்கவே முடியவில்லையாம். அது விழுந்து கொண்டேயிருக்க, அந்தப் புனித நீரை அர்ச்சகர் பக்தர்களின் மீது தெளிப்பாராம். தற்போது அந்தத் தண்ணீர் வடிவது குறைந்து விட்டது என்பது அங்கிருந்த அச்சகரை விசாரிக்கும்போது தெரிந்தது.

கையில் மஞ்சள் கயிறைக் கட்டிவிட்டார் அச்சகம். நான் தடுக்கவில்லை. கோயிலைச் சுற்றிப்பார்க்கும் அனுபவம் மிகவும் ரம்மியமானது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் மலைகளும் மரங்களும் சூழ்ந்திருக்கக் காற்றுத் தழுவும் யத்தனம் மிகமிகச் சுகமாக இருந்தது. வெகுதூரத்தில் ஓர் எறுப்புப்போலத் தெரிந்த யானையினைப் பலர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் சிலர் வேண்டுதல் கயிறுகளைக் கட்டிக்கொண்டிருந்தனர். அத்தனை நம்பிக்கைகள் அந்த மரத்தில் கயிறுகளாகத் தொங்கிக்கொண்டிருந்தன. சிலர் கையில் பிரசாதம் வைத்திருந்தனர். நானும் சாகுலும் பிரசாதம் கொடுக்கும் இடத்தைத் தேடிப் போனோம். பிரசாதம் முடிந்திருந்தது.
கிளம்பலாம் என முடிவெடுத்தோம். கொஞ்சம் சீக்கிரம் போனால் பேருந்தில் அமர்ந்து கொண்டு போகலாம் என நினைத்துக் கிளம்பினோம். வாயிற்படியில் பண்டாரங்கள் இசை எழுப்பியபடிக் கையேந்திக்கொண்டிருந்தனர். அதை வேடிக்கைப் பார்த்தபடி இறங்கிப் போனோம். பஸ்சில் இடமிருந்தது. பா! புகைப்படம் எடுக்கலாம் என்ற நிம்மதிப் பிறந்தது எனக்கு.

அரை மணி நேரத்தில் மலையின் அடிவாரத்தில் இருந்தோம். மனதில் ஒருவகை நிம்மதி இருந்தது. அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு இளநீர் அருந்திவிட்டுச் சென்றால் அதுவே ‘ஹிம்வாட் கோபால ஸ்வாமி பெட்டா’ ஆலயத்தின் இறுதித் தரிசனமாகும்.
 அன்றைய நாளில்  மாலையில் வனத்துறை ஏற்பாடு செய்திருக்கும் பேருந்தில் ஏறி வனத்தின் உள்பகுதியில் காண்பதற்கான திட்டம் இருந்ததால் நேரத்தை கடத்தாமல் நானும் சாகுலும் கிளம்பினோம். பசிப்பதைபோல இருந்தது. சாகுல் சாப்பிடலாமா என்றேன். A1 என்று இருந்தது.  அங்கு சென்றோம். சற்று நேரத்தில் சாகுல்  அங்கு வேணாம் யோகி. என்று கூறிவிட்டு பக்கத்தில் இருந்த கடைக்கு  போகலாம் என்றார். நான் கேள்விக்குறியோடு பார்த்தேன். இது வேறமாதிரி உணவுக்கடை என்றார் சாகுல். இப்போது நான் கொஞ்சம் அதிர்ச்சியாகத் திரும்பி பார்த்தேன். எனக்கு சிரிப்பும் வந்தது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக