திங்கள், 15 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 9

குடும்பத்துடன் சாப்பிடலாம் என்ற தகவலுடன் இருந்த கடையில் தைரியமாக அமர்ந்துச் சாப்பிடலாம் என்றும் அப்படி எழுதாத கடையில் உணவுடன் வேறு மாதிரியான விஷயங்கள் இருக்கலாம் என்ற பரவலாக ஓர் ஐயம் இருப்பதாகவும் குடும்பத்துடன் சாப்பிடலாம் என்று எழுதியிருக்கும் கடைக்கே நாம் போகலாம் என்றும் சாகுல் கூறினார்.

ஒரு வாரியாகக் காப்பியுடன் பரோட்டா முட்டை வறுவல் ஆகியவற்றை உள்ளே தள்ளிவிட்டுக் கிளம்பினோம். அது ஒரு மலையாளி நடத்தும் உணவுக்கடை. கர்நாடகா எல்லை என்றாலும் உணவில் பெரிதாக மாற்றம் இல்லை. குறிப்பாகக் காப்பிச் சுவைச் சான்சே இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை காப்பி வாங்கிக் குடித்தேன்.

தொடர்ந்து வன அதிகாரிகளால் மாலையில் வனத்தைச் சுற்றிக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படியால், நானும் சாகுலும் அதில் விடுபடாமல் இருப்பதற்கு முன்கூட்டியே வனத்திற்கு செல்ல திட்டமிட்டோம்.
நான் தங்கி இருந்த Log House ரொம்ப அழகான இருப்பிடம். குறிப்பாக அங்குப் பணி நிமித்தமாக வரும் வன அதிகாரிகள் தங்கிக் கொள்வதால் மிக அக்கரையுடன் பராமரிக்கப்படுகிறது.

ஆனால், சாகுல் தங்கியிருந்த அபஹயரான்யம் எனுமிடம் கொஞ்சம் வசதி குறைந்ததுதான். மேலும், அங்கு விலங்குகளின் நடமாட்டம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் எனச் சொன்னார்கள். இரவில் நடமாடும் விலங்குகளைக் காண அங்கு ஒரு கண்ணாடி அறை பிரத்தியேகமாகக் கட்டப்பட்டுள்ளது. மேல்மாடியில் கட்டப்பட்டிருக்கும் அந்தப் பிரத்தியேக அறையில் மின் விளக்குகள் போட்டுக்கொள்ளாமல், ஒரு கைவிளக்கை மட்டும் வைத்துக்கொண்டு இரவில் விலங்குகள் வருவதை அனுமானித்துப் பார்க்கலாம். ஆனால், அதற்கு நீண்ட பொறுமை அவசியம். மேலும், அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

அந்த இடத்தைப் பார்ப்பதற்கு எனக்கு விரும்பம் ஏற்பட்டது. சாகுல் அழைத்துக்கொண்டு போனார். இரண்டு தங்கும் விடுதிகளைத் தவிர அங்கு வேறு ஏதும் இல்லை. அங்குச் சமையல் வேலை செய்துக் கொண்டிருந்தவரிடம் சாப்பிட ஏதும் செய்து தர முடியுமா எனச் சாகுல் கேட்டார். இரவுதான் சமையல் ஆகும் எனப் பதில் வந்தது. டீ காப்பி ஏதாவது கிடைக்குமா? எனக் கேட்டோம். பால் இல்லை எனப் பதில் வந்தது. அதற்குப் பிறகு எதைக் கேட்பது? நான் மனதார சாகுலுக்கு நன்றியை கூறிக்கொண்டேன். என்னை இப்படி ஒரு இடத்தில் தள்ளி விடாமல் சௌகரியமான இடத்தில் தங்க வைத்தது எத்தனை பெரிய தியாகம் ? சாகுல், நீங்கதான் தெய்வம் (சிரித்துக்கொள்கிறேன்)

தங்கும் விடுதியைச் சுற்றி பள்ளம் போலத் தோண்டி இருந்தார்கள். எனக்கு அதன் காரணம் புரியவில்லை. பின்பு விசாரிக்கும்போது அங்கு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதைத் தவிர்க்க அப்படித் தோண்டப்பட்டதாகவும், பல தடவை யானைகள் தங்கும் விடுதியை சேதம் செய்திருக்கிறது எனவும் கூறினார்கள்.
வன விலங்குகளின் வீட்டிற்குள் அத்துமீறி மனிதர்கள் வீடு கட்டிக்கொண்டு, விலங்குகளை விரட்டுவதற்கும், அதன் நடமாட்டத்தைத் தவிப்பதற்கும் நாம் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சமா?   இந்த பள்ளத்திற்கு  எல்லாம் விலங்குகள் வராமல் போய்விடுமா என்ன? யானையின் எச்சம் விடுதிக்கு மிக அருகில் இருந்தது அதைத்தான் கூறியது.

பின் நாங்கள் அதிகாரிகளோடு வனத்தின் உட்பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தெப்பக்காடு வரவேற்பு மையக் கட்டிடத்திற்குச் சென்றோம். 20 பேர் அமரக்கூடிய வண்டி அது. வன அதிகாரிகளிடம் வனத்தைக் குறித்துக் கொஞ்சம் விவரங்களை வாங்கிக்கொண்டேன். உண்மையில் கேட்கும் கேள்விகளுக்கு அலுத்துக் கொள்ளாமல் அவர்கள் பதில் சொல்லியதே எனக்குப் பெரிய உபகாரமாக இருந்தது. நமக்குச் சந்தேகம் என்பது ஞாயமாக வந்தால் தானே?

முதுமலை புலிகள் காப்பகம் என்பது கர்நாடக, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குத் தொடர்புடைய மிக அருகில் இருக்கக் கூடிய இன்னும் சொல்லப்போனால் இந்த மாநிலங்களின் மைய புள்ளியில் அமைந்திருக்கும் மிக முக்கியமான வனமாகும். முதுமலை என்ற மலைக்கு 65 மில்லியன் ஆண்டுகள் வரலாறு உள்ளதாக ஒரு கையேடு குறிப்பிடுகிறது. வேறு எங்கும் பார்க்க முடியாத சில அறிய வகை விலங்குகளை இங்குக் காண முடியும் எனக் கூறினாலும் மான், யானை, மயில், குரங்குகளை மட்டுமே அதிக அளவில் பரவலாகக் காண முடிகிறது. டிசம்பர் தொடங்கி ஜனவரி தொடக்கம் முதல் குளிர் நிலையிலும் மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை சூடான நிலையிலும் முதுமலை வனத்தின் சீதோஷநிலை வரையறுக்கபடுகிறது.
புலிகள் காப்பகம் என்றாலும் ஒரு புலியைக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், தற்போது மேற்கொண்டிருக்கும் சில கட்டுப்பாடுகளால் புலிகளின் இனவிருத்தி அதிகரித்திருப்பதாக வனதுறையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான சந்திரன் சார் கூறியிருந்தார்.

வனத்தில் உட் பகுதியான கக்கநள்ளா செல்வதற்கு வண்டி கிளம்பியது. அது ஒரு மணல் சாலை. வெளி வாகனங்களை உள்ளே அனுமதிக்காத அளவுக்குக் கட்டுப்பாடு போடப்பட்டிருந்தது. முன்பு எல்லாம் இரண்டு மணி நேரம் உட்பகுதியில் வண்டியில் பயணம் செய்து பல மிருகங்களைக் காண்பதற்கான வாய்ப்புகள் இருந்தது எனவும் பின் 1 மணி 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுத் தற்போது 45 நிமிடங்கள் மட்டுமே விலங்குகளைக் காண்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மனிதர்களின் தேவையற்ற போக்கினால் விலங்குகளுக்குப் பிரச்னையாக அமைந்துவிடுகிறது; அதனால்தாம் இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எனக்கு ஜெயமோகனின் யானை டாக்டர் என்ற கதை ஞாபகத்திற்கு வந்து போனது. அதைப் பற்றிச் சம்பாஷிக்கக் கூடிய தேவையையும் ஏற்பட்டது என்றுகூடக் கூறலாம்.
புள்ளி மான்கள் கிளை மான்கள் என மான்கள் கூட்டம்தான் பெரிய அளவில் கண்களுக்கு விருந்துகள் படைத்துக்கொண்டிருந்தன. வன அதிகாரி ஒருவர் சத்தத்தை எழுப்ப வேண்டாம் எனத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தார். வண்டியில் குழந்தைகள் இருந்ததால் அவர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்து குதூகளிக்கத் தொடங்கியிருந்தனர்.
ஓர் இடத்தில் காட்டு மரங்களைக் கொஞ்சமாகக் கொழுத்தி விட்டிருந்தனர். அது எரிந்து அணையும் நிலையில் இருந்தது. யானையின் குடும்பம் ஒன்று வனத்தில் காண நேரிட்டது. அது தந்தங்கள் இல்லாத யானைகள். வண்டி ஓட்டுனர் யானை மிரண்டு போகாத அளவுக்குச் சற்று தள்ளியே வண்டியை நிறுத்தினார். மனிதர்களைக் கண்டு விட்ட யானைகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மரத்தின் கிளைகளை ஒடித்துத் தின்றுக்கொண்டிருந்தன. இங்கே சிறுவர்கள் குட்டியானையைப் பார்த்த சந்தோஷத்தில் எழுப்பிய சத்தத்தில் யானைகள் மிரண்டு போய், தனது குட்டியை காப்பாற்றும் நோக்கில் அணிவகுத்து நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எங்கு எனத் தேடும் அளவுக்குக் கால்களுக்கு இடையில் குட்டியை மறைத்துக் கொண்டு பாதுகாப்பு அளித்தன. வண்டி ஓட்டுனர் அந்த இடத்திலிருந்து வண்டியை கிளப்பினார். மிக அருகில் இன்னொரு யானை கூட்டம். கூட்டம் எனக் கூற முடியாது. மூன்று யானைகள் என இருந்தன. அவை நீண்ட தந்தங்கள் கொண்ட யானைகள். காது முறம் போல இருந்தது. பார்க்கும்போதே கோபக்கார யானைபோலத் தோற்றம்.
காணும் விலங்குகளைப் படம் எடுத்துக்கொண்டோம். அதிகமான விலங்குகள் அல்லது பறவைகள் காணகிடைக்கவில்லை. ஆனால், 45 நிமிடம் போனதே தெரியவில்லை. தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்திருந்தோம்.

வரதெப்பக்காடு வரவேற்பு மையத்திற்கு வெளியே இருளர் சமுகத்தினர் நிறையப் பேரை காண முடிந்தது. ஆனால், அவர்கள் நவீனமாகி இருந்தனர். பழங்குடிகள் என்ற அடையாளம் பெயர் அளவில் மட்டுமே இருக்கும் அளவுக்கு  பெரிய மாற்றம் இருந்தது.
அங்கு இருக்கும் ஒரு டீக் கடையை நடத்தி வருவதும் அவர்களாகத்தான் இருக்ககூடும் என நினைக்கிறேன். வனத்தில் வசிக்கும் இருளர்களோடும் காட்டு நாயக்கர்களோடும்  சில மணி நேரம் உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில் அவர்களது வாழ்கையையும் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

(தொடரும்)
1 கருத்து: