சனி, 9 ஜனவரி, 2016

'படிகம்' நாடு கடந்தும் அறியப்பட வேண்டும்…


'படிகம்' என்ற பெயரில் ஒரு நவீனக் கவிதைக்கான இதழ் வருவதாக அதுவரை ஒரு தகவலைக்கூட நான் அறிந்திருக்கவில்லை. ஒளவை முளரியில் 'கவிதைக் காட்சி ரூபம்' என்ற நிகழ்ச்சிக்குச் சென்றதில் அடைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று எனத் தாராளமாகக் கூறலாம். தமிழ்நாட்டில் சிற்றுதழ்களும் தற்போது வெகுஜனப் பத்திரிகைகளைப் போலப் பெருகிக்கொண்டு வருவதில் 'படிகம்' மாதிரியான குறைந்த முதலீட்டில் வெளிவரும் இதழ்கள் இலை மறைக்கும் காயாக இருப்பதில் ஆச்சரியமில்லைதான். 

'படிகம்' இதழின் ஆசிரியர் ரோஸ் ஆன்றா ஜனவரி மாதத்திற்கான இதழை என் கையில் கொடுக்கும்போது ஒரு தரமான கவிதைச் சிற்றிதழ் என் கையில் இருப்பதை உணர்ந்தேன். இதுவரை வந்த படிகம் இதழ்களில் இதுவே ஆகச்சிறந்த பிரதி என ஆன்றா சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமும் அதன் அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆவலும் ஏற்பட, பழைய புத்தகங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டேன். அடுத்தச் சில நிமிடங்களில் 3 பழைய பிரதிகளைத் தேடிக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார் ஆன்றா. இதுவரை வந்த 5 படிகம் பிரதிகளில் ஒன்றுமட்டுமே கைவசமில்லை. 

படைப்புகளின் எண்ணிக்கை, புத்தகத்தின் அச்சுத் தரம் எனும் பிரிக்கும் போது ஆன்றா சொன்னதுபோல இந்த 5-வது இதழ்தான் ஆகச் சிறந்த பிரதி. புத்தகத்தின் அட்டையில் உள்ள படைப்புகளோடு சேர்த்து மொத்தம் 84 பக்கங்கள். ஜெயமோகன், விக்ரமாதித்யன், கருணாகரன், கே.ராஜதுரை, போகன் சங்கர், தேவதச்சன், லஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட ஆளுமைகளின் படைப்புகளும், செந்தூரன் ஈஸ்வரநாதன், கார்த்திக் நேத்தா, ஆகாச முத்து, ஜீனத் நசீபா, அனிதா, ர.தங்கபாலு, ஆறுமுகம் முருகேசன் உள்ளிட்டப் புதிய எழுத்தாளர்கள் (சரியாகச் சொல்லப்போனால் என் வரையில் அப்போதுதான் அறிமுகமான படைப்பாளர்கள்) ஆகியவர்களோடு தற்போது இலக்கியத்தில் இயங்கி வரும் மேலும் சில எழுத்தாளர்களின் படைப்புகளும் தாங்கிப் புதிய வருடத்தில் புதிய நம்பிகையோடு வெளிவந்திருந்தது 'படிகம்'  ஐந்தாவது இதழ். 


படிகம் சிற்றிதழைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் தோன்றிய மலேசியாவில் நவீனக் கவிதை இதழாகச் சில காலம் வெளிவந்த 'மௌனம்' சிற்றிதழ்தான். நினைத்த நேரம் வெளிவரும் இதழ் எனக் கிட்டதட்ட 20 இதழ்கள் வெளிவந்திருக்கும் என நினைக்கிறேன். பின் அதனூடான அரசியல், தரம், பொருளாதாரம் என ஏற்பட்ட சில பிரச்னையில் அந்த இதழ் நின்று போனது. ஆனால், கவிதைக்காக வெளிவந்த அந்த இதழ் மிக முக்கியமான முயற்சி என்பதிலும் பல இலக்கிய ஆளுமைகளின் ஆதரவு பெற்றது என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. படிகம் இதழைப் பார்த்த உடன் 'மௌனம்' இதழ் நியாபகம் வந்ததற்கு மேலும் ஒரு காரணம் அதன் வடிவமைப்புதான். 

படிகத்தின் தொடக்க இதழ் மார்ச் மாதம் 2015-ஆம் ஆண்டு, 23 பக்கங்கள் மட்டுமே கொண்டு, 10 ரூபாய்க்கு வெளிவந்துள்ளது. முதல் புத்தகம் வரலாற்றுப் பூர்வமானது என்ற பொருப்பை உணர்ந்து அட்டைப்படத்தில் பிக்காஸோ ஓவியத்தைப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடதக்கது. 12 கலைஞர்கள் அதில் தங்களின் படைப்பை வழங்கியிருந்தனர். ஆசிரியர் ஆன்றா புத்தகத்தின் அறிமுக உரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.. 


"கவிதைக்கான தனி இதழ் அரிதாகிப் போனது வருத்தமளிக்கிறது. கவிஞர்களின் மனதை உடைத்து வெளியேறும் கவிதைகள் சிறகு விரிக்கட்டும்" 
-ரோஸ் ஆன்றா 

கவிஞர்களின் மனதை உடைத்து வெளியேறும் கவிதைகள் என்ற வரி மிக முக்கியமான விஷயமாகும். கவிதைகளை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாகத்தான் தற்போது கவிதை மனங்கள் மாறி வருகின்றன. கேட்ட மாத்திரத்திலேயே கவிதைகளைப் புனையும் டிசைன்களுக்கு மனம் மாற்றப் பட்டோ அல்லது மாறியோ வருகிறது. அம்மாதிரியான கவிதைகள் சில சமயம் அழகாக அமைந்து விடுவதும் மறுப்பதற்கு இல்லை. எனினும் கவிதைக்கான உயிர்ப்பை இழந்தக் கவிதைகள் பெருகி வருவதும் விவாதத்தில் வைக்க வேண்டிய விடயமாகும். 

மே மாதத்திற்கான படிகம் இதழும் பொருளாதாரத்திற்கு உட்பட்ட நிலையில்தான் வெளிவந்திருக்கிறது. ஆனால், 4 பக்கங்கள் அதிகமாகவும் அட்டைப்படத்தை ஓவியர் ஞானப்பிரகாசம் கைவண்ணத்திலும் அச்சாகியிருக்கிறது. நகல் எடுத்து அதைப் புத்தகமாக்கிய பாணியில் அம்மாத படிகம் மலர்ந்திருக்கிறது என்றாலும் முந்தியத் தொகுப்பைக் காட்டிலும் இந்த இதழில் முக்கிய ஆலுமைகளின் கவிதைகள் வெளிவந்து தீவிரப் பார்வையைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக விக்ரமாதித்தன் நம்பி, யவனிகா ஶ்ரீராம், பா.தேவேந்திரபூபதி ஆகியவர்களின் கவிதையும் லஷ்மி மணிவண்ணன் எழுதிய குமரகுரு அன்புவின் 'மணல் மீது வாழும் கடல்', சுஜாதாச் செல்வராஜின் 'காலங்களைக் கடந்து வருபவன்' ந.பெரியசாமியின் 'தோட்டாக்கள் பாயும் வெளி' ஆகிய கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு விமர்சனமும் கவனத்தைப் பெற்றிருந்தன. 

இந்தத் தொகுப்பில் விக்ரமாதித்தன் நம்பியின் 

பெரிய இடத்திலிருந்து பேசுகிறார்கள் 
பெரியவர்கள் 
ஒன்றுமே சொவதில்லை 
உலகம் 
என்ற கவிதைக் கவனத்தைப் பெறும் கவிதைதாய் இருக்கிறது. 

'பாரதியையே 
இன்னும் 
கண்டெடுத்துக்கொண்டிருக்கிறோம் 
நகுலனுக்கென்ன அவசரம் 
நியாயத் தீர்ப்புக்கு...' 


என்ற இந்தக் கவிதை உள்ளார்ந்த அரசியலைப் பேசக்கூடியதாக இருக்கிறது. வெளிபடையான ஒரு நையாண்டிதனம் அதில் உள்ளது. அவரோடு உரையாடும் அனுபவம் வாய்த்திருந்தால் அவரின் இயல்பு நிலையைத் தெரிந்துக்கொண்டிருக்கலாம். காரணம் வாழ்வின் மீதானக் கோபத்தை, கோபத்தைக் காட்டாமல் நகைச்சுவையாகக் கடந்து செல்பவர்களால் 
மட்டுமே இது மாதிரியான கவிதைகளை 'Just Like That' பாணியில் சொல்லிவிட்டுப் போக முடியும். 


இந்தத் தொகுப்பில் 'காவல்' என்ற தலைப்பில் பா.தேவேந்திரபூபதி எழுதியிருக்கும் கவிதைச் சிந்திக்ககூடிய வகையில் அமைந்துள்ளது. முதலாளித்துவத்தை அவருக்கே உரிய பாணியில் சாடியிருக்கிறார். நேரடியாகப் புரிந்துக்கொண்டாலும் இது நல்லக்கவிதைக்கானக் கூறுகொண்டிருக்கிறது. அவர் இந்தப் பிரதியில் எழுதியிருக்கும் 3 கவிதைகளுமே நாயையே புனைவாகப் பயன்படுத்தியுள்ளார். அதனாலேயே அந்தக் கவிதைகள் கவனத்தைப் பெறக்கூடியதாக உள்ளன. 

லாவண்யா சுந்தரராஜன் என்பவரை இந்தத் தொகுப்பின் வழியே நான் காண்கிறேன். அவருடைய 'தனிமை' என்ற கவிதையைவிட 'அவமானத்தின் அழகு' என்ற கவிதை அழகாக அமைந்திருக்கிறது. மற்ற இரு கவிதைகள் சொல்வதற்கு எதுவும் இல்லை. 

யவனிகா ஶ்ரீராம் இந்தப் பிரதியில் 3 கவிதைகளை எழுதியுள்ளார். யவனிக்கா, அவரின் கவிதைகளில் நாம் சிந்திப்பதற்கான இடைவெளியை விட்டு வைத்திருப்பார். இதைதான் அவரின் கவிதைப் பேசுகிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. வாசகர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதத்தில் அதில் அர்த்தம் சொல்ல முடியும். யவனிக்காக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர், அவரின் அந்தக் கவிதை கலையை உணரக்கூடியவராக ஆகிறார். 


'உடலின் ஒரு நடன விசை' என்ற கவிதையில் 
ஒரு நீர்ப்பாலம் அடியோடு சரிந்து மூழ்குகிறது 
என்று தொடங்கி 
நமது வீடு வெட்ட வெளியாகி விட்டாலும் கூட 
உண்மையில் இந்த அழகான முன்விளையாட்டை 
நாம் ஏன் தவற விட வேண்டும் 

என்று முடிக்கிறார். இடையில் கூறியிருக்கும் வரிகள் அனைத்தும் இந்த 4 வரிகளுக்கு வழுசேர்க்கும் சொற்கள்தான். 
படிகம் நவீனக் கவிதைகான இதழ் என்று கூறும் போது, யவனிக்காவின் 
கவிதைகள் அதற்கு ஏகப் பொருத்தமாகப் பலம் சேர்த்திருக்கிறது என்றுதான் சொல்வேன். 

மேலும், கவிதைகானப் புதிய முகங்களைப் படிகம் இதழ் அடையாளம் காட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக ஜெ.பிரான்சிஸ் கிருபா, காவனூர் ந.சீனிவாசன், வைகறை உள்ளிட்டவர்களைச் சொல்லலாம். 

படிகத்தின் மூன்றாவது இதழ் என் கைவசம் இல்லை என்றாலும் அதன் pdf கோப்பைப் 'படிகத்தின்' ஆசிரியர் ஆன்றா எனக்கு மின்னஞ்சல் செய்து உதவியிருந்தார். அவருக்கு இந்த வேளையில் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன். இவ்விதழில் கவிஞர் தேவதச்சனின் நேர்காணலும் ரெஜினா பானுவின் கவிதைகளும் மிக முக்கியமானதாக இருக்கிறது. 

ரெஜினா பானுவின் 'நீலப்பட்டு' என்ற கவிதையில் 
தங்கையின் பட்டுப்பாவாடையைச் சுற்றிக் கிறங்கி ஆடியத் தருணத்தில் 
நான் கண்டடைந்தவை எனக்கான ஆடைகள்' என்று தொடங்குகிறார். ரெஜினா பானு அனுபவித்து, வாழ்ந்து கடந்த அந்த வரிகளை  எதைகொண்டு  நாம் விமர்சனம் செய்திட முடியும். 

வார்த்தை என்ற கவிதையில் 

உடல் ஒன்றாய் 
மனம் வேறாய் 
இயற்கை எழுதிய கவிதை நான் 

ஆதியின்றி, அந்தமின்றி 
அன்றும் இருந்திருக்கிறேன், இன்றும் இருக்கிறேன் 
என்றும் இருப்பேன்.. 

என்று ரெஜினா பானு தொடங்கியிருக்கும் கவிதையில் 

எங்களை ஏளனப்படுத்தும் போது 
எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது 
நீங்கள் கைகழுவ முயற்சிப்பது 
கடவுளின் பிரச்னையை என்று 
முடித்திருக்கிறார். 

ரெஜினா பானு தான் சந்தித்த, தனக்கு நேர்ந்த அனைத்தையும் கவிதை மொழியில் சிறப்பாகவே கூறியிருக்கிறார். திருநங்கைகளின் பருவகால மாற்றங்களை முன்வைத்து 'ஒட்டுறுப்பு' எனும் நாவலை ரெஜினா பானு எழுதி வருவதாக ஒரு தகவல் இந்தப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பிக்கைக்குறிய மேலும் எதிர்பார்ப்புக் குறியப் படைப்பாளராக ரெஜினா பானு நம்முன்னே வளர்ந்துவருகிறார். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் அவரின் கவிதைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. 


நிழல், ந.நாகராஜன், ஆகாசமுத்து ஆகியோரின் கவிதைகள் குறிப்பிட வேண்டியக் கவிதைகளாகும். 
மேலும் பல புதிய எழுத்தாளர்களுக்குப் 'படிகம்' களம் அமைத்துக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதன் வழியே எது கவிதை, எதுவெல்லாம் கவிதை என்ற வேறுபாட்டைப் பிரித்தரியக்கூடிய அல்லது உணர்த்தக்கூடிய பொறுப்பு அல்லது கடமைப் 'படிகம் இலக்கியக் குழுவிற்கு உள்ளது எனத் தோன்றுகிறது. 

கவிஞர் தேவதச்சனின் நேர்காணல் ஆரோக்கியமாக அமைந்திருக்கிறது. தேவதச்சனின் கவிதைகளில் நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களுக்கு அவரின் நேர்காணலில் புதிய விவரங்கள் கிடைக்கின்றன. அதைச் சொல்வதைக்காட்டிலும் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டும். 
"உலக நெருக்கடிகளில் கவிஞனின் பங்கு என்னவாக இருக்கும்"? என்ற கேள்விக்கு 
"ஒரே சமயத்தில் நாம் நினைவுக்குள் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறோம்.. நினைவுக்குள் உள்ள மனிதன் ஒரு வரலாற்று மனிதனாகவும், மிகப்பெரிய மனிதனாகவும் மிகப்பெரிய மனிதனாகவும் இருக்கிறான்.நினைவுக்கு வெளியில் உள்ள மனிதந்தான் சிருஷ்டி. கவிதையின் வேர்கள் அறியாதவற்றின் சிருஷ்டியில்தான் இருக்கிறது" 

என்கிறார் தேவதச்சன். மேலும் பல சிந்திக்ககூடிய பதில்களை அவர் தந்திருக்கிறார் என்றாலும் கேள்விகளைச் சரியாகப் பட்டியலிட்டுக் கேட்டிருக்கும் விதம் முக்கியமானதாக இருக்கிறது. 

படிகத்தின் 4-வது இதழ் உண்மையில் மிக முக்கியமான இதழாகவும் முன் குறிப்பிட்ட இரு இதழ்களைவிடப் பார்வைக்கும் உள்ளடக்கத்திற்கும் நிறைவாக வந்திருந்தது. 

அட்டைப்படம் விக்ரமாதித்தன் மற்றும் ஜெயமோகன் ஆகியோர்ச் செய்திருக்கும் கவிதை விமர்சனத்தைப் பிரதி உள்ளடங்கியிருப்பதைக் காட்டியது. பிரதியின் ஆசிரியர் ஆன்றா, தலையங்கத்தில் 'காற்றுத் தனக்கான பாதையில் பயணித்துக் கொண்டேயிருக்கும். வாசம் எதைப்பற்றியும் கவலைக் கொள்வதில்லை' என்று எழுதியிருக்கிறார். படிகம் அப்படியான பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதை இதைவிட அழகாகச் சொல்ல முடியாது. 

லஷ்மி மணிவண்ணனின் கவிதைப் பெண்கள் என்ற தலைப்பில் விக்ரமாதித்யன் எழுதியிருக்கும் கவிதைப் பார்வை மிகவும் விசாலமானது. அது கவிதையை விளக்குவதற்காகப் பிரித்து மேயும் ரகம் கொண்டது. ஆய்வு என்று அதைக் கூறமுடியாது. 

லஷ்மி மணிவண்ணனின் கவிதைகளில் புனைவுக் கூட்டி, புரியாமை, மயக்கமான சொல்முறை இருண்மையைத் தோற்றுவிக்கிறது என்று ஓரிடத்தில் விக்ரமாதித்யன் குறிப்பிடுகிறார். அப்ப்படியே சொல்வதில் சாரம் இராது என்ற விளக்க்கத்தையும் அவரே நமக்குத் தந்தும் விடுகிறார். மேலும், எதார்த்தமான ஒன்றை எதார்த்தமாகச் சொல்வதில் ஒன்றுமில்லை என்று நினைக்கும் கவிஞர்கள் இதுபோலப் பேசுகிறார்கள் என்றும் கூறுகிறார். அது அப்படியா என்ற விளக்கத்தை லஷ்மி மணிவண்ணனே கொடுத்தால் சரியாக இருக்கும் என்றுதான் எனக்குத் தோன்றியது. 
லஷ்மி மணிவண்ணன் பெண்களை முன்னிருத்தி எழுதியிருக்கும் 5 கவிதைகளை அவர் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

'பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கிக் கொண்டு வந்து சேர்த்தாள்' என்ற எஸ்.சுந்திரவல்லியின் கவிதைத் தொகுப்பை ந.பெரியசாமி விமர்சனம் செய்திருக்கிறார். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளைத் தமது கவிதையில் சுந்திரவல்லிப் பதிவுச் செய்திருப்பதை ந.பெரியசாமி வாழ்வியலோடு ஒப்பிட்டு எழுதியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. மண் வாசனைக்குறியக் கவிதைகளாக இருக்குமோ என்ற ஆவல் ஏற்படவும் செய்கிறது. 

கவிஞர் பெருந்தேவியின் கவிதைகள் எப்பவும் எனக்குப் பிடித்தமானவையாக இருக்கின்றன. அதிலும் இந்தப் பிரதியில் நச்சென்று 3 கவிதைகளைத் தந்திருக்கிறார். 

நினைப்புக்குப் பத்துத் தலை 
இதமாகப்பதமாக 
ஒவ்வொன்றாகக் 
கொய்யவேண்டும் 
மெல்ல எடுத்து 
(காற்றும் காணாத) 
பிளாஸ்டிக் உறையில் 
வைத்துச் சுற்றி 
இறுகக்கட்டி 
தூர எறிய வேண்டும் 
வேண்டுமென்கிற 
தலையும் சேர்த்துதான்... 

'யோசனை' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் இந்தக் கவிதை வாசகனுக்கு மிக அருகில் வந்து அமர்ந்துகொள்ளும் ரகம் கொண்டது.

இந்தப் பிரதியில் கே.ராஜதுரை அவர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளது கவிதை ரசிகர்களுக்கு விருந்து என்றுதான் சொல்ல வேண்டும். 4 கவிதைகளை அவர் தந்துள்ளார். 

'விடியலுக்காக' என்ற கவிதையில் 

ஓர் இரவைக் கடக்க 
பல இரவுகள் சாய்ந்து கொண்டிருக்கின்றன... 
///// 
பல நாள் இரவுகளை 
ஒரே நாள் இரவில் 
சுமந்து செல்கிறேன் 
விடியலுக்காக' 

என்ற கவிதை மிக அழகாகவும் எளிமையாகவும் விடியலைப் பேசுகிறது. 'விருட்சம்' என்ற கவிதையும் 'அச்சு அசல்' என்ற கவிதையும் விடியலையே பேசினாலும் 
'கட்டி முடிக்கப்பட்ட மணல் வீடுகள் 
அலைகளுக்குத் தீனியாகிக் கொண்டிருக்கின்றன' என்ற வரி விடியலுக்குள் இருக்கும் இருண்மையைப் பேசிச்செல்கிறது. 

அனார் எழுதியிருக்கும் ஒற்றைக்கவிதை இந்தப் பிரதியில் கடைசிப் பக்கத்தை அலங்கரிக்கிறது. தன்னைச் சுட்டுக்கொள்ளும் தீ என்ற அந்தக் கவிதை, தன்னைத் தானே சுட்டுத் தீய்கிறது என்பது உண்மைதான். 

எஸ்.சுதந்திரவல்லி, நட்சத்திரன்,பைசல் ஆகியோரின் கவிதையும் நன்றாகவே வந்திருக்கிறது. 
இந்தப் பிரதியில் லஷ்மி மணிவண்ணன் 5 கவிதைப் புத்தகங்களின் விமர்சனங்களைச் செய்திருக்கிறார். அதில் லீனாவின் அந்தரக்கன்னி, தேவிந்திரப் பூபதியின் நடுக்கடல் மௌனம் ஆகிய கவிதைத் தொகுதிகளுக்கு விமர்சனம் அவசியமில்லை. அவர்களின் கவிதைகள் பலரால் பலமுறை விமர்சனம் செய்யப்பட்டதுதான். ஆனால், கண்டராதித்தன், லாவண்யா சுந்தரராஜன், தி.பரமேசுவரி, ஆகியவர்களின் கவிதைப் புத்தகங்கள் விமர்சனத்துக்கு மிகத் தேவையான ஒன்று. 

பத்து வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்திய கவிதைப் புரட்சியில் அடையாளம் கண்ட அதே கலைஞர்களைதான் இன்னும் கவிதைப் புரட்சிச் செய்பவர்களாக அடையாளம் கூறுகிறோம். தற்போது எழுதிவரும் புதியவர்களை அடையாளம் காணுதல் என்பது வெளிநாட்டில் வசிக்கும் என்னைப்போல உள்ளவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. 
இன்னும் சொல்லப்போனால் அங்கே இருப்பவர்களுக்கும் இந்த கலைஞர்களை தெரிகிறதா என்றும் தெரியவில்லை. அந்த வகையில் லஷ்மி மணிவண்ணன் அடையாளம் கண்டு பதிவு செய்திருக்கும் கலைஞர்கள் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். 

படிகத்தின் அக்டோபர் மாத இதழில் நான் மிக முக்கியமாகவும் தேவையாகவும் உணர்வது ஜெயமோகன் எழுதிய திருமாவளவன் கவிதைகள் குறித்தான விமர்சனத்தைதான். திருமாவின் படைப்புகளையும் அவரின் கவிதைகளையும் மதிக்கும் அதே வேளையில் ரசிக்கும் ஒரு வாசகி என்ற முறையில் ஜெ.மோ எழுதிய இந்த விமர்சனம் எனக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. திருமாவின் கருப்புப் பூனை உலாவும் அவரின் கவிதைகளை ஜெ.மோவும் கோடிக் காட்டியிருக்கிறார். திருமாவின் 'பசி' என்ற கவிதையில் வரும் சாம்பல் பறவையும் கருப்புப் பூனையும் எதன் குறியீடு என்பது அவரோடு நெருங்கிப் பழகியவருக்குத் தெரியும். ஆனால், ஒரு கவிதை வாசிப்பாளனுக்கு அந்தக் கவிதையில் ஏற்படும் உள்ளுணர்வு வேறுமாதிரியாக இருக்கலாம். ஜெ.மோ  கவிதையைக் குறித்தும் திருமாவைக்க்குறித்து எழுதியிருந்தது  'படிகம்' மாதிரியான நவீன இழக்கிய இதழ்க் கலைஞர்களுக்குச் செய்யும் மரியாதையாகவே நினைக்கிறேன். 


ஜனவரித் தொடக்கத்தில் படிகம் 5-வது இதழ் அழகிய புத்தக வடிவிலேயே வந்திருக்கிறது. படிகம் வாசகர்களுக்கு இதுவே சிறந்த புத்தாண்டு பரிசு என்பதில் சந்தேகமில்லை. அதுவரை 10 ரூபாய், 20 ரூபாய் என்று இருந்த இதழ் 50 ரூபாய்க்குத் தரத்திலும் படைப்பிலும் பலம் பொருந்தி வந்திருக்கிறது. 

இதற்கு முன்பு வந்த 4 இதழ்களின் குறைநிறைகளைப் பரீசிலித்து மிக நேர்த்தியாக வந்திருக்கிறது படிகம் 5-வது இதழ். அட்டையோடு சேர்த்து 86 பக்கங்கள். ஒவ்வோருப் பக்கமும் மிக முக்கியமானதாக இருக்கிறது. சிவசங்கர் எழுதியிருக்கும் சமகாலச் சீனக் கவிதைகள், நவீனப் பெண்கவிஞர்கள் குறித்துக் காஞ்சனா எழுதியிருப்பது ஷங்கர் ராமசுப்ர மணியன் கவிதைகளைக் குறித்து விக்ரமாதித்யன் எழுதியிருப்பது, தேவதச்சன் கவிதைகள் பற்றி ஜெ,மோகன் எழுதியிருப்பது, விக்ரமாதித்யன் கவிதைத் தொகுப்புக் குறித்துக் கே.ராஜதுறை எழுதியிருப்பது என அனைத்தும் மிக முக்கியமான பதிவுகள். 

போகன் சங்கர்க் கவிதைகள், ஜீனத் நசீபாக் கவிதைகள், லஷ்மி மணிவண்ணன் கவிதைகள் கவனத்தை மற்றும் விமர்சனத்திற்குத் தகுந்த கவிதைகளாக உயிர் பெற்றிருக்கின்றன. தேவதச்சன் கவிதைகள் இந்த இதழுக்கே அழகைச் சேர்க்கும் விதமாக இருக்கிறது. நான் அவரின் ரசிகை. அதற்கு எந்தக் குறையும் அவர் வைக்கவில்லை. புதிய படைப்பாளர்கள் அல்லது எனக்கு அறிமுகம் இல்லாத படைப்பாளர்களின் கவிதைகளும் உள்ளன. சில கவிதைகள் இன்னும் செறிவுப் படுத்தியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆனால், படைப்புச் சுதந்திரம் அந்தக் கலைஞருக்கே உரியது என்பதையும் மறுக்கவில்லை. 

இதுவரை வந்த இதழ்களைக்காட்டிலும் இதுவே அதிகப் பக்கங்கள் கொண்டது. மேலும் புத்தக வடிவிலும் அது மாற்றத்தைக் கொண்டுள்ளது என நான் தொடக்கமே கூறியிருக்கிறேன். இந்த வடிவம் 'படிகம்' இதழுக்குப் பொறுத்தமான வடிவமாக இருக்கிறது. பல முக்கியப் படைப்பாளர்களின் விமர்சனம் படைப்புகள் கொண்டிருக்கும் 'படிகம்' இதழ்க் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள்ளாகவே இயங்காமல் பரவலாக நாடு கடந்தும் அறியப்பட வேண்டும் என ஆவல் கொள்வதுடன் படிகம் குழுவிற்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். 

நன்றி 
ஜனவரி 2016 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக