வியாழன், 21 ஜனவரி, 2016

புத்தக விமர்சனம்
எழுதியவர் : ழாக் ப்ரெவெர்
மொமிழில்: வெ.ஸ்ரீராம்
பதிப்பகம் : கிரியா

கவிதையை எல்லாராலும் வாசிக்க முடியும். அனைவராலும் உள்வாங்குதல் முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், ஒருக் கவிதையை பலர் பலவாறாக புரிந்துகொள்வது அவரவர் வாசிப்புத் திறனை பொறுத்த ஒன்று. ஒரு படைப்பை படைத்தபின் அந்த எழுத்தாளன் செத்து போகிறான் என பேராசிரியர் நுஃமான் கூறுவார். அதன் பிறகு, அதற்கு உண்டான விமர்சனமும் கருத்துகளும் வாசிப்பாளனுக்கு உரியது. 

கவிதைகளில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் கொஞ்சம் தனித்துவமானவை. இன்னொரு நாட்டின் சூழல், வாழ்வியல் முறை, புனைவு உள்ளிட்ட விஷயங்களோடு சொல்லாடல்களையும் கிரகிக்கக்கூடிய வாய்ப்பு மொழிபெயர்ப்பு தொகுப்பில் அமைய நிறைய வாய்ப்பு உள்ளது. 

அண்மையில் நான் வாசித்த கவிதைப் புத்தகம் ழாக் ப்ரெவெர் எழுதிய  'சொற்கள்'. பிரெஞ்சு மொழியிலிருந்து வெ.ஸ்ரீராம் தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார். கையடக்க அளவில் பதிப்பித்துள்ள அந்த தொகுப்பை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

39 கவிதைகளில் 7 கவிதைகள் நெடுங்கவிதைகளாக இருக்கின்றன. காதல், சமுதாயம், பொருளாதாரம் என நாம் தினமும் கடக்கும் ஒன்றை ழாக் கவிதை மொழியில் கூறிச் செல்கிறார். பல இடங்களில் நம்மை நிறுத்தி வைத்து, இந்த வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறார். 

தொகுப்பின் முதல் கவிதை 'இந்தக் காதல்' என்ற கவிதையிலிருந்து துவங்குகிறது. 


இந்தக் காதல்
இவ்வளவு வன்முறையான
இவ்வளவு மென்மையான
இவ்வளவு மிருதுவான
இவ்வளவு நம்பிக்கையிழந்த

இந்தக் காதல்
பகல் பொழுதைப் போல் அழகாக
வானிலை மோசமாக இருக்கும்போது
மோசமாக இருக்கும்
அந்த வானிலையைப் போன்ற
இவ்வளவு நிஜமான இந்தக் காதல்
இவ்வளவு அழகான இந்தக் காதல்
இவ்வளவு மகிழ்ச்சியான
ஆனந்தமான 
மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான
இந்தக் காதல்
இருட்டிலுள்ள குழந்தைபோல் பயந்து நடுங்கியும்
ஆனாலும் இரவின் மத்தியிலும்
நிதானமிழக்காத மனிதனைப்போல்
தன்னைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன்
மற்றவர்களைப் பயமுறுத்திய
அவர்களைப் பேச வைத்த
வெளிறச் செய்த இந்தக் காதல்
நாம் கண்காணித்தோம் என்பதால்
கண்காணிக்கப்பட்ட இந்தக் காதல்
துரத்தப்பட்ட புண்படுத்தப்பட்ட தொடரப்பட்ட
இந்தக் காதல்
நாம் அதைத்
துரத்தி புண்படுத்தி தொடர்ந்து முடித்து மறுத்து
மறந்தோம் எனபதால்
இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதுடன்
முழுமையாக ஒளிர்ந்துகொண்டிருக்கும்
இந்தக் காதல் முழுமையாக
உன்னுடையது
என்னுடையது
எப்போதும் புதுமையான ஒன்றாக
இருந்து கொண்டிருப்பதோடு அல்லாமல்
மாறாதது
ஒரு தாவரத்தைப் போல் அவ்வளவு நிஜம்
ஒரு பறவையைப் போல் அவ்வளவு துடிப்பு
கோடைக் காலத்தைப் போல் அவ்வளவு சூடானது
அவ்வளவு உயிர்த்திருப்பது
நாம் இருவம்
போகலாம் திரும்பிவரலாம்
மறந்துவிடலாம்
மீண்டும் உறங்கிப்போகலாம்
விழித்துக்கொள்ளலாம் அல்லலுறலாம்
மூப்படையலாம்
சாவைப் பற்றிக் கனவுகாணலாம்
விழிப்புடன் இருக்கலாம்
புன்னகைக்கலாம் சிரிக்கலாம்
பின்னர் இளமையும் அடையலாம்
அங்கேயே நின்றுவிடுகிறது நம் காதல்
கழுதையைப் போல் பிடிவாதமாக
ஆசையைப் போல் துடிப்பாக
ஞாபகத்தைப் போல் கொடியதாக
மனக்குறைகளைப் போல் மென்மையாக
பளிங்கைப் போல் குளிர்ச்சியாக
பகல் பொழுதைப் போல் மிருதுவாக
புன்னகையுடன் நம்மைப் பார்க்கிறது
ஒன்றும் சொல்லாமல் நம்முடன் பேசுகிறது
நான் அதைக் கேட்கிறேன் நடுங்கியபடியே
கத்துகிறேன்
உனக்காக கத்துகிறேன்
எனக்காகக் கத்துகிறேன்
தயவுசெய்து கேட்கிறேன்
எனக்காகவும் உனக்காகவும்
ஒருவரையொருவர் நேசிக்கும்
நேசித்த அனைவருக்காகவும்
ஆம், நான் உன்னிடம் கத்துகிறேன்
உனக்காக எனக்காக எனக்குத் தெரிந்திராத
மற்ற அனைவருக்காகவும்
அங்கேயே இரு
எங்கு இருக்கிறாயோ
அங்கேயே
அசையாதே
போய்விடாதே
காதல் வயப்பட்டிருந்த நாங்கள்
உன்னை மறந்துவிட்டோம்
எங்களை நீ மறந்துவிடாதே
உன்னை விட்டால் இப்பூமியில் எங்களுக்கு
யாருமில்லை
எங்களை உறைந்துபோக விட்டுவிடாதே
மிகத் தொலைவிலும் எப்போதும்
எங்கிருந்தாலும்
இருக்கிறாய் என்று தெரிவி
காலந்தாழ்ந்து ஒரு வனத்தின் மூலையில்
நினைவின் கானகத்திலிருந்து
திடீரென்று வெளிப்படு
எங்களுக்குக் கரம் நீட்டு
எங்களைக் காப்பாற்று...


தொடக்க வரிகளில் காதலை புறவெளியிலிருந்து பார்வையை செலுத்துவதைப்போல ழாக் தொடங்கியிருக்கிறார். ஆனால் போகப் போக காதலை அகவெளிக்குள் கொண்டு வந்து, அதன் காலிலேயே மண்டியிட வைக்கிறார். வாசிப்பின் ஊடே அதை மாறுபடுவதை நம்மால் அவதானிக்க முடியவில்லை. அதுவே ழாக் உடைய மேஜிக்கோ என்றும் தோன்றுகிறது. 

"காதல் வயப்பட்டிருந்த நாங்கள்
உன்னை மறந்துவிட்டோம்
எங்களை நீ மறந்துவிடாதே" 
என்பது இந்தக் காலத்தின் அவசர நிலைக்கு ஏற்ற வரிகள். காதலை மறந்து, காதல் என்பதின் அர்த்தத்தை மறந்து, காதல் என்னை காதலிக்கவில்லை என்பது எத்தனை அபத்தம். 

தூங்காத இரவுகள் குறித்த கவிதைகளை எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். பெருவாரியாக இரவுக்கவிதைகள் வாசகனை ஏமாற்றுவதில்லை. ழாக்-க்கும் நம்மை ஏமாற்றவில்லை. 


இரவில் பாரிஸ்

இரவில் ஒன்றன்பின் ஒன்றாக
மூன்று தீக்குச்சிகள்
முதலாவது உன் முகத்தை
முழுமையாக பார்க்க
இரண்டாவது உன் கண்களை பார்க்க
கடைசியாக உன் இதழ்களைப் பார்க்க
பின் சுற்றிலும் இருள்
இதையெல்லாம் நினைத்துப்பார்க்க
என் கரங்களில் உன்னை இறுக்கியவாறு...

மற்றொரு கவிதையில்
மேசையின் மேல் ஒரு ஆரஞ்சுப் பழம்
தரைவிரிப்பின் மேல் உன் ஆடை
என் கட்டிலில் நீ
நிழல்காலத்தின் இனிய வெகுமதி
இரவின் புத்துணர்ச்சி
என் வாழ்வின் கதகதப்பு...

ழாக் ப்ரெவெர், அவர் கவிதையை புரிந்துகொள்ள அதிக சிரமம் நமக்கு கொடுக்கவில்லை. எளிய வரிகள். அதை மிகவும் அழகாக மொழிபெயர்த்திருக்கும் 
வெ.ஸ்ரீராமை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 
இரண்டாம் உலக போர் சூழலில் எழுதப்பட்ட 'சொற்கள்' (Paroles) அக்கவிதைகள் அப்போதே மக்கள் மத்தியிலும் ழாக் ப்ரெவெர் மத்திலும் பெரிய வரவேற்ப்பு பெற்றதாக  அவர் பற்றிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் 'பார்பரா' என்ற கவிதை எனக்கு நெருக்கமானதாக இருந்தது. 

நினைவுபடுத்திப்பார், பார்பரா
ப்ரெஸ்ட் நகரத்தில் அன்று
இடைவிடாமல் மழை பெய்தது
புன்னகையுடன் நீ கடந்து சென்றாய்
மலர்ந்து மகிழ்ந்து நீர் வழிந்தோட
மழையிலே நனைந்து
நினைவுபடுத்திப்பார், பார்பரா

என்று தொடங்கும் கவிதையில் , 

உன்னை  'நீ' போட்டு அழைக்கிறேனென்று
கோபிக்காதே
எனக்கு பிடித்தவர்களையெல்லாம்
'நீ' என்றே அழைப்பேன்
ஒரே முறைதான் பார்த்திருந்தாலும்
பரஸ்பரம் நேசிப்பவர்கள்  அனைவரையும்
'நீ' என்றே அழைப்பேன்

கவிதையில் வரும் பார்பராவை போலதான் நானும். 'நீ' என்று ஒறுமையில் அழைப்பவர்களை அப்படி அழைக்காதீர்கள் என எச்சரித்திருக்கிறேன். சில நண்பர்கள் ழாக் கூறியிருப்பதைப்போலத்தான் எனக்கு பதிலளித்துள்ளனர். அந்த கவிதை வரிகளை வாசிக்கும்போது  மௌன புன்னகையை உதிர்க்காமல் இருக்க முடியவில்லை என்னால்.  சில நிமிடங்கள் ழாக் ப்ரெவெரின் பார்பராக இருந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தக் கவிதையின் ஓரிடத்தில் 
"என்ன மடத்தனம் இந்தப்போர்"  என போரின் நினைவுகளையும் ஏற்பட்ட இழப்பையும்  பதிவு செய்திருக்கிறார் ழாக்.  பார்பராவின் காதலன் யாரோ என அவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் அவர் சம்பந்தப்பட்டது என கவிதையிலேயே தெரியப்படுத்தும் விதம் மிக நேர்த்தியானது. 
ழாக் சில காலம் சர்ரியலிஸ இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதனால் அந்த இயக்கத்தின் பாணி அவரின் படைப்புகளில் ஆங்காங்கே தென்பட்டாலும், அவற்றையும் மீறீ இவருடைய படிமங்களின் தொகுப்பும் கற்பனையின் வெளிப்பாடும் இயல்பாகவே இருக்கின்றன என்ற வரி அவரைப்பற்றிய அறிமுக குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளை வாசித்துவிட்டு, அவரைப்பற்றிய குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும்போது மனதை பாதித்த சில கவிதைகளின் பக்கங்களை தேடி விரல்கள் போகிறது.   
இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த பல கவிதைகள் இருக்கின்றன. கதவைப்பற்றிய இரு கவிதைகள், முதலாளித்துவத்தை சுட்டும் கவிதைகள் என சொல்வதற்கு நிறைய உள்ளன. மொத்தத்தையும் சொல்வது இந்த தொகுப்புக்கும் ழாக் எனும் கலைஞனுக்கும் செய்யும் மரியாதை அல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்யும்போது எனது பார்வை இக்கவிதைகளில் மாறுபடும் என நானே நம்புகிறேன். 

இலையுதிர் காலம்

நிழற்சாலையொன்றின் மத்தியில்
துவண்டு விழுகிறது குதிரை
அதன்மேல் விழுகின்றன இலைகள்
நடுங்குகிறது நம் காதல்
சூரியனும்கூட.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இழந்த நேரம்

ஆலையின் கதவுக்கு முன்னால்
திடீரென்று நிற்க்கிறான் தொழிலாளி
அவன் அங்கியைப்
பிடித்து இழுத்தது
இனியை வானிலை
திரும்பிப் பார்த்த அவன்
சூரியனைப் பார்க்கிறான்
முற்றிலும் சிவப்பா
முழு உருண்டை
ஈயம் பூசிய வானிலிருந்து
புன்னகைத்தவாறு
அவனைப் பார்த்து கண்ணடிக்கிறது
பரிச்சயத்துடன்
தோழன் சூரியனே! நீயே சொல்
இது போன்ற ஒரு நாள் பொழுதை
முதலாளிக்கு அர்ப்பணிப்பதென்பது
சுத்த மடத்தனம் என்று
தோன்றவில்லையா உனக்கு....

தனது கவிதைகளில் 
நிலைகொள்ளாமல் செய்து கொண்டிருக்கிறார் ழாக். சில கவிதைகளில் காதலாகி கசிந்துகொண்டிருக்கிறேன். 
சில கவிதைகளில் இருக்கும் நகைச்சுவை உணவை சிரித்து கடக்கிறேன். சிலக் கவிதைகளில் என்னை தேடிக்கொண்டிருக்கிறேன். 
-யோகி

(இந்த புத்தகத்தை மலேசியாவுக்கு வந்திருந்தபோது எனக்கு பரிசளித்த எழுத்தாளர் இமையம் அண்ணாவுக்கு எனது நன்றி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக