திங்கள், 4 ஜனவரி, 2016

இந்திய குடிசை – (குறு நாவல்) பெர்னார்தன் தெ சேன்பியர்.
விமர்சனம் – யோகி


'இந்திய குடிசை' என்ற குறுநாவல் வாசிக்கும் முன்பு அது பார்ப்பனிய சமூகத்தின் ஆதிக்கத்தை  பேசும் நாவல் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஆனால், நாவலை வாசித்து முடிக்கும் போது அது பெண்ணிய நாவலாகவும் அடையாளப்படுத்தக்கூடியது என்பதையும் நான் உணர்ந்தேன்.

நாவலின் 62-வது பக்கத்தில் ஒரு பார்ப்பனிய விதவை பெண்ணுக்கும், பறையன் ஒருவனுக்கும் நடக்கும் உரையாடல் இது.

"துயருள்ள மனிதனே! நீ என்னிடம் காதலைப் பற்றி கூறுகிறாய். இன்னும் சற்று நேரத்தில் நான் உயிரோடு இருக்க மாட்டேன். இப்பொழுதான் இறந்துவிட்ட என் கணவருடன் என் தாயைப் போல நான் சிதைக்குச் செல்ல வேண்டும். அவர் வயது  முதிர்ந்தவர். நான் குழந்தைப் பருவத்தில் அவரை மணந்து கொண்டேன். விடைபெற்றுக் கொள். விலகிப் போய்விடு. இன்னும் மூன்று நாட்களில் நான் ஒரு பிடி சாம்பலாய் விடுவேன்.!"

"ஏழைப் பார்ப்பனப் பெண்ணே! சமூகம் உனக்குத் தந்த தளைகளை இயற்கை உடைத்தெறிந்து விட்டது. மூடக் கொள்கையின் கட்டுகளை நீ முறித்தழித்துவிடு. என்னைக் கணவனாகக் கொண்டு நீ அங்ஙனம் செய்யலாம்."

அப்பொழுது அவள் பெருமூச்செறிந்து, தன் தாயின் சாம்பல் குழியை உற்று நோக்கினாள்; பின் வானத்தைப் பார்த்தாள்;  அதன் பிறகு தன் கைகளுள் ஒன்றை அவன் கையின் அமர்த்தினாள்.

இப்படியாக கதையின் இறுதி கணங்கள் நகரும் போது, 1737-1814 காலக்கட்டத்தில்  ஆன்றி பெர்னார் தந்தெசேன்பியரின் நேரடி பார்வையில் பதிவு செய்த இந்திய பார்ப்பனிய ஆதிக்கத்தையும் தாண்டி, சாதாரண மக்களின் கணமான வலி நிறைந்த வாழ்வியலையும் காட்சி படுத்துகிறது.

பிரிட்டிஷ் நிர்வாகத்தினால் 3 கேள்விகளுக்கு விடை அறிந்துவர இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார் ஒரு பண்டிதர். மூன்றாண்டுக்குப் பிறகு தமக்கான கேள்விக்கு பதில் அறியும் பொருட்டு இந்தியாவில் மிகவும் புகழ் மற்றும் செல்வாக்கு மிக்க ஜெகந்நாதத்து அந்தணர்  என்பவரை சந்திக்கச் செல்கிறார்.  அங்கே அவர் சந்தித்த பல கசப்பான சம்பவங்களையும் பார்ப்பன ஆதிக்க செயல்பாட்டையும் மிக தெளிவாக பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர்.

கதை பேசும் அந்தக் காலக்கட்டத்தில் பிராமணர்கள் எத்தனை செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் காட்டப்படுகிறது. பிரிட்டிஷ் பண்டிதர் ஜெகந்நாதத்து அந்தணரை பார்க்க அவரின் இடத்திற்கு சென்று காத்திருக்கிறார். ஆங்கிலேய பண்டிதர் தனது பாராட்டை தெரிவிக்க அந்தணர் அருகில் செல்ல நினைக்கும்போது 9 பாய்களுக்கு அப்பாலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்.

உமாராக்கள் என்னும் இந்தியப் பெருந்தகைகள் அவற்றைக் கடந்து போவதில்லையென்றும், இந்திய அரசர்கள் ஆறு பாய் அளவு செல்லலாம் என்றும், முகலாய  இளவரசர்கள் மூன்று பாய் அளவுக்கும், முகலாய மன்னன் மாத்திரம் அந்தணத் தலைவர் அருகில் சென்று அவர் கால்களை முத்தமிட உரிமை பெற்றிருக்கிறார் என்று அவருக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

இந்த விளக்கத்தால் ஆங்கில பண்டிதருக்கு பெருத்த ஏமாற்றமும் சங்கடமும் ஏற்பட்டாலும் தமது கேள்விகளுக்கு பதில அறிய வேண்டிய அமைதியாக இருக்கிறார்.

பண்டிதர்   : “உண்மையை எவ்வழியாக கண்டறியலாம்?”
தலைமை அந்தணர் : “ அதன் நுட்பம் அந்தணர்களுக்குதான் தெரியும்.”

பண்டிதர்  : “உண்மையை எங்குப் போய்த் தேட வேண்டும்?”
தலைமை அந்தணர்  :  "அது அந்தணர்களுக்கு மட்டும்தான் தெரியும்.”

 பண்டிதர்  : “உண்மையை மக்கட்குத் தெரிவிக்க வேண்டுமா?”
தலைமை அந்தணர்  : “அந்தணர்களுக்கு மட்டுமே உண்மையை அறிவிப்பது கடமையாகும்.”

ஆங்கில பண்டிதருக்கு சினம் ஏற்பட்டு, கடவுள் நேர்மையற்றவன் என்றும் உண்மையில் அந்தணர்கள் நேர்மையற்றவர்கள் என்கிறார். பின் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆங்கில பண்டிதர்  அங்கிருந்து கிளம்புகிறார். அவருக்கு கிடைக்ககூடிய பரிசு பொருள்கள் அனைத்தும் மறுக்கப்பட்ட வேளையில் அது தமக்கு தேவையில்லை என கூறுகிறார். அவர்  தண்ணீர் அருந்திய  மண்பாண்ட குவலை  உடைக்கப்படுகிறது.

தன் பயணத்தை தொடரும்போது இரவை கழிக்க வேண்டிய சூழலிலும் மோசமான காலநிலையிலும் பயணம் செய்கிறார் ஆங்கில பண்டிதர். இந்நிலையில் மறைவான ஓர் இடத்தில் குடிசை ஒன்றை காண்கிறார். உடன் வந்த கூலியால் அங்கு போகாதே "பறையன், பறையன்"  என ஆங்கில பண்டிதரை எச்சரிக்கிறான்.

ஏதோ காட்டு விலங்காக இருக்குமோ என்ற அச்சத்தில் ஆங்கில பண்டிதர் கைத்துப்பாக்கியை எடுக்கிறார். பின் பறையன் என்பதற்கு பொருள் என்ன என்ன? என வினவுகிறார்.
நம்பிக்கையும் சட்டமும் இல்லாதவன் என்றும் அவன் மிக இழிவான குலத்தைச் சேர்ந்தவன் என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

ஆங்கில பண்டிதனை மட்டுமல்ல  நாவலை வாசிக்கும் நம்மையும் புருவத்தை சுறுங்கச்செய்கிறது இந்த வரிகள். அதன் பிறகு,  பறையனுக்கு இழைக்கப்படும் அநீதிகள் யாவும், பிராமணர்களுக்கு நீதியாக வரையருக்கக்கூடிய சட்டங்கள் பட்டியலிடப்படுகிறது.
குறிப்பாக பறையனால் தீண்டப்பட்ட மாத்திரத்திலேயே அவனைக் கொன்று விடுவதற்கு பிராமணர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது எத்தகைய தீவிரவாதம் என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை.

ஆனால், ஆங்கில பண்டிதர் பறையன் வீட்டிற்குள் சென்று இரவு முழுவதும் தங்கி, அவனின் விருந்தோம்பலை ஏற்று அவர்களுக்குள் நடக்கும் உரையாடலே மிச்சக் கதை.
அதுவே இந்தக் நாவலின் முக்கிய அம்சமாகவும் சாரமாகவும்  இருக்கிறது.

ஒருக்கட்டத்தில் நீங்கள் இந்தியர் இல்லை என்பதால் எனது விருந்தோம்பலை வெறுக்க மாட்டீர்கள் என பறையன் சொல்வது இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

தொடர்ந்து, தாம் கொண்டு வந்த கேள்விகளுக்கு பறையனிடம் பதில்கள் இருக்கும் என்ற நம்பிகை பண்டிதருக்கு ஏற்படுகிறது. ஏன் அப்படியான நம்பிக்கை ஏற்பட வேண்டும்? உண்மையில் அந்த ஆங்கில பண்டிதருக்கு தேவையான பதில் கிடைத்ததா?
பறையன் அந்தக் கேள்விகளுக்கான பதிலை வைத்திருந்தாரா? வேறு அங்கு என்னவெல்லால் நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சில ஏடுகளிலேயே நாம் தெரிந்துக்கொள்ளலாம். அதற்கு 'இந்தியக் குடிசை' குறுந்நாவலை வாசிக்க வேண்டும்.
இது ஒரு தீவிரமான நாவலாக இருந்தாலும் பல இடங்களில் கிண்டல் மேலிடுகிறது. அதை வாசிக்கும்போதுதான் உணர முடியும்.


இந்தப் புத்தகத்தை மிகவும் பொறுமையாக வாசிக்க வேண்டியது முக்கியமாக இருக்கிறது. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி அவ்வாறனது. மொழி ஆலுமைகளுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் இருக்கலாம். 1790-ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் எழுதிய புத்தகத்தை 1967 ஆம் ஆண்டு இரா.தேசிகப் பிள்ளை மொழி பெயர்த்துளார். இந்த நாவலை தமிழாக்கம்  செய்திருக்கும் இரா.தேசிகப்பிள்ளை உண்மையில் போற்றுதலுக்கு உரியவர்தான்.

பறையனும் பண்டிதரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஓரிடத்தில்  “உண்மை என்பதை ஒவ்வொரு மனிதனும் தேடி கண்டடைய வேண்டும். அவ்வாறு அறியப்படுவதுதான் அறிவு” என்று விளக்கமளிக்கிறார் பறையன். உண்மை என்பதை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்கான பதில் அறிவுடன்
 இன்னும் மண்டி போட்டு கிடக்கிறது.

தலைப்பு: இந்திய குடிசை (குறுநாவல்)
பிரெஞ்சு மூலம்: பெர்னார்தன் தெ சேன்பியர்,
தமிழாக்கம் – இரா.தேசிகப்பிள்ளை,
வெளியீடு – திராவிடர் கழகம்,கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக