வெள்ளி, 22 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 4

அன்று இரவு நான் 'ஹோட்டல் தமிழ் நாடு' தங்கும் விடுதியில் தங்குவதற்கு சாகுல் ஏற்பாடு செய்திருந்தார். என்னை அங்கு விடும் முன்பு, இரவு உணவு சாப்பிட வேணுமா என்று கேட்டார் சாகுல். "எனக்கு டீ-காப்பி போதும்" என்றேன். "வேறு என்ன வேண்டும்?" என்றார். "ஊட்டியின் இரவைக் காண வேண்டும்" என்றேன். "நீங்கள் செய்த உதவி இதுவரை போதும் சாகுல். நாளை பார்க்கலாம். நான் தனிமையில் கொஞ்சம் இருக்க வேண்டும்" என்றேன். சாகுல், யோசிக்கத் தொடங்கினார். 
அவர் அவிலாஞ்சி செல்ல வேண்டும். பின் "இல்லை யோகி நான் உடன் வருகிறேன் என்றார். எனக்கு கொஞ்சம் சங்கடமாகி போனது. வீணாக அவருக்கு சிரமத்தை கொடுக்கிறேன் என்ற எண்ணம் வந்தாலும், சாகுல் உடன் வருகிறேன் என்றதும் எனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது. 
ஊட்டி ரொம்பவும் சின்ன பட்டணம் என்பது அதை வலம் வரும்போதுதான் தெரிந்தது.  கிறிஸ்துமஸ் தினம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நிறைய சுற்றுப்பயணிகளை அங்கு காண முடிந்தது. மக்கள் ஒருவகை பரபரப்பு சூழலிலேயே இயங்கிக் கொண்டிருந்தனர். 
ஆண்கள் -பெண்கள் என அனைவருமே குளிர் சட்டை அணிந்துக்கொண்டு சிலர் தொப்பி அணிந்துகொண்டு, காதுகளை மறைத்துக்கொண்டு  தன் அன்றாட தேவைக்காக ஓடிக்கொண்டிருந்தனர். 

சாகுலிடம் எனக்கு காப்பி வேண்டும் என்றேன். கையேந்திபவன் மாதிரி ஒரு கடை இருந்தது. இங்கே குடிப்பீர்களா என்றார், எல்லாரும் இங்கு குடிக்கும்போது என்னாலும் குடிக்க முடியும் என்றேன். பலகாரம் ஏதும் வேணுமா என்றார். வேண்டாம் என்றேன். காப்பி சுவைக்காக நாக்கு ஏங்கியபடி இருந்தது. சற்று நேரத்தில் சுடச்சுடக் காப்பி. எத்தனை முறை குடித்தாலும், எங்கு குடித்தாலும் காப்பியும் டீயும் சுவையாகவே இருந்தது. 

மேலும், நண்பர்கள் கூறியதைப்போல பெரிய அளவில் ஊட்டி குளிரவில்லை. ஆனால், மலைகள் மீது பனி மூடியிருந்ததும் பல இடங்களில் காணக்கிடைத்த ஊசி மரங்களும், சாலையின் சுற்றுவட்டத்தில் இருந்த நீரூற்றுச் சிலையும்  பார்த்துக்கொண்டே இருக்கும் ரம்மியத்தைக் கொடுத்தது.
ஊட்டியின் ஞாபகமாக ஏதாவது வாங்க வேண்டும் என சாகுலிடம் கூறினேன். ஊட்டியை வட்டமடிக்கையில் கண்ணைக் கவர்ந்த வெள்ளி நகைகளை விற்கும் கடை தென்பட்டது. அழகிய பரிசுப் பொருள்களும் அங்கு விற்பனைக்கு இருந்தது. அதனுள் நுழைந்தோம். அப்போதுதான் தெரிந்தது சாகுல் பொருள்களை பேரம்பேசுவதிலும் கெட்டிக்காரர் என்று. முடிந்தவரை பொருள்களை மலிவுவிலைக்கு பேரம்பேசிக்கொண்டிருந்தார். நான் ஒரு வெள்ளி மோதிரம் வாங்குவதற்கு விருப்பம் கொண்டேன். கடைக்காரர் சாகுலைவிட கெட்டிக்காரர், ஒரு பைசாவையும் அவரிடம் குறைக்க முடியவில்லை. பொருளை வாங்காமல் கடையைவிட்டு வெளியேறினோம். சாகுல் சொன்னார், அவர் அழைப்பார் என்று. கல் நெஞ்சம் கொண்ட அந்த வியாபாரி அழைக்கவே இல்லை. ஒரு சுற்று முடிந்த பிறகு, மீண்டும் வரலாம் என்று சாகுல் ஆலோசனை சொன்னார். அதன்படியே ஒரு சுற்று அல்ல இரண்டு சுற்று வந்தும் வியாபாரி விலையை குறைக்கவில்லை. பின் அவர் சொன்ன விலைக்கே மோதிரத்தை வாங்கினேன்.

எனக்கு திருப்தியாகத்தான் இருந்தாலும் சிறுவர்களைப்போல அந்த வியாபாரியிடம் நடந்துக்கொண்டதை பேசி பேசி நானும் சாகுலும் சிரித்துக்கொண்டோம். பள்ளி நாட்களை நினைவுப்படுத்தியது அந்த சம்பவம்.  சிப்ஸ் விற்கும் ஒரு பெரியவர் பார்வையை ஈர்த்தார். சிப்ஸ்களும் சுத்தமாகவும் புதிதாகவும் இருந்தன. அவர்கள் எடை நிறுத்த பயன்படுத்தப்பட்ட நிறுவைதான் அதற்குக் காரணம். அப்படியான நிறுவையை நான் மலேசியாவில் பாத்ததில்லை. ஆனால், வாங்கினால் வாங்குங்கள் இல்லை என்றால் போங்கள் என்பதைப் போன்ற தோரணையிதான் அவரின் வியாபாரம் நடந்தது. எத்தனை அனுபவம் பெற்றிருப்பார். இந்தக் கரார் வியாபாரத்திற்கு ஏதேனும் காரணம் இருக்கத்தானே செய்யும். எல்லாம் அனுபவமே என நினைத்துக்கொண்டு சொன்ன விலைக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ்  வாங்கிக்கொண்டு  கிளம்பினோம். சாகுல் இன்னொரு டீ என்றேன். சிரித்தார். வாங்கியும் கொடுத்தார். என்னை அறையில் விட்டுவிட்டு சாகுல் கிளம்பினார். 


மறுநாள் காலையில் ஊட்டியில் உள்ள ஒரு பூங்காவை ஒட்டி இருக்கும் தோதவர்  (தோடர்) பழங்குடிகளின் மத்து (வீடு)  இருக்கும் இடத்திற்கு செல்வதாக சாகுல் கூறியிருந்தார். முன்னதாக எது என் தேடலுக்கு தேவையோ அதை மட்டுமே எனக்கு காட்டுமாறு நான் சாகுலிடம் கூறியிருந்தேன். மேலும், இயற்கை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மட்டும் என்னை அழைத்துச்செல்லுமாறும், மனிதர்களால் உருவாக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படும் கேளிக்கை விஷயங்கள் வேண்டாம் என்றும் கூறியிருந்தேன். அதற்கு ஏற்றமாதிரி சாகுல் அழகாக திட்டமிட்டிருந்தார்.   

முன் வாசலை திறந்தால் வனத்தையும், பால்கனியை திறந்தால் மலைகள் கடைத்தெருக்கள் ஊசி மரங்கள் என  எனது அறை  இருந்தது. தனித்த இரவு, கொஞ்சம் நேரம் பால்கனியில் நின்று குளிரை உள்வாங்கினேன். கைப்பேசி இயங்காததால் யாரிடமும் பேச முடியவில்லை. முகநூல் செல்லவும் வழியில்லை. அன்றைய நாளை அசைப்போட்டேன். ஜெயராம் அண்ணாவும் அண்ணியும், நேசமணி அம்மாவும், இன்ப அதிர்ச்சிகொடுத்த விஜயா அம்மாவும் நினைவுக்கு வந்தார்கள். நீ எங்கிருந்தாலும் அங்கிருக்கும் இடத்தை எங்களுக்கு வாட்ஸ் அப் செய் என்ற எனது தோழிகள் சூரியா-மணிமொழி, எனது சந்துரு, என் செல்ல தங்கைகள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக என் தனிமை ஆக்ரமித்துக்கொண்டிருந்தனர். பெருமூச்சு எழுந்தது. அதிலிருந்து குளிர் காற்று வெளியாவது தெரிந்தது. மணி என்ன என்பதும் தெரியவில்லை. கண்களுக்கு நித்திரையும் வரவில்லை.


தோதவர் பழங்குடிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் இணைய வசதியில்லை. கொஞ்ச நேரம் கொண்டு வந்திருந்த புத்தகத்தை திறந்து வாசிக்கத் தொடங்கினேன். எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை. கனவுகள் இல்லாத உறக்கத்திலிருந்து மறுநாள் விழித்தேன். ஊட்டியில் எனது காலை விடிந்தது சினிமாவில் வரும் காட்சிபோல இருந்தது. 

(தொடரும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக