வியாழன், 28 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 6

தொதவ சிறுவர்கள்
வீடு என்பது ஒரு மனிதனுக்கு என்னவாக இருக்கிறது என்ற கேள்வியும், தேவை, வசதி என்பது வகுத்துக்கொள்ளும் முறையில் விவசாயிகளும் பணக்காரர்களும் எப்படி வேறுபடுகிறார்கள் என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது.  இதுகுறித்து நான் சாகுலிடம் கேட்டுக்கொண்டே வருகையில் எங்களின் கார் தொதவர்கள் குடில் இருக்கும் பொட்டானிக்கல் கார்டன் கார் நிறுத்துமிடத்தில் நின்றது. 

பொட்டானிக்கல் கார்டனின் நுழைவாயிலில் தெருவோர வியாபாரிகள் பரபரப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சள் மலர்களை கூடையில் அடுக்கி வியாபாரத்திற்கு வைத்திருந்தது பார்க்க அழகாக இருந்தது.  பிடிக்கும் அனைத்தையும் புகைப்படக்கருவியில் பதிவு செய்துக்கொண்டே நடந்தேன்.  தொதவர்களின் குடிலை நோக்கி போவதற்கு அங்கிருக்கும் அதிகாரிகளின் அனுமதியை வாங்க வேண்டுமா என்றொரு கேள்வி சாகுலுக்கும் எனக்கும் இருந்தது. ஒரு வேளை, அதிகாரிகள் நிராகரித்தால், எனவே சென்றுவிடலாம், யாரும் தடுத்தால் அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்கலாம் என ஏக மனதாக முடிவெடுத்து நானும் சாகுலும் முன்னேறிக்கொண்டிருந்தோம். 


பூங்காவின் நுழைவாயில்
தொதவர்கள் என்பவர் யார்? 

பூர்வக்குடிகளின் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், மலேசியாவைச் சார்ந்த பூர்வக்குடிகளை நான் சந்தித்து பேசியது இல்லை. இந்தியாவில் தமிழ் சமூகத்தை ஆய்வு செய்ய நேர்ந்தால் அது தமிழக பழங்குடியிலிருந்துதான் தொடங்க நேரிடும் என்ற சொல்லாடல் மிகைப்படுத்தியது இல்லை. பழங்குடிகளின் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் ஊர்களையும் ஆங்கில உச்சரிப்பு முறையில் பதிவு செய்ததால் எண்ணற்ற பதிவுகள் தவறாக பதிவாகின. இந்தியாவின் ஊர், சாதி, மலை, கடல் எனப் பலவற்றின் பெயர்கள் ஆங்கிலமயமாக்கப் பட்டதின் விளைவாகத் தவறான உச்சரிப்புடன் அரசு பதிவுகளில் இடம்பெற்றன. தொதவர்கள் என்ற பழங்குடியை தோடர்கள்
என்று தற்போது பரவலாக அழைப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகவும். ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் எந்தத்  தொதவரும் தம்மை ‘தோடா’ எனக்கூறுவதில்லை. ‘ஒல்’ (மக்கள்) என்றே தம்மைக் கூறிக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் ‘கொடா’ என்னும் வழக்கு ஏற்பட்டு அச்சொல்லின் திரிபே ‘தோடா’வாக மாறியது என தமிழகப் பழங்குடிகள் எனும் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொதவர்களின் அண்டைச் சமூகத்தவர்களாக வாழும் படுகர்கள் அவர்களைத் ‘தொடவா’ என்றும், கோத்தர், தொன் என்றும் அழைக்கிறார்கள். மற்ற தமிழர்கள் அவர்களை துதவர் என்றழைக்கிறார்கள். உண்மையில் தொதவர் எனும் சொல் கன்னடச் சொல்லிலிருந்து உருவானது என்ற கருத்தும் உண்டு.
தமிழக பழங்குடிகளைப் பற்றிய ஆய்வில் நீலகிரிப் பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தொதவர்கள் என்கிற தோடர்கள் இந்த
வட்டாரத்தில் அதிகம் வசிப்பதோடு அவர்களின் திருவிழாவும் நீலகிரியில்தான் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தொதவர்களின் அடையாளம் என எருமைகள் இருக்கின்றன. அதனாலேயே ‘எருமையின் குழந்தைகள்’ என தொதவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மொழி தோடா, துடா, துத எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுகிறது. இம்மொழியின் ஆதிமூலம் குறித்துப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் அமெரிக்க மொழியியல் அறிஞர் எமனோ இம்மொழியை விரிவாக ஆய்வு செய்து இது ஒரு திராவிட மொழியென்று தெரிவித்தார். மேலும், தோட, கோத்த மொழிகள் நீலகிரிக்கே உரிய தொல் மொழிகள் எனவும் அவர் ஆய்வில் கண்டு பிடித்தார் எனவும் பதிவுகள் சாட்சி கூறுகின்றன.

ஆதிக்க சாதியினராக இருக்கும் பிராமணர்கள் தொதர் எனும் பழங்குடியினருக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்திருக்கிறது கேட்பதற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நெருப்புக்கு அவர்கள் அளித்த மரியாதையையும் பிராமணர்களை அவர்கள் வெறுத்ததையும் பக்தவத்சல பாரதி எழுதியிருப்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன்.

தீப்பெட்டி நெருப்பை தொதவர்கள் சமையல் அறைக்கும், சுறுட்டு புகைக்கவும் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் சார்ந்த சடங்குகளில் தீப்பெட்டியை நுழைய விடவில்லை. பலநூறு ஆண்டு காலமாகப் புனிதச் சடங்குகளிலும் பால்மாடத்திலும் தீயைக் கடைந்து உருவாக்கும் நெருப்பே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தீயைக் கடைந்தெடுக்கும் போது யாரும் பார்க்காதவாறு மறைவாக அமர்ந்து கடைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. தொதவர்களின் பால்மாடத்திற்குள் பிராமணர்களை அனுமதிப்பதில்லை என்றும் அவ்விடத்தில் பிராமணர் ஒருவரால் தொடப்பட்ட பொருள்களை தொதவர்கள் தூக்கி எறிந்தனர் என்றும் ஹார்க்கென்ஸ் என்ற ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். தொதவர் இனத்தில் ஒரு சிறுவனைப் பால்கறக்கத் தகுதியுடையவனாக ஆக்குவதற்கு ‘தெககெராட்’ என்ற  சடங்கு செய்யப்படுகிறது.

ஊட்டியில் செயற்கை பூங்காவைத்தாண்டி உள்பகுதியில் இருந்த தொதவர் சிலர் வசிக்கும் பகுதியை நானும் சாகுலும் சென்றோம். எங்களைத்தவிர வேறு யாரும் அதை காண்பதற்கு ஆர்வம் கொண்டதாகத் தெரியவில்லை.  அங்கு அப்படியான பழங்குடியினர் வசிக்கிறார்களா? என்ற விவரம் பலருக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். முன்னதாக பூங்காவைப் பற்றிச் சொல்ல வேண்டும். அந்தக் குழுமையான சூழலுக்கு ஏற்றச் செடிகளை மிக நேர்த்தியாக பயிரிட்டு பராமரித்து இருக்கிறார்கள்.

குடும்பமாகவும், பணியிடத்து நண்பர்கள் குழுவும், மாணவர்கள் குழுவும் மிக அதிகமாக அங்கு காண முடிந்தது. போட்டி விளையாட்டுகளை வைத்து அவர்களில் சிலர் விளையாடிக்கொண்டிருந்தது, அதை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் உற்சாகத்தை அளித்தது.


செயற்கை பூங்காவில் எனக்கு ரசிக்க எதுவும் தோணவில்லை. தொதவர்களை தெரிந்துகொள்ளவே ஆர்வமாக இருந்தது. முன் இரவிலிருந்து அந்த இனத்தைப்பற்றிய சிந்தனை என்னுள் பல கற்பனைகளை ஏற்படுத்தியிருந்தது. நானும் சாகுலும் பூங்காவைத்தாண்டி ஊசி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த மலையை அடைந்தோம். கொஞ்சம் களைப்பாக இருந்தது. ஊட்டியின் குளுமையைத் தாண்டி சூரியன் தன் ஒளிக்கதிரை பரப்பிக்கொண்டிருந்தது. ஊசி மரத்தில் பாய்ந்த சூரியக்கதிரின் மிச்ச ஒளி மண்ணில் விழுவதை பார்க்க அத்தனை அழகாக இருந்தது. இனி அந்தக் காட்சியை என் ஜென்மத்தில் மீண்டும் காண்பேனோ இல்லையோ?

"சாகுல் இவ்விடத்தில் கொஞ்சம் உட்கார வேண்டும், மேலும், கொஞ்சம் தனிமை வேண்டும்” என்றேன்.

இங்கிதம் தெரிந்தவர் சாகுல். சின்னதொரு புன்னைகையோடு எனக்கான இடைவெளியை கொடுத்தார். அமர்ந்தேன்; அந்த மண்ணில் கொஞ்சம் தலைசாய்க்கவும் செய்தேன். என்ன ஓர் ஏகாந்தம்? இந்த நூற்றாண்டின் முதல் அதிர்ஷ்டசாலி என்ற பட்டியலை தயாரித்தால் அதில் எனது பெயர்தான் முதல் இடத்தை பெறும். அது எத்தனை பெரிய சுகம் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தேன். நானும் சாகுலும் தொதவரின் இருப்பிடத்தை அடைந்தோம். ஓர் அகன்ற நிலப்பரப்பில் சில முரட்டு மாடுகள் மேய்ச்சலில் இருந்தன. மூன்று சிறுவர்கள் குடிசை மாதிரி இருந்த குடிலுக்கு ஓரமாக உட்கார்ந்திருந்தனர். அந்த இடம் மிக அழகாக இருந்தது. சாகுல் சொன்னார் " இதுதான்  தொதவர்களின் மத்து (வீடு). அருகே சென்று காணலாம் என்று நெருங்கினோம். மாடு மேய்ச்சலில் இருந்த சிறுவர்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல்...

"ஏய் நில்லுங்கள்! இங்கே எல்லாம் நீங்கள் வரக்கூடாது. அதுவும் பெண் வரவேக் கூடாது. எங்கள் இனப்பெண்கள் அந்த எல்லையை கடக்க மாட்டார்கள். நீ அதை தாண்டி வந்தது மட்டுமல்லாமல் குடிலை நெருங்க  போகிறாயா?" என்று சத்தம் போட்டனர். கையில் நீளமான குச்சி வேறு.

"ஏன் போகக்கூடாது"? என்றேன்.
"அந்நிய பெண்களை இங்கே அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.
"அந்தக் குடில்  ஒரு வீடுதானே; ஏன் போகக்கூடாது" என்றேன்.
"அது வீடு இல்லை கோயில்" என்றனர்.

நான் கோயிலா என்ற ஆச்சரியத்தில் நின்றேன். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஓர் அடிக்கூட அந்தச் சிறுவர்கள் எடுத்து வைக்கவிடவில்லை. "பெரியவர்கள் யாரையும் சந்திக்க முடியுமா?" என்று கேட்டேன்.

கோயிலுக்கு முன்
மறுநாள் அவர்களுக்கு பெரிய விழா என்பதால், தற்போது எல்லாரும் வேலையில் இருக்காங்க என்று சிறுவர்கள் பதில் கொடுத்தனர். தொதவர்களின் மத்து இதுவரை நான் காணாத ஒன்று. சினிமாவிலும்கூட அதைப்பார்த்ததில்லை. தொதவர்களின் மத்து அரைவட்ட  வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அது அவர்களிடம் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிவகை என கூறப்படுகிறது. கோயில் என்று அவர்கள் சொன்ன அந்தக் குடிலின் நுழைவாயில் மிகக் குறுகியது. கூனிக் குறுகி தவழ்ந்து சென்றாலும் உள்ளே நுழைய முடியுமா என்று தெரியவில்லை. ஜன்னல்களோ அல்லது காற்று உள்நுழையும் அல்லது வெளியேறுவதற்கு வேறு ஒரு துவாரமோ இல்லை. வைக்கோல் போர்த்திய பாணி. தூண்களாக மூங்கில்கள் குடிலை தாங்கி பிடித்திருந்தன. நுழைவாயில் இடத்தில் பாம்பு பின்னி இருப்பதைப் போன்ற சுவர் படம். அமர்வதற்கு கோயிலைச் சுற்றி பெரிய கற்களைக் கொண்டே அமைத்திருக்கிறார்கள். உள்ளே தெய்வமாக வழிபடும் அந்த உருவத்தை (பிம்பத்தை) தெரிந்துக்கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால், அதைப்பற்றி அந்தக் கோபக்கார சிறுவர்களிடம் கேட்க அச்சமாக இருந்தது.

நேரம் எங்களுக்கு சாதகமாக இல்லாமல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.  இரவு வருவதற்குள் முதுமலை வனத்தை அடைய வேண்டும் இல்லையா?  கிளம்பலாம் என முடிவெடுக்கையில் அங்கு ஒரு ஆட்டோ வந்தது. "வருகிறீர்களா? கீழே இறக்கி விடுகிறேன்" என்றார் ஆட்டோ ஓட்டுநர்.  

"நீங்கள் ‘தோடா’ இனத்தை சேர்ந்தவரா"? என்று சாகுல் கேட்க, ஆட்டோக்காரர் ஆமாம் என்று  சொல்ல, எனக்கு வாயெல்லாம் பல்லாய் போனது. ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம்.

"உங்களின் திருவிழா எங்கு நடக்கிறது?" என பேச்சை தொடங்கினோம். “நீலகிரியில் கொண்டாடுவோம். கொண்டாட்டம் என்றால் ஒன்றுகூடுதல்தான். அங்கு ஆண்கள்-பெண்கள் என பாரம்பரிய நடனங்களை குழுவாக ஆடுவர். எங்கள் இனத்தின் பூர்வீகம் குறித்த ரகசியத்தை யாரும் அறிய மாட்டார்கள். அது எங்களுக்கே தெரியாத ரகசியம்" என அவர் கூறினார்.
எனக்கு அவர்களின் திருமண முறைகுறித்து தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. கிடைத்திருக்கும் சொற்ப நேரத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் அதை குறித்து கேட்டேன். இது அவர் கொடுத்த விவரம்..

“எங்கள் சமூகத்தில் ஆண்-பெண் காதல் வயப்பட்டு விருப்பம் தெரிவித்தால் அவர்கள் இருவரையும் தனியாக அனுப்பி வைப்போம். 6 மாதங்கள் ஒன்றாக தங்கி அந்தப் பெண் கர்ப்பம் தரிக்க வேண்டும். அவள் கர்ப்பம் தரித்தால் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பார்கள். இல்லை என்றால் அந்தப் பெண்ணை அவள் வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுவார்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு திருமணச் சடங்குகள் நடக்கும். மாப்பிள்ளை வீட்டார் புடவை, பூ என பெண்ணுக்கு சீர் கொண்டுச் சென்று 250 ரூபாயை பெண் வீட்டில் கொடுத்து அவளை அழைத்துவந்து விடுவார்கள். இதுதான் சடங்கு."

எனக்கு தூக்கிவாரிபோட்டது. "அப்படி என்றால் அந்தப் பெண்ணை 250 ரூபாய்க்கு விலைக்கு வாங்குகிறீர்களா?" என்றேன். எந்தக்குற்ற உணர்வும் இல்லாமல் ஆமாம் என்றார். நானும் சாகுலும் மாறி மாறி முகத்தைப் பார்த்துக்கொண்டோம். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. நீண்ட சிந்தனையில் மூழ்கிக்கொண்டிருந்தேன். அதற்குள் பூங்காவின் முகப்பு வந்துவிட்டதால் என் சிந்தனைக் கயிற்றை அறுத்துக்கொண்டேன்
.
தொதவ பெண் ஒருவர் அவர்களின் மத்துக்கு முன் விற்பனை செய்துக்கொண்டிருந்த கைவினைப்பொருள்களில் ஏதாவது ஒன்றை வாங்க ஆசையாக இருந்தது. வாசனைத் திரவியங்கள், சவர்க்காரம், தைலம், கைப்பை, அவர்கள் அணியும் பாரம்பரிய பால்நிற மேற்துண்டு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு இருந்தன. எனக்கு கைப்பையும் அவர்களின் மேற்துண்டும் பிடித்திருந்தது. விலை கொஞ்சம் அதிகமாக இருந்ததால் நான் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.

என் இந்தியப் பயணத்தின் முக்கியமான பதிவாக தொதவர்களைப் பற்றிய அறிமுகத்தைத்தான் சொல்வேன். புதிய விஷயம், அதுவும் பழங்குடிகள் சம்பந்தப்பட்ட ஒரு அறிமுகம். இந்த பதிவை எழுதும்போது அதை அழகாக செய்ய வேண்டும் என்றும் அவர்களைப்பற்றி இன்னும் சில விஷயங்களை தெரிந்துகொண்டு இந்தப் பதிவை எழுத வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கு தோன்றியது.
அமர்வதற்கான இடம்

தொதவர்களைப் பற்றி பக்தவத்சல பாரதி எழுதிய ‘தமிழக பழங்குடிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய குறிப்புக்கள் தொதவர்களைப் பற்றிய ஒரு தெளிவான அறிமுகத்தை எனக்கு கொடுத்தது. தொதவர்களைப் பற்றி நான் படித்து தெரிந்துக்கொண்ட சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்கொள்வது இந்த பதிவுக்கு மேலும் சுவாரஷ்யத்தைக் கொடுக்கும் என தோன்றுகிறது.

சில சமூகத்தினர் போன்று தொதவர்களின் ஆயர் சமூகத்திலும் பெண் சிசுவை பொருளாதார சுமை எனக்கருதி பிறந்தவுடன் கொன்றுவிடும் வழங்கம் இருந்துள்ளது. நீலகிரியில் தொதவர்களிடம் ‘கெது’ என்ற சடங்குகளில் எருமைகளைக் கொல்வதும் புனிதமாக இருந்துள்ளது. ‘கெது’ சடங்குகளில் பலியிடும் எருமைகளை அடித்தே கொன்றனர். முன் பழங்காலத்தில் தொதவர்கள் மேற்கொண்ட பெண் சிசு கொலையில், சாணக் குவியலுக்கு அருகே நின்றுக்கொண்டிருக்கும் எருமைகளில் கால்களுக்கு நடுவில் சாணத்தின் மீது பெண் சிசுக்களை எறிந்து விடுகிறார்கள். ( இதனை இன்றுள்ள தொதவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை) தாங்கள் தெய்வமாக மதிக்கும் எருமைகளிடம் பெண் சிசுக்களை எறிந்து விடுவதின் மூலம் சிசுக்கொலை எனும் குற்ற உணர்விலிருந்து மீண்டு விடுவதாக எண்ணினார்கள்.
மானிடவியல் நோக்கில் பார்க்கும் போது பெண் குழந்தைகளின் குறைவான தேவையை உணர்த்துவதாகவே பெண் குழந்தைக் கொலை (infanticide) காணப்படுகிறது.

இதன் தாக்கமாக இவர்களிடம் பல கணவர்முறை (Polyandry) தோன்றியது. ஆங்கிலேயர்கள் வரும்வரை நீலகிரித் தோதவர்களிடம்கூட பெண் சிசுக்கொலை இருந்து வந்துள்ளது. பெண் குழந்தைகளை கொன்றுவிடும் சமுக அமைப்பில் பெண் பற்றாக்குறை இருப்பது இயல்பு. ஆதலின் ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் முறை ஆயர் சமூகத்தில் ஏற்பட்டது. பல ஆண்களும் சகோதரர்களாக இருந்ததால் இவர்களின் திருமணம் ‘பல சகோதர்கள் மணமாக’ அமைந்தது.

உலகிலேயே 5,500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டு வாழும் ஆயர்குடியினர் தொதவர்கள் மட்டுமே. ‘சைவ ஆயர்கள்’ எனச் சிறப்பாகக் கூறப்படும் இவர்களின் பாரம்பரிய அறிவும் நுணுக்கமும் இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள வாழ்க்கைத் தகவமைப்புகளும் உலக அளவில் எண்ணற்ற மானிடவியலர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊட்டியில் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இப்படி ஒரு பழங்குடியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமையும் என்று நம்பவே இல்லை. இன்னும் முதுமலையில் சந்திக்கப்போகும் பூர்வக்குடிகள் பற்றிய சிந்தனையும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. சாகுலின் கார் முதுமலை வனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.  

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆம். ஆராய்ந்தால் உலகம் முழுதும் பல பூர்வக்குடிகளிடத்தில் இதுமாதிரியான நடைமுறை ஒத்துப்போகிறது.

      நீக்கு