புதன், 13 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை !

பகுதி 1

பயணங்கள் எப்போதும் என்னைப் புதுப்பித்தே கொண்டிருக்கின்றன. மலர்ந்து உதிர்ந்து மீண்டும் மலரும் ஒரு மலரைப்போல, வறண்ட  பூமி  மீண்டும் மழைப் பெய்து குளிர வைப்பதுபோல, ஏழைக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் போல,  மனம் சோர்ந்து தடுமாறும்போது பயணங்கள் என்னை புதுப்பித்துப் புதியதாக்குகின்றன.

என் பேட்டரியைச் சார்ஜ் செய்வது பயணங்கள்தான் என என் நண்பர்களிடம் நான்  எப்பவும் கூறுவது உண்டு. என் வரையில் அது உண்மையும்கூட. நான் பயணங்களை முடித்து வரும் ஒவ்வொரு தடவையும் என்னைக் காண்பவர்கள் புதுசா இருக்கியே என்றுதான் கேட்கிறார்கள். அது பயணத்தின் ரகசியம் என நான் சொல்லும்வரை பலருக்குத் தெரியாது.
இம்முறை 10 நாட்களுக்குத் திட்டமிட்டிருந்த இந்தியப் பயணம் இன்னும் இன்னும் என்னைப் புதியவளாகவும் இளையவளாகவும் மாற்றியிருந்தது. சில இடங்களுக்கு செல்ல நான் மலேசியாவில் இருக்கும்போதே திட்டமிட்டிருந்தேன். குறிப்பாக முதுமலை வனப் பயணத்தை நான் ரொம்பவும் ஆவலாகத் திட்டமிட்டிருந்தேன். அதற்கான அனுமதியை அங்கிருக்கும் வனவிலங்கு அதிகாரிகளிடம் பசுமை அங்காடி நடத்திவரும் நண்பர் சாகுல் பெற்றுதர உதவியிருந்தார்.

அடுத்துத் திருநெல்வெலியில் நடக்கவிருந்த கவிதைக்காட்சி ரூபம் என்ற நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் லஷ்மி மணிவண்ணன் சார் அழைப்பு விடுத்திருந்தார். அதை முன்னிட்டு அந்த நிகழ்சியில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன்.
உண்மையில் ஜனவரியில் நடக்கவிருந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை வெளியீடாக வெளிவரவிருந்த எனது கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவே நான் எனது தமிழ்நாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். திடீர் வெள்ளம் காரணத்தால் சென்னையே நிலைகுலைந்து போகச் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது. ஆனால், ஏர் ஆசியாவில் புக் செய்திருந்த எனது விமான டிக்கெட் ஏப்ரலுக்கு மாற்ற முடியாத காரணத்தினால் திட்டமிட்டபடியே நான் பயணத்திற்கே தயாரானேன்.

டிசம்பர் 21-ஆம் தேதி இரவு 9 மணிக்கு விமானம். அங்கே தரையிரங்கும்போது இந்திய நேரப்படி இரவு 10.30 மணியாகும். பின் 11.30 மணிக்கு நான் கோயம்பத்தூர் செல்வதற்கான பயண ஏற்பாட்டைத் தோழி நேசமணி அம்மா ஏற்பாடு செய்திருந்தார். அவரே என்னைச் சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லவும் அங்குக் காத்துக்கொண்டிருந்தார்.
குறிப்பிட்டபடி 9 மணிக்கு எல்லாம் நான் கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய விமானத்தில் இருந்தேன். ஆனால், புறப்படவிருந்த விமானம் கிட்டதட்ட முக்கால்மணி நேரத்திற்குத் தரையிலேயே வட்டமிட்டபடி இருந்தது. எனக்கு அதற்குமேல் பொறுமையில்லை. உறங்குவதைத் தவிர வேறு உபாயம் இருக்கப்போவதில்லை. கண்களை மூடி திறந்தேன். விமானம் மேலே பறந்துக்கொண்டிருந்தது.

தரையிறங்கியவுடன் நான் கையில் கொண்டு போயிருந்த இரண்டு அலைபேசிகளில் ஒன்று நேசமணி அம்மாவின் அலைபேசிக்குத் தொடர்பை இணைக்கவில்லை. மற்றொரு அலைபேசியில் பணம் குறைவாக இருந்தது. என்ன செய்யலாம் என நினைத்திருந்த நேரத்தில் நேசமணி அம்மாவே என்னை அழைத்தார். நான் காத்திருக்கிறேன் வாங்க என்றார். நான் முதன் முதலில் அவரைப் பார்க்கப்போகிறேன் என்ற பிரஞ்ஞையே இல்லாமல் பலநாள் பழகியவள் போல அவர் என்னை வரவேற்க காத்துக்கொண்டிருந்தார். நான் அவரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் யோகி என்ற குரல் வாஞ்சையோடு அழைத்தது. திரும்பிப் பார்த்தக் கணம் அவர் மலர்ந்தப் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கையசைத்தார்.
நான் அவரின் கைக்குள் என் கையைச் சேர்க்கும் முன்பே அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது அதுவரை அறிந்திருக்கவில்லை. என் அன்புக்குரிய விஜயலட்சுமி அம்மா எனக்குப் பிடித்த காப்பியைக் கையில் ஏந்தியவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இப்படி ஒரு இனிப்பான வரவேற்பும் காத்திருப்பும் யோகிக்குத் தவிர வேறு யாருக்கும் நிகழ்ந்திருக்காது.

அம்மாவை பார்த்த மாத்திரத்தில் அவரைக் கட்டிக்கொண்டேன். எனக்காக அம்மா வந்திருக்கிறார் என்பதே எனக்குப் பெரிய ஆனந்தம். உடன் ஹேமாவும் இருந்தார். ஹேமாவை நான் அப்போதுதான் முதன்முதலில் பார்த்தேன். அழகான கம்பீரம் அவரிடம் இருந்தது. கோவைக்குச் செல்வதற்கான பேருந்து நேரம் ஆகிவிட்டபடியால் நேசமணி அம்மா தொடர்ந்து பேருந்து நடத்துனரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சந்தோஷ மூட்லயே இருந்தேன். எந்த டென்ஷனையும் யாரும் எனக்குக் கொடுக்கவில்லை. எனது ஒரே டென்ஷன் என் அலைபேசி வேலைச் செய்யவில்லை என்பது மட்டும்தான். நேசமணி அம்மா என்னை அவரது காரில் ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் காரைவிட்டு இறங்கிய மறுகணம் பேருந்து நடத்துனர் எந்த நிபந்தனையுமின்றி என்னைப் பேருந்தில் அள்ளிபோட்டுக் கொண்டு கிளப்பினார்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக