புதன், 20 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 3

நானும் சாகுலும் முதுமலை வனபயணத்தைத் தொடங்கினோம். இடையில் ஒரு நாள் ஊட்டியைச் சந்தித்துவிட்டு, மறுநாள் காலையில் முதுமலை வன அதிகாரியையும் சந்தித்துவிட்டு, வனத்தையும் அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளையும் சந்திக்கலாம் எனத் திட்டம். ஊட்டியை நோக்கிய பயணமும் அதைக்கடந்த தூரமும் கொஞ்சமும் சளிப்புத் தட்டாமல், "வா என்றும் என்னைக் காண் என்றும் அழைத்துக்கொண்டிருந்தாள்  வனதேவதை.

சாகுலின் கார், குதிரை வேகத்தில் ஊட்டியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. இடையில் வானம் காட்டும் வர்ண ஜாலங்களும், மக்களின் முகங்களும், சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களும் பல கதைகளை  பேசியவாரே  உடன் பயணிக்கத் தொடங்கின. எல்லாவற்றையும் நான் சாகுலிடம் சின்ன சின்ன கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அனைத்திற்கும் பின்னாலும் ஒளிந்திருக்கும் அரசியல் லேசாக எட்டிப் பார்த்தபடியே இருந்தன. 

பயணத்தின் சில மணி நேரத்திற்கு பிறகு, ஓடிக்கொண்டிருந்த நீரோடை கவனத்தை ஈர்க்க, சாகுல் என்றேன் மறுபேச்சு பேசாதவர் வண்டியை நிறுத்தினார். "இப்படி வழியில் நிறுத்துவது சரியா? வேண்டாம் சாகுல், கிளம்பலாம்" என்றேன்.  "ஒன்றும் சிக்கல் இல்லை; கால் நனைத்து வரலாம் யோகி" என  இறங்கி நடக்கத் தொடங்கினார்.  அழகான நீரோடை. ஆழமில்லாமல்  தண்ணீர் தரையோடு ஓடிக்கொண்டிருந்தது. ஓர் இளம்ஜோடியைத் தவிர யாரும் அங்கு இல்லை. அவர்களின் தனிமைக்கு அதிகம் சோதனை வைக்காமல் நானும் சாகுலும் அங்கிருந்து கிளம்பினோம். அது மாதிரி ஓர் இரு இடங்கள் அல்ல. மனதுக்கு தொந்தரவு செய்யும் எந்த இடத்திலும் வண்டியை நிறுத்தி கண்ணாற பாருங்கள் என சாகுல்  எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். 

மலைவளைவுகளில் எழுதப்பட்டிருந்தா அறிவிப்பு பலகையில் இருந்த 'கொண்டை ஊசி வளைவு'   என்பது நகைச்சுவையாக இருந்தது. மிக அடர்ந்த காடுகளும், விருட்சங்களும், அதை சூழ்ந்துள்ள பனிமூட்டமும் மனதுக்கு பேரானந்தத்தைக் கொடுத்தன.  தொடர்ந்து கண்டுக்கொண்டே இருந்தாலும் காணக் காண மனது, அதை வேண்டிக்கொண்டே இருந்தது. எனக்கு காப்பி-டீ வேண்டும் என்ற கணத்திலெல்லாம் எந்த சிரமமும் இல்லாமல் சாகுல் வாங்கிக் கொடுத்தார். அத்தனை இயல்பாக எதார்த்தமான ஒரு பயணம் அமையும் என நான் நினைக்கவே இல்லை. 

வெளிநாட்டில் இருக்கிறேன்; அந்நியரோடு பயணம் செய்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஓரிடத்திலும்   ஏற்பட விடவில்லை. அதைவிடவும் நான் என் பயணத்தில் சந்தித்த ஆட்கள் உடையிலும், வாழ்வியலும் மாற்றம் கொடுத்தாலும் பழகுவதற்கு எந்த மாற்றமும் அவர்கள் காட்டவில்லை. ஆனால், முதல் பார்வையிலேயே நான் உள்ளூர் வாசி இல்லை என்பதை எப்படித்தான் ஸ்கேன் செய்து கண்டு பிடிக்கிறார்களோ தெரியவில்லை. 

ஊட்டியை நெருங்க நெருங்க தப்ப வெட்ப நிலை குளிருக்கு மாறிக்கொண்டிருந்தது ரம்மியமான சூழல். மலை உச்சியிலிருந்து வெள்ளை தாவணிபோல நீண்டிருந்த ஒரு பிம்பத்தைக் காட்டி, சாகுல் சொன்னார். "அது ஒரு நீறூற்று.தெரிகிறதா" என்று. நன்றாகத் தெரிந்தது. ஆனால், என் புகைப்படக்கருவியில் படம் எடுப்பதற்கான சூழல் இல்லை. நான் குறிப்பிட்ட அளவு மட்டுமே  zoom செய்து படம் எடுக்கக்கூடிய கெமராவை வைத்திருந்தேன். காரில் செல்லும் அந்த நிமிடத்தில் காணக்கிடைத்த அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து கடப்பதைவிட, கண்ணாரக் கண்டு கடப்பது இன்னும் ஆழமாக மனதில் பதியும் இல்லையா?   எனக்கு அந்த வனத்தைக் கடக்கும் போது ஜெயமோகனின் 'காடு' நினைவுக்கு வந்து வந்து போனதை தவிர்க்க முடியவில்லை. சாகுல் காடு  நாவலை வாசித்திருக்கவில்லை. ஆதலால் அதைப்பற்றி அவரிடம் பேச முடியவில்லை. ஆனால், நான் வாசித்த நாவல்களின் கதா பாத்திரங்களையும், இடத்தையும் ஒத்தமாதிரி ஏதாவது  காட்சிகள் அமையும்போது அதைப்பற்றி நான்  சிலாகிக்கும் போதெல்லாம் சாகுல், ஒரு நாவலை உள்வாங்கும் அமைதியில் அதை கேட்டுக்கொண்டிருந்தார்.  இலக்கியம் பேசுவதும்,  அதை கேட்பதும் எனக்கு பிடித்தமான ஒன்று. சாகுலுக்கு அது அலுப்பு தட்டுமோ என சுதாகரித்து "சாகுல் ரொம்ப போர் அடிக்கிறேனா? வேறு பேசலாம்." என்றேன். 

"இல்லை யோகி. ஒரு காலத்தில் அதிகம் வாசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அது குறைந்துவிட்டது. நீங்கள் பேசுவது ஆர்வமாக இருக்கிறது என்றார்.  என்னுடைய  எல்லா ரசனைகளோடும் ஒத்து போகிற ஒரு நண்பர் கிடைத்தது இந்தப் பயணத்தில் நான் செய்த புண்ணியம் என்று நினைத்துக்கொண்டேன். இயற்கைக்கும் நன்றியை கூறிக்கொண்டேன்.  

கூடலூர் சாலை சந்திப்பு,  பொட்டானிக்கல் கார்டன் பக்கமாக இருந்த முதுமலை வனத்துறை அதிகாரிகளை சந்திக்கச் சாகுல் அழைத்துச் சென்றார். புலிகள் காப்பகம் என்று வரவேற்றது  அறிவிப்பு பலகை.  வனத்துறை அதிகாரி சந்திரன் சார் அங்கு இருந்தார். முதுமலை பயணத்தைக் குறித்து  முன்பே அவருக்கு தெரியப்படுத்தியிருந்ததினால் பெரிதாக நாங்கள் அவரோடு பேசுவதற்கு சிரமம் கொள்ளவில்லை. இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் அந்த வனத்தில் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். நான் போன நேரம்  படுகர் பழங்குடி இனத்தவரின் திருவிழா காலம் என்பதால், விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும்  காட்டின் உள்பகுதியில் வாழும் அவர்களை சந்திப்பது முடியாது என்றும் அவர் கூறினார். 
அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அனைவரும் படுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நானும் சாகுலும் எவ்வளவோ முயற்ச்சித்தும் சந்திரன் சார் அதில் சிக்கல் வரும் என்றார். பின் வேறு ஏதேனும் உதவிகள் வேண்டும் என்றால் செய்ய முயற்சிக்கிறேன் என்றார். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதை பெரிதாக சாகுலிடம் நான் காட்டிக்கொள்ளவில்லை. அலுவலகம் விட்டு வெளியில் வரும்போது, "நீங்களாக போய் பார்த்தால் அது வேறு கதை, புரிந்துக்கொள்ளுங்கள்" என்று எங்கோ இருந்து ஒரு வசனம் கேட்டது. என் முகம் மலர்ந்ததை பார்க்கனுமே. அது எனக்கே சொன்ன வசனமாக எடுத்துக்கொண்டேன். 

அன்று இரவு நான் 'ஹோட்டல் தமிழ் நாடு' தங்கும் விடுதியில் தங்குவதற்கு சாகுல் ஏற்பாடு செய்திருந்தார். என்னை அங்கு விடும் முன்பு, இரவு உணவு சாப்பிட வேணுமா என்று கேட்டார் சாகுல். எனக்கு டீ-காப்பி போதும் என்றேன். வேறு என்ன வேண்டும் என்றார். ஊட்டியின் இரவைக் காண வேண்டும் என்றேன். நீங்கள் செய்த உதவி இதுவரை போதும் சாகுல். நாளை பார்க்கலாம். நான் தனிமையில் கொஞ்சம் இருக்க வேண்டும் என்றேன். சாகுல், யோசிக்கத் தொடங்கினார். 

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக