செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 12


குறும்பர்கள் என்பவர்கள் யார்?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிராமிய சாதிய சமூகமாக வாழ்ந்த பழங்குடிகளில்  தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்று நெருக்கடிகளைச் சமாளிக்க மலைப் பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாக தங்கிவிட்டவர்களில் குறும்பர்களும் அடங்குவர். இன்றும் இவர்கள் பூர்வீகத்தில் வழிபட்ட வைணவ, சைவ கடவுள்களை விடாமல் வழிபட்டு வருகின்றனர்.
குறும்பர்கள் 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னகம் முழுவதும் ஆட்சி செய்த பல்லவர்கள் என்றும், இவர்கள் 7-ஆம் நூற்றாண்டில் கொங்கு, சோழ, சாளுக்கிய மன்னர்களால் தோற்கடிக்கப்பட்ட போது ஒரு பிரிவினர் காடுகளிலும் மலைகளிலும் வாழத் தலைப்பட்டனர் என்றும் குறும்பர்களின் வரலாறு அறியப்படுகிறது. 1891-ஆம் ஆண்டு  குடிமதிப்பு அறிக்கையில் குறும்பர் அல்லது குறுபர் எனக்கூடியவர்கள் பல்லவர்களின் இன்றைய  பேராளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகையில் வரையறுக்கப்பட்ட 6 தொன்மை பழங்குடிகளில் குறும்பர்களும் அடங்குவர்
குறும்பர்களின் (குறுமர் என்பதே சரியான வழக்கு) மொழி பல்வேறு பிரிவினராக வேறுபட்டுக் காணப்படுகின்றனர். பெட்டக் குறும்பர்களின் பேச்சு வழக்கானது கன்னடத்தின் கிளை மொழியாக கருதப்பட்டாலும் அது ஒரு தனித்த தெந்திராவிட மொழி என எமனோ, சுவலப்பில் கூறுகின்றனர். தேன் குறும்பர் (ஜேனுக் குறும்பர்) பேசும் மொழியானது கன்னடத்தின் கிளை மொழியாகவே கருதப்படுகிறது. இவர்கள் வாழும் பகுதி கர்நாடக எல்லையை ஒட்டியுள்ளதால் இவர்கள் கன்னடம், தமிழ், படகு முதலான மொழிகளையும் பேசுகின்றனர். ஆனால், முள்ளுக் குறும்பர்களின் மொழியானது மலையாளத்தின் கிளை மொழியாகக் கருதப்படுகிறது என்கிறார் ராஜசேகரன் நாயர்.
நீலகிரியை அடுத்த கூடலூர் பகுதியானது கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இணையும் பகுதியில் இருப்பதால் இம்மலைத் தொடரில் வசிக்கும் பழங்குடிகள் பன்மொழிப் புலமை கொண்டவர்களாக உள்ளனர். இவையாவும் தொடர்பு மொழியாகக் கையாளப்படுகிறது.
முள்ளுக் குறும்பர் எனும் பெயர் இந்த மக்களுக்கு எஜமானர்களாக விளங்கிய நாயர்கள் கொடுத்ததாகும். முள்ளுக் குறும்பர்கள் தங்களை ‘உள்ளக் குறும்பர்’ என்றே கூறிக்கொள்கிறார்கள். முள்ளுக் குறும்பர் வாழ்வில் மூங்கில் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். இவர்கள் எப்போதும் கையில் கொண்டு செல்லும் அம்பு “முள்ளு” என்றே கூறப்படும். ஆதியில் முள்ளு இல்லாத எந்த குறும்பனையும் பார்க்க முடியாதாம்.
முள்ளாகிய அம்பு கொண்டு வேட்டையாடுதல் இவர்களின் முக்கிய தொழிலாகும். அதனால்தான் முள்ளு என்னும் அம்பைக் கொண்டிருந்தவர்கள் முள்ளுக் குறும்பர் என பெயர் பெற்றார்கள்.
பெட்டக் குறும்பர்கள் பொருத்தவரை திப்பு சுல்தான் காலம் முதல் இன்றுவரை கூடலூரில் உள்ள தெப்பக்காடு பகுதியில் வனத்துறை நடத்தும் யானைகள் முகாமில் வேலை செய்துவருகின்றனர். யானைகளை பிடிப்பதிலும், பழக்குவதிலும் பராமரிப்பதிலும் பெட்டக் குறும்பர்கள் வல்லவர்கள். காட்டு யானைகளைக் குழிவெட்டி அதில் விழச் செய்து, பின்னர் அவற்றைப் பழக்குவார்கள். இத்தகைய கும்கி வளர்ப்பு யானைகளைக் கொண்டு பயிர்களை அழிக்கும் காட்டு யானைகளைக் காட்டுக்குள் விரட்டுவார்கள்.
குறும்மர்களும் கோத்தர்களை போன்றே பல்வேறு கைவினைத் தொழிகள் செய்யும் கொல்லர்களாகவும், தச்சர்களாகவும், குயவர்களாகவும், இசைவாணர்களாகவும், கூடை முறம் கட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மண் வனை, சக்கரம் அல்லது பிற கருவிகளோ இல்லாமல் வெறும் கைகளைக் கொண்டே மண்பாண்டங்கள் செய்யும் திறனை பெற்றிருக்கிறார்கள்.
தனக்கு கிடைக்கும் உணவை அல்லது உடைமை அனைத்தையும் பகிர்ந்து உண்ணும் அல்லது பகிர்ந்துக்கொள்ளும் போக்கு இன்னும் இவர்களிடத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது. பணமும் பொருளாதாரமும் ஒருவருக்கு அதிகாரமும் பழங்குடிகளிடம் புறக்கூறுகளாகவே செயற்படுகின்றன. மேலும், குறும்பர் சமூகத்தில் ஒருவர் உடைமைகளைப் பெருக்க முயன்றாலோ, சமூகத்தின் பாரம்பரிய விழுமியத்திலிருந்து மாற முயன்றோலோ மந்திரம் கொண்டு அவர்களை மட்டம் தட்டிவிடும் போக்கு இன்றும் பழங்குடிகளிடம் உள்ளது. இது சமூகத்தைப் பேணும் ஓர் ஆற்றல் வாய்ந்த கருவியாக உள்ளது. குறும்பர் பண்பாட்டில் செயற்படும் இக்கூறு பற்றி ஜார்ஜ் தாரகன் நன்றாக விளக்கியிருக்கிறார்.
 
இறைவழிபாடு என்று பார்த்தால் கல் வழிபாடு ஆவி வழிபாடு இவர்களிடத்தில் மிகுதியாக இருக்கிறது. நீலகிரி குறும்பர்கள் இரண்டு வகையான ஆவிகளை இனங் காண்கின்றனர். பெரிய ஆவி, சிறிய ஆவி இரண்டும் ஒருவரின் இறப்பினால் உணரப்படுகின்றன. பெரிய ஆவியானது கண்ணுக்குத் தெரியும் நிழலைக் கொண்டதாகும். அந்த நபரை அடக்கம் செய்யும் வரை இந்தச் சிறிய ஆவியானது உலவிக் கொண்டிருக்கும். இறந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்படும் கல் நடும் சடங்கின்போதே  சிறிய ஆவியும் பெரிய ஆவியும் ஒன்றாக இணைகிறது என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
இருளர்களும் குறும்பர்களும் இறந்தவர்களுக்குக் கல்மாடங்களை அமைக்கின்றனர். இவர்களிடையே ஒரு இறப்பு நிகழுமாயின் ‘தெவ்வ கொட்ட கல்லு’ எனப்படும் மழமழப்பான கூழாங்கற்கள் ஒன்றினைக் கொண்டு வந்து அந்தப் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பழைய வட்டக் கல்லறை மாடங்களில் வைப்பார்கள். குறும்பர்களில் சிலர் கடந்த காலங்களில் பலகைக் கற்களைச் செக்குத்தாக நிறுத்தி நினைவு மாடங்களை எழுப்பியதாக கூறுகிறார்கள்.
தொழில் என்று வரும்போது முதுமலை வனத்தில் வசிக்கும் குறும்பர்களும் கூலி ஆட்களாக தற்போது தங்களில் தொழிலை செய்கின்றனர். அவர்களுக்கான வசிப்பிடத்தில் அரசாங்க சலுகளைகளை அனுபவித்து தங்களின் இயல்பை விட்டு மாறி வருகின்றனர்.  இருந்தாலும் நீலகிரி மலைத் தொடரில் தேனெடுக்கும் குறும்பர்களை தேனுக் குறும்பர் அல்லது  ஜேனுக்குறும்பர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தஏன் எடுத்தல் முக்கியமான தொழிலாகும். குறும்பர்கள் மாணிப்புல் தர்ப்பைப்புல் போன்ற புல்வகைகளைக் கூரை வேய சேகரிக்கின்றனர். கன்றுகளை காப்பதற்கு தைலப்புல் சேகரிக்கின்றனர்.
முள்ளுக் குறும்பர்கள் காட்டெரிப்பு வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வேட்டை என்பது இன்று திருமணச் சடங்கின்போது மேற்கொள்ளப்படும் ஒரு சடங்கியல் கூறாகச் சுருங்கிவிட்டது.
பழங்குடிகளை பொருத்தவரை அவர்களின் சடங்குகளின் போது பிற பழங்குடிகளின் தயவு அல்லது தேவை இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு தொதவர்கள் தங்கள் சடங்குகளை நடத்தும்போது  இரண்டு பொருள்களைக் குறும்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். இரண்டாம் சாவுச் சடங்கின்போது ‘தட்ரி’ எனப்படும் நீண்ட  கழியினைத் தொதவர்கள்  நடனமாட பயன்படுத்துகிறார்கள். சடங்கு முடித்தபின்  அக்கழியை எரித்து விடுவர். அடுத்ததாக, சாவுச் சடங்கில் எருமையினைப் பலியிடுவதற்கான ‘தெய்கீ’ எனப்படும் கம்பமும் குறும்பர்களிடமிருந்தே பெறுகின்றனர்.
குறும்பர்களைப் பற்றிய மேற்கூறிய விவரங்கள்  பக்தவத்சல பாரதி எழுதிய  தமிழகப் பழங்குடிகள் என்ற புத்தகத்தில் கூறுகிறார்.
குறும்பர்களின் குடியிருப்பிற்கு சென்ற போது அவர்களின் இயல்பு வாழ்கை எத்தனை தூரம் மாறி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. வீடுகளிலும் மாற்றம் தெரிந்தது. சிலர் மூங்கிலான வீடுகளிலும், மண் வீடுகளிலும் வசிக்கின்றனர். முழுக்க நவீன வாழ்கைக்குள் நுழைந்ததற்கான எல்லா மாறுதல்களையும் அங்கு பார்க்க முடிந்தது. குறும்பர் பெண் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிப்பதாக சொன்னார்கள். அரசிடமிருந்து நிறைய உதவிகள் கிடைப்பதாகவும் சொன்னார்கள். ஓட்டு பதிவு இருக்கிறதா என்றேன் ஆம் என்றார்கள். நானும் சாகுலும் அங்கு ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. நவீனத்திற்கு மாறிவிட்ட பழங்குடிகளிடத்தில் எங்களுக்கு கிடைக்கும் விவரங்களில் முழுமை இருக்காது என தெரியும். மேலும், பழங்குடிகள் வாழ்வானது 3 மணி நேரத்தில் பார்க்ககூடிய சினிமா அல்ல. அதற்காக பக்தவத்சல பாரதி எத்தனை ஆண்டுகள் செலவு செய்திருப்பார் என்று அனுமானிக்ககூட  முடியவில்லை.
 ஒரு நாளில் அல்லது இரண்டு நாட்களின் சந்திப்பில் பெரிய விவரங்களை திரட்ட முடியாமல் போனாலும் குறைந்தபட்சம் அவர்களை சந்தித்ததில் மகிழ்சிதான். அடுத்த முறை அவர்களோடு தங்கி ஓர் ஆவணப் படத்தை எடுக்க வேண்டும் என எண்ணம் ஏற்பட்டது எனக்கு.
பார்ப்போம்… குறும்பர்களின் சந்திப்போடு எனது முதுமலை வன பயணத்தை நான் முடித்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பினேன். திண்டுக்கள் பேருந்து நிலையத்திலிருந்து இரவு பேருந்தில் பழங்குடிகளின் நினைவுகள் மாறி மாறி அலைக்கழிக்க சென்னை வந்து சேர்ந்தேன்.  வனத்தின் உள் பகுதிக்கு சென்றிருந்தால் அவர்களின் அசல் வாழ்கையை பார்த்திருக்கலாமே என்ற எண்ணம் இன்னும் இருக்கிறது.  மகுடபதி அண்ணன் எனக்காக பேருந்துநிலையத்தில் காத்திருந்தார்.

(தொடரும்)

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அவள்... 5

இன்று எனது வெற்றிடத்தில்
ஒரு தும்பி வந்தமர்ந்தது
சிவப்பு நிற தும்பி அது
செம்பனை தோட்டத்தின்
வாசம் கமழக் கமழ
அங்குதான்
தீராத ஆசைகளுடன்
சுற்றி திரிந்துகொண்டிருப்பதாக
தும்பி கூறியது
கனவின் கோர பற்களைப்
பற்றி தும்பிக்கு தெரிந்திருக்கவில்லை
அதன் குரல்வளை
நெறிக்க படுவதைப் பற்றியும்
அதன் மெல்லிய இறக்கை
பிடுங்கப்படுவதைப் பற்றியும்
அதன் நிறம் மாறி இருப்பதைப்
பற்றியும்
தும்பி அறியவில்லை...
பாவம்
அது வந்து அமர்ந்த
அந்த வெற்றிடம்
அறுக்கப்பட்ட
ஒரு பெண்ணின்
இதயம் என்றும்
தும்பிக்கு தெரியவில்லை
தும்பிக்கு சொல்லவதற்கு
என்னிடத்தில்
ஒரு செய்தியும் இல்லை
இதை எல்லாம் கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்த
மீனை நோக்கி
முதல் கல்லை
எறிந்தேன் நான்....

குழந்தை வரம் கொடுக்கும் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன்

கோலாலம்பூரிலிருந்து விரைவுச் சாலையை எடுத்தால் ஏறக்குறைய 40 நிமிடங்களில் கோலசிலாங்கூரை அடையலாம். அங்கிருந்து புக்கிட் பெலிம்பிங் செல்லும் சாலையை எடுத்துப் புக்கிட் தாலாங் தோட்டத்தை அடைவதற்கு 20 நிமிடங்கள் எடுக்கும். அந்தச் சாலையை அடையும் போது சாலை ஓரத்தில் தமிழ்ப்பள்ளியும் எதிர்புறம் ஒரு முருகன் வட்டார ஆலயத்தையும் பார்க்கலாம். அங்கேதான் செம்பனை தோட்டத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயம்.


இந்த ஆலயத்திற்கு நான் மூன்றாவது முறையாகச் செல்கிறேன். முதல் முறை செல்லும்போது எனக்கு 16 வயது. அப்போது மண்ணில் இருக்கும்பேச்சியம்மன் சிலை மட்டுமே இருந்தது. அங்காள பரமேஸ்வரி என்று வேறு சிலை இல்லை. இருந்தபோதும் அது பேச்சியம்மன் கோயில் என்று யாரும் அடையாளப்படுத்தவில்லை. அங்காளம்மன் கோயில் என்றுதான் கூறினார்கள்.
முன்னதாக அந்தக் கோயிலைப் பற்றி எனக்குக் கூறப்பட்ட கதை இதுதான். இந்தக் கதையை இன்னும் சிலர் கூறிக்கொண்டிருக்கலாம்.
ஒரு பெண்ணை 4 ஆடவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யத் துரத்திச் சென்றதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்க அவள் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறினார்கள். அதற்கு ஏற்றமாதிரி அந்த உருவம் படுத்த நிலையில்தான் உள்ளது. பின், அவள் காவல் தெய்வமாக மாறிவிட்டதாகவும் அவளை நாடிச் சென்று வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறுவதாகவும் கூறினர்.
நான் இரண்டாவது முறையாக 7 வருடங்களுக்கு முன்புச் சென்றேன். அப்போது என் தோழி நிறைமாத கர்பிணியாக இருந்தார். அவருக்காக உடன் சென்றேன். செம்பனை தோட்டத்தை அடைந்தவுடன் அர்ச்சனைப் பொருள்களை வாங்கச் சொல்ல இரண்டு மூன்று பேர் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் விடுவதாக இல்லை. ஆனால், கோயிலில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் சென்ற அந்த நேரத்தில் கோயில் விஷேசமாகத்தான் இருந்தது. அங்காள அம்மனுக்குத் தனியாகச் சிலை இருந்தது. அந்தச் சிலை அம்மன் திரைப்படத்தில் வருவது போன்று இருந்தது. மேலும், அம்மனுக்கு வைத்திருக்கும் கண் நிஜக்கண்ணைப் போன்றே பயமுறுத்தியது.
தற்போது 21.2.2016-ல் சென்ற போது கோயிலில் கொஞ்சமாக மாற்றம் தெரிந்தது. புதிதாக ஆதிபராசக்திக்கு  ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. பேச்சியம்மன் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்த மாதிரியே இருந்தார். அவளின் காலடியில் இரண்டு ஆடுகளின் தலைகள் இருந்தன. அதன் முன்பு, வலையல்கள், பழங்கள், பால் என அர்ச்சனை பொருள்களை அடுக்கி வைத்திருந்தனர். ஆட்டை பலியிட்ட அருவாள் என நினைக்கிறேன், அது பேச்சியம்மனின் கால்களுக்கு இடையே இருந்தது. பத்தர்கள் பேச்சியம்மன் உருவத்திற்கு மஞ்சளும் குங்குமமும் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஆலயத்தில் புகைப்படம் எடுக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கோயில் 116 ஆண்டு வரலாற்றைப் பேசுகிறது. மண்ணில் சுயம்புவாக உருவான பேச்சியம்மனுக்குக் கோயில் இல்லை. மழையிலும் வெயிலிலும் இருப்பதைக் கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் ஒரு மேற்கூரையைக் கட்டாமல் இல்லை. ஆனால், மறுநாளே கூரைகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும். பலமுறை கோயில் கட்ட எடுத்த முயற்சியில் அடைந்த தோல்வியில் அம்மன் அதை விரும்பவில்லை எனத் தெரியவந்தது. தொடர் மழையிலும் மண், மஞ்சள், குங்குமம் என அலங்கரித்திருக்கும் தன் மேனியை ஒரு பொட்டளவும் சேதாரம் ஆகவிடவில்லை. இதுவே பெரிய அதிசயமாகவும் அம்மனின் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது அதிசயம்தான்.

ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன்  கோயிலின் வரலாறு என்ன?

அங்காளம்மன் பிறந்தது மணியனூர் என்ற கிராமத்தில். இக்கிராமம் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அம்மனை பரம்பரை பரம்பரையாக வணங்கி இன்றுவரை பராமரித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவரான மாரிமுத்து முதலியார் கருப்பாயி தம்பதிகள், மலேசியா வந்தபோது அவர்களின் வீட்டில் வைத்து குலதெய்வமாக பூஜித்ததனர். கருப்பாயி என்பவரின் அதீத பக்தியால் அம்மன் புற்றாக (சுயம்புவாக) மண்ணில் தோன்றியதாக கூறப்படுகிறது. மணியனூரில் உள்ளதைப்போலவே இங்கேயும் படுத்த நிலையில் நீண்ட புற்றாக வளர்ந்து பின், அம்மனின் உருவம் வெளிப்பட்டது. அதைப் பேச்சியம்மனைப் போன்று வடிவமைத்து கருப்பாயி மாரிமுத்து பரம்பரையினர் இன்றுவரை பராமரித்து வருகின்றனர். மேலும், மணியனூரில் உள்ள கோயிலில் செய்யப்படும் பூஜைகளைப்போலவே இங்கேயும் அதே ஐதீகம் மாறாமல் பூஜைகள் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டது. அங்காள பரமேஸ்வரிக்குத் தனியாகப் பூஜையும் பேச்சியம்மனுக்குத் தனியாகப் பூஜையும் செய்கிறார்கள். பேச்சியம்மனுக்குப் பன்றி, ஆடு பலிகொடுக்கிறார்கள். சந்தனம் குங்குமம் எனப் பேச்சியம்மனுக்குத் தூவி தங்கள் வேண்டுகோளை வைக்கின்றனர். பக்கத்தில் முனீஸ்வரன் முகச்சிலை ஒன்றும் உள்ளது.  அங்காள பரமேஸ்வரிக்கு மாமிசம் படைப்பது இல்லை.
பல பேரின் வேண்டுதல்களை இந்த அம்மன் தீர்த்து வைத்திருப்பதாக அங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டி வருபவர்கள்தான் இங்கு அதிகம். அதற்கென தனி பூஜையையே இங்கு நடத்துகிறார்கள். சிறு வழிபாட்டு தெய்வங்களாக வணங்கப்படும் இந்தப் பெண் தெய்வங்களுக்கு பொதுவாகக் குழந்தை பிறந்தால் பிரத்தியேக பூஜைகளை வைப்பதை பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் குசுனியில் (அடுப்பறையில்) அந்தப் பூஜையைச் செய்வார்கள். அதில் அவித்த முட்டைகள் பிரத்தியேகமாகப் படைக்கப்படும்.

அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் கோயிலில் குழந்தை வரம் கேட்டு வருபவர்களின் வேண்டுதலுக்காக அங்குத் தொட்டில் மரம் இருந்தது. மஞ்சள், சிவப்பு வர்ணம் கொண்ட துண்டு துணிகளிலும்,  குட்டி குட்டியான தொட்டில்களிலும் குழந்தை வரங்கள் தங்களின் முறைக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தன. நான் அந்த மரத்தை பார்த்துக்கொண்டே இருக்கும் போது ஒருவர் அதில் தொட்டில் கட்டுவதைப் பார்த்தேன். பொதுவாகப் பெண்கள்தானே இதுபோல விஷயங்களைச் செய்வார்கள்? அவரின் நம்பிக்கை பலிக்கட்டும் எனக் கூறிக்கொண்டேன். அழகாக நிறைந்து இருக்கிறது அந்தத் தொட்டில் மரம்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கிறது. அதன் பிறகு அங்கு யாரையும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை. தெரியாமல் வந்துவிட்ட சிலர் சலங்கை ஒலியை கேட்டு மிரண்டு போனதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் சின்னக் குழந்தையைத் தனிமையில் கண்டதாகவும் அது அம்மன்தான் என நம்புவதாகவும் கூறுகின்றனர். குழந்தைகளைப் பார்த்தால் அம்மன் குழந்தையாக இருப்பாள் என்றும் ஆங்காரமாக எண்ணினால் அவள் அங்காள அம்மன் என்றும் அங்கு எழுதிவைத்திருக்கும் குறிப்பில் நான் வாசித்தேன்.
தொடர்ந்து ஆட்டுக்கறி - கோழிக்கறி வாசம் நாசியைத் துளைக்க வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு திரும்பினோம். சிறு தெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும் வேறுபட்டாலும் இதுபோலச் சில கோயில்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாவதற்கு என்ன காரணம் என மனம் சிந்திக்கத் தொடங்கியது.
 மார்ச் மாதத்தில் வரும் மாசித் திருவிழா இங்குப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குழந்தை இல்லாத தம்பதியர்கள்
கலந்துகொண்டு செய்யும் சிறப்புப் பூஜை நடைபெறும் எனக் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இந்தக் கோயிலுக்கு மீண்டும் தனது குடும்பத்துடன் வர வேண்டும் என என் தோழி கூறிக்கொண்டிருந்தார். நான் குழந்தை இல்லாதவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.



வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 11

கூலி வேலையில் ஈடுபட்டிருந்த காட்டுநாயக்கர்கள்

இறுளர் சமூகத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த போதே,  "நாங்கள் காட்டு நாயக்கர்கள்" எனப் பேச தொடங்கினார் அண்ணன் மான்பா. மான்பா என்ற பெயர் வித்தியாசமே இருக்கே, எம்மாதிரியான பெயர்களை உங்கள் சமூகத்தில் வைக்கிறீர்கள் என்றேன். பார்பி, மான்பி, மாரி, பொம்மி என்ற பாரம்பரியப் பெயர்களைப் பெண்களுக்கும் மயிலிரகை, மான்பா, கோன்பா மாறன் என்ற பெயர்களை ஆண்களுக்கும் வைப்பதாகக் கூறினர். இது அவர்கள் வணங்கும் கடவுளின் பெயர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாகவே, நாயக்கன், நாயக்கர் என்பதைத் தெலுக்கு, வன்னியர் ஆகிய ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்துகின்றனர். ஆனால், காட்டுநாயக்கன் குடும்பத்தினர் தங்களின் பெயருக்கு பின்னாள் நாயக்கன் என்று விகுதி சேர்த்துக் கூறுகிறார்கள். இதனால், கொஞ்சம் குழப்பமும் ஏற்படுகிறது.
காட்டுநாயக்கர் என்பவர்கள் யார்?
ஆதிவாசிகள் வீட்டிற்கு முன் துளசி மாடம்
தமிழகத்தின் தொன்மைப் பழங்குடிகள் எனக் குறிப்பிடும் ஆறு சமூகத்தாரில் காட்டுநாயக்கரும் அடங்குவர். பக்தவத்சல பாரதி பழங்குடிகள் ஆராய்ச்சியின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார். பூம்பூம் மாட்டுக்காரர்களும் பன்றி வளர்க்கும் ஜோகிகளும் நடு இரவில் குடுகுடுப்பை அடித்துக் குறிசொல்லும் குடுகுடுப்பை நாயக்கர்களும் தங்களை ‘காட்டுநாயக்கன்’ என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் வசிப்பிடங்களில் வைத்துள்ள சங்கப் பலகைகளில் இவ்வாறு எழுதி வைத்துள்ளதை சுட்டிக்காட்டும் பக்தவத்சல பாரதி காட்டுநாயக்கன் என்பது ஒரு வசதியான பொது அடையாளமாக விளங்கும் ஆர்வம் பல குடிகளிடம் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது என்கிறார்.
தமிழகத்தில் வாழும் காட்டுநாயக்கன் (காடு=வனம், நாயக்கன்= தலைவன்) பழங்குடியினர் தம்மை ‘நாயக்கன்’ என்றே கூறிக் கொள்கிறார்கள். இவர்களில் நீலகிரி, வயநாடு பகுதிகளில் மிகுதியாகக் காணப்பட்டாலும் தமிழகம் முழுவதும் பரவி காணப்படுகிறார்கள். சமவெளிகளில் வாழும் காட்டுநாயக்கர்களை வேட்டைக்காரன் நாயக்கன், வேட நாயக்கன், சிகாரி நாயக்கன், நாயக்கன் ஆகிய பல பெயர்களில் மற்ற சமூகத்தினரால் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சோலை நாயக்கர் என்று கேரளத்தில் ஒரு பழங்குடி வசிக்கின்றனர். இவர்களுக்கும் காட்டு நாயக்கரும்கூட நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. குறிப்பாக இரு சமூகத்திலும் வேட்டையாடுதலில் நிறைய ஒற்றுமை உண்டு எனக் குறிப்பிடப்படுகிறது.
நாயக்கர் என்பது ஆதிக்கச் சாதியினராக அறியப்படும் வேளையில், பூர்வக்குடிகளில் நாயக்கர்கள் வேறுபடுகிறார்கள். இந்நிலையில் ‘நாயக்கன்’ என்பது ஒரு பொதுப் பெயராகப் பல சமூகத்தாருக்கு இருப்பது தெரிய வருகிறது. இச்சூழலில் மற்ற சமூகத்தாரிடமிருந்து காட்டுநாயக்கன் பழங்குடியைத் தனிமைப்படுத்திக் காட்டுவது அவர்களின் பூர்வ தொழிலாகிய வேட்டையாடி உணவு சேகரிக்கும் தொழிலாகும். அதனால்தான் இவர்களை மற்ற சமூகத்தார் சில இடங்களில் வேடன் என்றும் வேட்டைக்காரன் என்றும் அழைப்பது வழக்கம். திருவண்ணாமலைப் பகுதியில் வேட்டைக்கார நாயக்கன் என்றும் திருச்சி, கரூர் மாவட்டங்களில் வேட நாயக்கன் என்றும் கூறுகிறார்கள்.
நாயக்கன் (காட்டுநாயக்கன்) குறித்து முழு ஆய்வு ஒன்றை இஸ்ரேல் நாட்டு மானிடவியலர் நியூரிட் பேர்ட் டேவிட் என்பவர் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொண்டது மிக முக்கியமான பதிவாகக் கருதப்படுகிறது இங்குக் குறிப்பிடதக்கது.
தமிழகப் பழங்குடிகளை வரையறை செய்வதிலும் சில முன்னெச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிராமிய, சாதியச் சமூகமாக வாழ்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்று நெருக்கடிகளைச் சமாளிக்க மலைப் பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாகத் தங்கிவிட்டனர். முதுவர், மலையாளி, பளியர், மலைப்பண்டாரம், குறும்பர், கணியான், அடியான், குறுமன், கொரகர் மற்றும் காட்டு நாயக்கரும் இதற்கு உட்பட்டவராக ஆகின்றனர் எனப் பக்தவத்சல பாரதி அவரது பதிவில் கூறுகிறார்.
காட்டு நாயக்கர்கள் தங்களின் தொன்மை என மகாபாரதத்தைக் கூறுகின்றனர். மகாபாரத்தத்தில் வரும் இடமசூரனின் வழி வருபவர்களே காட்டுநாயக்கர்கள் என்பவர்கள் இவர்கள்.
காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த கிரிஜா
காட்டு நாயக்கர்கள் பேசும் மொழி அந்தந்த பிரதேசத்திற்கேற்ப வேறுபடுகிறது. நீலகிரி, கடலூர்ப் பகுதிகளில் தமிழ் சார்ந்தும், கர்நாடகத்தின் மைசூர்ப் பகுதிகளில் கன்னடம் சார்ந்தும், கேரளத்தில் வயநாட்டுச் சுற்றிய பகுதிகளில் மலையாளம் சார்ந்தும் உள்ளது . 1986-ஆம் ஆண்டு நடனசபாபதி என்பவர், காட்டுநாயக்கரின் மொழி குறித்து விரிவான ஆய்வு செய்து அது கன்னடத்தின் கிளைமொழி எனக் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுநாயக்கர் காரைக்காயை அரைத்து நீரில் கலந்து மீன்களைப் பிடிக்கின்றனர். இக்காய் நீரில் கலக்கும்போது மீன்கள் மயக்கமடைகின்றனவாம். இவ்வாரு பெரும் பொருள்களைச் சமநிலை மக்களுக்குக் கொடுத்து பண்டமாற்று செய்துக்கொள்கின்றனர். ஆனால், முதுமலை வனப்பகுதியில் கூலிகளாக வேலை செய்யும் காட்டுநாயக்கர் சமூகத்தினர் இந்த நிலையிலிருந்து மாறி வருவதைக் காண முடிகிறது. இருந்த போதும் அவர்கள் ‘உணவு உற்பத்தியை’ செய்யாமல் இல்லை. அவர்களின் வசிப்பிடத்திற்கு நான் சென்ற போது சில விவசாய நிலங்களைக் காண முடிந்தது. அதோடு முதுமலைப் பகுதிகளில் காட்டுநாயக்கர்கள் மிளகு, இஞ்சி, வரகு, கம்பு உள்ளிட்ட பல பயிற்களைப் பயிரிட்டும் தேயிலை தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்து வருவதாகவும் அண்ணன் மான்பு தெரிவித்தார்.
காட்டுநாயக்கர்களின் இன்னொரு செயற்பாடாகத் தேன் எடுத்தல் இருக்கிறது.
அதிலும், நீலகிரிமலைத் தொடரில் தேனெடுப்பதில் காட்டுநாயக்கர் மிக முக்கியமான தொழிலாகச் செய்கின்றனர். காட்டுநாயக்கர்கள் தேனை ‘ஜேனு’, துடை, கெஃட்டி எனப் பிரிக்கிறார்கள். ‘ஜேனு’ என்பது உயர்ந்த காட்டுமரங்களிலிருந்து எடுப்பதாகும். இது சிறந்த தேன் என்றும் மருத்துவக் குணம் நிறைந்தது எனவும் கூறப்படுகிறது. துடை என்பது பொந்து, புற்று ஆகியவற்றில் உள்ள தேன்கூடுகளில் கிடைப்பது. கெஃட்டி ஜேனு என்பது குச்சி தேனாகும். தேய்பிறை நாட்களில் மட்டுமே தேனெடுப்பார்கள். பருவ மழை தொடங்கிய பின்னர்க் கிடைக்கும் தேன் சிறந்தது என்கிறார்கள். தேனைத் தவிர அதன் மெழுகினையும் சேகரித்து விற்கிறார்கள்.
மேற்கூறிய தகவல்கள் பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் என்ற பதிவிலிருந்து பெறப்பட்டதாகும்.
காட்டுநாயக்கர்கள் கையில் சூலம் போல ஒரு குச்சியை வைத்திருக்கின்றனர். அதைக் காட்டு வேலை செய்யப் பயன்படுத்துவதாகச் சொன்னாலும் அந்தக் குச்சிக்கும் அவர்களின் கலாச்சாரத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் சூலம் வழிபாடும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அடுத்த முறை இங்கே சீசன் போது கட்டாயம் வாங்க என்றும் எங்களின் பாரம்பரிய விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் மான்பா அண்ணன் அன்பு வேண்டுகோள் விடுத்தார். புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டேன். அனைவரும் ஒன்றினைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அவர்களின் குடியிருப்புக்குச் சென்ற போது அங்கே சன் டீவி கேபிகள் வீடுகளில் பொறுத்தப்பட்டிருப்பது காண முடிந்தது. ஈயப் பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. பழங்குடிப் பெண்கள் நைட் டீ அணிந்திருந்தனர். அவர்கலின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் கல்வி கற்பதாகக் காட்டுநாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த கிரிஜா தெரிவித்தார். அரசாங்கத்திலிருந்து பெறப்படும் இலவச அரவை இயந்திரங்கள், வண்ண தொலைக்காட்சி யாவும் பழங்குடிகள் வீட்டை அலங்கரித்திருந்தது அவர்கள் வாக்காளர்கள் ஆகிவிட்டதை நமக்கு உணர்த்தியது. குறும்பர் இருளர் மற்றும் காட்டுநாயக்கர் ஆகியோர் ஒன்றாக வசிக்கும் அந்தக் குடியிருப்பில் காட்டு நாயக்கர்கள் ஆதிக்கம் விரவி இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றியது.
அவர்கள் வழிபாடு செய்வதற்குக் கட்டியிருக்கும் சிவன் கோயிலில் அதிக அதிகாரம் இவர்களுக்குதான் இருக்கிறது என்றும் அடுத்த நிலையில் குறும்பர் இருக்கிறார்கள் என்று கிரிஜா தெரிவித்தார்.

இவர்களோடு வசிக்கும் குறும்பர்களின் வாழ்வியல் என்ன ? அடுத்தத் தொடரில் கூறுகிறேன்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 10



வரதெப்பக்காடு வரவேற்பு மையத்திற்கு வெளியே இருளர் சமூகத்தினர் நிறையப் பேரைக் காண முடிந்தது. ஆனால், அவர்கள் நவீனமாகி இருந்தனர். பழங்குடிகள் என்ற அடையாளம் பெயரளவில் மட்டுமே இருக்கும் அளவுக்குப் பெரிய மாற்றம் இருந்தது. அங்கு இருக்கும் ஒரு டீக் கடையை நடத்தி வருவதும் அவர்களாகத்தான் இருக்கக்கூடும் என நினைக்கிறேன். வனத்தில் வசிக்கும் இருளர்களோடும், காட்டு நாயக்கர்களோடும் சில மணி நேரம் உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில் அவர்களது வாழ்கையையும் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

மக்கள் வாழும் பொதுப்பகுதிகளில் வாழாமல் இருண்ட, அடர்ந்தக் காட்டுக்குள் சென்று வாழ முற்பட்ட மக்கள் ‘இருளர்கள்’ என்றழைக்கபட்டனர். இருளர்கள் ‘அரைநாடோடிகள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் குடியிருப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்களாம். உணவுச் சரிவரக் கிடைக்காத நிலையிலும் மூலிகைகள் கிடைக்காவிட்டாலும் இடப்பெயர்சி செய்வார்கள் எனக் காரணம் கூறப்படுகிறது.

அவர்களுடனானப் பேச்சு வார்த்தையின்போதுதான் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் முதுமலைப் புலிகள் காப்பகத்தில் அந்த வனத்தில் வசிக்கும் பழங்குடிகள் அதிகமானோர் கூலிக்கு வேலைச் செய்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. குறிப்பாக அந்த வனத்தில் இருளர், காட்டு நாயக்கர், குறும்பர் என மூன்று பழங்குடிகள் ஒரே குடியிருப்பில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வனத்தில் வேலைச் செய்து கூலிப் பெறுகிறார்கள். காடுகளைச் சுத்தப்படுத்துதல், புதர்களை வெட்டி அப்புறப்படுத்துதல் உள்ளிட்டச் சில வேலைகள் அதில் அடங்கும். அவர்களின் ஆதி அடையாளங்களான வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் உள்ளிட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லையா? என்று நான் கேட்டபோது அவர்களிடத்தில் சரியான பதில் இல்லை. வீட்டில் சிறிய அளவில் பயிர் செய்வதாக மட்டும் கூறினார்கள்.

இருளர் சமூகம் என்பது என்ன? கொஞ்சம் பார்ப்போம்..

எரிலைக்கிழங்கு எனக்கூடிய சர்க்கரை வள்ளிக்கிழங்கைத் தோண்டி உண்பவர்கள் என்பதால் மலையடிவார மக்கள் இருளர்களை 'எரிளிகாரு' (எரிளி = கிழங்கு, காரு= மக்கள்) என்றே அழைக்கப்பட்டனர். எரிளிகாரு என்பது 'எருளர்' என்றாகி அதுவே பின்னர் இருளர் என்றானது. இருளர்களில் இரண்டு பிரிவினர் உண்டு. நீலகிரி இருளர்கள் ஒரு பிரிவினர். தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மேற்கு தர்மபுரி மாவட்டம் வரையிலும் சமவெளிகளில் வாழும் இருளர்கள் மற்றொரு பிரிவினர். இவ்விரு பிரிவினருக்குமான வரலாற்று ரீதியான தொடர்புகள் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது.
நீலகிரி இருளர்களுக்குள் 8 குலங்களும் கோவை இருளர்களிடம் 12 குலங்களும் உள்ளன. நீலகிரி புரிவினர் எலி சாப்பிடுவதில்லை. கோவை இருளர்கள் எலியைப்  பிடித்துச் சாப்பிடுவார்கள். இவ்வாறாக இன்னும் பல வேறுபாடுகளைச் செங்கோ 'வனாந்தரப் பூக்கள்'எனும் நூலில் ஆராய்ந்து எழுதியுள்ளதாகப் பக்தசத்சல பாரதி கூறுகிறார். நீலகிரி இருளர்கள் மேல்நாடு இருளர், கசபர், வேட்டக்காடு இருளர், ஊராளி, காடு பூஜாரி என ஐந்து வகைப் படுத்தலாம். சமவெளி இருளர்கள் வில்லி, வேடர், வேடவர், வேட்டைக்காரன் போன்ற பெயர்களில் மற்ற சாதியால் குறிப்பிடப்படுவார்கள்.

இருளர்கள் அறிதிறன்

ஒவ்வொரு பழங்குடியும் தம்மைச் சுற்றியுள்ள நிலம் தாவரங்கள், விலங்குகள், இயற்கை கூறுகள், பருவங்கள், பிரபஞ்ச அமைப்பு, அதன் நிகழ்வுகள் என அனைத்தையும் அவர்தம் பார்வையில் இனங்காண்பர்; விளக்குவர்; வகைப்படுத்துவர். இத்தகு பார்வை அம்மக்களின் அறிவாலும் அனுபவத்தாலும் உண்டானது. இதனையே ‘உலகப் பார்வை’ என மானிடவியர்கள் கூறுகிறார்கள். இருளர்களின் உலகப்பார்வையின்படி அவர்கள் தம் நிலங்களை ஐந்து வகைகளாகவும், மலை விவசாயத்தின் பருவங்களை இரண்டாகவும் பாகுபடுத்திக் காண்கிறார்கள்.
1.பெட்ட : உயர்ந்த மலைப்பகுதி, அடர்ந்தகாடுகளும் கொடிய காட்டு விலங்குகளும் உள்ள பகுதி. இருளர்கள் ;பெட்ட’க்களை அதிகம் பயன்படுத்துவதில்லை.
2.குட்டபெட்ட: பெட்டாவுக்குக் கீழ் உள்ள மலைப்பகுதி. இது குடியிருப்புக்கருகாமையில் உள்ளது. இங்குக் குறுங்காடுகளும் மரங்களற்ற குன்றுகளும் இருக்கும். அங்குக் கால்நடைகளை மேய்க்கவும் தேன் எடுக்கவும் விறகு சேகரிக்கவும் செல்வார்கள்.
3.காடு: குடியிருப்புக்கருகில் உள்ள ஓரளவு சம நிலங்களில் உள்ள வளமான காட்டுப்பகுதிகளில் ஆண்கள் வேட்டைக்கும் பெண்கள் காடுபடு பொருள்களைச் சேகரிக்கவும் செல்கிறார்கள்.
4. மல (மலை): புல்வெளியுடன் கூடிய மலைப்பகுதி.காட்டெரிப்பு விவசாயம் செய்தபின் தரிசாக வடப்பட்டுள்ள இடம். இங்கும் கால்நடைகள் மேய்க்க விரும்புவார்கள்.

இத்தகவல்கள் யாவும் பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டதாகும்.

இருளர்கள் ஓலையைக் கொண்டு தாங்கள் தங்குவதற்குக் கட்டிக்கொள்ளும் குடிசைகள் தற்போது மூங்கில், கல் மற்றும் இன்னும் பிற பொருள்களைக் கொண்டு கட்டப்படுகிறது. இது மற்ற மற்ற பூர்வக்குடிகளுக்கும் பொருந்தும் என்றாலும் சிலர் நவீனமயமாக்களிலும் இன்னும் தங்களின் மரபை மறக்காமல் பின் பற்றியும் வருகின்றனர். காலங்காலமாக மண்ணுடனும் வனத்துடனும் மற்ற உயிரினங்களுடனும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு தற்சார்பாக வாழ்ந்திருந்த இருளர் மக்கள், கூலித் தொழிலாளிகளாக மாற்றப்பட்டதற்கான காரணத்தை யாரை நோக்கி கைக்காட்டுவது?
காடு, மலைகளில் வசிக்கும் இருளர் பழங்குடிகள் மதம், சாதி போன்ற எந்த முன்னொட்டும் பின்னொட்டும் இல்லாமலேயே பிறந்து வாழ்ந்து வருபவர்கள் என்றும் முன்னோரையும் இயற்கையையும் வழிபட்டு வருபவர்கள் என்றும் கூறப்பட்டாலும் அவர்களில் பலர் கிருஸ்துவ மதத்தைத் தழுவி இருப்பதாகத் தெரிவித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

பூர்வக்குடிகளாக இருந்தாலும் வழிபாடு விஷயத்தில் இருளர்கள் மிகவும் கண்டிப்புடன் இருக்கின்றனர். அதாவது அவர்களுடைய கோயிலை தவிர வேறு இடங்களில் வழிபாடு செய்ய அவர்கள் விரும்புவதில்லை. இதை எல்லா இருளர்களும் இன்னும் பின் பற்றுகிறார்களா என்று தெரியவில்லை. குறிப்பாக இருளர்கள் கன்னி தெய்வத்தை வழிபடுகின்றனர்.  இத்தெய்வத்தை வழிபட்டால் தனக்கு நேரிடும் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்துபோகும் என்பது இம்மக்களிடம் உள்ள பொதுவான நம்பிக்கையாகும். ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசி மகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுரக் கடற்கரையில் கூடித் தங்கள் குல தெய்வமான கன்னியம்மாவிற்குப் பூஜை செய்து வழிபடுகின்றனர். கன்னியம்மாவை ‘ஆயம்மா’ என்றும், சிலர் குறிப்பிடுகின்றனர். கிராமச்சிறு தெய்வங்கள் மனிதர்களுடன் மனிதராய் வாழ்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காகப் போராடி உயிர் நீத்தது போல, இருளர்களின் தெய்வமான கன்னியம்மாவும் இருளர் இனப் பெண்ணாக இருந்து, இவர்களுக்காகப் போராடி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு சு. சத்யா என்பவர் இருளர் சமுகம் குறித்து எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதை இன்னும் உறுதி செய்யும் வகையில் முதுமலையில் இருளர், காட்டு நாயக்கர், குறும்பர் ஆகியோர் ஒரே இடத்தில் வசிக்கும் பகுதியில் அவர்கள் வழிபாடு செய்ய ஒரு சிவன் கோயில் உள்ளது. அந்தச் சிவன் கோயில் மூன்று பழங்குடிகளும் வழிபடுவதற்கு அமைக்கப்பட்டாலும் இருளர்கள் சாமி கூம்பிட வருவது குறைவு எனக் காட்டு நாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த கிரிஜா தெரிவித்தார். பூர்வக்குடி என்றாலும் அவர்கள் மத்தியிலும் ஜாதி அல்லது இனம் சம்பந்தப்பட்ட ஆதிக்கம் நிறைய உள்ளது என்பது அவர்களின் பேச்சின் போதே அனுமானிக்க முடிந்தது.

இருளர்களின் திருமண முறை என்று வரும்போது, திருமணம் நிச்சயமான பின் ஒரு வருடத்திற்கு மணமாகாமலே சேர்ந்து வாழ்கின்றனர். பின் அவர்களுக்குள் பிடிக்கவில்லை அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வேறு நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது. இருளர்கள் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இருளர் சமுகத்தில் மிக முக்கியமாகப் பெண்ணின் விருப்பமே திருமணத்தின் மிக முக்கியமாதாகக் கருதப்படுகிறது என்றுக்கூறிய போது எனக்கு அது பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருளர் சமூகத்தில் விதவைப்பெண்கள் இல்லையாம். விதவைப் பெண்கள் தாங்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை அளிக்கப்படுகிறதாம். திருமணத்தின் போது தாலி அணியும் பழக்கம் இவர்களிடத்திலும் உண்டு. முன்பு திருமணத்தின்போது கருக மணி அணிந்தார்களாம். இப்போது தாலிக்கு மாறிவிட்டார்கள். இவர்களின் நிறையச் சடங்குகள் தற்போது தமிழர்கள் பின்பற்றும் சடங்குகளோடு மிக நெருக்கத்தில் உள்ளது.
இருளர்களைப் பற்றி லெட்சுமணன் எழுதிய  'ஒடியன்' என்ற புத்தகத்தில்  அணிந்துரை எழுதியுள்ள கவிஞர் ச.பாலமுருகன், அம்மக்களைப் பற்றிக் இப்படி குறிப்பிடுகிறார்.  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவை வனப்பகுதியை கோவன் என்ற இருள தலைவன் ஆண்டு வந்தான். அக்காலத்தில் சின்னஞ்சிறு கிராமமாக விளங்கிய கோவன்பதி சோழ மன்னர்களின் எல்லை விரிவாக்கத்திற்காகச் சேர பகுதி மீது படையெடுத்தபோது, தங்கும் இடமாக இந்தக் கோவன்பதி என்ற மலைகள் சூழ்ந்த பகுதியை பயன்படுத்தியுள்ளான்.

இதை எதிர்த்த இருள தலைவன் கோவன் அழிக்கப்பட்டான். தலைமை அழிக்கப்பட்டதால் மக்கள் சிதறி ஓடிப்போய் இருண்ட கானகத்தில் தஞ்சம் புகுந்தனர். தங்கள் இன்னல் தீர வனதேவதையிடம் மக்கள் முறையிட வனதேவதை சோழ மன்னனிடம் வந்து நியாயம் கேட்டபோது, தெய்வத்திற்குப் பலி கொடுத்து அவளை விரட்டினான். குடிகளை இழந்த அவள் பழங்குடிகளைத் தேடி அலைந்தாள். அவளுக்குப் புதுப்புது பெயர்கள் அதன் பின் வந்த மன்னர்கள் வைத்தனர். வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்று ஓடி இருண்ட காடுகளில் ஒளிந்த மக்களை இன்றளவும் ஏதோ ஒரு வகையில் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அம்மக்களும் இன்றும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் என்றும் அவர் எழுதியிருக்கிறார்.


சிலர் வசையின் போது அல்லது யாரையாவது ஏசும்போது இருளர் கூட்டம் அல்லது இருளச்சி என்று கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். இருளர்களில் ஆண்-பெண் யாரும் பயமறியாதவர்கள். தங்களுக்கென்று ஒரு விதிமுறையை வகுத்து வாழ்கிறவர்கள். அதில் பலர் நவீன மயத்தை விரும்பாமல் காட்டின் உள்பகுதிகளில் மறைவாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காக நானும் சாகுலும் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஆனால், எல்லா விவரங்களும் சுலபமாகக் கிடைத்துவிட்டால் அதில் என்ன சுவாரஷ்யம் இருந்திட போகிறது இல்லையா? மறுக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து விரிகிறது பார்வையும் தேடலும்.

நாங்கள் காட்டு நாயக்கர்கள் எனப் பேச தொடங்கினார் அண்ணன் மான்பா. அவர்களை அடுத்தத் தொடரில் காணலாம்.



(தொடரும்)

திங்கள், 15 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 9

குடும்பத்துடன் சாப்பிடலாம் என்ற தகவலுடன் இருந்த கடையில் தைரியமாக அமர்ந்துச் சாப்பிடலாம் என்றும் அப்படி எழுதாத கடையில் உணவுடன் வேறு மாதிரியான விஷயங்கள் இருக்கலாம் என்ற பரவலாக ஓர் ஐயம் இருப்பதாகவும் குடும்பத்துடன் சாப்பிடலாம் என்று எழுதியிருக்கும் கடைக்கே நாம் போகலாம் என்றும் சாகுல் கூறினார்.

ஒரு வாரியாகக் காப்பியுடன் பரோட்டா முட்டை வறுவல் ஆகியவற்றை உள்ளே தள்ளிவிட்டுக் கிளம்பினோம். அது ஒரு மலையாளி நடத்தும் உணவுக்கடை. கர்நாடகா எல்லை என்றாலும் உணவில் பெரிதாக மாற்றம் இல்லை. குறிப்பாகக் காப்பிச் சுவைச் சான்சே இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை காப்பி வாங்கிக் குடித்தேன்.

தொடர்ந்து வன அதிகாரிகளால் மாலையில் வனத்தைச் சுற்றிக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படியால், நானும் சாகுலும் அதில் விடுபடாமல் இருப்பதற்கு முன்கூட்டியே வனத்திற்கு செல்ல திட்டமிட்டோம்.
நான் தங்கி இருந்த Log House ரொம்ப அழகான இருப்பிடம். குறிப்பாக அங்குப் பணி நிமித்தமாக வரும் வன அதிகாரிகள் தங்கிக் கொள்வதால் மிக அக்கரையுடன் பராமரிக்கப்படுகிறது.

ஆனால், சாகுல் தங்கியிருந்த அபஹயரான்யம் எனுமிடம் கொஞ்சம் வசதி குறைந்ததுதான். மேலும், அங்கு விலங்குகளின் நடமாட்டம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் எனச் சொன்னார்கள். இரவில் நடமாடும் விலங்குகளைக் காண அங்கு ஒரு கண்ணாடி அறை பிரத்தியேகமாகக் கட்டப்பட்டுள்ளது. மேல்மாடியில் கட்டப்பட்டிருக்கும் அந்தப் பிரத்தியேக அறையில் மின் விளக்குகள் போட்டுக்கொள்ளாமல், ஒரு கைவிளக்கை மட்டும் வைத்துக்கொண்டு இரவில் விலங்குகள் வருவதை அனுமானித்துப் பார்க்கலாம். ஆனால், அதற்கு நீண்ட பொறுமை அவசியம். மேலும், அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

அந்த இடத்தைப் பார்ப்பதற்கு எனக்கு விரும்பம் ஏற்பட்டது. சாகுல் அழைத்துக்கொண்டு போனார். இரண்டு தங்கும் விடுதிகளைத் தவிர அங்கு வேறு ஏதும் இல்லை. அங்குச் சமையல் வேலை செய்துக் கொண்டிருந்தவரிடம் சாப்பிட ஏதும் செய்து தர முடியுமா எனச் சாகுல் கேட்டார். இரவுதான் சமையல் ஆகும் எனப் பதில் வந்தது. டீ காப்பி ஏதாவது கிடைக்குமா? எனக் கேட்டோம். பால் இல்லை எனப் பதில் வந்தது. அதற்குப் பிறகு எதைக் கேட்பது? நான் மனதார சாகுலுக்கு நன்றியை கூறிக்கொண்டேன். என்னை இப்படி ஒரு இடத்தில் தள்ளி விடாமல் சௌகரியமான இடத்தில் தங்க வைத்தது எத்தனை பெரிய தியாகம் ? சாகுல், நீங்கதான் தெய்வம் (சிரித்துக்கொள்கிறேன்)

தங்கும் விடுதியைச் சுற்றி பள்ளம் போலத் தோண்டி இருந்தார்கள். எனக்கு அதன் காரணம் புரியவில்லை. பின்பு விசாரிக்கும்போது அங்கு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதைத் தவிர்க்க அப்படித் தோண்டப்பட்டதாகவும், பல தடவை யானைகள் தங்கும் விடுதியை சேதம் செய்திருக்கிறது எனவும் கூறினார்கள்.
வன விலங்குகளின் வீட்டிற்குள் அத்துமீறி மனிதர்கள் வீடு கட்டிக்கொண்டு, விலங்குகளை விரட்டுவதற்கும், அதன் நடமாட்டத்தைத் தவிப்பதற்கும் நாம் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சமா?   இந்த பள்ளத்திற்கு  எல்லாம் விலங்குகள் வராமல் போய்விடுமா என்ன? யானையின் எச்சம் விடுதிக்கு மிக அருகில் இருந்தது அதைத்தான் கூறியது.

பின் நாங்கள் அதிகாரிகளோடு வனத்தின் உட்பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகத் தெப்பக்காடு வரவேற்பு மையக் கட்டிடத்திற்குச் சென்றோம். 20 பேர் அமரக்கூடிய வண்டி அது. வன அதிகாரிகளிடம் வனத்தைக் குறித்துக் கொஞ்சம் விவரங்களை வாங்கிக்கொண்டேன். உண்மையில் கேட்கும் கேள்விகளுக்கு அலுத்துக் கொள்ளாமல் அவர்கள் பதில் சொல்லியதே எனக்குப் பெரிய உபகாரமாக இருந்தது. நமக்குச் சந்தேகம் என்பது ஞாயமாக வந்தால் தானே?

முதுமலை புலிகள் காப்பகம் என்பது கர்நாடக, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குத் தொடர்புடைய மிக அருகில் இருக்கக் கூடிய இன்னும் சொல்லப்போனால் இந்த மாநிலங்களின் மைய புள்ளியில் அமைந்திருக்கும் மிக முக்கியமான வனமாகும். முதுமலை என்ற மலைக்கு 65 மில்லியன் ஆண்டுகள் வரலாறு உள்ளதாக ஒரு கையேடு குறிப்பிடுகிறது. வேறு எங்கும் பார்க்க முடியாத சில அறிய வகை விலங்குகளை இங்குக் காண முடியும் எனக் கூறினாலும் மான், யானை, மயில், குரங்குகளை மட்டுமே அதிக அளவில் பரவலாகக் காண முடிகிறது. டிசம்பர் தொடங்கி ஜனவரி தொடக்கம் முதல் குளிர் நிலையிலும் மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை சூடான நிலையிலும் முதுமலை வனத்தின் சீதோஷநிலை வரையறுக்கபடுகிறது.
புலிகள் காப்பகம் என்றாலும் ஒரு புலியைக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், தற்போது மேற்கொண்டிருக்கும் சில கட்டுப்பாடுகளால் புலிகளின் இனவிருத்தி அதிகரித்திருப்பதாக வனதுறையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான சந்திரன் சார் கூறியிருந்தார்.

வனத்தில் உட் பகுதியான கக்கநள்ளா செல்வதற்கு வண்டி கிளம்பியது. அது ஒரு மணல் சாலை. வெளி வாகனங்களை உள்ளே அனுமதிக்காத அளவுக்குக் கட்டுப்பாடு போடப்பட்டிருந்தது. முன்பு எல்லாம் இரண்டு மணி நேரம் உட்பகுதியில் வண்டியில் பயணம் செய்து பல மிருகங்களைக் காண்பதற்கான வாய்ப்புகள் இருந்தது எனவும் பின் 1 மணி 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுத் தற்போது 45 நிமிடங்கள் மட்டுமே விலங்குகளைக் காண்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மனிதர்களின் தேவையற்ற போக்கினால் விலங்குகளுக்குப் பிரச்னையாக அமைந்துவிடுகிறது; அதனால்தாம் இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எனக்கு ஜெயமோகனின் யானை டாக்டர் என்ற கதை ஞாபகத்திற்கு வந்து போனது. அதைப் பற்றிச் சம்பாஷிக்கக் கூடிய தேவையையும் ஏற்பட்டது என்றுகூடக் கூறலாம்.
புள்ளி மான்கள் கிளை மான்கள் என மான்கள் கூட்டம்தான் பெரிய அளவில் கண்களுக்கு விருந்துகள் படைத்துக்கொண்டிருந்தன. வன அதிகாரி ஒருவர் சத்தத்தை எழுப்ப வேண்டாம் எனத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தார். வண்டியில் குழந்தைகள் இருந்ததால் அவர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்து குதூகளிக்கத் தொடங்கியிருந்தனர்.
ஓர் இடத்தில் காட்டு மரங்களைக் கொஞ்சமாகக் கொழுத்தி விட்டிருந்தனர். அது எரிந்து அணையும் நிலையில் இருந்தது. யானையின் குடும்பம் ஒன்று வனத்தில் காண நேரிட்டது. அது தந்தங்கள் இல்லாத யானைகள். வண்டி ஓட்டுனர் யானை மிரண்டு போகாத அளவுக்குச் சற்று தள்ளியே வண்டியை நிறுத்தினார். மனிதர்களைக் கண்டு விட்ட யானைகள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மரத்தின் கிளைகளை ஒடித்துத் தின்றுக்கொண்டிருந்தன. இங்கே சிறுவர்கள் குட்டியானையைப் பார்த்த சந்தோஷத்தில் எழுப்பிய சத்தத்தில் யானைகள் மிரண்டு போய், தனது குட்டியை காப்பாற்றும் நோக்கில் அணிவகுத்து நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எங்கு எனத் தேடும் அளவுக்குக் கால்களுக்கு இடையில் குட்டியை மறைத்துக் கொண்டு பாதுகாப்பு அளித்தன. வண்டி ஓட்டுனர் அந்த இடத்திலிருந்து வண்டியை கிளப்பினார். மிக அருகில் இன்னொரு யானை கூட்டம். கூட்டம் எனக் கூற முடியாது. மூன்று யானைகள் என இருந்தன. அவை நீண்ட தந்தங்கள் கொண்ட யானைகள். காது முறம் போல இருந்தது. பார்க்கும்போதே கோபக்கார யானைபோலத் தோற்றம்.
காணும் விலங்குகளைப் படம் எடுத்துக்கொண்டோம். அதிகமான விலங்குகள் அல்லது பறவைகள் காணகிடைக்கவில்லை. ஆனால், 45 நிமிடம் போனதே தெரியவில்லை. தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்திருந்தோம்.

வரதெப்பக்காடு வரவேற்பு மையத்திற்கு வெளியே இருளர் சமுகத்தினர் நிறையப் பேரை காண முடிந்தது. ஆனால், அவர்கள் நவீனமாகி இருந்தனர். பழங்குடிகள் என்ற அடையாளம் பெயர் அளவில் மட்டுமே இருக்கும் அளவுக்கு  பெரிய மாற்றம் இருந்தது.
அங்கு இருக்கும் ஒரு டீக் கடையை நடத்தி வருவதும் அவர்களாகத்தான் இருக்ககூடும் என நினைக்கிறேன். வனத்தில் வசிக்கும் இருளர்களோடும் காட்டு நாயக்கர்களோடும்  சில மணி நேரம் உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில் அவர்களது வாழ்கையையும் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

(தொடரும்)




சம்பவங்கள்...

சம்பவம் 1
டிசம்பர் 24
மறுநாள் கிறிஸ்மஸ். எந்த கொண்டாட்டமுமற்ற நிலையில் இருந்த தேவாலயத்தை கடந்து போகையில் நுழைவாயின் எதிர்புறத்தில் சிலை போல அமர்ந்திருந்தவரை மனது ஈர்த்தது. என்ன வசீகரமான கிழவர் இவர்... O my god.
Shahul வண்டியை நிறுத்த முடியுமா என்றேன். அது ஒரு வளைவு சாலை. அந்த கிழவர்தானே காரணம் என்றார் சாகுல். சிரித்தேன்.
* உங்கள் பெயர் ?
- டேவிட்.
* உங்களோடு படம் எடுக்க முடியுமா?
- முடியும்.. 20 ரூபாய் தருவியா?
* 200 ரூபாய் தருகிறேன். உங்களுக்கு கிறிஸ்மஸ் பரிசாக. உங்கள் தோள்மீது கை போட்டுக்கொள்ளட்டுமா?
- போட்டுக்கொள்ளேன். நானும் கை போட்டுகொள்ளவா? (சிரிப்பு அவருக்கு)
* வேண்டாம் வேண்டாம்.
(தாத்தா நீங்க விவரம்தான் என நாங்களும் சிரித்தோம். அழகான வடிவான முகம் டேவிட் அங்கிலுக்கு. புகைப்படம் எடுத்துக்கொண்டு பரிசு கொடுத்து விடை பெற்றோம். இப்போதும் டேவிட் என் நினைவுகளில் வந்து வந்து போகிறார். )

சம்பவம் 2

நான் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் log house. அருகில் நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. பறவைகளின் பேச்சு சத்தம் இடை விடாது கேட்டுகொண்டே இருந்தது. Wow... So beautiful என என்னையும் அறியாமல் கூறிக்கொண்டிருந்தேன். வேறு எந்த சத்தமும் இல்லை. அப்போது..
பெரிய குரல் எடுத்து மிரட்டும் சத்தம் கேட்டது. கூடவே யானை பிலிரும் ஒலியும்.....
நதிக்கு மேலே ஓடிக்கொண்டிருந்த கல்பாலத்திலிருந்து சத்தம் வந்தது. உற்று நோக்கினேன். என் உயரமும் மெல்லிய உடம்பும் கொண்ட யானை பாகன், நீண்ட தந்தமும் மிகப்பெரிய உடம்பும் கொண்ட யானையும் தெரிந்தனர். உண்மையில் மிகப்பெரிய யானை. அதன் வாயில் கௌவி வந்த மரத்துண்டை கணம் தாங்காமல் (அப்படி தான் நினைக்கிறேன், தெரியவில்லை) கீழே போட்டு விட்டது. அதை மீண்டும் எடுக்கச்சொல்லி மிரட்டல் விட்டுக்கொண்டிருந்தார் யானை பாகன்.
யானை மரத்துண்டை எடுக்கவில்லை. கையில் வைத்திருந்த கோலைக்கொண்டு ஓங்கி ஒரு அடி யானையை. அந்த அடி என் மேலே பட்டது போலே கண்களை மூடிக்கொண்டேன். என் கையை நானே இறுக பிடித்திருந்தேன்.
அடிபட்டதும் யானை மீண்டும் சத்தத்தை எழுப்பியது. அதன் சத்தம் ஒரு வகை கேவல்போல கேட்டது. அதை சொல்லத் தெரியவில்லை. பின்
யானை அந்த மரத்துண்டை கௌவிக்கொண்டு நடக்க துவங்கியது. சபாஷ் கொம்பா... யானைக்காக துள்ளி
குதிக்க தோன்றியது.
Log house சில் பணி புரியும் எஸ்டர் அம்மா டீயோடு என்னை நோக்கி வந்தார்.
யோகி: அம்மா அந்த பாகன் மகா கெட்டிக்காரர். அந்த யானைக்கு என்ன அழகாக பயிற்சி கொடுக்கிறார். யானையின் காலுக்கு பாதிகூட இல்லை அவர், எத்தனை தைரியம்.
எஸ்டர் அம்மா: இல்ல மா. அது பயிற்சி அல்ல. அது பயிற்சி பெற்ற யானைதான். பாவம் எவ்வளவு தொலைவில் இருந்து அந்த மரத்துண்டை தூக்கி வருகிறதோ... அதற்கும் வலிக்கும் தானே. என்ன செய்யும் அது. அது நினைத்தால் அந்த பாகனை தூக்கி அடித்து விட்டு போக எவ்வளவு நேரம் ஆகும்? அந்த யானைக்கும் இருப்பது அன்பு தானே மா. பாவம் அதை அடிக்ககூடாது இல்லையா..
எஸ்டர் அம்மா பேச பேச நான் அவர் கையை பிடித்துக்கொண்டேன். நீங்கள் சொன்னது எத்தனை பெரிய விஷயம் தெரியுமா? எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க மா....
யானை பாகன், யானை, எஸ்டர் அம்மா என ஒரே நேரத்தில் இவர்கள் என்னில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது. அன்பு வழி(லி)யது. யானையைப் பார்த்தேன். அது எங்கோ போய்கொண்டிருந்தது. கழுத்தில் கட்டிய அதன் மணிச்சத்தம் சன்னமாக கேட்டுக்கொண்டிருந்தது.

சம்பவம் 3
இடம்: பசார் செனி (மலேசியா)
தேதி: 7.2.2016
போதை பித்தர்களும், போக்கிடமில்லாதவர்களும் இளைப்பாறும் ஓர் இடத்தில் பார்த்தேன் அவளை. அவள் ஒரு வெள்ளைக்காரி. முழுகால் சிலுவார், சட்டை அணிந்திருந்தாள். எந்த ஒரு சலனமும் இல்லாமல் ஒரு கையில் பியர் டின்னுடனும் மறுகையில் சிகரெட்டுடனும் அமர்ந்திருந்தாள். அந்த நேரத்தை அனுபவித்த படி அவள் மட்டுமே இருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்தேன். மேலை நாட்டவர்கள் எங்கு போனாலும் அவர்கள் அவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள் என கூறிக்கொண்டேன். அவளை புகைப்படம் எடுத்தால் அவளின் privacy கெடும் என தோன்றியது. புன்னைகைத்தவாறு அவளை கடந்துச் சென்றேன்.
நானும் எனக்கு பிடித்ததை தான் செய்கிறேன். ஆனால், அது ஒரு கட்டுக்குள் இருப்பதை மறுக்கமுடியாது. அதற்காக நான் மதுவையும் புகையையும் கேட்கிறேனா என நினைத்தால், உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு தேவையில்லை...
இடம்: temple park நீர் வீழ்ச்சி (மலேசியா)
தேதி : 8.2.16
ஆண்கள் எல்லாம் ஒரு உயரமான இடத்திலிருந்து குளத்தை நோக்கி குதித்துக்கொண்டிருந்தனர். அது ஒரு சாகசம் மாதிரிதான். திடீரென 20 வயதுக்கும் குறைவான அந்த தமிழ் பெண் அங்கு போவதாக அவள் வீட்டாரிடம்
கேட்டாள். வேணாம் என மறுத்தனர். எனக்கோ அவளின் தைரியத்தை பார்க்க ஆசை. அந்த நேரத்தில் அவள் நானாக மாறுவது போல் இருந்தது. ஏதோ யோசித்தாள், ஏறினாள் அந்த உயரமான இடத்தில். அங்கு வரிசையில் இருந்த ஆண்கள் சிலருக்கு சிரிப்பு-ஆச்சரியம். எந்த பின்வாங்கலும் இல்லாமல் குதித்தாள். அவ்வளவு திருப்தி அவள் முகத்தில். அத்தனை பெருமை என் முகத்தில்.
நாம் நாமாக வாழ எல்லா நேரமும் வாய்ப்பது இல்லை....

என்னை அணைத்திருக்கும்போது..



நீ என்றும் முழுமையானவன்
இது அர்த்தமற்ற வெறும்
சொல் என நினைக்காதே
என்னைத் தவிர
யாரும் என்னை உன்னிடம் கூறிவிடமுடியாது
உன்னைத்தவிர யாரும்
உன் தேக்கத்தை நிகழ்த்திட முடியாது
இதோ இந்த இரவிலும்
என் கால் அணைத்து நிற்கிறாய்
முழுவதுமாக என்னை
ஒப்புவித்திருக்கிறேன்
முந்தா நாள் இரவில்
நடந்த ஊடலை
நட்சத்திரங்கள் பேசி தீர்த்துக்கொண்டிருக்கின்றன
வானில் தெரியும்
அந்த வெளிச்சம்
ஏதோ ஒரு செய்தியை
ஒளித்துவைத்திருக்கிறது
யாருக்கு வேணும் அது எல்லாம்
நீ என்னை அணைத்திருக்கும்போது...

என் தோழமையே...



நான் இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியை நீ காணவே இல்லை. உன் காலடிகளை சேமிக்கும் போதுதான் நான் அதை தெரிந்துக்கொண்டேன்.
‘செவென் பவுண்ட்’  திரையில் வரும் Ben விடவும் குழப்பவாதி நீ.  கவிதை, கட்டுரை, விமர்சனம்,கதை என சம்பந்தமில்லாத ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்கிறாய்.  உன் குழப்பங்களை நியாயப்படுத்த அதை பிறர் மீது திணித்து ஆலிங்கனம் செய்கிறாய்.

இம்மனநிலை ஒரு மனநோயாளியிடம் கலவி கொள்ளுவதைவிட கடினமான ஒன்று அல்லவா... இருந்தபோதும் உன்னுடன் எனது நட்பு மாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு மாதிரி பிரகாசம் கொண்டதல்லவா? என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளிவாசல்,  சூரிய உதயத்தின் போது இறக்கைகள் முளைத்து பறப்பதைப் போல ஒரு கணத்தில் பறக்க முற்படுகிறது இந்த தெய்வீக தோழமை.

நீயும் நானும் எழுதிக்கொள்ளாத 100 கடிதங்களை, நம் தோழமையை பேசாத மிச்ச நாட்கள் எழுதி முடித்திருந்தது. தோழனே தற்கொலையை தூண்டும் அந்த பாடலை இன்று நான் நூறாவது முறையாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அக்கணம்
எங்கோ தன் காதலியை துப்பாக்கியால்
ஒருவன் சுட்டுத்தள்ளினான்
குடும்பத்துடன் ஒரு விபத்து நிகழ்ந்தது
சூடானில் ஓர் அழகிய குழந்தை பிறந்தது
நத்தையின் வீடு சிறுவனால் உடைக்கப்பட்டிருந்தது
இன்னும்
இத்தியாதிகள்... இத்தியாதிகள்...
எல்லாம் சூடான ரத்தத்தில் குளித்த சம்பவங்கள்..

தோழனே- நீ
புது தோழியின் விண்ணப்பத்தை
ஏற்றுக்கொண்டிருக்கிறாய்...
நான் நூறாவது முறையாக
அந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன்..