வியாழன், 28 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 6

தொதவ சிறுவர்கள்
வீடு என்பது ஒரு மனிதனுக்கு என்னவாக இருக்கிறது என்ற கேள்வியும், தேவை, வசதி என்பது வகுத்துக்கொள்ளும் முறையில் விவசாயிகளும் பணக்காரர்களும் எப்படி வேறுபடுகிறார்கள் என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது.  இதுகுறித்து நான் சாகுலிடம் கேட்டுக்கொண்டே வருகையில் எங்களின் கார் தொதவர்கள் குடில் இருக்கும் பொட்டானிக்கல் கார்டன் கார் நிறுத்துமிடத்தில் நின்றது. 

பொட்டானிக்கல் கார்டனின் நுழைவாயிலில் தெருவோர வியாபாரிகள் பரபரப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சள் மலர்களை கூடையில் அடுக்கி வியாபாரத்திற்கு வைத்திருந்தது பார்க்க அழகாக இருந்தது.  பிடிக்கும் அனைத்தையும் புகைப்படக்கருவியில் பதிவு செய்துக்கொண்டே நடந்தேன்.  தொதவர்களின் குடிலை நோக்கி போவதற்கு அங்கிருக்கும் அதிகாரிகளின் அனுமதியை வாங்க வேண்டுமா என்றொரு கேள்வி சாகுலுக்கும் எனக்கும் இருந்தது. ஒரு வேளை, அதிகாரிகள் நிராகரித்தால், எனவே சென்றுவிடலாம், யாரும் தடுத்தால் அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்கலாம் என ஏக மனதாக முடிவெடுத்து நானும் சாகுலும் முன்னேறிக்கொண்டிருந்தோம். 


பூங்காவின் நுழைவாயில்
தொதவர்கள் என்பவர் யார்? 

பூர்வக்குடிகளின் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், மலேசியாவைச் சார்ந்த பூர்வக்குடிகளை நான் சந்தித்து பேசியது இல்லை. இந்தியாவில் தமிழ் சமூகத்தை ஆய்வு செய்ய நேர்ந்தால் அது தமிழக பழங்குடியிலிருந்துதான் தொடங்க நேரிடும் என்ற சொல்லாடல் மிகைப்படுத்தியது இல்லை. பழங்குடிகளின் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் ஊர்களையும் ஆங்கில உச்சரிப்பு முறையில் பதிவு செய்ததால் எண்ணற்ற பதிவுகள் தவறாக பதிவாகின. இந்தியாவின் ஊர், சாதி, மலை, கடல் எனப் பலவற்றின் பெயர்கள் ஆங்கிலமயமாக்கப் பட்டதின் விளைவாகத் தவறான உச்சரிப்புடன் அரசு பதிவுகளில் இடம்பெற்றன. தொதவர்கள் என்ற பழங்குடியை தோடர்கள்
என்று தற்போது பரவலாக அழைப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகவும். ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் எந்தத்  தொதவரும் தம்மை ‘தோடா’ எனக்கூறுவதில்லை. ‘ஒல்’ (மக்கள்) என்றே தம்மைக் கூறிக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் ‘கொடா’ என்னும் வழக்கு ஏற்பட்டு அச்சொல்லின் திரிபே ‘தோடா’வாக மாறியது என தமிழகப் பழங்குடிகள் எனும் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொதவர்களின் அண்டைச் சமூகத்தவர்களாக வாழும் படுகர்கள் அவர்களைத் ‘தொடவா’ என்றும், கோத்தர், தொன் என்றும் அழைக்கிறார்கள். மற்ற தமிழர்கள் அவர்களை துதவர் என்றழைக்கிறார்கள். உண்மையில் தொதவர் எனும் சொல் கன்னடச் சொல்லிலிருந்து உருவானது என்ற கருத்தும் உண்டு.
தமிழக பழங்குடிகளைப் பற்றிய ஆய்வில் நீலகிரிப் பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தொதவர்கள் என்கிற தோடர்கள் இந்த
வட்டாரத்தில் அதிகம் வசிப்பதோடு அவர்களின் திருவிழாவும் நீலகிரியில்தான் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தொதவர்களின் அடையாளம் என எருமைகள் இருக்கின்றன. அதனாலேயே ‘எருமையின் குழந்தைகள்’ என தொதவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மொழி தோடா, துடா, துத எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுகிறது. இம்மொழியின் ஆதிமூலம் குறித்துப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் அமெரிக்க மொழியியல் அறிஞர் எமனோ இம்மொழியை விரிவாக ஆய்வு செய்து இது ஒரு திராவிட மொழியென்று தெரிவித்தார். மேலும், தோட, கோத்த மொழிகள் நீலகிரிக்கே உரிய தொல் மொழிகள் எனவும் அவர் ஆய்வில் கண்டு பிடித்தார் எனவும் பதிவுகள் சாட்சி கூறுகின்றன.

ஆதிக்க சாதியினராக இருக்கும் பிராமணர்கள் தொதர் எனும் பழங்குடியினருக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்திருக்கிறது கேட்பதற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நெருப்புக்கு அவர்கள் அளித்த மரியாதையையும் பிராமணர்களை அவர்கள் வெறுத்ததையும் பக்தவத்சல பாரதி எழுதியிருப்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன்.

தீப்பெட்டி நெருப்பை தொதவர்கள் சமையல் அறைக்கும், சுறுட்டு புகைக்கவும் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் சார்ந்த சடங்குகளில் தீப்பெட்டியை நுழைய விடவில்லை. பலநூறு ஆண்டு காலமாகப் புனிதச் சடங்குகளிலும் பால்மாடத்திலும் தீயைக் கடைந்து உருவாக்கும் நெருப்பே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தீயைக் கடைந்தெடுக்கும் போது யாரும் பார்க்காதவாறு மறைவாக அமர்ந்து கடைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. தொதவர்களின் பால்மாடத்திற்குள் பிராமணர்களை அனுமதிப்பதில்லை என்றும் அவ்விடத்தில் பிராமணர் ஒருவரால் தொடப்பட்ட பொருள்களை தொதவர்கள் தூக்கி எறிந்தனர் என்றும் ஹார்க்கென்ஸ் என்ற ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். தொதவர் இனத்தில் ஒரு சிறுவனைப் பால்கறக்கத் தகுதியுடையவனாக ஆக்குவதற்கு ‘தெககெராட்’ என்ற  சடங்கு செய்யப்படுகிறது.

ஊட்டியில் செயற்கை பூங்காவைத்தாண்டி உள்பகுதியில் இருந்த தொதவர் சிலர் வசிக்கும் பகுதியை நானும் சாகுலும் சென்றோம். எங்களைத்தவிர வேறு யாரும் அதை காண்பதற்கு ஆர்வம் கொண்டதாகத் தெரியவில்லை.  அங்கு அப்படியான பழங்குடியினர் வசிக்கிறார்களா? என்ற விவரம் பலருக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். முன்னதாக பூங்காவைப் பற்றிச் சொல்ல வேண்டும். அந்தக் குழுமையான சூழலுக்கு ஏற்றச் செடிகளை மிக நேர்த்தியாக பயிரிட்டு பராமரித்து இருக்கிறார்கள்.

குடும்பமாகவும், பணியிடத்து நண்பர்கள் குழுவும், மாணவர்கள் குழுவும் மிக அதிகமாக அங்கு காண முடிந்தது. போட்டி விளையாட்டுகளை வைத்து அவர்களில் சிலர் விளையாடிக்கொண்டிருந்தது, அதை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் உற்சாகத்தை அளித்தது.


செயற்கை பூங்காவில் எனக்கு ரசிக்க எதுவும் தோணவில்லை. தொதவர்களை தெரிந்துகொள்ளவே ஆர்வமாக இருந்தது. முன் இரவிலிருந்து அந்த இனத்தைப்பற்றிய சிந்தனை என்னுள் பல கற்பனைகளை ஏற்படுத்தியிருந்தது. நானும் சாகுலும் பூங்காவைத்தாண்டி ஊசி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த மலையை அடைந்தோம். கொஞ்சம் களைப்பாக இருந்தது. ஊட்டியின் குளுமையைத் தாண்டி சூரியன் தன் ஒளிக்கதிரை பரப்பிக்கொண்டிருந்தது. ஊசி மரத்தில் பாய்ந்த சூரியக்கதிரின் மிச்ச ஒளி மண்ணில் விழுவதை பார்க்க அத்தனை அழகாக இருந்தது. இனி அந்தக் காட்சியை என் ஜென்மத்தில் மீண்டும் காண்பேனோ இல்லையோ?

"சாகுல் இவ்விடத்தில் கொஞ்சம் உட்கார வேண்டும், மேலும், கொஞ்சம் தனிமை வேண்டும்” என்றேன்.

இங்கிதம் தெரிந்தவர் சாகுல். சின்னதொரு புன்னைகையோடு எனக்கான இடைவெளியை கொடுத்தார். அமர்ந்தேன்; அந்த மண்ணில் கொஞ்சம் தலைசாய்க்கவும் செய்தேன். என்ன ஓர் ஏகாந்தம்? இந்த நூற்றாண்டின் முதல் அதிர்ஷ்டசாலி என்ற பட்டியலை தயாரித்தால் அதில் எனது பெயர்தான் முதல் இடத்தை பெறும். அது எத்தனை பெரிய சுகம் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தேன். நானும் சாகுலும் தொதவரின் இருப்பிடத்தை அடைந்தோம். ஓர் அகன்ற நிலப்பரப்பில் சில முரட்டு மாடுகள் மேய்ச்சலில் இருந்தன. மூன்று சிறுவர்கள் குடிசை மாதிரி இருந்த குடிலுக்கு ஓரமாக உட்கார்ந்திருந்தனர். அந்த இடம் மிக அழகாக இருந்தது. சாகுல் சொன்னார் " இதுதான்  தொதவர்களின் மத்து (வீடு). அருகே சென்று காணலாம் என்று நெருங்கினோம். மாடு மேய்ச்சலில் இருந்த சிறுவர்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல்...

"ஏய் நில்லுங்கள்! இங்கே எல்லாம் நீங்கள் வரக்கூடாது. அதுவும் பெண் வரவேக் கூடாது. எங்கள் இனப்பெண்கள் அந்த எல்லையை கடக்க மாட்டார்கள். நீ அதை தாண்டி வந்தது மட்டுமல்லாமல் குடிலை நெருங்க  போகிறாயா?" என்று சத்தம் போட்டனர். கையில் நீளமான குச்சி வேறு.

"ஏன் போகக்கூடாது"? என்றேன்.
"அந்நிய பெண்களை இங்கே அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.
"அந்தக் குடில்  ஒரு வீடுதானே; ஏன் போகக்கூடாது" என்றேன்.
"அது வீடு இல்லை கோயில்" என்றனர்.

நான் கோயிலா என்ற ஆச்சரியத்தில் நின்றேன். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஓர் அடிக்கூட அந்தச் சிறுவர்கள் எடுத்து வைக்கவிடவில்லை. "பெரியவர்கள் யாரையும் சந்திக்க முடியுமா?" என்று கேட்டேன்.

கோயிலுக்கு முன்
மறுநாள் அவர்களுக்கு பெரிய விழா என்பதால், தற்போது எல்லாரும் வேலையில் இருக்காங்க என்று சிறுவர்கள் பதில் கொடுத்தனர். தொதவர்களின் மத்து இதுவரை நான் காணாத ஒன்று. சினிமாவிலும்கூட அதைப்பார்த்ததில்லை. தொதவர்களின் மத்து அரைவட்ட  வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அது அவர்களிடம் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிவகை என கூறப்படுகிறது. கோயில் என்று அவர்கள் சொன்ன அந்தக் குடிலின் நுழைவாயில் மிகக் குறுகியது. கூனிக் குறுகி தவழ்ந்து சென்றாலும் உள்ளே நுழைய முடியுமா என்று தெரியவில்லை. ஜன்னல்களோ அல்லது காற்று உள்நுழையும் அல்லது வெளியேறுவதற்கு வேறு ஒரு துவாரமோ இல்லை. வைக்கோல் போர்த்திய பாணி. தூண்களாக மூங்கில்கள் குடிலை தாங்கி பிடித்திருந்தன. நுழைவாயில் இடத்தில் பாம்பு பின்னி இருப்பதைப் போன்ற சுவர் படம். அமர்வதற்கு கோயிலைச் சுற்றி பெரிய கற்களைக் கொண்டே அமைத்திருக்கிறார்கள். உள்ளே தெய்வமாக வழிபடும் அந்த உருவத்தை (பிம்பத்தை) தெரிந்துக்கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால், அதைப்பற்றி அந்தக் கோபக்கார சிறுவர்களிடம் கேட்க அச்சமாக இருந்தது.

நேரம் எங்களுக்கு சாதகமாக இல்லாமல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.  இரவு வருவதற்குள் முதுமலை வனத்தை அடைய வேண்டும் இல்லையா?  கிளம்பலாம் என முடிவெடுக்கையில் அங்கு ஒரு ஆட்டோ வந்தது. "வருகிறீர்களா? கீழே இறக்கி விடுகிறேன்" என்றார் ஆட்டோ ஓட்டுநர்.  

"நீங்கள் ‘தோடா’ இனத்தை சேர்ந்தவரா"? என்று சாகுல் கேட்க, ஆட்டோக்காரர் ஆமாம் என்று  சொல்ல, எனக்கு வாயெல்லாம் பல்லாய் போனது. ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம்.

"உங்களின் திருவிழா எங்கு நடக்கிறது?" என பேச்சை தொடங்கினோம். “நீலகிரியில் கொண்டாடுவோம். கொண்டாட்டம் என்றால் ஒன்றுகூடுதல்தான். அங்கு ஆண்கள்-பெண்கள் என பாரம்பரிய நடனங்களை குழுவாக ஆடுவர். எங்கள் இனத்தின் பூர்வீகம் குறித்த ரகசியத்தை யாரும் அறிய மாட்டார்கள். அது எங்களுக்கே தெரியாத ரகசியம்" என அவர் கூறினார்.
எனக்கு அவர்களின் திருமண முறைகுறித்து தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. கிடைத்திருக்கும் சொற்ப நேரத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் அதை குறித்து கேட்டேன். இது அவர் கொடுத்த விவரம்..

“எங்கள் சமூகத்தில் ஆண்-பெண் காதல் வயப்பட்டு விருப்பம் தெரிவித்தால் அவர்கள் இருவரையும் தனியாக அனுப்பி வைப்போம். 6 மாதங்கள் ஒன்றாக தங்கி அந்தப் பெண் கர்ப்பம் தரிக்க வேண்டும். அவள் கர்ப்பம் தரித்தால் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பார்கள். இல்லை என்றால் அந்தப் பெண்ணை அவள் வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுவார்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு திருமணச் சடங்குகள் நடக்கும். மாப்பிள்ளை வீட்டார் புடவை, பூ என பெண்ணுக்கு சீர் கொண்டுச் சென்று 250 ரூபாயை பெண் வீட்டில் கொடுத்து அவளை அழைத்துவந்து விடுவார்கள். இதுதான் சடங்கு."

எனக்கு தூக்கிவாரிபோட்டது. "அப்படி என்றால் அந்தப் பெண்ணை 250 ரூபாய்க்கு விலைக்கு வாங்குகிறீர்களா?" என்றேன். எந்தக்குற்ற உணர்வும் இல்லாமல் ஆமாம் என்றார். நானும் சாகுலும் மாறி மாறி முகத்தைப் பார்த்துக்கொண்டோம். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. நீண்ட சிந்தனையில் மூழ்கிக்கொண்டிருந்தேன். அதற்குள் பூங்காவின் முகப்பு வந்துவிட்டதால் என் சிந்தனைக் கயிற்றை அறுத்துக்கொண்டேன்
.
தொதவ பெண் ஒருவர் அவர்களின் மத்துக்கு முன் விற்பனை செய்துக்கொண்டிருந்த கைவினைப்பொருள்களில் ஏதாவது ஒன்றை வாங்க ஆசையாக இருந்தது. வாசனைத் திரவியங்கள், சவர்க்காரம், தைலம், கைப்பை, அவர்கள் அணியும் பாரம்பரிய பால்நிற மேற்துண்டு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு இருந்தன. எனக்கு கைப்பையும் அவர்களின் மேற்துண்டும் பிடித்திருந்தது. விலை கொஞ்சம் அதிகமாக இருந்ததால் நான் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.

என் இந்தியப் பயணத்தின் முக்கியமான பதிவாக தொதவர்களைப் பற்றிய அறிமுகத்தைத்தான் சொல்வேன். புதிய விஷயம், அதுவும் பழங்குடிகள் சம்பந்தப்பட்ட ஒரு அறிமுகம். இந்த பதிவை எழுதும்போது அதை அழகாக செய்ய வேண்டும் என்றும் அவர்களைப்பற்றி இன்னும் சில விஷயங்களை தெரிந்துகொண்டு இந்தப் பதிவை எழுத வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கு தோன்றியது.
அமர்வதற்கான இடம்

தொதவர்களைப் பற்றி பக்தவத்சல பாரதி எழுதிய ‘தமிழக பழங்குடிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய குறிப்புக்கள் தொதவர்களைப் பற்றிய ஒரு தெளிவான அறிமுகத்தை எனக்கு கொடுத்தது. தொதவர்களைப் பற்றி நான் படித்து தெரிந்துக்கொண்ட சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்கொள்வது இந்த பதிவுக்கு மேலும் சுவாரஷ்யத்தைக் கொடுக்கும் என தோன்றுகிறது.

சில சமூகத்தினர் போன்று தொதவர்களின் ஆயர் சமூகத்திலும் பெண் சிசுவை பொருளாதார சுமை எனக்கருதி பிறந்தவுடன் கொன்றுவிடும் வழங்கம் இருந்துள்ளது. நீலகிரியில் தொதவர்களிடம் ‘கெது’ என்ற சடங்குகளில் எருமைகளைக் கொல்வதும் புனிதமாக இருந்துள்ளது. ‘கெது’ சடங்குகளில் பலியிடும் எருமைகளை அடித்தே கொன்றனர். முன் பழங்காலத்தில் தொதவர்கள் மேற்கொண்ட பெண் சிசு கொலையில், சாணக் குவியலுக்கு அருகே நின்றுக்கொண்டிருக்கும் எருமைகளில் கால்களுக்கு நடுவில் சாணத்தின் மீது பெண் சிசுக்களை எறிந்து விடுகிறார்கள். ( இதனை இன்றுள்ள தொதவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை) தாங்கள் தெய்வமாக மதிக்கும் எருமைகளிடம் பெண் சிசுக்களை எறிந்து விடுவதின் மூலம் சிசுக்கொலை எனும் குற்ற உணர்விலிருந்து மீண்டு விடுவதாக எண்ணினார்கள்.
மானிடவியல் நோக்கில் பார்க்கும் போது பெண் குழந்தைகளின் குறைவான தேவையை உணர்த்துவதாகவே பெண் குழந்தைக் கொலை (infanticide) காணப்படுகிறது.

இதன் தாக்கமாக இவர்களிடம் பல கணவர்முறை (Polyandry) தோன்றியது. ஆங்கிலேயர்கள் வரும்வரை நீலகிரித் தோதவர்களிடம்கூட பெண் சிசுக்கொலை இருந்து வந்துள்ளது. பெண் குழந்தைகளை கொன்றுவிடும் சமுக அமைப்பில் பெண் பற்றாக்குறை இருப்பது இயல்பு. ஆதலின் ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் முறை ஆயர் சமூகத்தில் ஏற்பட்டது. பல ஆண்களும் சகோதரர்களாக இருந்ததால் இவர்களின் திருமணம் ‘பல சகோதர்கள் மணமாக’ அமைந்தது.

உலகிலேயே 5,500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டு வாழும் ஆயர்குடியினர் தொதவர்கள் மட்டுமே. ‘சைவ ஆயர்கள்’ எனச் சிறப்பாகக் கூறப்படும் இவர்களின் பாரம்பரிய அறிவும் நுணுக்கமும் இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள வாழ்க்கைத் தகவமைப்புகளும் உலக அளவில் எண்ணற்ற மானிடவியலர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊட்டியில் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இப்படி ஒரு பழங்குடியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமையும் என்று நம்பவே இல்லை. இன்னும் முதுமலையில் சந்திக்கப்போகும் பூர்வக்குடிகள் பற்றிய சிந்தனையும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. சாகுலின் கார் முதுமலை வனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.  

வனம் தேடும் சாம்பல் பறவை ! 5

தொதவர் பழங்குடிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் இணைய வசதியில்லை. கொஞ்ச நேரம் கொண்டு வந்திருந்த புத்தகத்தை திறந்து வாசிக்கத் தொடங்கினேன். எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை. கனவுகள் இல்லாத உறக்கத்திலிருந்து மறுநாள் விழித்தேன். ஊட்டியில் எனது காலை விடிந்தது சினிமாவில் வரும் காட்சிபோல இருந்தது. 

எனக்கு காப்பி குடிக்க வேண்டும் போல இருந்தது. தங்கியிருந்த அறையில் இருந்த தொலைபேசியை பயன்படுத்த தெரியவில்லை. பால்கனியில் நின்று ஊட்டியைப் பார்த்தேன். நேற்றைய இரவு வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த ஊட்டி, காலையில் குளித்து முடித்து அழகிய மங்கை என ஈரமாக இருந்தது.  அந்தச் சூழலில் என்னை படம் எடுத்துக்கொண்டால் நல்லா இருக்குமே என்று தோன்றியது. நாற்காலியை இழுத்து வெளியில் போட்டு அமர்ந்தேன். வெளிச்சம் பரவத் தொடங்கியது. குளித்துவிட்டு காலை பசியாற செல்லத் தயாரானேன். சாகுலை தொடர்புக்கொள்வதற்கான வசதியில்லை.  

அந்த தனிமை மேலும் சுதந்திரநிலையை என்னில் ஏற்படுத்தியிருந்தது. கண்ணாடியில் முகம் பார்க்க எனக்கு நானே அழகாகத் தெரிந்தேன். வெளியில் வந்தேன். சிற்றூண்டிச் சாலை இன்னும் திறக்கவில்லை. தங்கும் விடுதியை சுற்றியிருந்த பூங்காவை பார்த்து வரலாம் என கேமராவோடு கிளம்பினேன். காக்கைகள் பெரிய அளவில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.  புதிதாக மலர்ந்திருந்த மலர்களில் பனி படர்ந்திருந்தது. அப்படியே நடந்துச் செல்கையில் ஊஞ்சல் கண்ணில் பட்டது. எனக்கு பிடித்த விளையாட்டு அல்லவா? 

ஊஞ்சலில் அமரும் வேளையில் சாகுலும் வந்து சேர்ந்தார். சாகுலை பார்த்தவுடன் பெரிய உற்சாகம் ஏற்பட்டது. சாகுல் ஊட்டி ரொம்ப அழகு என்றேன். காண்பது எல்லாம் ரசிக்க வைக்குது என்றேன். சாகுல் அனைத்திற்கும் ஒரு சிரிப்பையே பதிலாகத்  தந்தார். கூட்டமாக இருந்த காகங்களைப் பார்த்து உங்களுக்கு காகங்கள் பிடிக்குமா?  என்றேன். காகங்கள் உண்மையில் அறிவாளிகள். கூடி உண்கின்றன. சில சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளப் போராடுகின்றன.  அதன் கருமை நிறத்தில் உள்ள வசீகரம் வேறு எந்த கரும் பறவைக்கும் இருப்பதில்லை என்று கூறிக்கொண்டிருக்கையில், காகங்கள் மிகப் பெரிய துப்புரவுத் தொழிலாளி என்று சாகுல் கூறினார். காகங்கள் இல்லை என்றால் இந்த பூமி கழிவுகளில் மூழ்கி, மரணத்தின் விளிம்பில்தான் இருக்கும். காகங்களால்  இந்த பூமிக்கு செய்யும் மிகப்பெரிய உபகாரத்தை ஒருவரியில் சொல்வதற்கு இது தவிர வேறு  பொருத்தமான வரிகள் இருக்குமா என்று தெரியவில்லை. 

தொடர்ந்து நானும் சாகுலும் தங்கும் விடுதியில் காலை உணவை எடுத்துக்கொண்டு, சாகுலின் இயற்கை அங்காடிக்கு காய்கறிகளை கொள்முதல் செய்யும் ஒரு தோட்டத்தை நேரில் காணச் சென்றோம். மலையின் மேல் உள்ள காய்கறி தோட்டம் அது. சரிவான மலைப் பகுதி. மிகப் பெரிய தோட்டத்திற்கு மத்தியில் சின்னதாக ஒரு வீடு. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் கொண்ட சின்னக் குடும்பம். எங்கள் வருகையை முன்கூட்டியே அவர்களுக்கு தெரியப் படுத்தி இருந்ததினால், எங்களுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். 

அந்தக் குடும்பத்தின் தலைவி மிக அழகான பெண். அழகான குரலில் உபசரித்தார். ஒரு புறம் தேயிலைத் தோட்டமும், மறுபுறம் பயிரிட நிலத்தை தயார் படுத்திக்கொண்டிருக்கும் நிலப்பரப்பு மத்தியில் நான் அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன் என்று தெரிந்து கொண்டதும்  பெண் பிள்ளைகள்  என்னை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களை சகஜநிலைக்கு கொண்டு வர விரும்பினேன். அவர்களை புகைப்படம் எடுத்தேன். 

முதலில் அந்தச் சின்ன பெண்களின் கொலுசு அணிந்த கால்களை படம் எடுத்தேன். அடுத்த அவர்களின் அம்மாவின் கால். இதுவரை பார்த்த கால்களிலேயே அவ்வளவு அழகான கால் பார்த்ததில்லை. உங்கள் கால்களை படம் எடுக்கிறேன் என்றதும், மண்ணாக இருக்கு கழுவிவிட்டு வருகிறேன் என்றார்.  அழகே அந்த மண் ஒட்டியிருப்பதுதானே என்றேன். அவருக்கு புரியவில்லை. புரியவேண்டிய அவசியமும் இல்லை. வெட்கம் தோய்ந்த முகத்துடன் நின்றார் அவர். கால்களை மட்டும் படம் எடுத்தேன். 

பின் அந்த அம்மா  தேநீர் கொடுத்தார். அதை தேயிலை தோட்டத்துக்கு மத்தியில் அமர்ந்து அருந்தியது புது அனுபவம். அந்த வீட்டுப் பையன் என் கேமராவையே பார்த்துக்கொண்டிருப்பதை வெகு நேரமாக அவதானிக்க முடிந்தது. சின்னக்குழந்தைகளின் ஆசை நாம் அறியாதது இல்லைதானே..

சின்ன வயதில் நான் பார்த்துப் பார்த்து ஏங்கிய விஷயங்கள் எத்தனை எத்தனை இருக்கும்? ஓர் ஏழை குழந்தைகளுக்கு கிடைக்கும் சின்னச் சின்ன  ஆசைகள்கூட பக்கத்தில் இருந்தும் கிடைக்காமல் ஏமாந்து போயிருக்கேன். குழந்தைகளின் ஏக்கத்தோடு விளையாடுவதற்குதான், வயது வந்த சிலருக்கு எத்தனை ஆவல்? என்னால் மற்ற சிறுவர்களின் உணர்வுகளை 100 சதவிகிதம் புரிந்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், ஓரளவு புரிந்துக்கொள்ள முடியும் தானே. "அக்காவை படம் எடுக்கிறாயா" என்றேன். எத்தனை உற்சாகம் அந்த சிறுவனின் முகத்தில். சரி அக்கா என்றான். அவனுக்கு படம் எடுக்க சொல்லிக் கொடுத்தேன். பிறகு அவனுடைய குடும்பத்தை படம் எடுக்க வைத்தேன். உங்கள் மகன் கெட்டிக்காரன். எவ்வளவு அழகாக படம் எடுத்திருக்கிறான் என்றேன். அந்த அம்மாவின் முகத்தில்தான் எத்தனை பெருமை. உண்மையாகவே சிறுவன் அழகாக படம் எடுத்திருந்தான். 
சிறுவன் எடுத்த புகைப்படம்

பிறகு,  வந்த வேலையை முடித்துக்கொண்டு புறப்பட்டோம். எனக்கு தொடர்ந்து அந்த குடும்பத்து நினைவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நிறைய பணம் இருக்கிறது. நில புலம் இருக்கிறது.  இன்னும் நிலம் வாங்குவதைப் பற்றித்தான் அவர்கள்  என்னிடமும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் தங்கியிருந்த வீடு ஒரு ஸ்டோர் ரூம் போல இருந்தது.   வீடு முழுவதும் அடைத்துக்கொண்டு பொருள்கள் இருந்தன. விவசாய குடும்பம் என்பதற்கு ஏற்றமாதிரி வீடு முழுவதும் மண் இரைந்து இருந்தது. விருந்தினர்கள் வந்துவிட்டால் அங்கு தங்குவது சிரமம்தான். இந்த வீடு தவிர வேறு வீடு வாங்கவில்லை என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.  

வீடு என்பது ஒரு மனிதனுக்கு என்னவாக இருக்கிறது என்ற கேள்வியும், தேவை, வசதி என்பது வகுத்துக்கொள்ளும் முறையில் விவசாயிகளும் பணக்காரர்களும் எப்படி வேறுபடுகிறார்கள் என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது.  இதுகுறித்து நான் சாகுலிடம் கேட்டுக்கொண்டே வருகையில் எங்களின் கார் தொதவர்கள் குடில் இருக்கும் பொட்டானிக்கல் கார்டன் கார் நிறுத்துமிடத்தில் நின்றது. 

(தொடரும்)





வெள்ளி, 22 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 4

அன்று இரவு நான் 'ஹோட்டல் தமிழ் நாடு' தங்கும் விடுதியில் தங்குவதற்கு சாகுல் ஏற்பாடு செய்திருந்தார். என்னை அங்கு விடும் முன்பு, இரவு உணவு சாப்பிட வேணுமா என்று கேட்டார் சாகுல். "எனக்கு டீ-காப்பி போதும்" என்றேன். "வேறு என்ன வேண்டும்?" என்றார். "ஊட்டியின் இரவைக் காண வேண்டும்" என்றேன். "நீங்கள் செய்த உதவி இதுவரை போதும் சாகுல். நாளை பார்க்கலாம். நான் தனிமையில் கொஞ்சம் இருக்க வேண்டும்" என்றேன். சாகுல், யோசிக்கத் தொடங்கினார். 
அவர் அவிலாஞ்சி செல்ல வேண்டும். பின் "இல்லை யோகி நான் உடன் வருகிறேன் என்றார். எனக்கு கொஞ்சம் சங்கடமாகி போனது. வீணாக அவருக்கு சிரமத்தை கொடுக்கிறேன் என்ற எண்ணம் வந்தாலும், சாகுல் உடன் வருகிறேன் என்றதும் எனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது. 
ஊட்டி ரொம்பவும் சின்ன பட்டணம் என்பது அதை வலம் வரும்போதுதான் தெரிந்தது.  கிறிஸ்துமஸ் தினம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நிறைய சுற்றுப்பயணிகளை அங்கு காண முடிந்தது. மக்கள் ஒருவகை பரபரப்பு சூழலிலேயே இயங்கிக் கொண்டிருந்தனர். 
ஆண்கள் -பெண்கள் என அனைவருமே குளிர் சட்டை அணிந்துக்கொண்டு சிலர் தொப்பி அணிந்துகொண்டு, காதுகளை மறைத்துக்கொண்டு  தன் அன்றாட தேவைக்காக ஓடிக்கொண்டிருந்தனர். 

சாகுலிடம் எனக்கு காப்பி வேண்டும் என்றேன். கையேந்திபவன் மாதிரி ஒரு கடை இருந்தது. இங்கே குடிப்பீர்களா என்றார், எல்லாரும் இங்கு குடிக்கும்போது என்னாலும் குடிக்க முடியும் என்றேன். பலகாரம் ஏதும் வேணுமா என்றார். வேண்டாம் என்றேன். காப்பி சுவைக்காக நாக்கு ஏங்கியபடி இருந்தது. சற்று நேரத்தில் சுடச்சுடக் காப்பி. எத்தனை முறை குடித்தாலும், எங்கு குடித்தாலும் காப்பியும் டீயும் சுவையாகவே இருந்தது. 

மேலும், நண்பர்கள் கூறியதைப்போல பெரிய அளவில் ஊட்டி குளிரவில்லை. ஆனால், மலைகள் மீது பனி மூடியிருந்ததும் பல இடங்களில் காணக்கிடைத்த ஊசி மரங்களும், சாலையின் சுற்றுவட்டத்தில் இருந்த நீரூற்றுச் சிலையும்  பார்த்துக்கொண்டே இருக்கும் ரம்மியத்தைக் கொடுத்தது.
ஊட்டியின் ஞாபகமாக ஏதாவது வாங்க வேண்டும் என சாகுலிடம் கூறினேன். ஊட்டியை வட்டமடிக்கையில் கண்ணைக் கவர்ந்த வெள்ளி நகைகளை விற்கும் கடை தென்பட்டது. அழகிய பரிசுப் பொருள்களும் அங்கு விற்பனைக்கு இருந்தது. அதனுள் நுழைந்தோம். அப்போதுதான் தெரிந்தது சாகுல் பொருள்களை பேரம்பேசுவதிலும் கெட்டிக்காரர் என்று. முடிந்தவரை பொருள்களை மலிவுவிலைக்கு பேரம்பேசிக்கொண்டிருந்தார். நான் ஒரு வெள்ளி மோதிரம் வாங்குவதற்கு விருப்பம் கொண்டேன். கடைக்காரர் சாகுலைவிட கெட்டிக்காரர், ஒரு பைசாவையும் அவரிடம் குறைக்க முடியவில்லை. பொருளை வாங்காமல் கடையைவிட்டு வெளியேறினோம். சாகுல் சொன்னார், அவர் அழைப்பார் என்று. கல் நெஞ்சம் கொண்ட அந்த வியாபாரி அழைக்கவே இல்லை. ஒரு சுற்று முடிந்த பிறகு, மீண்டும் வரலாம் என்று சாகுல் ஆலோசனை சொன்னார். அதன்படியே ஒரு சுற்று அல்ல இரண்டு சுற்று வந்தும் வியாபாரி விலையை குறைக்கவில்லை. பின் அவர் சொன்ன விலைக்கே மோதிரத்தை வாங்கினேன்.

எனக்கு திருப்தியாகத்தான் இருந்தாலும் சிறுவர்களைப்போல அந்த வியாபாரியிடம் நடந்துக்கொண்டதை பேசி பேசி நானும் சாகுலும் சிரித்துக்கொண்டோம். பள்ளி நாட்களை நினைவுப்படுத்தியது அந்த சம்பவம்.  சிப்ஸ் விற்கும் ஒரு பெரியவர் பார்வையை ஈர்த்தார். சிப்ஸ்களும் சுத்தமாகவும் புதிதாகவும் இருந்தன. அவர்கள் எடை நிறுத்த பயன்படுத்தப்பட்ட நிறுவைதான் அதற்குக் காரணம். அப்படியான நிறுவையை நான் மலேசியாவில் பாத்ததில்லை. ஆனால், வாங்கினால் வாங்குங்கள் இல்லை என்றால் போங்கள் என்பதைப் போன்ற தோரணையிதான் அவரின் வியாபாரம் நடந்தது. எத்தனை அனுபவம் பெற்றிருப்பார். இந்தக் கரார் வியாபாரத்திற்கு ஏதேனும் காரணம் இருக்கத்தானே செய்யும். எல்லாம் அனுபவமே என நினைத்துக்கொண்டு சொன்ன விலைக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ்  வாங்கிக்கொண்டு  கிளம்பினோம். சாகுல் இன்னொரு டீ என்றேன். சிரித்தார். வாங்கியும் கொடுத்தார். என்னை அறையில் விட்டுவிட்டு சாகுல் கிளம்பினார். 


மறுநாள் காலையில் ஊட்டியில் உள்ள ஒரு பூங்காவை ஒட்டி இருக்கும் தோதவர்  (தோடர்) பழங்குடிகளின் மத்து (வீடு)  இருக்கும் இடத்திற்கு செல்வதாக சாகுல் கூறியிருந்தார். முன்னதாக எது என் தேடலுக்கு தேவையோ அதை மட்டுமே எனக்கு காட்டுமாறு நான் சாகுலிடம் கூறியிருந்தேன். மேலும், இயற்கை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மட்டும் என்னை அழைத்துச்செல்லுமாறும், மனிதர்களால் உருவாக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படும் கேளிக்கை விஷயங்கள் வேண்டாம் என்றும் கூறியிருந்தேன். அதற்கு ஏற்றமாதிரி சாகுல் அழகாக திட்டமிட்டிருந்தார்.   

முன் வாசலை திறந்தால் வனத்தையும், பால்கனியை திறந்தால் மலைகள் கடைத்தெருக்கள் ஊசி மரங்கள் என  எனது அறை  இருந்தது. தனித்த இரவு, கொஞ்சம் நேரம் பால்கனியில் நின்று குளிரை உள்வாங்கினேன். கைப்பேசி இயங்காததால் யாரிடமும் பேச முடியவில்லை. முகநூல் செல்லவும் வழியில்லை. அன்றைய நாளை அசைப்போட்டேன். ஜெயராம் அண்ணாவும் அண்ணியும், நேசமணி அம்மாவும், இன்ப அதிர்ச்சிகொடுத்த விஜயா அம்மாவும் நினைவுக்கு வந்தார்கள். நீ எங்கிருந்தாலும் அங்கிருக்கும் இடத்தை எங்களுக்கு வாட்ஸ் அப் செய் என்ற எனது தோழிகள் சூரியா-மணிமொழி, எனது சந்துரு, என் செல்ல தங்கைகள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக என் தனிமை ஆக்ரமித்துக்கொண்டிருந்தனர். பெருமூச்சு எழுந்தது. அதிலிருந்து குளிர் காற்று வெளியாவது தெரிந்தது. மணி என்ன என்பதும் தெரியவில்லை. கண்களுக்கு நித்திரையும் வரவில்லை.


தோதவர் பழங்குடிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் இணைய வசதியில்லை. கொஞ்ச நேரம் கொண்டு வந்திருந்த புத்தகத்தை திறந்து வாசிக்கத் தொடங்கினேன். எப்படி உறங்கினேன் என்று தெரியவில்லை. கனவுகள் இல்லாத உறக்கத்திலிருந்து மறுநாள் விழித்தேன். ஊட்டியில் எனது காலை விடிந்தது சினிமாவில் வரும் காட்சிபோல இருந்தது. 

(தொடரும்)




வியாழன், 21 ஜனவரி, 2016

புத்தக விமர்சனம்
எழுதியவர் : ழாக் ப்ரெவெர்
மொமிழில்: வெ.ஸ்ரீராம்
பதிப்பகம் : கிரியா

கவிதையை எல்லாராலும் வாசிக்க முடியும். அனைவராலும் உள்வாங்குதல் முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், ஒருக் கவிதையை பலர் பலவாறாக புரிந்துகொள்வது அவரவர் வாசிப்புத் திறனை பொறுத்த ஒன்று. ஒரு படைப்பை படைத்தபின் அந்த எழுத்தாளன் செத்து போகிறான் என பேராசிரியர் நுஃமான் கூறுவார். அதன் பிறகு, அதற்கு உண்டான விமர்சனமும் கருத்துகளும் வாசிப்பாளனுக்கு உரியது. 

கவிதைகளில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் கொஞ்சம் தனித்துவமானவை. இன்னொரு நாட்டின் சூழல், வாழ்வியல் முறை, புனைவு உள்ளிட்ட விஷயங்களோடு சொல்லாடல்களையும் கிரகிக்கக்கூடிய வாய்ப்பு மொழிபெயர்ப்பு தொகுப்பில் அமைய நிறைய வாய்ப்பு உள்ளது. 

அண்மையில் நான் வாசித்த கவிதைப் புத்தகம் ழாக் ப்ரெவெர் எழுதிய  'சொற்கள்'. பிரெஞ்சு மொழியிலிருந்து வெ.ஸ்ரீராம் தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார். கையடக்க அளவில் பதிப்பித்துள்ள அந்த தொகுப்பை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

39 கவிதைகளில் 7 கவிதைகள் நெடுங்கவிதைகளாக இருக்கின்றன. காதல், சமுதாயம், பொருளாதாரம் என நாம் தினமும் கடக்கும் ஒன்றை ழாக் கவிதை மொழியில் கூறிச் செல்கிறார். பல இடங்களில் நம்மை நிறுத்தி வைத்து, இந்த வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறார். 

தொகுப்பின் முதல் கவிதை 'இந்தக் காதல்' என்ற கவிதையிலிருந்து துவங்குகிறது. 


இந்தக் காதல்
இவ்வளவு வன்முறையான
இவ்வளவு மென்மையான
இவ்வளவு மிருதுவான
இவ்வளவு நம்பிக்கையிழந்த

இந்தக் காதல்
பகல் பொழுதைப் போல் அழகாக
வானிலை மோசமாக இருக்கும்போது
மோசமாக இருக்கும்
அந்த வானிலையைப் போன்ற
இவ்வளவு நிஜமான இந்தக் காதல்
இவ்வளவு அழகான இந்தக் காதல்
இவ்வளவு மகிழ்ச்சியான
ஆனந்தமான 
மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான
இந்தக் காதல்
இருட்டிலுள்ள குழந்தைபோல் பயந்து நடுங்கியும்
ஆனாலும் இரவின் மத்தியிலும்
நிதானமிழக்காத மனிதனைப்போல்
தன்னைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன்
மற்றவர்களைப் பயமுறுத்திய
அவர்களைப் பேச வைத்த
வெளிறச் செய்த இந்தக் காதல்
நாம் கண்காணித்தோம் என்பதால்
கண்காணிக்கப்பட்ட இந்தக் காதல்
துரத்தப்பட்ட புண்படுத்தப்பட்ட தொடரப்பட்ட
இந்தக் காதல்
நாம் அதைத்
துரத்தி புண்படுத்தி தொடர்ந்து முடித்து மறுத்து
மறந்தோம் எனபதால்
இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதுடன்
முழுமையாக ஒளிர்ந்துகொண்டிருக்கும்
இந்தக் காதல் முழுமையாக
உன்னுடையது
என்னுடையது
எப்போதும் புதுமையான ஒன்றாக
இருந்து கொண்டிருப்பதோடு அல்லாமல்
மாறாதது
ஒரு தாவரத்தைப் போல் அவ்வளவு நிஜம்
ஒரு பறவையைப் போல் அவ்வளவு துடிப்பு
கோடைக் காலத்தைப் போல் அவ்வளவு சூடானது
அவ்வளவு உயிர்த்திருப்பது
நாம் இருவம்
போகலாம் திரும்பிவரலாம்
மறந்துவிடலாம்
மீண்டும் உறங்கிப்போகலாம்
விழித்துக்கொள்ளலாம் அல்லலுறலாம்
மூப்படையலாம்
சாவைப் பற்றிக் கனவுகாணலாம்
விழிப்புடன் இருக்கலாம்
புன்னகைக்கலாம் சிரிக்கலாம்
பின்னர் இளமையும் அடையலாம்
அங்கேயே நின்றுவிடுகிறது நம் காதல்
கழுதையைப் போல் பிடிவாதமாக
ஆசையைப் போல் துடிப்பாக
ஞாபகத்தைப் போல் கொடியதாக
மனக்குறைகளைப் போல் மென்மையாக
பளிங்கைப் போல் குளிர்ச்சியாக
பகல் பொழுதைப் போல் மிருதுவாக
புன்னகையுடன் நம்மைப் பார்க்கிறது
ஒன்றும் சொல்லாமல் நம்முடன் பேசுகிறது
நான் அதைக் கேட்கிறேன் நடுங்கியபடியே
கத்துகிறேன்
உனக்காக கத்துகிறேன்
எனக்காகக் கத்துகிறேன்
தயவுசெய்து கேட்கிறேன்
எனக்காகவும் உனக்காகவும்
ஒருவரையொருவர் நேசிக்கும்
நேசித்த அனைவருக்காகவும்
ஆம், நான் உன்னிடம் கத்துகிறேன்
உனக்காக எனக்காக எனக்குத் தெரிந்திராத
மற்ற அனைவருக்காகவும்
அங்கேயே இரு
எங்கு இருக்கிறாயோ
அங்கேயே
அசையாதே
போய்விடாதே
காதல் வயப்பட்டிருந்த நாங்கள்
உன்னை மறந்துவிட்டோம்
எங்களை நீ மறந்துவிடாதே
உன்னை விட்டால் இப்பூமியில் எங்களுக்கு
யாருமில்லை
எங்களை உறைந்துபோக விட்டுவிடாதே
மிகத் தொலைவிலும் எப்போதும்
எங்கிருந்தாலும்
இருக்கிறாய் என்று தெரிவி
காலந்தாழ்ந்து ஒரு வனத்தின் மூலையில்
நினைவின் கானகத்திலிருந்து
திடீரென்று வெளிப்படு
எங்களுக்குக் கரம் நீட்டு
எங்களைக் காப்பாற்று...


தொடக்க வரிகளில் காதலை புறவெளியிலிருந்து பார்வையை செலுத்துவதைப்போல ழாக் தொடங்கியிருக்கிறார். ஆனால் போகப் போக காதலை அகவெளிக்குள் கொண்டு வந்து, அதன் காலிலேயே மண்டியிட வைக்கிறார். வாசிப்பின் ஊடே அதை மாறுபடுவதை நம்மால் அவதானிக்க முடியவில்லை. அதுவே ழாக் உடைய மேஜிக்கோ என்றும் தோன்றுகிறது. 

"காதல் வயப்பட்டிருந்த நாங்கள்
உன்னை மறந்துவிட்டோம்
எங்களை நீ மறந்துவிடாதே" 
என்பது இந்தக் காலத்தின் அவசர நிலைக்கு ஏற்ற வரிகள். காதலை மறந்து, காதல் என்பதின் அர்த்தத்தை மறந்து, காதல் என்னை காதலிக்கவில்லை என்பது எத்தனை அபத்தம். 

தூங்காத இரவுகள் குறித்த கவிதைகளை எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். பெருவாரியாக இரவுக்கவிதைகள் வாசகனை ஏமாற்றுவதில்லை. ழாக்-க்கும் நம்மை ஏமாற்றவில்லை. 


இரவில் பாரிஸ்

இரவில் ஒன்றன்பின் ஒன்றாக
மூன்று தீக்குச்சிகள்
முதலாவது உன் முகத்தை
முழுமையாக பார்க்க
இரண்டாவது உன் கண்களை பார்க்க
கடைசியாக உன் இதழ்களைப் பார்க்க
பின் சுற்றிலும் இருள்
இதையெல்லாம் நினைத்துப்பார்க்க
என் கரங்களில் உன்னை இறுக்கியவாறு...

மற்றொரு கவிதையில்
மேசையின் மேல் ஒரு ஆரஞ்சுப் பழம்
தரைவிரிப்பின் மேல் உன் ஆடை
என் கட்டிலில் நீ
நிழல்காலத்தின் இனிய வெகுமதி
இரவின் புத்துணர்ச்சி
என் வாழ்வின் கதகதப்பு...

ழாக் ப்ரெவெர், அவர் கவிதையை புரிந்துகொள்ள அதிக சிரமம் நமக்கு கொடுக்கவில்லை. எளிய வரிகள். அதை மிகவும் அழகாக மொழிபெயர்த்திருக்கும் 
வெ.ஸ்ரீராமை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 
இரண்டாம் உலக போர் சூழலில் எழுதப்பட்ட 'சொற்கள்' (Paroles) அக்கவிதைகள் அப்போதே மக்கள் மத்தியிலும் ழாக் ப்ரெவெர் மத்திலும் பெரிய வரவேற்ப்பு பெற்றதாக  அவர் பற்றிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் 'பார்பரா' என்ற கவிதை எனக்கு நெருக்கமானதாக இருந்தது. 

நினைவுபடுத்திப்பார், பார்பரா
ப்ரெஸ்ட் நகரத்தில் அன்று
இடைவிடாமல் மழை பெய்தது
புன்னகையுடன் நீ கடந்து சென்றாய்
மலர்ந்து மகிழ்ந்து நீர் வழிந்தோட
மழையிலே நனைந்து
நினைவுபடுத்திப்பார், பார்பரா

என்று தொடங்கும் கவிதையில் , 

உன்னை  'நீ' போட்டு அழைக்கிறேனென்று
கோபிக்காதே
எனக்கு பிடித்தவர்களையெல்லாம்
'நீ' என்றே அழைப்பேன்
ஒரே முறைதான் பார்த்திருந்தாலும்
பரஸ்பரம் நேசிப்பவர்கள்  அனைவரையும்
'நீ' என்றே அழைப்பேன்

கவிதையில் வரும் பார்பராவை போலதான் நானும். 'நீ' என்று ஒறுமையில் அழைப்பவர்களை அப்படி அழைக்காதீர்கள் என எச்சரித்திருக்கிறேன். சில நண்பர்கள் ழாக் கூறியிருப்பதைப்போலத்தான் எனக்கு பதிலளித்துள்ளனர். அந்த கவிதை வரிகளை வாசிக்கும்போது  மௌன புன்னகையை உதிர்க்காமல் இருக்க முடியவில்லை என்னால்.  சில நிமிடங்கள் ழாக் ப்ரெவெரின் பார்பராக இருந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தக் கவிதையின் ஓரிடத்தில் 
"என்ன மடத்தனம் இந்தப்போர்"  என போரின் நினைவுகளையும் ஏற்பட்ட இழப்பையும்  பதிவு செய்திருக்கிறார் ழாக்.  பார்பராவின் காதலன் யாரோ என அவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் அவர் சம்பந்தப்பட்டது என கவிதையிலேயே தெரியப்படுத்தும் விதம் மிக நேர்த்தியானது. 
ழாக் சில காலம் சர்ரியலிஸ இயக்கத்தில் இருந்திருக்கிறார். அதனால் அந்த இயக்கத்தின் பாணி அவரின் படைப்புகளில் ஆங்காங்கே தென்பட்டாலும், அவற்றையும் மீறீ இவருடைய படிமங்களின் தொகுப்பும் கற்பனையின் வெளிப்பாடும் இயல்பாகவே இருக்கின்றன என்ற வரி அவரைப்பற்றிய அறிமுக குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளை வாசித்துவிட்டு, அவரைப்பற்றிய குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கும்போது மனதை பாதித்த சில கவிதைகளின் பக்கங்களை தேடி விரல்கள் போகிறது.   
இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த பல கவிதைகள் இருக்கின்றன. கதவைப்பற்றிய இரு கவிதைகள், முதலாளித்துவத்தை சுட்டும் கவிதைகள் என சொல்வதற்கு நிறைய உள்ளன. மொத்தத்தையும் சொல்வது இந்த தொகுப்புக்கும் ழாக் எனும் கலைஞனுக்கும் செய்யும் மரியாதை அல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் மறுவாசிப்பு செய்யும்போது எனது பார்வை இக்கவிதைகளில் மாறுபடும் என நானே நம்புகிறேன். 

இலையுதிர் காலம்

நிழற்சாலையொன்றின் மத்தியில்
துவண்டு விழுகிறது குதிரை
அதன்மேல் விழுகின்றன இலைகள்
நடுங்குகிறது நம் காதல்
சூரியனும்கூட.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இழந்த நேரம்

ஆலையின் கதவுக்கு முன்னால்
திடீரென்று நிற்க்கிறான் தொழிலாளி
அவன் அங்கியைப்
பிடித்து இழுத்தது
இனியை வானிலை
திரும்பிப் பார்த்த அவன்
சூரியனைப் பார்க்கிறான்
முற்றிலும் சிவப்பா
முழு உருண்டை
ஈயம் பூசிய வானிலிருந்து
புன்னகைத்தவாறு
அவனைப் பார்த்து கண்ணடிக்கிறது
பரிச்சயத்துடன்
தோழன் சூரியனே! நீயே சொல்
இது போன்ற ஒரு நாள் பொழுதை
முதலாளிக்கு அர்ப்பணிப்பதென்பது
சுத்த மடத்தனம் என்று
தோன்றவில்லையா உனக்கு....

தனது கவிதைகளில் 
நிலைகொள்ளாமல் செய்து கொண்டிருக்கிறார் ழாக். சில கவிதைகளில் காதலாகி கசிந்துகொண்டிருக்கிறேன். 
சில கவிதைகளில் இருக்கும் நகைச்சுவை உணவை சிரித்து கடக்கிறேன். சிலக் கவிதைகளில் என்னை தேடிக்கொண்டிருக்கிறேன். 
-யோகி

(இந்த புத்தகத்தை மலேசியாவுக்கு வந்திருந்தபோது எனக்கு பரிசளித்த எழுத்தாளர் இமையம் அண்ணாவுக்கு எனது நன்றி.)

புதன், 20 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 3

நானும் சாகுலும் முதுமலை வனபயணத்தைத் தொடங்கினோம். இடையில் ஒரு நாள் ஊட்டியைச் சந்தித்துவிட்டு, மறுநாள் காலையில் முதுமலை வன அதிகாரியையும் சந்தித்துவிட்டு, வனத்தையும் அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளையும் சந்திக்கலாம் எனத் திட்டம். ஊட்டியை நோக்கிய பயணமும் அதைக்கடந்த தூரமும் கொஞ்சமும் சளிப்புத் தட்டாமல், "வா என்றும் என்னைக் காண் என்றும் அழைத்துக்கொண்டிருந்தாள்  வனதேவதை.

சாகுலின் கார், குதிரை வேகத்தில் ஊட்டியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. இடையில் வானம் காட்டும் வர்ண ஜாலங்களும், மக்களின் முகங்களும், சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்களும் பல கதைகளை  பேசியவாரே  உடன் பயணிக்கத் தொடங்கின. எல்லாவற்றையும் நான் சாகுலிடம் சின்ன சின்ன கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அனைத்திற்கும் பின்னாலும் ஒளிந்திருக்கும் அரசியல் லேசாக எட்டிப் பார்த்தபடியே இருந்தன. 

பயணத்தின் சில மணி நேரத்திற்கு பிறகு, ஓடிக்கொண்டிருந்த நீரோடை கவனத்தை ஈர்க்க, சாகுல் என்றேன் மறுபேச்சு பேசாதவர் வண்டியை நிறுத்தினார். "இப்படி வழியில் நிறுத்துவது சரியா? வேண்டாம் சாகுல், கிளம்பலாம்" என்றேன்.  "ஒன்றும் சிக்கல் இல்லை; கால் நனைத்து வரலாம் யோகி" என  இறங்கி நடக்கத் தொடங்கினார்.  அழகான நீரோடை. ஆழமில்லாமல்  தண்ணீர் தரையோடு ஓடிக்கொண்டிருந்தது. ஓர் இளம்ஜோடியைத் தவிர யாரும் அங்கு இல்லை. அவர்களின் தனிமைக்கு அதிகம் சோதனை வைக்காமல் நானும் சாகுலும் அங்கிருந்து கிளம்பினோம். அது மாதிரி ஓர் இரு இடங்கள் அல்ல. மனதுக்கு தொந்தரவு செய்யும் எந்த இடத்திலும் வண்டியை நிறுத்தி கண்ணாற பாருங்கள் என சாகுல்  எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். 

மலைவளைவுகளில் எழுதப்பட்டிருந்தா அறிவிப்பு பலகையில் இருந்த 'கொண்டை ஊசி வளைவு'   என்பது நகைச்சுவையாக இருந்தது. மிக அடர்ந்த காடுகளும், விருட்சங்களும், அதை சூழ்ந்துள்ள பனிமூட்டமும் மனதுக்கு பேரானந்தத்தைக் கொடுத்தன.  தொடர்ந்து கண்டுக்கொண்டே இருந்தாலும் காணக் காண மனது, அதை வேண்டிக்கொண்டே இருந்தது. எனக்கு காப்பி-டீ வேண்டும் என்ற கணத்திலெல்லாம் எந்த சிரமமும் இல்லாமல் சாகுல் வாங்கிக் கொடுத்தார். அத்தனை இயல்பாக எதார்த்தமான ஒரு பயணம் அமையும் என நான் நினைக்கவே இல்லை. 

வெளிநாட்டில் இருக்கிறேன்; அந்நியரோடு பயணம் செய்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஓரிடத்திலும்   ஏற்பட விடவில்லை. அதைவிடவும் நான் என் பயணத்தில் சந்தித்த ஆட்கள் உடையிலும், வாழ்வியலும் மாற்றம் கொடுத்தாலும் பழகுவதற்கு எந்த மாற்றமும் அவர்கள் காட்டவில்லை. ஆனால், முதல் பார்வையிலேயே நான் உள்ளூர் வாசி இல்லை என்பதை எப்படித்தான் ஸ்கேன் செய்து கண்டு பிடிக்கிறார்களோ தெரியவில்லை. 

ஊட்டியை நெருங்க நெருங்க தப்ப வெட்ப நிலை குளிருக்கு மாறிக்கொண்டிருந்தது ரம்மியமான சூழல். மலை உச்சியிலிருந்து வெள்ளை தாவணிபோல நீண்டிருந்த ஒரு பிம்பத்தைக் காட்டி, சாகுல் சொன்னார். "அது ஒரு நீறூற்று.தெரிகிறதா" என்று. நன்றாகத் தெரிந்தது. ஆனால், என் புகைப்படக்கருவியில் படம் எடுப்பதற்கான சூழல் இல்லை. நான் குறிப்பிட்ட அளவு மட்டுமே  zoom செய்து படம் எடுக்கக்கூடிய கெமராவை வைத்திருந்தேன். காரில் செல்லும் அந்த நிமிடத்தில் காணக்கிடைத்த அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து கடப்பதைவிட, கண்ணாரக் கண்டு கடப்பது இன்னும் ஆழமாக மனதில் பதியும் இல்லையா?   எனக்கு அந்த வனத்தைக் கடக்கும் போது ஜெயமோகனின் 'காடு' நினைவுக்கு வந்து வந்து போனதை தவிர்க்க முடியவில்லை. சாகுல் காடு  நாவலை வாசித்திருக்கவில்லை. ஆதலால் அதைப்பற்றி அவரிடம் பேச முடியவில்லை. ஆனால், நான் வாசித்த நாவல்களின் கதா பாத்திரங்களையும், இடத்தையும் ஒத்தமாதிரி ஏதாவது  காட்சிகள் அமையும்போது அதைப்பற்றி நான்  சிலாகிக்கும் போதெல்லாம் சாகுல், ஒரு நாவலை உள்வாங்கும் அமைதியில் அதை கேட்டுக்கொண்டிருந்தார்.  இலக்கியம் பேசுவதும்,  அதை கேட்பதும் எனக்கு பிடித்தமான ஒன்று. சாகுலுக்கு அது அலுப்பு தட்டுமோ என சுதாகரித்து "சாகுல் ரொம்ப போர் அடிக்கிறேனா? வேறு பேசலாம்." என்றேன். 

"இல்லை யோகி. ஒரு காலத்தில் அதிகம் வாசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அது குறைந்துவிட்டது. நீங்கள் பேசுவது ஆர்வமாக இருக்கிறது என்றார்.  என்னுடைய  எல்லா ரசனைகளோடும் ஒத்து போகிற ஒரு நண்பர் கிடைத்தது இந்தப் பயணத்தில் நான் செய்த புண்ணியம் என்று நினைத்துக்கொண்டேன். இயற்கைக்கும் நன்றியை கூறிக்கொண்டேன்.  

கூடலூர் சாலை சந்திப்பு,  பொட்டானிக்கல் கார்டன் பக்கமாக இருந்த முதுமலை வனத்துறை அதிகாரிகளை சந்திக்கச் சாகுல் அழைத்துச் சென்றார். புலிகள் காப்பகம் என்று வரவேற்றது  அறிவிப்பு பலகை.  வனத்துறை அதிகாரி சந்திரன் சார் அங்கு இருந்தார். முதுமலை பயணத்தைக் குறித்து  முன்பே அவருக்கு தெரியப்படுத்தியிருந்ததினால் பெரிதாக நாங்கள் அவரோடு பேசுவதற்கு சிரமம் கொள்ளவில்லை. இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் அந்த வனத்தில் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். நான் போன நேரம்  படுகர் பழங்குடி இனத்தவரின் திருவிழா காலம் என்பதால், விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும்  காட்டின் உள்பகுதியில் வாழும் அவர்களை சந்திப்பது முடியாது என்றும் அவர் கூறினார். 
அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அனைவரும் படுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நானும் சாகுலும் எவ்வளவோ முயற்ச்சித்தும் சந்திரன் சார் அதில் சிக்கல் வரும் என்றார். பின் வேறு ஏதேனும் உதவிகள் வேண்டும் என்றால் செய்ய முயற்சிக்கிறேன் என்றார். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதை பெரிதாக சாகுலிடம் நான் காட்டிக்கொள்ளவில்லை. அலுவலகம் விட்டு வெளியில் வரும்போது, "நீங்களாக போய் பார்த்தால் அது வேறு கதை, புரிந்துக்கொள்ளுங்கள்" என்று எங்கோ இருந்து ஒரு வசனம் கேட்டது. என் முகம் மலர்ந்ததை பார்க்கனுமே. அது எனக்கே சொன்ன வசனமாக எடுத்துக்கொண்டேன். 

அன்று இரவு நான் 'ஹோட்டல் தமிழ் நாடு' தங்கும் விடுதியில் தங்குவதற்கு சாகுல் ஏற்பாடு செய்திருந்தார். என்னை அங்கு விடும் முன்பு, இரவு உணவு சாப்பிட வேணுமா என்று கேட்டார் சாகுல். எனக்கு டீ-காப்பி போதும் என்றேன். வேறு என்ன வேண்டும் என்றார். ஊட்டியின் இரவைக் காண வேண்டும் என்றேன். நீங்கள் செய்த உதவி இதுவரை போதும் சாகுல். நாளை பார்க்கலாம். நான் தனிமையில் கொஞ்சம் இருக்க வேண்டும் என்றேன். சாகுல், யோசிக்கத் தொடங்கினார். 

(தொடரும்)

செவ்வாய், 19 ஜனவரி, 2016

மரண தண்டனை கைதியின் இறுதி நாள்

புத்தக விமர்சனம்
எழுதியவர் : விக்தோர் ஹ்யூகோ
மொமிழில்: குமரன் வளவன்
பதிப்பகம் : கிரியா















ஒரு மரணம் காத்திருக்க வைக்குமா?மரணம் பற்றி பேச தொடங்கிவிட்டால் எமதர்மன் பாசக்கயிறோடு நிற்பது போல சிலருக்கு 
எண்ணம் தோன்றுவது ஏன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லைசின்ன வயதிலிருந்தே என்னை பாதித்த மரணங்கள் என்னை 
பண்படுத்தியிருக்கு என்றுதான் சொல்வேன். எனக்கு ஒரு வயதாக இருக்கும்போது தொடரத் தொடங்கிய உயிர் இழப்புகள்,  எனக்கு விவரங்கள் தெரிய தெரிய மிக நெருக்கத்தில் உடன் அமர்ந்து அளவளாகும் வரையில் பிந்தொடர்ந்துகொண்டிருக்கின்றன
 
18 வயதில் என் அப்பாவின் மரணம் என்னை மனப்பிறழ்வு வரை கொண்டுச் சென்றது என்றால், 21 வயதில் சந்தித்த  அப்துல் கனி என்ற  மலாய் தோழனின் மரணம் என்னை அந்த நிலையை 
மீண்டும் நினைவுபடுத்தியதுபின்எந்த மரணமும் என்னை பாதிக்காமலே போனது. நான் நிருபர் ஆனப்பிறகுமரணத்திற்கும் எனக்குமான உறவு இன்னும் தீவிரமானது என்று சொல்லலாம்கொலைச் சம்பவங்கள்முதல் விபத்து வரை சில மரணங்களை ரத்தமும் சதையுமாக ஈரத்துடன் பார்த்து பார்த்து மனது மறுத்து போய்விட்டது என்றே நினைத்திருந்தேன்
ஒருமுறைசிமந்து லாரியில் விபத்தில் சிக்கின ஒரு பெண்மணியின்
 உடல் இரண்டாய் போக அதை பக்கத்தில் இருந்து டிசைன் டிசைனாக படம் எடுத்த பேர்வழி நான்அவளின் இதயம் தனியே விழுந்து கிடக்கஅதை பழைய நாளிதழ் கொண்டு மூடிவிட்டுமிதித்துவிடாதே அவளின் இதயம்இருக்கிறது என்று கூறிச் சென்ற போதுஅங்கிருந்த பெண் ஒருவர் மயக்கம் போடாத குறையாக 
அங்கிருந்து விலகி போனதை நான் இன்னும் மறக்கவில்லை
 
என் இதயத்தில் ஈரம் எங்கே போனது?  நான் பயந்தவள் தானே?  ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு துண்டில் சுற்றி தூக்கி வந்த ஓர் ஊழியனுக்கு மருத்துவம் பார்க்க முடியாது என சொல்லிய ருத்துவமனையிலிருந்து சொல்லாமல் வேலையை விட்டு வந்தபோது நான் அத்தனை இரக்கம் உள்ளவளாக இருந்தேனே

இப்போது அப்படி எதுவும் இல்லைகொடூரச் சம்பவங்கள் என்பது நிருபர்களின் திறமைக்கு 
கிடைக்கும் வாய்ப்பு.  சம்பவத்தை அந்த நிருபரோ அல்லது புகைப்படக்காரோ எப்படி படம் 
எடுக்கிறார்எப்படி துப்பு துலக்குகிறார்எவ்வாறான ஆரூடங்களை வெளிப்படுத்துகிறார்
என்பதை,வைத்து  ஒருசெய்தியை தேசிய அளவில் பரபரப்பாக்கக்கூடிய திறமை ஒரு 
நிருபருக்குரியது
 
இதில் நிருபரின் உளவியலையோ அவரின் மனநிலையையோ யாரும் பார்ப்பது இல்லைபார்க்கவேண்டிய அவசியமும் இல்லைபோட்டி நிறைந்த பத்திரிகை உலகம் குதிரை பந்தயம் மாதிரிதான்இன்று எந்தக் குதிரை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை முதல் பக்கச் செய்தியில் வாசகர்கள் முடிவு செய்கிறார்கள்ஐயையோ!அச்சச்சோசெய்திகளுக்கு இப்பவும் முதலிடம்தான்அம்மாதிரியான செய்திகள் 6 நாளிதழிலும் (மலேசியாவில் 6 தமிழ் தினசரிகள் உள்ளன) வந்திருந்தாலும்எந்த நாளிதழில் சன்பவம் குறித்த படம் நல்லா வந்திருக்கிறது என்று பணம் கொடுத்து வாங்கும்  ஒரு வாசகன்  முடிவுசெய்கிறான்.

 6 நாளிதழிலும் ஒரே படம்தான் வருகிறது என்றாலும் பக்க வடிவமைப்பில் அந்த படம் 
எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பொறுத்து எந்த  நாளிதழை வாங்கலாம் என்று  வாசகன் தேர்வு செய்கிறான்மிக மிகக் கொடூரமான ரு படம்சிலர் கதறிக் கதறி அழும் காட்சி இப்படியான செய்திகள் தலைப்புச் செய்தியாக்குவது வாசகனுக்கு தகவல் சொல்வதற்காக ட்டுமல்லபத்திரிகை நிர்வாகம் பொறுத்தவரையில் வாசகனுக்கு தகவல் சொல்வது என்பது இரண்டாவது 
விடயம்தான்முதல் பக்கம் செய்தி என்பது பத்திரிகை விற்பனை சம்பந்தப்பட்ட ஒரு குதிரை பந்தயம். 
 
மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்’ என்ற பிரபல எழுத்தாளர்  
விக்தோர் ஹ்யூகோ எழுதிய புத்தகத்தைப் படித்தப் பிறகு மரணம் குறித்த பாதிப்பு  குறிப்பாக மரண தண்டனை கைதியைக் குறித்த பாதிப்பு எனக்குள் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை

இந்தப் புத்தகத்தை படித்த காலக்கட்டத்தில்தான் புரம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்ற 
படத்தையும் பார்த்தேன்உண்மையில் இந்த இரண்டு விஷயங்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் எனக்கு அறிமுகமாகியிருக்கலாம்.  எனக்கு ஒரே நேரத்தில் அறிமுகமான இந்த  இரண்டு  விஷயங்களும் மிகநூதனமான 
உளவியல் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது
 
இதில் திரைப்படத்தைப் பற்றி நான் எதுவும் பேசப் போவதில்லை.  பலபேர் அது குறித்து பிரித்து, ஆராய்ந்துவிட்டனர்புதிதாக சொல்வதற்கு என்னிடம் எதுவும் 
இல்லைஆனால்இந்தப் புத்தகம் குறித்து பேசுவதற்கு நிறைய இருக்கிறது

இந்தப் புத்தகத்தின் பாதிப்பை கடக்க முடியாத ஒரு தருணத்தில், சுங்கத்துறையில் அதிகாரியாக இருக்கும் எனது தோழர் விக்கினேஸ்வரனிடம் பேசினேன். மலேசியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நிபுணவாதிகள் 12 பேர் இருக்கிறார்கள் என்றார். அதுவரை நான் அறிந்திடாத தகவல் அது. தூக்கு தண்டனை நிறைவேற்றும் நிபுணத்துவவாதிகளில் ஒருவரான கிளந்தானைச் சேர்ந்த மலாய்க்காரரைச் சந்திக்க நேர்ததாகவும், அவரின் அனுபவம் இன்றுவரை மறக்க முடியாததாகவும் தெரிவித்தார். 

விக்கி சந்தித்த அந்த நபருக்கு கழுத்து நிறைய அடர்த்தியான மருபோன்ற தசை இருந்ததாக தெரிவித்தார்.  மரணதண்டனை குறித்து அந்த மலாய்க்காரர் தெரிவிக்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் அனைவருக்கும் இப்படி ஏதாவது  இழைக்கப்பட்ட ஒரு  சாபம் பின்தொடர்கிறது என தெரிவித்ததாக தெரிவித்தார்.

"மரண தண்டனைஏன் கூடாதுமனிதர்கள் அனைவரும்தொடர்ந்து ஒத்திப் போடப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான்" என்று 
புத்தகத்தின்  மூன்றாம் அத்தியாயத்தில் நேரடியாக நாம் மரண தண்டனைக் கைதியின் 
வாழ்க்கையில் நுழைவோம்ஆனால்அதன் தொடக்கத்திலிருந்து  நாம் தொடர்ந்து மரண 
ண்டனை கைதியின் வேதனையை அனுபவிக்கும்படி ஆகிவிடுகிறதுதுலோன் நகரத்திற்க்ச் செல்லும் கைதிகளுக்கு சங்கிலியிடும் சடங்கு 
மிகக்கொடூரமானதாகவும் கொடுமையானதாகவும் இருந்தாலும் அது ஒன்றே சக கைதிகளின் கேளிக்கையாகவும் இருக்கிறதுஅந்தக்காட்சியை ஓர் அழகியல் என விவரிக்கும் பாணி நம்மை கொடூரமான இறுக்க நிலைக்கு தள்ளிவிடுகிறது
 
இதுபோல பல இடங்களில் வாசகனின் ன நிலைக்கும் மன ஓட்டத்திற்கும்  தடையாகவும்அந்த இடத்தைக் கடக்க சிரமப்படும் நிலையும் இந்தப் புத்தகம் ஏற்படுத்தியது
 
18-ஆம் அத்தியாயத்தில் தூக்கு ண்டனைக்குக் காத்திருக்கும் கைதியின்  நாள்  மிக நெருங்கி விட்டதை நமக்கு தெரிவிக்கும்அதுவரையில்  முன்பைவிடவும் அவனுக்கு சிறை அதிகாரிகள் கூடுதலாக 
கொடுக்கும் மரியாதை  மிக பீதி நிறைந்ததாக நகர்கிறது. ஒரு கட்டத்தில்  தாம் இருக்கும் சிறையைப்பற்றி கதைச்சொல்லி இவ்வாறு விவரிக்கிறார்

"என்னைச் சுற்றி எல்லாமே சிறைதான்;  ஒவ்வொரு உருவத்திலும் சிறையைக் கண்டேன்
மனிதன் வடிவத்தில் அல்லது தாழ்ப்பாள் வடிவத்தில்
இந்தச் சுவர்கல்லால் ஆன சிறைஇந்தக் கதவுமரத்தால் ஆனச் சிறைஇந்தச் சிறைக் 
காவலாளிகள்தசையாலும் எலும்பாலும் ஆன சிறை. சிறை என்பது முழுமையான
பிரிக்கப்பட முடியாதபாதி கட்டடமும் பாதி மனிதனுமான ஒருவித பயங்கர உயிரினம். நான்தான் அதன் இரை."
 
இப்படியாக சிறை விவரிக்கப்படும் போது ஒரு வாசகன் என்பதைத் தாண்டி  நாமும் அந்த 
உணர்வை உள்வாங்கக் கூடிய நிலை ஏற்படுகிறதுசில  சமயம் தூக்குத் தண்டனை கைதியாக  வரும் கதைச் சொல்லி தமக்கு மன்னிப்பு கிடைக்கும்தலை துண்டாடலில் இருந்து தமது தலை தப்பிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு கொடுக்கும் போது ஏற்படும் உணர்வு வேறுமாதிரியானதுஇந்த எழுத்து நடையை நான்  விக்தோர் ஹ்யூகோவின் வெற்றியாகவே பார்க்கிறேன்.   
 
தூக்குத் தண்டனைக் கைதியை சந்திக்கும்  பாதிரியார் குறித்து இறுதி  அத்தியாயம் வரை பேசப்பட்டாலும் பல இடங்களில் அது சுவாரஸ்யம் கூட்டுவதாக எனக்கு இல்லை. ( என்னுடையவாசிப்பு நிலைக்கு இப்படி தோன்றினாலும்பிறருக்கு வேறுமாதிரியான கருத்து இருக்கலாம்.)
 
புத்தகத்தின் 21- வது அத்தியாயத்தில் மரண தண்டனை பெறப்போகும் கதைச் சொல்லியின் 
மரண நாள் தொடங்குகிறது. ஒருவித  சம்பிரதாய சோகத்துடன்  நீதிமன்ற  பணியாளன் ஒருவர் வந்து 
"தீர்ப்பு இன்று க்ரேவ் சதுக்கத்தில் நிறைவேற்றப்படும்"  என்ற கடிததத்தை வாசிக்கிறார்இதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்பீர்களா ? என அவர் கேட்க "நீங்கள் விரும்பும் போது நான் தயார்என கைதி பதில் அளிக்கிறார்.  பின்பல இடங்களில் மரணத்தின் வன்மத்தையும் கொடூரத்தையும் நிலை கொள்ளாமல் கைதி அனுபவிக்கும் காட்சிகள் நம்மை ஒரு பித்து நிலைக்குச் செல்ல வைக்கக்கூடியது

கைதியின் இறுதி நாளில் அவனின்  செல்லக் குழந்தை மரியை  சிறைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்கிறாள். அவளை தழுவ, அணைக்க, முத்தமிட  அவள் அனுமதித்தாலும், அச்சத்தோடு அழுதுக்கொண்டே வேலைகாரியை பார்த்தவண்ணம் இருக்கிறாள் மரி. அவளை இறுக்கமாக அணைக்கிறான். விடுங்கள் ஐயா என மிரல்கிறாள் மரி.  
"ஐயா வா? என திடுக்கிடுகிறான். ஆம். தன் தந்தையைப் பார்த்து ஒரு வருடமான  மரி அவனை அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. 

"மரி என்னை தெரியவில்லையா?" 
"தெரியவில்லை"
"  நன்றாகப்பார்.. என்னை தெரியவில்லையா?"
"தெரியும் !  யாரோ"  என்கிறாள். 
" உனது அப்பா எங்கே"
"உங்களுக்கு தெரியாதா? அவர் செத்துப்போய்விட்டார்"

இப்படியாக தந்தைக்கும் மகளுக்குமான உரையாடல் நீல்கிறது. எல்லா இடத்திலும், அவந்தான் அவளின் தந்தை என்பதை வழியுறுத்த மெனக்கெடுகிறான். ஆனால், மரியோ தனக்கு சம்பந்தமில்லாத ஒருவரிடம் இருப்பதாக நினைத்து பேசிக்கொண்டிருக்கும் அந்த உரையாடல் விரத்தியின் உச்சம் எனலாம். 

 
“ஓ கடவுளே ! நான் இப்போதே தப்பிக்க வேண்டும்என் தசைகள் அந்த மரத் துண்டுகளிடையே சிக்கிக்கொண்டாலும்  கூட பரவாயில்லை” என மரண தண்டனைக்  கைதி  மரணத்தோடு 
மன்றாடுவதுமரணம் எனும் பிசாசுடன் சிக்கித் தவிக்கும் இம்மாதிரியான வசனம்  இன்னொரு இடத்திலும் வரும்.. 
"என் மகனே நீ தயாராஎன்று கேட்டார்.
 வலிமையற்ற குரலில் நான் பதிலளித்தேன்.
"நான் என்னை இன்னும் ஆயத்தப்படுத்திக்கொள்ளவில்லை.
ஆனாலும் நான் தயார்
என் கண்கள் கலங்கினகை கால்களிருந்து குளிர்ந்த வியர்வை வெளியேறியதுஎன் நெற்றிப் பொட்டு வீங்குவது போல் தோன்றியதுஎன் காதுகள் முழுதும் வண்டுகள் மொய்க்கும் சத்தம்...
 
இந்த வரிகளைத் தொடர்ந்துஎன்னால் இந்த புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்க 
முடியவில்லைபுத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டேன்வண்டுகள்  சத்தமிடுவதை 
நிறுத்த முடியவில்லைமீண்டும் அந்த புத்தகத்தின் வாசிப்பைத் தொடர 
வேண்டுமா என்ற கேள்வியோடுதான் வாசிப்பை தொடர்ந்தேன்எனது வாசிப்பின்  ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் தேடியதுஎதற்காக அவருக்கு மரண தண்டனை 
விதிக்கப்பட்டது என்றுதான்அவரின்  சின்னக் குழந்தை மரியைப் பற்றி பல இடங்களில் 
பேசுகிறார் என்றாலும் மரண தண்டனை பெறும் அளவுக்கும்,  அவர் குழந்தையை பிரியும்  
அளவுக்கும் செய்த குற்றம் எனன?  மன்னிக்க முடியாத குற்றமா அது?  மன்னர் நினைத்தால் தமக்கு மன்னிப்பு வழங்கலாமே என்றும் கைதி மன்றாடுகிறார்நமது மனசாட்சியானதுஅவருக்கு மன்னிப்பு கிடைக்காதா என்று ஏங்கத் 
தொடங்குவதோடுகைதியின் பின்னாடியே அலையவும் தொடங்குகிறது

இப்படியாக நான் புத்தகத்தை படித்து முடிக்கும் போது மரணதண்டனைக்  கைதியின் இறுதிநாள் முடிந்திருந்தது.  

இந்தப் புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பாளரான  குமரன் வளவன் பின்னுரையில் விக்தோர் ஹ்யூகோ குறித்து தெளிவான விளக்கத்தை தந்துள்ளார்.  ஓர் இடத்தில் மரண தண்டனை பெற்ற ஒருவன் சிறையின் அடைக்கப் பட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மனிதத் தன்மையை இழந்து, ஒரு ஜடமாக, ஒரு இயந்திரமாக அதே சமையத்தில் சிறை ஒரு மிருகம் போல் அவனை உருமாற்றுகிறது. அவன் எழுதும்போது 'நான்' என்ற சொல்லைவிட 'என்னை' என்ற சொல்லத்தான் அதிகம் பயன்படுத்துகிறான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நாவல் முழுதும் ஒரு உலோக மிருகம் மரண தண்டனை கைதியை விடாமல் பின் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மிருகம் இந்த நாவல் வாசிப்பாளனை பின் தொடர்கிறது என்பதுதான் உண்மை. 

(யோகி