புதன், 22 ஜூன், 2016

வீர பெண்மணியான நிஷா ஆயுப்… அவள் ஒரு திருநங்கை



நிஷா ஆயுப் என்ற பெயர் மலேசிய மண்ணைப் பொறுத்தவரை புதியது இல்லை. ஆனால் பன்னாட்டு ரீதியில் அந்தப் பெயர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பது மலேசியாவிற்கு மட்டுமல்ல உலகத்தில் வாழும் திருநங்கைகளுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய வாழ் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் இன்னும் அவர்களுக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் நிஷா ஆயுப்க்கு அமெரிக்க அரசு, 2016-ஆம் ஆண்டிற்கான வீர மங்கை என்னும் வீர பெண்மணிக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த அவ்விருது வழங்கும் நிகழ்வில் மொத்தம் 14 பெண்கள் வீர பெண்மணி விருதை பெற்றனர். அதில் மலேசியாவைச் சேர்ந்த நிஷாவும் ஒருவர். 37 வயதாகும் நிஷா ஆயுப் ஒரு திருநங்கையாவார். இளவயதில் அவர் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் அவரை ஒரு போராட்டவாதியாக மாற்றியது.
2005
ஆண்டு நிஷாவின் வாழ்வில் அந்தக் கறுப்புநாள் வருமென அவர் நினைக்கவே இல்லை. உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகதான் இயற்பாலினத்திற்கு எதிராக அவர் மாற்று உடை அணிந்து வெளியில் வந்தார். இதனால் கடுமையாக விமர்சிக்கவும் பட்டார். மாற்று உடை அணிந்த காரணத்தினால், நிஷாவை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அங்குதான் நிஷாவிற்குச் சோதனைக்காலம் தொடங்கியது. உண்மையில் திருநங்கைகளின் உரிமைக்கான குரலை எழுப்பும் இடமாகச் சிறைச்சாலையும் மாறியது கொடுமைதான். பொதுவாகத் திருநங்கைகளுக்காகத் தனியொரு பொதுக் கழிப்பறை இல்லை என்ற குற்றச்சாட்டும் விண்ணப்ப பாரத்தில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு இல்லை என்ற குற்றச்சாட்டு மட்டும்தான் உலகளவில் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. ஆனால், ஆண்-பெண் புழங்கும் ஒவ்வோரு இடத்திலும் திருநங்கைகளுக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருந்தாலும் அது உரக்க ஒலிக்காமல் இருப்பது திருநங்கைகளுக்கு ஒரு பின்னடைவுதான் என்று தோன்றுகிறது.
மாற்று உடை அணிந்த குற்றத்திற்காக நீதிமன்றம் நிஷாவுக்கு 3 மாத
சிறைதண்டனை கொடுத்தது. அவரை ஆண்கள் சிறையில் அடைத்தார்கள். நிஷா அங்கிருந்த மற்ற கைதிகளால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். சிறை பாதுகாவலர்களும் அவரை விட்டுவைக்கவில்லை. மிகக் கொடூரமான நாட்களைக் கடந்து வந்தார் நிஷா.
தமது வாழ்கையில் சந்தித்த இந்தக் கசப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திருநங்கைகளின் உரிமைக்காகப் போராட தொடங்கினார். அதன் தொடக்கமாக அரசு சாரா இயக்கம் ஒன்றை தொடங்கினார். அப்படித் தொடங்கியதுதான் Justice For Sisters (JFS) என்ற அமைப்பு. அந்த அமைப்பின் வழியாகத் திருநங்கைகளுக்காகத் தனது குரலை வெளிப்படுத்தினார். அவர்களின் அடிப்படை உரிமைக்காக இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்.
கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஜான் கெர்ரியிடமிருந்து வீரமங்கைக்கான விருதை நிஷா பெற்றபோது உலகத் திருநங்கைகளுக்குத் தனியொரு நம்பிக்கை ஏற்பட்டது எனத் தாராளமாகக் கூறலாம். ‘வீர மங்கைவிருது வரலாற்றிலும் ஒரு திருநங்கை அவ்விருதை பெறுவது இதுவே முதல்முறையாகும். விருதை பெற்றுக்கொண்டு பேசிய நிஷா இந்த விருது எனக்கானது மட்டுமல்ல எல்லாத் திருநங்கைகளுக்கானது என்று கூறியதுடன் நாம் (திருநங்கைகள்) அங்கிகரிக்கப்பட்டுவிட்டோம் எனப் பெருமிதமடைந்துள்ளார்.
திருநங்கை ஒருவருக்குக் கிடைக்கும் முதல் விருது என்று கூறப்பட்டாலும் மலேசியாவை பொருத்தவரை இது இரண்டாவது முறையாகக் கிடைக்கும் விருதாகும். இதற்கு முன்பு டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசனுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அம்பிகா ஶ்ரீனிவாசன் முன்னாள் வழக்கறிஞர் தேசியத் தலைவராக இருந்தவர். மேலும் பெர்சே 2.0 அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007
ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இந்த விருதை வழங்கிவருகிறது. அமைதிக்காகவும்  சமத்துவத்துக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடும் பெண் போராளிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


(நன்றி, பரணி இதழ் ஜூன் 2016 இதழ்)

1 கருத்து:

  1. நம் அன்றாட வாழ்வில் அவர்களை கடந்து போகிறோம் ஆனால் அவர்களின் மீதான கண்ணோட்டம் மற்றும் அபிப்பிராயம் மட்டும் மாறாமல்
    அப்படியே இருக்கிறது. அவர்களுக்கான நேர்மறையான வழிக்காட்டல் அவசியம். அதற்கு இத்தகைய அங்கீகாரம் பலம் சேர்க்கும் நிச்சயம்.

    பதிலளிநீக்கு