புதன், 22 ஜூன், 2016

அப்பா...

அப்பாவின் கழுத்தை வளைத்து தொங்கியபடி கண்களைப் பார்த்து சிரிக்கும் குழந்தைகள்.. 

அவரின் கையைப் பற்றி ஆயாசமாக நடந்துப்போகும் குழந்தைகள் 

அவரின் ஒரு விரலை பற்றிச் சுற்றுமுற்றும் பார்த்துப் பயம் இருந்தும் இல்லாமலும் தன் பாவடையைத் தூக்கி சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்.. 

ஜட்டியை மாட்டிவிடும் அப்பா..

இப்படியான அப்பாக்களையும் பெண் குழந்தைகளையும் பார்க்கும்போது, என் அப்பாவுக்கு முதல் குழந்தையா அதுவும் பெண்ணாக பிறந்த எனக்கு  எனக்கு அவரின் பாசம் குறித்த  கேள்விகள் பிம்பமாக எழுந்த வண்ணமே இருக்கிறது. 
என் அப்பா வெளிப்படையாகப் பாசத்தைக் காட்டாதவர். சாதி கட்டமைப்பை உடைத்து வெளியில் வந்து, அதற்கு முன் வாழ்ந்து காட்ட நினைத்தவருக்குப் மனதிலிருக்கும் பாசத்தைக் காட்ட தெரியவில்லை. கண்டிப்பு மட்டுமே காட்டுவார். ஒரு ஹிட்லர் போல இருக்கும் அவரின் அன்பும் கண்டிப்பும். 

நான் பிறக்கும்போது அவருக்கு 19 வயது. அவருடைய காதல் மனைவியின் காதல் வாழ்க்கைக்கு முதன்முதலாகப் பிறந்த ஆதாரம் நான். கொண்டாடப்பட வேண்டிய குழந்தை இல்லையா.. 

ஆனால், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பா பாசத்தை நான் பார்த்ததாக நினைவில்லை.  அவர் கடமை என்றும் அக்கரை என்றும் செய்த அத்தனை காரியங்களும் பாசத்தில் சேருமா என்று இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

பள்ளி தேர்வில் பரிசு வாங்கிக் கம்பீரமாக மேடையில் நின்றபோது அவர் முகத்தைப் பார்த்திருக்கிறேன்.. 
அரசாங்க தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று, முடிவு கிடைத்த அன்று போது அவர் முகத்தை உற்றுப் பார்த்தேன்... 
நான் வயதுக்கு வந்த அன்று, முதல் முதலாக அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.. 
ஒரு திருமணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்த அன்று அப்பாவின் காலில் முதல்முறையாக விழுந்து எழுந்தபோது, அவர் என்னைத் தூக்கிய கணத்தில் அவரின் முகத்தைப் பார்த்தேன்...

என்னைப் பாடச்சொல்லி கேட்டு ரசித்த இரவுகளில், அவர் முகத்தைப் பார்த்திருக்கிறேன்.. 
அத்தனை திமிர் அந்த முகத்தில். அத்தனை பெருமை அந்த முகத்தில். 

முதல் முறை பொய் சொன்ன அன்று 
தேர்வில் குறைவான மார்க் வாங்கிய அன்று 
வீட்டுச் சாவி தொலைத்த அன்று 
கண்ணாடி பாத்திரம் உடைந்த அன்று 
பணத்தைத் தொலைத்த அன்று 
கீழே கிடந்த அழிப்பானை எடுத்து வந்த அன்று 
ஆண் நண்பர்களிடம் அரட்டையடித்த அன்று 
அவரை எதிர்த்து பேசிய அன்று 
எனது முதல் காதலை கண்டு பிடித்த அன்று 
ஜாதியை பற்றித் திருட்டுத்தனமாகப் பேசிய அன்று.. 

அப்பா கொடுத்த அந்த மரண அடியில் மீள முடியாதவளாய் அந்த முகத்தைப் பார்த்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும் சுருண்டு விழும் வலி அது. அத்தனை வன்மம், ஆத்திரம். தன் வளர்ப்பு பிழையாகிவிட்டதே என்ற கடுப்பு. கொலைவெறி;  சுயநலம்.  அப்பா இறந்துவிட்டால்தான் நமக்கு நிம்மதி என்று கடவுளை வேண்டிக் கொண்ட காலங்களும் உண்டு. அப்பா என்பவர் ஒரு மூனாவது மனுஷனாக பிடிக்காத  நபராகவே எனக்கு
மாறிப் போயிருந்தார்.  எனக்கும் அவருக்குமான பேச்சு வார்த்தை கிட்டதட்ட நின்றே போயிருந்தது. 

36 வயதில் அப்பா சாகும்போது எனக்கு 19 வயது. அப்பா இறந்துவிட்டார் என்று வந்து சொன்னவரை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்தேன். அப்பா செத்துக் கிடந்தார். மனப்பிறழ்வு வந்தவள் போலப் புலம்பி தள்ளினேன். என்னையும் மீறி அழுதுகொண்டிருந்தேன். அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். திராணியற்றளாக உணர்ந்தேன். நடு வீட்டில் கிடத்திய அந்த உடலை பார்க்க சகிக்கமுடியவில்லை. யாரோ என் காதின் உள் அமர்ந்துக்கொண்டு நில்லாமல் அழுதுகொண்டிருந்தார்கள். அயற்சியில் கண் அயர்ந்தப்போதும் அழுகையின் குரல் நிற்கவில்லை. யார் யாரிடமோ கூறிக்கொண்டிருந்தேன். யாரோ அழும் சத்தம் சன்னமாக கேட்கிறது. நிறுத்தச் சொல்லுங்கள் என்று. வந்திருந்த அனைவரும் என்னை சமாதானம் மட்டுமே செய்துக்கொண்டிருந்தனர். 

எனக்கு நினைவு தெரிந்து அப்பாவுக்கு முத்தமே தந்ததே இல்லை. ஜில்லிட்டு இருந்த அவர் கன்னத்தில் முத்தமிட்டேன். எனது காதலனுக்கு கொடுத்த முத்தத்தைவிடச் சிலீர்ப்புகூடிய முத்தம் அது. தூய்மையான பரிசுத்தமான அந்த முத்தத்தை குழந்தையாக இருக்கும்போது அப்பா கொடுத்திருக்கலாம்.  எனக்கு என்ன தெரியும்?

நான் இறந்த பிறகு எனக்குக் கொல்லிவைக்க வேண்டியது யோகிதான் எனப் பலமுறை சொல்லியிருக்கிறார். என் சமூகம் அதை மறுத்து தம்பிக்கே அந்தக் கடமையைக் கொடுத்தது. அப்பாவின் நினைவுநாளோ பிறந்த நாளோ அல்லது திருமண நாளோ எதுவும் என் நினைவுக்கு வந்ததில்லை. எதையும் கொண்டாடும் நிலையும் கொண்டாட்ட நிலையும் நான் ஏற்படுத்திக்கொள்வதில்லை. 

ஒவ்வொரு தந்தையர் தினத்தின் போதும் ஏதேதோ கற்னைகள் தோன்றும்.  அப்பா இருந்திருந்தால் இந்த நாளை கொண்டாடுவோமா? என்ன பரிசு வாங்கி கொடுத்திருப்பேன்? நான் யோகி சந்துருவாக இருந்திருப்பேனா அல்லது யோகி பெரியசாமியாக இருந்திருப்பேனா என்றும் தோன்றும். 

இல்லாத அப்பாவைக் குறித்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நினைத்துப்பார்க்க வேண்டிய கட்டாயம் தினமும் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கு. 

கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பா, எனக்காகக் காத்துக்கொண்டே இருக்கிறார். அவருக்குப் பிடித்த அந்தச் சிவப்பு பெட்டி சிகரெட், விரும்பி குடிக்கும் பீர் அல்லது ஒத்த மரத்து கள் ஏதாவது வாங்கிக் கொண்டு போய் அவரைப் பார்க்கலாம். அந்த முகத்தை எப்படிப் பார்க்கப்போகிறேன். இந்திராகாந்திக்கு நேரு நிறையக் கடிதங்கள் எழுதியிருப்பதாக வாசித்திருக்கிறேன். என் அப்பாவுக்கு நான் ஒரே ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறேன். அதை அவர் கண்ணில் படும்படி வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். அந்தக் கடிதம் குறித்துப் பேசுவதாகச் சொன்னவர் தொடர்ந்து பேசவே இல்லை. அவர் மிச்சம் வைத்த அந்த உரையாடலுக்கான வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன் 16 வருடங்களாக.. 


2 கருத்துகள்:

  1. அடுத்த வாரம் வெள்ளிகிழமை என் அப்பாவிற்கு இரண்டாம் நினைவுதினம் :(

    பதிலளிநீக்கு
  2. எல்லாருக்கும் அப்பாவைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கு

    பதிலளிநீக்கு