புதன், 27 ஜூலை, 2016

ஜீ.முருகனின் 'சாம்பல்நிற தேவதை'

முதற்பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பகம் : உயிர்மை
புத்த பிரிவு : சிறுகதைகள்
விலை: 70 ரூபாய்


ஜீ.முருகனின் ‘சாம்பல்நிற தேவதை’ சிறுகதை தொகுப்பில் உள்ள 12 கதைகளில் சாம்பல்நிற தேவதை என்ற சிறுகதைதான் இறுதி கதை. அந்தக் கதையில் வரும் சாம்பல் தேவதைக்காக உருகும் வசனங்கள் சில சமயம் நமக்குச் சிரிப்பை வரவழைப்பதோடு வாய்விட்டு சிரிக்கவும் வைத்திவிடுகிறது. ஆனால், அது நகைச்சுவை கதையல்ல. தன் சாம்பல்நிற தேவதையிடமிருந்து அவன் அன்பை எதிர்பார்க்கிறான். அந்தத் தேவதையின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப அதற்குக் கடிதங்கள் எழுதுகிறான்.
தேவதை உலாவிய இடம் வெறிச்சிட்டுக் கிடக்கும்போது, விண்ணுக்குப் பறந்து போய்விட்ட ஒரு தேவதையின் நிழல் அங்கே படிந்து கிடப்பதாக எண்ணுகிறான். தேவதைக்குப் பிடிக்கும் என அவன் செய்யும் காரியங்கள் அபத்தமானது என்றாலும் தேவதையின் காதல் பெற அவன் படும் அவஸ்தைகள் நமக்கும் ரத்தக் கொதிப்பை கூட்டுகிறது. அந்தத் தேவதைக்கு ‘சுமி’-எனப் பெயரிடுகிறான். சுமியிடம் ஊர் பெண்களின் மேலிருந்த நம்பிக்கையெல்லாம் போய்விட்டதாகவும், யாரையும் நம்ப முடியவில்லை என்றும், பெண்களும் பொய், பித்தலாட்டம் ரகசியக் காதல் லீலைகள் செய்கிறார்கள் என்றும் ஆதங்கப்படுகிறான். சுமியின் முகத்தில் கற்பின் பிரகாசத்தை உணர முடிகிறது என்று அவன் கூறும்போது அந்தத் தேவதையின் மீது அவன் கொண்டிருந்த அன்பை உணரமுடிகிறது. ஒரு நாள் அவனின் சாம்பல்நிற தேவதை சினையாக இருப்பதாக வண்ணான் கூறுகிறான். இப்படியாகத் தேவதை அவனை ஏமாற்றிய கதையையும் ஜீ.முருகன் சொல்லிமுடித்திருக்கும் விதத்தை வாசகர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக நான் ஒரு தொகுப்பை  வாசிக்க முற்படுகையில் அந்த எழுத்தாளரை அடையாளப்படுத்தும் படைப்பு அந்தத் தொகுப்பில் இருந்தால் முதலில் அதைத்தான் வாசிப்பேன். அதன் பிறகே மற்ற பதிவுகளைத் தொடர்வேன். ஆனால் ஜீ.முருகனை இதற்கு முன்பு நான் எங்கும் வாசித்திருக்கவில்லை. அதனால், அவரின் புத்தகத்தைத் தொடக்கத்திலிருந்தே வாசிக்க முடிவு செய்தேன். தொகுப்பின் முதல் கதை ஒரு கடிதமாகும். வேலைக்கான ஒரு விண்ணப்பத்தைச் செய்துவிட்டுச் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அந்த வேலை ஏன் தமக்கு வேண்டும் என்பதற்கான ஒரு காரணக்கடிதம் கதையாக எழுந்து நிற்கிறது.
அந்தக் கதையை நாம் யாரோ ஒருவருக்கான கதையாகப் பார்க்க முடியாது. வேலை திண்டாட்டமுள்ள நான் வாழும் நாட்டைப் போலப் பிற நாடுகளிலும் ஆட்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கான குரலாகவும் ஜீ.முருகன் அந்தக் கதையில் பேசுகிறார். முதல் கதையிலேயே அந்த எழுத்தின் ஆளுமையை உணர முடிகிறது. மேலும் அப்பட்டமாகவும் துளியும் அலங்கார வார்த்தைகளின்றி நிர்வாணமாக நிற்கவைக்கிறார்.

நண்பர் சாம் நாதன் என்னிடம் ஜீ.முருகன் குறித்த படைப்புகளைக் கூறும்போது அம்மாதிரியான எழுத்துகளைப் பெண்கள் எப்போது எழுத போகிறீர்கள் என்றார்? பெண்களின் குரலாக இன்னும் ஆண்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்; பெண்களுக்குக் கிடைக்கும் வாழ்கை அனுபவங்களை அந்த அப்பட்டமான உண்மைகளைப் பெண்கள் எழுதி வாசிக்க வேண்டும் என்றார். நண்பரின்
உரையாடலில் ஏற்பட்ட ஜீ. முருகன் மீதான ஈர்ப்பு பன்மடங்கு பெருக தொடங்கியது அவரின் சிறுகதை தொகுப்பை வாசித்த போதுதான். சில மணி நேரத்திலேயே அந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் வாசித்து முடிக்க, அது நீண்ட மௌனத்திற்கு இட்டுச் சென்றது.

இந்தத் தொகுப்பில் ‘இடம்’ , ‘கிழத்தி’ ஆகிய கதைகள் தனி ஒருவனின் மற்றும் ஒருத்தியின் அந்தரங்க ரகசிய வாழ்கையைப் பேசுகிறது. திருமண வாழ்கைக்கு அப்பாற்பட்டு ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் உறவு குறித்தும் அதில் அவர்களுக்குள் குறிப்பாக அந்த ஒருவனுக்கு அவள்மேல் ஏற்படும் சந்தேகங்கள் வருத்தங்கள் குறித்தும் இரண்டு கதைகளும் பேசுகின்றன. முதல் கதை அந்த ஒருத்தியின் மனதாகவும் இரண்டாவது கதை அந்த ஒருவனின் குரலாகவும் ஜி.முருகன் அவர்களின் இடத்திலிருந்து நமக்கு எழுதியிருக்கிறார்.

இந்தக் கதைகள் வெளிவந்த காலத்தில் ஜீ.முருகன் எவ்வாறான கண்டனங்கள் வசைகளைச் சந்தித்திருப்பார் என்று உணர முடிகிறது. அதெல்லாம் வன்மமும் ஆபாசமுமாக இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வின் மீதான தாக்குதலாகவே தான் எடுத்துக்கொள்வதாக ஜீ.முருகன் கூறுகிறார்.

மலேசிய சூழலில், ஊடகத்துறையில் வேலை செய்திருக்கும் நான், உறவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் அத்துமீறல்களை செய்தியாகவும் வழக்காகவும் வெளிவரும்போது அதிர்ச்சியடைந்திருக்கிறேன். சில விஷயங்களைச் செய்தியாக எழுதும்போது உடல் கூசிவிடும். ஆனால், அந்த அப்பட்டமான உண்மைகளைக் கதை கட்டுரை அல்லது கவிதை வடிவத்தில் சொல்ல முற்படும் தருணம் அதன்பால் ஏற்படும் விமர்சனங்களை எதிர்கொள்வது எளிதல்ல. மஞ்சள் பத்திரிக்கைக்கு இணையாக விமர்சிப்பதை எதிர்ப்பது சுலபமான ஒன்றாகவும் தெரியவில்லை. அம்மாதிரியான சங்கடத்தை நானும் உணர்ந்தவள்தான்.

ஜீ.முருகனின் இந்த 12 கதைகளும் நம்மை ஏதோ ஒரு வகையில் துன்புறுத்த முற்படுகின்றன. குகை போன்ற கதைகள் ஏற்படுத்தும் தாக்கம் மிகுதியானது. அதிலிருப்பதும் அதிலிருந்து வெளிவருவதும் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தற்போது நான் வாசித்த கதைகளில் ஜீ.மூருகனின் கதைகள் முக்கியமானதாக நினைக்கிறேன்.

-யோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக