வெள்ளி, 22 ஜூலை, 2016

‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’ (புத்தகப்பார்வை 2)

புத்தக தலைப்பு : ‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’

ஆசிரியர்: க.கந்தசாமி
முதற்பதிப்பு ஆண்டு : 2005
இரண்டாம் பதிப்பு : 2016
பதிப்பகம் : ஶ்ரீ விஜயன் பதிப்பகம், மலேசியா
புத்தப் பிரிவு : ஆய்வு நூல்
வெளியீட்டு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி : suriancards@gmail.com
 தொலைபேசி எண்  : 
பக்கங்கள் : 229
விலை  : 50.00 வெள்ளி

வயது வரம்பின்றி அனாயசமாக எல்லாரும்  பயன்படுத்து ஒரு வார்த்தை ‘சும்மா’ என்ற சொல்லாகும். மடைமையாக ஏதாவது செய்து, மிகச் சாதாரணமாக ‘சும்மா’தான் செய்தேன் என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருப்போம். உங்களுக்கு தெரியுமா? மலாய்மொழியிலும் அந்த வார்த்தையை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், உச்சரிப்பில் மற்றும் சிறிய மாற்றம் இருக்கும்.  அவர்கள் ‘சுமா’ (Cuma) என்று சொல்வார்கள். 
Cuma என்றால் ‘அது மட்டும்தான்’ என்று அர்த்தம்.  அதுவே ‘பெர்சுமா’ ( percuma) எனும்போது இலவசம் என்று பொருளாகிறது. இலவசத்தை நாம் சும்மா என்றும் அழைப்போம் இல்லையா?

மலாய் மொழியில் ஒரே வார்த்தை ஒரே அர்த்தம் கொண்ட சொற்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு சாட்சி  என்ற சொல் மலாய் மொழியில் ‘சக்ஸி’  (saksi) என்று அதே அர்த்தத்தோடு பொருள் கொள்கிறது.
இப்படி ஒன்று இரண்டு அல்ல சுமார் 500 வார்த்தைகளை அடையாளம் காட்ட முடியும்.  இதைக்குறித்து மலேசியாவின்  ஶ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.

‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’ என்ற அந்தப் புத்தகம்,  மலாய் மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும்  அந்த மலாய் வார்த்தைகள் தமிழின் தழுவல் என்பதை மிக எளிய மொழியாலும் எளிய ஆதரங்களுடனும் அதே வேளையில்  மிக தெளிவான விளக்கங்களுடனும் க.கந்தசாமி பதிவு செய்திருக்கிறார்.

சொற்கள் கூறும் வரலாறு என்ற தலைப்பில் தேர்ந்தெடுத்த 112 மலாய் சொற்களில் தமிழ் சொற்களின் ஒற்றுமையை மையப்படுத்தி சுவாரஸ்யமான கட்டுரைகளை இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். 
குறிப்பாக மீசை, முகம், காரணம் , சமம், தருமம், புரளி, மனிதன், பவுர்ணமி, கூலி, ரகசியம்  உள்ளிட்ட வார்த்தைகள் மலாய் மொழியில் அதே அர்த்தத்தோடு மலாய்க்காரர்களின்  புலக்கத்தில் இருப்பதை  க.கந்தசாமி எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம்.  கட்டுரைகளின் ஊடே மேலும் சில மலாய் வார்த்தைகளையும் அதில் இருக்கும் தமிழ்வார்த்தைகளின்  ஒற்றுமையையும்  புத்தகத்தை வாசிக்கும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 2010 ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பு 2016-ஆம் ஆண்டும் வெளியீடு கண்டுள்ளது. 
கோலாலம்பூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த க.கந்தசாமி, மலாய் மொழியில் பயன்படுத்திக்கொண்டிருக்கும்  தமிழ்வார்த்தைகளை அடையாளம் கண்டு ஆய்வுகள் செய்து அதை தொடராக மலேசியாவில் வெளிவந்துக்கொண்டிருந்த ‘தென்றல்’ வார இதழில் தொடராக எழுதினார். பின்னர்  அதை பெரும் முயற்சிக்குப் பிறகு வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தரமாக  புத்தகமாக கொண்டு வந்தார் .
மலாய் மொழியின் வளமைக்கும் எழுமைக்கும் தமிழ்ச் சொற்கள் ஆற்றிவரும் பங்கு என்னவென்பது வெளியுலகத்திற்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது என்ற நூல் ஆசிரியர் ஓரிடத்தில் ஆதங்கப்படுகிறார். ஆனால், அந்தக் குறையை அவரே தீர்த்துவைக்க கையில் எடுத்திருக்கும் இந்த அறிய முயற்சி இன்றுவரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ்-மலாய் சொல் அரங்கத்தில் வெறும் மலாய்-தமிழ் ஒற்றுமை மட்டுமல்ல அதில் காட்டப்பட்டிருக்கும் உதாரணங்கள் தமிழ் இலக்கியத்திலிருந்தும், சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம், நன்னூள் உள்ளிட்ட இலக்கிய  இலக்கணங்கலிருந்தும், கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன்  போன்ற  கவிஞர்களிடமிருந்தும் எடுத்து கையாண்டிருப்பதாக க.கந்தசாமி தெரிவித்திருக்கிறார்.

“தமிழ்ச்சொற்களை  மலாய் மொழியுடன் ஒப்பு நோக்கி  ஊடுருவுவது என்பது எளிதான பணியல்ல. நன்கு தமிழ் அறிந்த ஆசிரியர் கந்தசாமி மலாய் மொழியிலும் புலமை வாய்ந்தவர் என்பதை நிரூபிக்கிறார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தொடக்கத்தில்  மேற்கரைப்பகுதிகளிலேயே தங்கி கடல் தெய்வமான வருணனை வழிப்பட்டனர்.  அதனை மலாய் மொழியின் வழக்கில் இருக்கும்  வருணா என்பது ‘ dewa laut’ என்று பொருள்படும் என்று விளக்கம் தந்திருப்பதில் தமிழ் மொழியின் நீண்ட கடம் பயண சங்கமத்துக்குச் சான்றளிக்கிறது.” என  இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியவர்களில் ஒருவரும் ஊடகவியளாருமான  எம்.துரைராஜ்  கூறியிருக்கிறார்.
இப்படி பல உதாரணங்க
ளை இந்த புத்தகத்தில் காண முடிவதோடு தேசிய மொழி ஆய்வுக்கு இந்தப் புத்தகம் துணையாக இருக்கும் என்ற ஐயமில்லை.

-யோகி 

( நன்றி:  தினமலர் 17.7.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக