வெள்ளி, 1 ஜூலை, 2016

ஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும், ஒரு பார்வை

உலகில் தயாரிக்கப்படும் 90% படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை. இவை வணிக மசாலாப் படங்கள் என்று சிறப்பு முறையில் அழைக்கப்படுகின்றன. ஒரே வகையான விடையங்களையும் கட்டமைப்புகளையும் இவை திரும்பத்திரும்பக் கொண்டு வருகின்றன.  காதல், விரசம், மோசமான வன்செயல், அதீத கற்பனை, போலியான பாத்திர வார்ப்பு என்னும் வரையறைகளுக்குள் இந்த மலாசாப் பாணி சுற்றிச் சுழல்கின்றது. ஒழுக்கச் சீரழிவுக்கும் போலி ரசனைக்கும் இட்டுச் செல்லக்கூடிய  அபாயகரமான பண்புகள் இதில் உள்ளன. ஆனால், எல்லா வணிகப் படங்களும் இந்த மோசமான நச்சு வட்டத்திற்குள் சுழல்பவை அல்ல. 

எம்.எஸ்.எம்.அனஸ் எழுதிய  ‘ஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும்’ என்ற இந்தப் புத்தகத்தில் மொத்தம் 10 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும் ஈரானிய சினிமாவை மட்டும் பேசுபவையாக இல்லை. எகிப்து, அரபு, இந்திய சினிமா உள்ளிட்ட  திரைப்படங்களையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும் பேசுகிறது. மேலும்,  ஈரானிய முக்கிய ஆவணப்படங்கள், திரைப்பட இயக்குனர்களையும், இசையமைப்பாளர்களையும், கதையம்சங்களையும்  சேர்ந்த்தே ஓர் ஆய்வு அடிப்படையில் புத்தகம் பேசுகிறது.

புத்தகத்தின் ஆசிரியர் அனஸ் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும்  உளவியல் துறையில் தலைவராவார்.   ஈரானிய சினிமா மட்டுமல்ல உலக சினிமா ஊடகங்களிலும் பரந்த பார்வையை கொண்டவராகத்தான் இருக்ககூடும் என அனஸ் தனது ஆழமான எழுத்தின் வழி நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறார்.
இலங்கியங்களுக்கும் பல்வேறு கலைகளுக்கும் மனிதனே ஒரு படைப்பாளனாக இருப்பதுபோல் சினிமாவின் கர்த்தாவாகவும் மனிதனே இருக்கிறான்.  முஸ்லிம்  உலகின் சாதனைகளில்  சினிமாவை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அனஸ் இந்தப் புத்தகத்தில் மிக தெளிவான விளக்கத்தை நமக்கு வழங்க முயற்சித்திருக்கிறார்.  அதற்கான உழைப்பையும் அவர் முழுக்க வழங்கியிருக்கிறார்.

உலகின் 90 சதவிகிதப் படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை என்றாலும் எல்லா வணிகப் படங்களும் இந்த மோசமான நச்சு வட்டத்திற்குள் சுழல்பவை அல்ல என்று கூறும் அனஸ் அழுத்தம் மிகுந்த மன உளைச்சல்களிலிருந்து உருவாகும் சோகத்திற்கு அல்லது தீவிர மனவெழுச்சிக்கு இது ஒரு வடிகாலாக அமைகிறது என்கிறார்.
அனஸ் இந்தப் புத்தகத்தில் முழுக்க இஸ்லாமியம் சம்பந்த வகையில்  திரைப்படங்களை விவரித்திருந்தாலும், அதற்கான தேவையை அறிந்துதான் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

எகிப்தில் ஆவணப்படத் தயாரிப்பிலிருந்து சினிமாவரை அதன் பரிணாமம் குறித்த முக்கியத்துவம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக எகிப்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் முஹம்மத் பயூமி பற்றிய அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.

எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் தொடுத்த மோசமான ஆக்கிரமிப்புப் போரை, உலக அளவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கொடுமையை எடுத்துக் காட்டுவதற்கு குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள்தான் எடுத்துக் காட்டுபவையாக அமைந்தன. ‘நைலின் மகன்’ என்றொரு படம் 1960-ஆம் ஆண்டு வெளிவந்தது. காலையிலிருந்து மாலைவரை எகிப்தியக் கிராமங்களிலும் நகரங்களிலும் பெண்மகள் எவ்வாறு சமூக வாழ்க்கையிலும் அதன் முன்னேற்றத்திலும்  விவசாயத்திலும் அதேபோல் கைத்தொழில் துறையிலும் பங்குகொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு வழங்கினார்கள் என்று பேசும் படம்.  அதோடு நவீன எகிப்தின் வாழ்வை மாற்றிய மிக முக்கியமான அஸ்வான் அணைக்கட்டு நிர்மாணத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்தொடர்  இது இரண்டும் எகிப்தில் முக்கிய ஆவணமாக படங்களாக பேசப்படும் வேலையில் அது குறித்து தெளிவான பதிவை இந்தப் புத்தகத்தில் அனஸ் பதிவு செய்திருக்கிறார்.

 மக்களின் வாழ்க்கையின் பெருந்தியரங்களை இஸ்லாமிய சினிமாக்கள் எப்படி சித்திரிக்கின்றன என்பதை இந்த தொகுப்பு நமக்கு உதவுகிறது.
மொத்தம் 10 கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில்  எனக்கு பிடித்த கட்டுரையாக ஈரானிய சிறுவர் சினிமா எனும் கட்டுரை உள்ளது. குழந்தைகளுக்கான படம் என்று கூறிவிட்டு குழந்தை மனநிலையை தொலைத்த படங்களைத்தான் நான் அதிகமாக இந்தியச் சினிமாவில் பார்க்கிறேன். ஈரானிய குழந்தைச் சினிமாக்கள் அப்படியானது அல்ல என்பதை உறுதிபடுத்தும் விடயங்களை இந்த பதிவின் மூலம்தான் தெரிந்துக்கொண்டேன்.

திரைப்படங்கள் சாதாரண மக்களுக்கு உதவ முடியுமா? கலைகளால் மக்கள் பயனடைவதற்கு ஒன்றுமே இல்லையா? என்ற கேள்விகளுக்கு இங்கு வழங்கப்படுவதற்கு விடைகள் இல்லை என்கிறார் அனஸ்.

அடையாளம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. விலை 130 ரூபாய்.  திரைப்பட ஆர்வளர்கள் அல்லது உலக திரைப்பட விரும்பிகள்  ஈரானிய சினிமாவைப் பற்றிய அறிமுகம்  தேவையென்றால் நிச்சயமாக இந்தப்புத்தகம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. புத்தகத்தின் அட்டைப்படமே  நமக்கு புத்தகம் வாசிப்பதற்கான கதவை திறந்துவிடுகிறது. உள்நிழைந்து விட்டால் வெளியில் வருவதற்கு நமக்கு கொஞ்சம் காலதாமதமாகலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக