ஞாயிறு, 24 ஜூலை, 2016

அம்பை - யைச் சந்தித்த வானவில்கள் 2வெள்ளிக்கிழமை (22.7.2016 ) காலை அம்பையுடன் விடியும் என்று நான் நினைத்ததே இல்லை. அம்பையுடன் அந்த இரண்டாவது நாள், பல இறுக்கமான தடைகளைத் தளர்த்து  நெருக்கமான ஒரு தோழியுடன் மிக இயல்பாக அலவலாகக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்தது.
 பத்துமலையிலிருந்து அன்றையைத் தினத்தைத் தொடங்கலாம் என முடிவெடுத்திருந்தோம். முதல் நாள் ஊர்சுற்றிய களைப்பு இன்னும் என்னிடம் மிச்சமிருக்க அம்பையிடம் கேட்டேன்,

“களைப்பாக இருக்கிறதா? மலையை ஏறமுடியுமா உங்களால்?

“களைப்பு என்றால் என்ன?  மலை ஏறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.”

பத்துமலையின் அந்தக் குகையில், 120 அடிக்கொண்ட அந்த முருகன் சிலை
முன்பு, புறாக்களைப் பார்த்தவாறு, இன்னும் இன்னுமாக அம்பையைப் புகைப்படமெடுக்க என் புகைப்படக்கருவி மாதிரியே நானும் பரபரத்துக் கிடந்தேன். பத்துமலையின் 274 படிகளையும் அம்பை எந்தச் சிரமும் இல்லாமல் ஏறிமுடித்தார். அவருக்குப் பெரிதாக மூச்சு இரைக்கவே இல்லை.
அம்பை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் படியையையும் என் கேமரா கண்ணில் பார்த்துகொண்டிருந்தேன். சில அழகான கிளிக்குகள் கெமராவுக்குள் சிக்கியது. களைப்பாக இருக்குமே என அம்பைக்குத் தண்ணீர் கொடுத்தேன். பாட்டிலை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து நடந்தார். தண்ணியை அவர் அருந்தவே இல்லை.

பத்துமலையின் உள்அழகை அம்பை அங்குள அங்குளமாக ரசித்தது பார்க்க அத்தனை ஆவலாக இருந்தது. எழுத்தாளரும் பசுமை நடை அமைப்பை சேர்ந்தவருமான முத்து கிருஷ்ணன் பத்துமலைக்கு வந்திருந்தபோது கொண்ட ஆதங்கத்தை அம்பையிடம் கூறினேன். புன்னகையோடு கடந்து சென்றார். குகையின் உள்பகுதியில் வாய்திறந்திருக்கும் மேற்பகுதியில் வந்து விழுந்த சூரிய வெளிச்சமும் அதனூடே பறந்துச்செல்லும் புறாக்களையும் அம்பை எவ்வாறு உள்வாங்குகிறார் என்பதைத் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருந்தது. ஆனால், அவரின் மௌனத்தைக் களைக்க எனக்கு விருப்பமில்லை.

“இறங்கலாமா யோகி”?

மௌனம் களைந்தவரை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினேன். நீங்கள் புகைப்படக்கலைஞரா எனக் குறைந்தது 4 பேராவது என்னை கேட்டிருந்தனர். அம்பையை மட்டுமே நான் படமெடுக்க அங்கு வந்திருக்கிறேன் எனக் கூறினேன். "யோகி நீ ஒரு புகைப்படத்தை ஒரு வெள்ளி வீதம் வினியோகம் செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும்" என்றார் அம்பை. உன் செலவு போக மீதத்தை ஸ்பார்ரோ அமைப்புக்கும் நிதி வழங்கலாம் என்று அம்பை கிண்டலாகச் சொன்னார்.

அடுத்து நாங்கள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவைக் காணச்சென்றோம். இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்த தோரணவாயில், நூறு கோட்டரஸ் இருந்த இடம், விவேகானந்தா ஆசிரமம் என  ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே நடந்தோம்.  கபாலி படத்தை பார்க்க மூன்று மணி டிக்கெட்டை எடுத்து வைத்திருந்தோம்.  பெரிதாகப் படம் அம்பையைக் கவரவில்லை என்றாலும் சில காட்சிகளில் நாங்கள் ஆற்பரிப்பதை ரசித்துக்கொண்டிருந்தார். ரஜினியின் மகள் யோகி எனும்போது நான் விசிலடிக்க முற்படுகையில் அம்பை என் கையைப் பிடித்துக்கொண்டு குதூகளித்தார்.

71 வயது தேவதை எங்களோடு எங்களின் இயல்பு நிலைக்குக் கொஞ்சமும்
குறையாமல் தொடர்ந்து வருவதையும் சில விஷயங்களைக் கலந்து பேசும்போது  சில சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் என்னோடு ஒத்துப்போவதை உணர முடிந்தது. கோலாலம்பூர் இரட்டை மாடி கோபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.
யோகி எனக்குப் பிடித்த உன்னுடைடைய கவிதைகள் சிலவற்றை வாசித்துக்காட்டுவாயா? என்றார் அம்பை. எனக்கும் அம்பையிடம் கேட்பதற்கு ஒரு கேள்வியிருந்தது.

அம்பை என்னைச் சந்திக்க வருகிறார் என்றதும் அவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்று பலர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால், நீங்கள் எங்களோடு செலவழித்த இந்த இரண்டு நாளிலும் அதைப்பற்றிக் கேட்கவே இல்லையே.. அதோடு தோழி வாங்கி வைத்திருந்த வோட்காவையும் நீங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டீகளே என அம்பையிடம் நான் நேரடியாகவே கேட்டேன்.

தன்னைப்பற்றி இப்படியான செய்திகள் எப்படிப் பரவுகிறது எனத் தெரியவில்லை யோகி என அம்பை வாய்விட்டு சிரித்தார். அதனைத்தொடர்ந்து அவர்மேல் வைக்கும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் எனக் கேட்க ஒரு கொண்டாட்ட நிலையில் சிரித்துக்கொண்டே சில அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டார். அதில் பாண்டிச்சேரி அனுபவமும் ஒன்று. (அனுபவம் ரகசியம்)

காலை 9 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பிய நாங்கள் திரும்பவும் வீடடையும்போது 11 ஆகியிருந்தது. அதிகாலை 4 மணிக்கு அம்பை விமான நிலையம் புறப்பட வேண்டும். பிரிவு எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கவிதையை வாசிக்கச் சொல்லி அம்பை மீண்டும் நினைவு படுத்தினார். 'அம்மாவின் புடவை' என்ற கவிதையும் 'வரைபவனின் மனைவி' என்ற கவிதையும்  அம்பைக்குப் பிடித்த கவிதை என கூற அதை வாசித்துக் காட்டினேன். கண்களை மூடி கேட்டுக்கொண்டிருந்தார். பின் எனக்குப் பிடித்த கவிதையையும் அது எழுதுவதற்கான சம்பவத்தையும் அம்பையோடு பகிர்ந்து கொண்டேன். என் விளக்கத்திற்கு மதிப்பளித்து அம்பை கேட்டுக்கொண்டிருந்தார். என் கவிதைக்கு பின்பான  நீண்ட மௌனத்தில் இருந்த அம்பையின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என அனுமானிக்க முடியவில்லை. ‘That words really pain yogi’ என்றார் அம்பை.

"நீங்கள் கவிதைகள் ஏன் எழுதுவதில்லை" என்று கேட்டேன்.
சிரித்தபடி அம்பை,
"யார் சொன்னது நான் எழுதவில்லை என்று. அதன் வடிவம் எனக்கு கைகூடவில்லை என்பது உண்மைதான். ஆனால், எனது கவிதைகள் எனது தோள்பையில் இருக்கும் டைரியில் இருக்கிறது. நான் மரணித்தப்பிறகு ஒரு வேளை உங்களுக்கு வாசிக்க கிடைக்கலாம். இப்போது அது எனக்கானது மட்டுமே.."

கண்களை விரித்து சிரித்தவர் தன் நெற்றியில் இருந்த நிலா மாதிரியான அந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து எங்கோ ஒட்டிவைத்தார். நாங்கள்
இரவு வணக்கத்தைக் கூறி உறங்கச் சென்றோம்.

அம்பை இந்தப் பயணத்தில் நான்கு முத்தங்கள் ,  பிங்க் வர்ண குர்த்தா, ஒரு ஜோடி நீல நிற கால் மணி  என பரிசளித்த அனைத்தையும் பத்திரமாகச் சேமித்துவைத்திருக்கிறேன். நான் எனது அம்பையைச் சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் அமையுமா எனத் தெரியாது. எட்டாத தொலைவில் இருந்தாலும், அம்பையுடைய வாழ்வின் முதல் மலேசிய பயணத்தில் இந்த இரண்டு நாட்கள் நாங்கள் வானவில்லைபோலப் பலவர்ணங்களில் மின்னிக்கொண்டிருந்தோம். அதை அம்பையாலும் மறக்கமுடியாது.

-யோகி

2 கருத்துகள்: