சனி, 23 ஜூலை, 2016

அம்பை - யை சந்தித்த வானவில்கள்

முதல் முறை அந்தப் பெயரை எங்குக் கேட்டேன்? எப்படி அறிமுகம் ஆனது? அவரின் படைப்புகளில் நான் முதன் முதலில் வாசித்தது என்ன? அவரைச் சந்திக்கப்போகிறேன் என்று தெரிந்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். நினைவுக்கு எட்டவே மாட்டேங்கிறது. ஒருமுறை நண்பர் யுவராஜன் அம்பை சிறுகதைகள் குறித்துப் பேசியது நினைவில் உள்ளது. அதன்பிறகு நானே அம்பையின் படைப்புகளைத் தேடி வாசித்துவந்தேன்.
ஆனால், அவரை நான் முகநூலில் தொடர்புகொள்ளத் தைரியமில்லாதவளாகத்தான் இருந்தேன். என்னுடைய ‘வரைபவனின் மனைவி’ என்ற கவிதையைத் தோழர் வெங்கி தில்லைநாயகம் அவரது முகநூல் சுவரில் பதிந்திருந்தார். அதை அம்பை பார்த்துவிட்டுச் சிலாகித்திருந்தார்.

எனது அபிமான எழுத்தாளரிடமிருந்து நான் எதிர்பார்க்காத நேரத்தில் யாரோ ஒருவரின் சுவரில் நடக்கும் அந்த உரையாடலைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் முகநூலில் அப்படித்தான் அம்பையைக் கண்டுகொண்டேன். பிறகு அவர் என்னோடு முகநூலில் மிகச் சகஜமாகப் பேசத்தொடங்கியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நான் படைப்புகளின் வழியே அம்பைக்கு அறிமுகமாகியிருந்தேன் என்பது என்வரையில் எனக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும்.
கடந்த ஆண்டு அம்பை மலேசியா வருவதாகவும், என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தபோது, நாட்டில் புகமூட்டப் பிரச்னை மற்றும் வேலைபலு காரணமாகச் சில சிக்கல் இருக்கிறது என கூறியிருந்தேன். அதே வேளையில், அம்பையின் மலேசிய விமான டிக்கெட்டிலும் ஏதோ சிக்கல் இருந்ததால் அந்தப் பயணம் ரத்தானது.


சில வாரங்களுக்குமுன், அம்பை மலேசிய வருகையை உறுதி படுத்தினார். இரண்டு நாட்கள் அவரோடே இருக்கிறேன் என நானும் அவருக்கு உறுதியளித்திருந்தேன்.
அதன் தொடக்கம் அந்த 74 வயது தேவதையை விமானநிலையத்திலேயே வரவேற்க நான் அங்குச் சென்றிருந்தேன். 21-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மிக எளிமையான தோற்றத்துடன் எந்தத் தேவதை என்னை அடையாளம் கண்டு வந்து வாரியணைத்துக்கொண்டார்.

தோழி மணிமொழி வீட்டில் அம்பையைத் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டிலேயே மதிய உணவை எடுத்துக்கொண்டு நாங்கள் அந்த நாளின் பயணத்தைத் தொடங்கினோம்.
அம்பையைக் கோலசிலாங்கூரில் இருக்கும் ‘புக்கிட் மெலாவத்தி’ க்கு அழைத்துச் செல்லலாம் என நானும் மணிமொழியும் முடிவெடுத்திருந்தோம். கிராமங்களும், வனங்களும், தோட்டங்களும் கடந்து இருக்கும் அந்த மலைபகுத்திக்கு அழைத்துச் செல்லலாம் என யோசனையை நான்தான் மணிமொழியிடம் கூறினேன். அதற்கு ஒரு காரணம் இருந்தது. மூவின மக்களின் கலாச்சாரத்தைக் காரில் செல்லும்போதே காணலாம் என்றால் அது கோலாசிலாங்கூர் சென்றால்தான் முடியும். அதுவும் தலைநகரிலிருந்து ஒரு மணிநேரத்தில் அங்குச்சென்றுவிடலாம்.

விமானக் களைப்பு எதுவும் அம்பையிடமில்லை. ஒவ்வொரு விளக்கங்களையும் மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். சில சமயம் அவர் பேசுவதும் சில வேளைகளில் நாங்கள் பேசுவதும் மூன்று தோழிகளின் அழகான பயணமாக அது அமைந்தது. சரி என்பதற்கு அம்பை ‘அச்சா ! அச்சா ! ‘ என்று கூறுவது நான் அவ்வளவு ரசித்தேன். இப்பவும் அது ஞாபகத்தில் வரும்போதெல்லாம் ரசிக்கத் தொடங்குகிறேன்.
ஜப்பானியர்களும் டச்சுக்காரர்களும் விட்டுப்போன மிச்சம் அங்கு இருந்தாலும், கடலுடன் கூடிய வனம், மலையேறும்போது காணக்கிடைக்கும் 100 ஆண்டுகள் கடந்த விருட்சங்கள், அங்கேயே பலதலைமுறைகளாக இருக்கும் இரண்டு இன குரங்குகள், லைட் ஹவுஸ் எனச் சுற்றுப்பயணிகள் காண்பதற்கு நிறைய இருக்கிறது.

குரங்கு என்றால் அம்பைக்கு அச்சம் என்று கூறினார். அங்கே நூற்றுகணக்கில் இருக்கும் குரங்களுக்குப் பயணிகள் உணவு கொடுக்கலாம். அம்பை கொஞ்சம்கூட நெருங்கவில்லை. இலக்கியத்தில் பெரிய ஆளுமை; குரங்குக்குப் பயப்படலாமா என்று எங்களின் கிண்டலுக்கு அவர் கொஞ்சமும் அசரவில்லை. அவர் அறியாமல் பல புகைப்படங்களை எடுத்தேன்.
புக்கிட் மெலாவத்தியில் கண்டெடுக்கப்பட்ட மேலும் சுல்தான்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கிரிஸ், மயான கல் உள்ளிட்ட பல பொருள்களையும் அதன் விவரங்களையும் அம்பை படித்துத்
தெரிந்துக்கொண்டதுடன் சில விஷயங்களைக் கலந்தாலோசிக்கவும் செய்தார்.


இதுவரை நான்கு முறை புக்கிட் மெலாவத்தி சென்றிருக்கிறேன். அம்பையோடு அந்த அந்தி நேரத்தை அதிகமாக அந்த மலையில் செலவிட முடியாவிட்டாலும், என் வாழ்கையில் அது மிகவும் அழகான தருணமாகும்.
தொடர்ந்து நாங்கள் மின்மினி பூச்சிகள் சங்கமிக்கும் ‘கம்போங் கிளிப் கிளிப்’ என்ற இடத்திற்குச் சென்றோம். ஒரு தேவதையை வரவேற்க அங்கு வானவில் பூத்திருந்தது. அம்பையை அங்கு வைத்துப் படமெடுத்தேன். சூரியன் மறைந்துகொண்டிருப்பதை மூவரும் மூன்று திசையில் இருந்துக்கொண்டு ரசித்துக் கொண்டிருந்தோம்.
இரவு பயணத்திற்குத் தயாராக இருக்கும் அந்தத் தோணிகள் , அதற்கு முந்திய நேரத்தில் சுமந்திருக்கும் வெறுமையைக் குறித்து அம்பையிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு தோணியும் ஒவ்வொரு கதைகளைச் சுமந்துக்கொண்டு என்னுடன் பேச தொடங்கும் அந்த நொடியில் வெளிபடும் வலி, பெண்களின் ஆழ்மனதில் தங்கியிருக்கும் சொல்லப்படாத கதையைப் போன்றது என்று கூறிக்கொண்டிருந்தேன்.

லேசாக மழை தூவ தொடங்கியிருந்தது. அம்பை என் கரம் பற்றித் தோணியில் அமர்ந்தார். குடை பிடித்திருந்தோம். 20 வருட அனுபவம் கொண்ட படகோட்டி படகை செலுத்தினார். தூரல் மழையில், இப்படி ஒரு படகு பயணத்தில், அழகான கவிதாயினி கைகோர்த்திருக்க, அன்பு தோழி உடனிருக்கக் கூடவே மின்மினி பூச்சிகளைக் காண்பது என் வாழ்க்கையில் இது முதல்முறை என அம்பை சொன்னார். மரங்களுக்கு மறைவில் இருந்த மின்மினி பூச்சிகள் விண்மீன்கள் எனக் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.
(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக