ஞாயிறு, 10 ஜூலை, 2016

நவிஷா..


விளையாட்டுப் பொருட்கள்
அடங்கிய பையைப் பிடுங்கி
வீடு முழுவதும் இறைத்துவிடுகிறாள் நவிஷா

சலிக்காமல் இறைந்து கிடக்கும் அத்தனையையும்
பையில் சேகரிக்கின்றேன்
அத்தனை ஆவலாக
அதைப் பிடுங்கி
மீண்டும் வீடெங்கும்
இறைக்கிறாள்

அவற்றை
சேகரிப்பதை விடுத்து
அவளையே பார்க்கின்றேன்
நான் ஏன் சேகரிக்கவில்லை
என்பது போல்
என் முகத்தை
ஏக்கமாகப் பார்க்கிறாள்

அவள் விட்டுச்சென்ற
கேஸ் சிலிண்டர், கரண்டி, கிலுகிலுப்பை இத்யாதிகள்
அனைத்தும்
என்னைப் போலவே அவளுக்கென
காத்திருக்கின்றன...

நவிஷா இப்போது எழுத தொடங்கிவிட்டாளாம்
தங்கை சொன்னாள்
விளையாட்டுப்-பொருட்களை
இப்போது அவள்
சீண்டுவதே இல்லையாம்

இறுதியாக
அவள் விட்டுச் சென்ற
அந்த ஏக்கப் பார்வை
என் வீட்டின்
சுவர் முழுவதும் சுண்ணாம்பு
பூசிக்கொண்டிருக்கிறது
நாளை அவள் வந்து - அதில்
சித்திரம் வரைவாள்...

1 கருத்து: