
சுற்றுலாப்
பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கும் இந்த மையத்திற்கு மாணவர்கள், பெருநிறுவன ஊழியர்கள்,
ஆசிரியர்கள், இயற்கை ஆராய்ச்சியை மேற்கொள்பவர்கள் , வெளியூர் பயணிகள் என அதிகமானோர்
வருகையளிக்கின்றனர். நான் சென்ற சதுப்பு நில வன அனுபவம் என்றும் மறக்க முடியாதது. கெர்த்தே நதியைச்
சந்திக்கும் சதுப்பு நிலக்காட்டுக்குள் ( Hutan Paya Bakau) 30 வகையான வெவ்வேறு தன்மை
கொண்ட அரிய வகை வனமரங்களும் மலர்களும் அதன் ஈர வாசம் மாறாமல் நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
அந்த மரங்கள் குறித்தும் அதன் பயன்பாடு மற்றும் மருத்துவக் குணங்களைக் குறித்தும் நமக்கு
விளக்கமளிக்க ஏற்பாட்டாளர்கள் தயாராக இருக்கின்றனர். சேறும் சகதியும் நிறைந்த அந்தக்
காட்டிற்குள் நடப்பதற்குக் கஸ்டமாக இருந்தாலும் , நகரத்தின் இரைச்சலுக்கும் கூச்சலுக்கும்
அப்பாற்பட்டு அமைதியான ஓரிடத்தில் இருப்பது எல்லாக் கஸ்டங்களையும் விழுங்கக்கூடியதாக
இருந்தது. புதிய இடத்தில் புதிய விஷயங்களையும் புதிய சூழலையும் அனுபவிக்கும்போது சலிப்பு
ஏற்படுமா?
மழை இல்லாவிட்டாலும்
ஈரமாகவே இருக்கும் அந்தச் சூழலில், மாலை வேளையில், கெர்த்தேவின் நதிக்கரையில் அதன்
மடி சாயவேண்டும். வெடித்து அழத்தோன்றும். கண்ணீர் வடிந்து தீர்ந்தபின் மனம் கரைந்த
அந்தக் கனத்தில் நதிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் ‘ஒற்றைக் கொடுக்கு நண்டு’கள் (soft shell) விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஆமை, நத்தை எனப் பலதரப்பட்ட சிறு உயிரினங்கள் எவ்வித இடையூரும் பயமுமின்றித் திரிவதைப்
பார்த்துகொண்டிருக்க மனம் இலகுவாகி காற்றில் மிதந்து கொண்டிருக்கும்.
சுற்றுப்
பயணிகள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறை நிச்சயமாக மலேசியவாசிகளுக்குப்
புதிய அனுபவத்தைத் தரலாம். இயற்கையுடன்கூடிய இயற்கை வாழ்கையை அனுபவிக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் வனத்தின் நடுவில் நதிக்கரையின் அருகில் குடிலை அமைத்திருக்கிறார்கள்.
அங்கிருந்து
15 நிமிடம் கெர்த்தே நதியில் படகில் பயணம் செய்தால் மின்மினி பூச்சிகள் சங்கமித்திருக்கும்
இடத்தைச் சென்றடையலாம். ‘lampyridae’ என்று சொல்லக்கூடிய பூச்சி குடும்பத்தின் இரு இன மின்மினி பூச்சிகள் அவை. காட்டிலுக்கும் ஒருவகை மரத்தின் வாசம்
அப்பூச்சிகளை வசியப்படுத்தி அங்கு நங்கூரம் போடவைத்துள்ளன.
சுமார்
14 நாளிலிருந்து 18 நாட்கள் வரை மட்டுமே உயிர்வாழும் மின்மினிப் பூச்சியின் ஆண் இனம்
தன் உடலிருந்து அதிகமாக வெளிச்சத்தை வெளிப்படுத்தி பெண் மின்மினி பூச்சிகளை இனவிருத்திக்கு அழைக்கிறது
உள்ளிட்ட விவரங்களை வழிகாட்டிகள் தெரிவித்தனர். ஆனால், அந்த வெளிச்சமானது நமது கண்களுக்கு
விண்மீன்களாக விரிந்து அந்த இருளிலும் பேரானந்தத்தைக் கொடுக்கிறது. மின்மினிப் பூச்சிகளை
ரசித்தபடி, கரம் கடலை உரச படகில் பயணம் செய்வதும், மீனவர்களின் பிடியில் சிக்கும் கடல் உயிரினங்களை அப்போதே பேரம்பேசி வாங்குவதும், அந்த அமாவாசை இரவின் ஈரக் காற்று
நம்மைத் தழுவிச் செல்வதும் நம்வாழ்வில் இன்னும் ஒருமுறை நிகழாமலே போகலாம். மலேசியாவில்
8 வகையான மின்மினி பூச்சிகள் காணக்கிடைக்கிறது என்பது கொசுறு தகவல்களாகும்.
Mangrove
என்று சொல்லக்கூடிய காட்டு மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கும் கெர்த்தே நதிக்கரையைச்
சுற்றியிருக்கும் வனத்தில் காலை உதயம் மிகவும் இனிமையானது. அதற்குக் காரணம் பறவைகள்
எழுப்பும் ஒலிதான். காலையிலேயே Bird Watch போவது நல்ல அனுபவம் . சரியான பெயர்கூடத்
தெரியாத பல வண்ணப்பறவைகள் அந்தக் காலை நேரத்தை கலராக்குகின்றன. மரங்கொத்தி, பருந்து,
கச்சன் குருவி, மழைக்குருவி என 50க்கும் மேற்பட்ட பறவைகள் நமக்கு அதன் இருப்பைக் காண்பிக்கிறன.

Mangrove
மரங்கள் தன்னைத்தானே மிக எளிதாக உற்பத்தி செய்துகொண்டு சதுப்பு காடுகளாக செழித்து வளரும்
கொடைபெற்றது. மற்ற விதைகளைப் போலில்லாமல் ஒரு Mangrove விதை நிலத்தில் விழுந்து அடுத்த
நொடியே துளிர் விடத் தொடங்குகிறது. அது ஒரு
அற்புதமான காட்சியாகும். கர்ப்பம் தரித்து குழந்தையை ஈனுவதுபோல, Mangrove விதை தானே நிலத்தில்
வீழ்ந்து சேற்றில் சொருகி தன் இடத்தையும் இருப்பையும் நங்கூரம் போட்டு விடுகிறது. மண்ணில் இடம் பிடிக்காத அல்லது பிடிக்க முடியாமல்
தோற்றும்போகும் விதைகள் அலையின் உதவியோடு நதியில்
பயணித்து கடல் படுகையில் இடம்பிடித்து வேர்களை ஊனிவிடுகின்றன.
Mangrove
வேர்கள் பார்ப்பதற்கு இடியாப்பச் சிக்கல்கள் மாதிரி இருந்தாலும், அதன் வேர்களில்தான் தனித்துவமான
சுற்றுச்சூழல் அமைப்பு இயங்குவதாக அண்மையில் National Geography-யில் Mangrove மரங்களைப்பற்றி
பேசுகையில் கேட்டேன். அது எத்தனை உண்மை என்று
அதை நேரடியாக உணர்ந்த எங்கள் நாட்டுக்குத் தெரியும். கெர்த்தேவிலிருக்கும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தைச் சேர்ந்தவர்கள் Mangrove விதைகளைச் சேகரித்து அதை தனித்தனியா பாத்தி பைகளில் விதைத்து முளைவிட்டு வளரத்தொடங்கியதும்
சதுப்பு நிலக்காடுகளில் இடப்பெயர்ப்பு செய்து
விடுகின்றனர். இந்த வேலையில் கெர்த்தேக்கு
வரும் சுற்றுப்பயணிகளை ஈடுபடுத்துவதுடன் அவர்களுக்கு நிலத்திலான மண் சார்ந்த வாழ்கையை சில நிமிடங்களுக்காவது அனுபவிக்க
வாய்ப்பு வழங்குகின்றனர். பரிசுத்தமான வனாந்திரத்தை
இனி பார்க்க முடியுமா என தெரியவில்லை. ஆனால், எங்கோ யாராவது ஒருவர் இயற்கையை பாதுகாக்க எடுக்கும் முயற்சியில்
ஒத்துழைக்காவிட்டாலும் அதை ஒரு முறை பார்த்துவிட்டு விமர்சிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.