புதன், 18 மே, 2016

பிணம் தழுவுதல் எனும் சடங்கு



பிணம் தழுவுதல் குறித்து இதற்கு முன் எப்போதோ கேள்விபட்டமாதிரி மனதிற்கு தோன்றினாலும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் அது குறித்துப் பேசிய போதுதான், கொஞ்சம் அதிர்ச்சியும் எனக்குள் ஒரு கேள்வியும் எழுந்தது. குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த  கன்னிப்பெண் கன்னிகழியாமல், (காதல் ஏக்கத்தோடு) மரணித்தால், அச்சவத்தோடு, ஒருவர்  உறவுக்கொள்ளும் சடங்கை நிறைவேற்ற வேண்டுமெனில், ஒரு  கன்னிப்பையன் காதல் ஏக்கத்தோடோ அல்லது உடலுறவில் ஈடுபடாத பையன் என்ற காரணத்தினாலோ
மரணித்தால் என்ன செய்திருப்பார்கள்? நினைத்துப்பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.  (நல்ல வேளையாக அம்மாதிரியான சடங்கு இல்லாதது கொஞ்சம் ஆதரவளிக்கிறது)

'பிணம் தழுவுதல்' என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்துள்ள சடங்கு என்று கூறப்படுகிறது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் இந்தச் சடங்குக்காகவே உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்களாம். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தைத் தழுவி வர (உடலுறவு கொள்ள) வேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்களாம். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை. மலைநாட்டில் இவ்வழக்கம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முகநூலில் இது தொடர்பாக நான் போட்ட நிலைத்தகவல்களில் நண்பர் விக்கினேஸ்வரனின் கருத்து மிக முக்கியமானதாகும்.

13-ஆம் நூற்றாண்டில் கம்போடியவின்
 கெமெர் கோவிலில் உள்ள கன்னிப்பெண்ணுக்கு
மதபோதகனால் சடங்கு நிறைவேற்றும்
கற்சித்திரம் 
பூப்பெய்திய பெண் திருமணம் செய்யும் முன் நம்பூதிரிகளால் உடல் உறவு செய்யவும் அதன் பின் அவர்களின் தீட்டுகளும் பாவங்களும் கழிந்துவிடும் என்பதும் நம்பிக்கையாக இருந்துள்ளது. அதன் பின் அவள் திருமண வாழ்க்கைக்குத் தகுதியானவளாகக் குறிப்பிடப்படுகிறது.
(இந்தத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் மூல நூல் நண்பரின்
ஞாபகத்தில் இல்லை எனக் கூறியிருந்தார்).

பிணம் தழுவுதல் என்பது நம்பூதிரிகள் மத்தியில் மட்டுமல்ல கம்போடிய நாகரீகத்திலும் இருந்து வந்துள்ள ஒரு நம்பிக்கையாகும்.

‘May you have what really matters- in future may you marry thousands and thousands of husbands' - A Record of Cambodia The Land and its People - Page 56 (Young Girls) 'Zhentan' எனும் சடங்கு முறையில், வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்து கொடுக்கப்படும் முன் மதப் போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம்.

(நம்பூதிரிகள் மத்தியில் இருந்துள்ள இந்தப் பழக்கம் இவர்களிடத்திலும் இருந்துள்ளது தெளிவாகிறது. ஆனால், பிணம் தழுவுதல் குறித்து இங்கு குறிப்பிடப்படவில்லை)

A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்புக் காணப்படுகிறது. சியாம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ளச் சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனிச் சிறப்பு மிக்கது. 1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாகச் சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே.

(நன்றி நண்பர் விக்கினேஸ்வரன்)

பிணம் தழுவுதல் சடங்குமுறை இக்காலத்திலும் நடக்கிறது என்பதை நண்பர் இனியன் கூறுகையில் கற்பனைக்கு எட்டாத விஷயமாக அது இருந்தது. அது குறித்து அவர் இவ்வாறு பதிவு செய்தார்.

நம்பூதிரி இனத்தில் மட்டும் இல்லை, தமிழ் சூழலில் வெள்ளாளர் சாதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடமும் பிணம் தழுவும் சடங்கு உண்டு. அந்தச் சடங்கு செய்பவர்களுக்குப் பொதுவான பெயர் ஒன்றும் உள்ளது. அதைதான் தேடிவருகிறேன்.

2003-ஆ ம் ஆண்டு நண்பரின் அக்கா இறந்த போது திருச்சி முழுவது சுற்றி ஒரு நபரை அழைத்துச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால், அப்போது ‘தழுவல்’ என்பதெல்லாம் நின்று வெளிச் சடங்கு என்று வந்து விட்டது. அவரை அழைத்து வருகிற போது சடங்கு செய்பவர்களுக்கான பொதுப் பெயர் ஒன்றை அந்நபர் கூறினார். 

மேலும், பழங்கால எகிப்திய மக்களிடமும் இதுபோன்ற சடங்குகள் இருந்ததாகப் படித்திருக்கிறேன். சிந்துபாத் கதையில் கூட ஓர் இடத்தில் வரும் இது போன்ற நிகழ்வு என நினைக்கிறேன்.

(நன்றி நண்பர் இனியன்)

இது தொடர்பாக இனியனிடம் நேரில் பேசும்போது, பிணம் தழுவுதல் எனும் சடங்கை அந்நபர், வீட்டில் செய்ய மறுத்துவிட்டதாகவும் இடுகாட்டில் பிரேதத்தை குழியில் இறக்கியப் பிறகு அவர் தழுவுதல் சடங்கில்  ஈடுபட்டாலும்  அவர் பிரேதத்தோடு உடலுறவு கொள்ளவில்லை என்பது புரிந்து கொள்ள முடிகிறது என்றார். சின்ன அரிவாளோடு குழியில் இறங்கியவர் எப்படி சடங்கை நிறைவேற்றியிருப்பார் என நாமாக யூகிக்க வேண்டியதுதான்.

பிணம் தழுவுதல் குறித்துத் தமிழ் இலக்கியங்களில் சிலர் பதிவுகள் செய்துள்ளதை முகநூலில் நண்பர்கள் சிலர் செய்த பின்னூட்டங்களின் வழி தெரிய வந்தது. நண்பர் குமார் அம்பாயரம் 'வழக்கு எண் 19/2021' என்ற கதையில் பிணம் தழுவுதல் குறித்துப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அந்தக் கதை இணையத்தில் இல்லாததாலும் நண்பரின் சிறுகதைத் தொகுப்பு கிடைக்காததாலும் இன்னும் நான் அந்தக் கதையை வாசிக்கவில்லை.

நண்பர் ராசு, ‘இறுதி இரவு’ என்ற சி.சரவணகார்த்திகேயன் எழுதிய சிறுகதையை அனுப்பியிருந்தார். எனது முகநூல் பின்னூட்டத்தில் மிக முக்கியமான பதிவுகளில் அந்தக் கதையும் ஒன்று. பிணம் தழுவுதல் சடங்குகள் குறித்த சம்பவங்களை நம் கண்முன் கொண்டு வருவது போல இருக்கும் அந்தக் கதை. மேலும் சாதி ரீதியில் எப்படி இச்சடங்கானது கையாளப்படுகிறது என்பதும் அந்தக் கதை பேசுகிறது. நண்பர்கள் வாசிக்க.
http://www.writercsk.com/2016/01/blog-post_31.html

கதையின் ஓரிடத்தில்…

குப்பன் பிணந்தழுவுபவன். கன்னிப் பிணத்தை அப்படியே அடக்கம் செய்தால் அதன் ஆன்மா நிம்மதியுறாது அலையும் என்பது ஊர் ஐதீகம். அதனால் அதைக் கன்னி கழித்த பின் தான் எரிக்கவோ புதைக்கவோ செய்வர். பல நூறாண்டுப் பழக்கம் அது. முதல் ராத்திரி என்பது போல் இறந்து போன பெண்ணுக்கு அது கடைசி ராத்திரி. சாமி காரியம் என்று தான் சொல்வார்கள். 

இப்படி கூறப்பட்டுள்ளது.

எழுத்தாளர், அண்ணன் ஆதவன் தீட்சண்யா அவரது இணையத்தளத்தில் பிணம் தழுவுதல் குறித்து இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக இறந்துவிடும் பெண்களின் சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்களது பிணத்தைக் கன்னிகழித்து அடக்கம் செய்யும் வழக்கம் நம்பூதிரி பார்ப்பனர்களிடம் இருந்ததை யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள “தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்” என்கிற நூல் தெரிவிக்கிறது. பார்ப்பனப் பெண்ணின் பிணத்தைக் கன்னி கழிக்கும் செயல் நீசக் காரியம் எனவும் கன்னி கழிப்பவர் நீசக் காரியன் எனவும் அழைக்கப்பட்டனர். நீசக் காரியத்தை நிறைவேற்றும் பொறுப்புத் தலித்துகளுடையதாக இருந்தது. வாழும்போது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட பார்ப்பனப் பெண்கள் செத்தப்பின்போ மனிதாபிமானமற்று நடத்தப்பட்டனர்.

காண்க: http://aadhavanvisai.blogspot.my/2015/02/-post_25.html?m=1blog.
(நன்றி, ஆதவன் அண்ணா)

மேலே உள்ள பதிவுகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும் பொழுது இரண்டு வகையான விஷயங்கள் காணக்கிடைக்கலாம். முதலாவதாக ஜாதியடிப்படையில் பிணம் தழுவுதல் சடங்கை தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களைச் செய்யச்சொல்வது. மற்றொன்று பிணத்தைக்கூடப் பிற ஜாதியினர் தீண்டவிடாமல் அதே ஜாதிக்காரர்கள் வைத்து நடத்திக்கொள்வது. அதை அடிப்படையாகக் கொண்டதுதான் ‘இறுதி இரவு’ என்ற கதை.

பிணம் தழுவுதல் தொடர்பாக வாசிக்கக் கிடைத்த ஒரு கவிதை இது.

இறந்துபோன இளவயதுக்காரியை சாந்தப்படுத்த
பயமறியா ஆண்களைத் தேடியது
ஊரெங்கும் ஒட்டிய சுவரொட்டிகள்

வரிசை கட்டிய விண்ணப்பங்களை
அவள் பெயர் பதித்த பளிங்கு கல்லறையின் மீது கொட்டப்பட்டது
ஒருவனைக் கையும் காட்டியாகிவிட்டது

கல்லறை உடைத்து வெளியிழுத்துப் போடப்பட்டது
உயிரற்ற முகம் வெளுத்த உடல்

ஒடிந்துவிடும் தேகம் கொண்ட அவனை
அங்கேயே விட்டு நகர்கிறது மனித வாசம்

பார்த்துக் கொண்டிருந்த சிலந்தியொன்று
இடுகாட்டின் எந்த மூலையில் ஒதுங்கலாமென
ஆராயத் தொடங்கியது

முறிந்து விழுந்திருந்த ஒற்றைக் கிளையில்
சொர்கத்து தேவதைகளாய் வாடிய பூக்கள்
ஒட்டிக் கொண்டிருந்தன

வட்டம் குறைந்துபோன நிலவு
தூண்டிய ஒளியை
வாசமாய் வீசிவிட்டுக் காத்திருந்தது

ஓரப்பார்வையுடன் ஓணான் ஒன்று
உடல் ஒட்டிய மண்ணை இழுத்துக்கொண்டு
இயங்கும் மனிதனை வெறித்து நகர்கிறது

ஆசுவாசப்பட்ட உடல் சுமந்தவன், எழுந்து
ஆன்மா சாந்தியுற்றதாய் சொல்லி செல்கிறான்

இசைப்பதை மறந்த பறவையொன்று
சடசடவெனச் சிறகடித்துப் பறக்கிறது
பீத்தோவனின் கல்லரையைத் தேடி…

இந்தக் கவிதையை முகநூலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இந்தக் கவிதை எழுதிய பெண்கவிஞரின் பெயரையும் அவர் தெரிவித்திருந்தார். காலத்தாமதமாக இதைப் பதிவிடும் காரணத்தினால்  அது யார் என என் நினைவிலிருந்து தவறிவிட்டது. (விவரம் அறிந்தவர்கள் தெரியபடுத்தலாம். )

பிணம் தழுவுதல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களை நான் தொடர்சியாக இந்தப் பதிவில் சேகரிக்கிறேன். அதன் அடிப்படையில் 19/4/2020 அன்று வாசிக்க தொடங்கிய 'சுளுந்தீ' நாவலில் இது தொடர்பாக ஒரு குறிப்பு எனக்கு கிடைத்தது.

சேர வம்சாவழியில் கலியாணம் முடிக்காத பொம்பள செத்துப்போனா, அந்தப் பொண்ண புணர்ந்து புதைப்பது பழக்கம். இப்படி புணர்வதற்காக சுடுகாட்டில் வட பக்கம் மறைவான மேடு அமைத்திருப்பாங்க. அந்த எடத்திற்குப் பேரு வெங்க மேடு. பொணத்த புணருபவனுக்கு வெங்கப்பயன்னு பேரு.
(பக் 127)  

சாதாரணமாக வெங்கப்பயன்னு நாம் அர்த்தம் தெரியாமல், போகிர போக்கில் நகைச்சுவை எனும் பேரில் சொல்லும் சொல்லுக்கு பின்னால் இருக்கும் பொருள் எவ்வளவு கொடூரமானதாக  இருக்கிறது. 

4 கருத்துகள்:

  1. கவிதையை அனுப்பிய நண்பர் தமிழ்மணவாளன். கவிதையை எழுதிய கவிஞர் அகிலா.கவிதை இடம் பெற்ற நூல் ,’மழையிடம் மௌனங்கள் இல்லை’

    பதிலளிநீக்கு
  2. . பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணக்தழி இயற்று.
    குறள் 913

    (ப-ரை பொருட்பெண்டிர் - கொடுப்பவர்களை இச்சிக்காமல் பொருளையே விரும்பும் பொது மகளிரது, பொய்ம்மை - பொய்மையுடைய, முயக்கம் தழுவுதல் என்பது, இருட்டு - இருண்ட, அறையில் அறையில், ஏதில் - அறிந்திராத, பிணம் தழிஇயற்று - பிணத்தினைத் தழுவியது போன்றதாகும்.

    |க-ரை பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையுடைய முயக்கம் பிணம் தூக்குவோர் இருட் உறையொன்றில் முன்னறியாத பிணத்தினைத் தழுவினது போன்றதாகும். * - .

    பதிலளிநீக்கு