வியாழன், 12 மே, 2016

ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்


இலங்கையில் வெளிவரும் தமிழ் மிரர் பத்திரிகையின் இலக்கிய பகுதியில் என்னிடம் சில கேள்விகளையும் அதற்கு ரத்தின சுறுக்கமான பதில்களையும் வழங்குமாறு நண்பரும் சகோதரருமான  முஸ்டீன் கேட்டிருந்தார். கடந்த மாதம் அந்த கேள்வி-பதில் அங்கம் தமிழ் மிரரில் பிரசுரமாகியிருந்தது. தமிழ் மிரர் குழுமத்திற்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். நன்றி.

(தேவைக்கருதி, எனது ஒப்புதல் மூலம் சில பதில்கள் சுறுக்கப்பட்டுள்ளன. எனது அகப்பக்கத்தில் முழுவதுமாக அதை பகிர்ந்திருக்கிறேன்.)

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?

இது எனக்கு மிகவும் சிக்கலான கேள்வியாக இருக்கிறது. மதிப்பீடு எனும்போது எதைவைத்து மதிப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.. மேலும் இதற்கான பதிலில் நான் என்னை தற்காத்து பேசுவதற்கான தொணி வெளிபடலாம். 
பிற மனிதர்களோடு மதிபிட்டு, அளவில் எடை போட்டு அவர்களிடம் பழகாத பழக்கம் உள்ள என்னை சூனியத்திற்கு நிகராக மதிப்பிடுகிறேன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

இதற்காக சரியான இலக்கத்தை என்னால் கூற முடியவில்லை. காரணம் ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 
எல்லாவற்றிலும் ஒத்த கருத்துடன் ஒருவர் இருப்பாரேயானால் ஒன்று அவர் இயந்திரமாக இருக்க வேண்டும். அல்லது அவர் நடிக்க வேண்டும். 

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?

மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன். காரணம் அது பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. அப்போது மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தவர் வருடத்திற்கு 10 எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பரிசு வழங்குவதாகவும் கட்டாயமாக அதில் இரண்டு பெண் படைப்பாளிகளுக்கு கொடுத்துவிட பரிந்துரைப்பதாகவும் பேசினார். நான் எழுத்தாளர் சங்கத்தில் இல்லாத பெண். எழுத்தின் தரத்திற்கு பரிசு கொடுக்காமல் கட்டாயமாக பரிசு என்ற பெயரில் பிச்சை போட நீங்கள் யார் என முகநூல் வழி கேள்வி எழுப்பினேன். அச்சங்கத்தில் இருக்கும் பெண் எழுத்தாளர்களின் நிலைபாடு குறித்தும் கேள்வி எழுப்பினேன். மலேசிய வல்லினம் நண்பர்கள் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அந்தச் சங்கத்தில் இருந்த முக்கிய பெண் ஆளுமைகள் நட்பை முறித்துக் கொள்ளும் அளவுக்கு முரண் ஏற்பட்டது. நான்காண்டுகளுக்கு மேல் கடந்து இப்போது அதை நினைக்கும்போது சுவாரஸ்யமான நிகழ்சியாகத்தான் தெரிகிறது. 

04. இலக்கியவாதி இலக்கியப்படைப்பு ஆகியவற்றைப் பற்றி நீங்கள் எழுதியதில் எது உங்களைக் கவர்ந்தது?

இரண்டுமே என்னைக் கவர்ந்ததாகத்தான் இருக்கிறது. ஓர் இலக்கியவாதியை வாழும் காலத்திலேயே அங்கீகரிக்க வேண்டும் என கூறுபவள் நான். அங்கீகாரம் என்பது எழுத்தின் வழியே பதிவு செய்யப்பட வேண்டும். அதைவிட சிறந்த கௌரவம் அந்த இலக்கியவாதிக்கு கொடுக்க முடியுமா என தெரியவில்லை. இலக்கிய படைப்பு என்பது என் மன அரிப்புக்கு சொறிந்துகொள்வது போன்றது. இரண்டும் சுகம்தான். 

05. எந்த எழுத்தாளரை மிகவும் மதிக்கின்றீர்கள்?

மனிதத்தை மதிக்கும் எழுத்தாளர்கள் யாரையும் மதிக்கிறேன்.

06. உங்களை ஆச்சரியப்படவைத்த இரண்டு நூல்களைச் சொல்லுங்கள்?

இதுவும் சிக்கலான கேள்விதான். காரணம் நான் புத்தகங்களை தேடி தேடி தெரிவு செய்து வாசிப்பவள். சில புத்தகங்கள் என்னை ஏமாற்றியும் உள்ளன. ஆனால், பல புத்தகங்கள் அன்னை அசத்தியிருக்கின்றன. அதில் இரண்டு மட்டும் தேர்வு செய்வது என்பது மனதிற்கு கொடுக்கும் வன்முறையாக பார்க்கிறேன். அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பு மனதுக்கு நெருக்கமானது. கடவுளின் படைப்பு என்பதைத் தாண்டி பகவத் கீதை என்றும் ஆச்சரியம்தான் எனக்கு. 

07. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன

எழுத்தாளர் ரே.கே.ரெளலிங் கோடிஸ்வர எழுத்தாளர் என்ற இடத்தை சமீபத்தில் இழந்தார். காரணம் அவர் சொத்துகளை அறகட்டளைக்கு கொடுத்து விட்டார். என் எழுத்தை பொருளாதாரம் தீர்மானிக்குமேயானால் நான் ஒரு படைபாளி அல்ல; வியாபாரியாவேன். வியாபாரியின் எழுத்துக்கும் தார்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 

08. முகநூல் வலைப்பூ இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?

கருத்து சுதந்திரம். சுய முயற்சி. உலகில் எல்லாருக்குள்ளும் இலக்கியதரம் வாய்ந்த கதை உண்டு. அவர்கள் இரண்டு வகையில் உள்ளனர்.
ஒருவர் எழுத தெரிந்தவர் இன்னொருவர் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாதவர்.

09. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக?

என் குடும்பத்தில் நானும் என் துணைவரும் இருக்கிறோம். எங்களின் 9 வருட வாழ்கையில் நாங்கள் சம்பந்தப்பட்ட முடிவை நாங்களே தீர்மானித்து சுதந்திரமாக வாழ்கிறோம். என் தந்தையின் குடும்பத்தில் நான் அவருக்கு முதல் குழந்தை. அப்பா மறைவிற்குப் பிறகு குடும்ப பொறுப்பை கையில் எடுத்து, உடன் பிறந்த மூவரையும் முறையாக வழிநடத்தி கரை சேர்த்தாகி விட்டது. இப்போது என்வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.   

10. விருதுகள் குறித்து?

விருதுகள்தான் ஒரு படைப்பாளனை அங்கிகரிக்கிறது என்றால் அதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால், விருதுகள் ஒரு தனித்த அடையாளத்தை பேச வைக்கிறது. விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஒரு படைப்பாளனை ஆதரித்தோ அல்லது எதிர்தோ செய்யப்படும் விவாதங்கள் 
அந்த படைப்பாளனின் ஆளுமையை மட்டுமே பேச வைப்பவையாக இருக்கிறது. இருந்தபோதும் சில விருதுகள் வெளிச்சம் காட்டுவதாகவும், சில விருதுகள் எரிச்சல் படுத்துவதாகவும் உள்ளதை மறுப்பதற்கில்லை.

11. தமிழின் சிறந்த படைப்பாளியாக நீங்கள் கருதும் ஐந்து பேரின் பெயர்களைச் சொல்லுங்கள்?

பாரதி, பிச்சைமூர்த்தி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், பிரமிள் (இவர்களைத்தாண்டி இன்னும் பட்டியல் நீள்கிறது)

12. சாஹித்தியப் பரிசுக்கான தெரிவுகள் நேர்மையாக இடம்பெறுவதாகக் கருதுகின்றீர்களா? நீங்கள் பரிந்தரை செய்யும் வழிமுறை?

அவர்களின் நேர்மை குறித்து விமர்சிக்கும் தகுதியை முதலில் நான் வளர்த்துகொள்ள வேண்டும். பின் தான் அதன் வழிமுறையை யோசிக்க முடியும். 

13. புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்ப் படைப்புக்கள் குறித்து?

அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காத வலியை உணராத,
 நான் யார் அந்த படைப்புகளைக் குறித்து கருத்துச் சொல்ல? புலம் பெயர்ந்த தமிழர்கள் இலக்கியம் படைக்க புலம் பெயரவில்லை. தன்னை மீறி வெளிப்படும் அவர்களின் படைப்புகள் வலியின் மிச்சம், சில படைப்புகள் காழ்புணர்வின் எச்சம்!

14. உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான தூரம் எத்தகையது?

என் கணிணிக்கும், எனக்கும் இடையேயான தூரம்!

15. சட்டகங்களை உடைத்துக் கொண்டு அது தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் எழுதுவது பற்றி?

அது எழுத்தின் பரிணாமம். பல நூற்றாண்டுகளாக எழுத்து அதன் போக்கில் புதிய விதிகளை விதித்துக்கொண்டே தான் இருக்கின்றது, நாளை வேறு மாதிரியான எழுத்துகள் வரக்கூடும். அதுதான் எதார்த்தம்...


4 கருத்துகள்:

  1. என் எழுத்தை பொருளாதாரம் தீர்மானிக்குமேயானால் நான் ஒரு படைபாளி அல்ல; வியாபாரியாவேன்.

    செம பதில்!

    பதிலளிநீக்கு
  2. அது உண்மைதானே அருண். உங்களுக்கும் அதில் மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு