செவ்வாய், 26 ஏப்ரல், 2016

யோகி என அழைக்கமாட்டேன் எனது யட்சியை (- தேன்மொழி தாஸ்)

'யட்சி'  யோகியின் முதல் கவிதை தொகுப்பு . தேக்குத் தோப்பின் தலைக்கனமற்ற சருகுகள் மேல் இக்காலை தனது வசீகர ஒளியை தெளித்துக் கொண்டிருக்கையில் வாசிக்கத் துவங்கினேன். யட்சியின் கால்கள் மிக இரகசியமானவை எனச் சொல்லியபடி "யட்சி" அமர்ந்தாள்.
யட்சியின் மொழி சிறகடித்துக்கொண்டே காற்றையும் கடந்து, உண்டு, உயிர்க்கும் வெளி. யட்சி தன்னை யட்சியாகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாள். இப்படித்தான் அவளது மூலச்சிறகை மொழியினால் கோதுகிறாள். தனது கூட்டுக்குள் பிசாசும் திருடனும் மறைந்திருப்பது பற்றியும், தரும் இம்சை பற்றியும் யாரோடும் பகிர்ந்து கொள்ள மனமின்றி கவிதையின் பூமியில் புதைக்கிறாள். யட்சியின் கருவறை அறுபடுவதையும், கேள்வியாக்கப்படுவதையும் எண்ணிப் புன்னகைக்கிறாள். யட்சியின் நிலம் யாரால் வடிவமைக்கப்பட்டாலும் அதனை பெருநிலமாக்கி பின் வனமாக்கி யட்சியாகவே அமர்கிறாள். கடவுள், மிருகம், சாத்தான், மனிதன் என எல்லோரிடமும் மிக எளிமையான கேள்வியை கேட்கும் யட்சியிடம் தனது கூடு போல் மிக நேர்த்தியான சில பதில்கள் இருப்பதை பாடுகிறாள் .
'முன்னொரு காலம் இருந்தது 
அது வரையறுக்கப்பட்ட காலம்'

என ஒலிவமரத்து இலையோடு ஆதியில் ஆபிரகாமிற்காய் வந்த புறாவைப் போல் பேசுகிறாள் .

'என் பாதையை
என் பயணத்தை
என் நடனத்தை
பிறர் முடிவு செய்தால்
அவை என் கால்கள் அல்ல'

என தன் கால்களால் நடக்கிறாள். அவளிடம் சாத்தான் ஆசீர்வதித்து அனுப்பிய பெட்டியும் இரகசியமான நாட்குறிப்பேடும் உண்டு .
ஒரு நாளும் யோகி என அழைக்கமாட்டேன் எனது யட்சியை.
ஏனெனில் யட்சியின் ஆன்ம உணவு அவள் சிறகின் சுதந்திரம் தான் . வானத்தின் தூண்களை அறிந்தவன் யார்?
வானத்தை முழுதாய் வரையப்போகிறவன் யார்?
கவிதை உலகமும் முடிவற்றது. 
பறந்து பாடு யட்சி
மனம் நிறைந்த வாழ்துகள்

- தேன்மொழி தாஸ். 25.3.2016
'யட்சி' - உயிர்மை பெருமையுடன் சமீபத்தில் வெளியிட்ட பத்து கவிதை நூல்களுள் ஒன்று .
நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக