வியாழன், 7 ஏப்ரல், 2016

கொடைக்கானல் நாட்கள் 1

மார்ச் 16
 ஊட்டியைப் போலவே மிக அழகான ரம்மியமான இயற்கை அழகை கொண்டுள்ளது கொடைக்கானல். எனது இரண்டு நாள் கொடைக்கானல் திட்டமிடலில் சென்னையிலிருந்து கொடைக்கானல் போய்ச் சேர்வதற்கே ஒரு நாள் முழுசாக முடிந்தது. அடுத்த ஒரு நாள் முழுக்கக் கொடைக்கானலை சுற்றிப் பார்த்தேன். சுற்றிக் காட்டுவதற்காகவே அங்கே ஏகப்பட்ட வசதியிருக்கு. வண்டியோடு ஏற்பாடு செய்து தருகிறார்கள். ஒரு நாள் முழுக்கச் சுற்ற நியாமான விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. 
தற்போது கோடைகாலம் பிண்ணியெடுப்பதால் அத்தனை குளுமையைக் கொடைக்கானலில் உணர முடியவில்லை. ஆனால் அந்த மலையைக் கடக்கும்போது அத்தனை குதூகலமாக இருந்தது. எங்க ஊர் கெந்திங் மலையில் ஏறுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் அந்தச் சாலை வளைவுகள் அத்தனை பாதுகாப்பானதாகத் தெரியவில்லை என்றாலும் சாலையைத் தினமும் பயன்படுத்துபவர்களுக்கு அதன் வளைவு சுழிவுகள் நன்றாகத் தெரிகிறது. அது ஒரு சாகசம்தான் என்னைப் போன்ற சுற்றுலாப்பயணிகளுக்கு. அதுவும் அரசு பேருந்தில் செல்ல வேண்டும். அந்த ஓட்டுனரின் திறமையும் ஹோர்ன் சத்தமும் இப்போது நினைத்தாலும் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் கேட்க தொடங்கிவிடுகிறது எனக்கு.
சாலையின் வளைவில் இருக்கும் டம்டம் பாறையின் அருகே வண்டியை நிறுத்துகிறார்கள். எத்தனை உயரத்தில் இருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால், அந்தக் கோடைவெயிலிலும் மலைகள் பச்சை ஆடைக்கட்டி நமக்குக் காட்சி கொடுப்பது அத்தனை இன்பமாக இருக்கிறது. அங்கிருந்து தொலைவில் எங்கே ஓரு நீர் வீழ்ச்சி பாய்வதை ஒற்றை வெள்ளை கோடுபோல அல்லது மலைமகள் ஒரு வெள்ளை தாவணி கட்டி வந்ததுபோல அதை எப்படி வர்ணிப்பது எனத் தெரியவில்லை எனக்கு.
முன்பு அந்த இடத்தில் இளைப்பாற அழகாகப் பராமரித்திருக்கிறார்கள். இப்போது அந்த இடம் பராமரிப்பின்றி உள்ளது. அங்கிருக்கும் டீக்கடையில் டீ வாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் தடுப்பு சுவர்மேல் அமர்ந்து அந்தக் காட்சியை ரசிக்க வேண்டும்.

அடுத்து நான் வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்றேன். அந்த நீர்வீழ்ச்சிதான் கொடைக்காலின் Landmark-க்காக இருக்கிறது. வெள்ளி நீர்வீழ்ச்சிதான் கொடைக்கானலுக்கு வரும் பயணிகளைச் சாரலைத் தூவி வரவேற்கிறது.

அதற்கு முன்பு இந்தப்பயணத்தில் பனிகரையைக் கடக்கும்போது, காட்டெருமைகளைக் காண முடிந்தது. ஆனால், சாலை வளைவில் இருந்த முனீஸ்வர ஆலயம்தான் என் கவனத்தை ஈர்த்தது. சிறுதெய்வ வழிபாடு செய்பவர்கள் பாணியில் அங்கு வழிபாடு நடப்பதற்கான சான்றுகளை காண முடிந்தது. திருவிழா நடந்ததற்கான விஷயங்களும் தெரிந்தது. சுற்றிலும் நம்மை ஆக்கிரமித்திருந்த வனத்தில் எங்கும் அமைதியாக இருந்தாலும் வாகனங்கள் எழுப்பும் சத்தம் பெரிய இடைஞ்சலாகத்தான் இருந்தது.
அடுத்து வண்டி வெள்ளி நீர்வீழ்ச்சியில்தான் நின்றது. கொஞ்சம் மழை பெய்து விட்டிருந்ததால் நீர்வீழ்ச்சியில் கொஞ்சம் தண்ணீரோட்டம் இருந்ததாக அங்கிருந்தவர்களிடம் உரையாடுகையில் தெரிய வந்தது. மிக அழகான அந்த நீர்வீழ்ச்சியில் முன்பெல்லாம் குளிக்க அனுமதித்திருந்தார்களாம். இப்போது அனுமதியில்லை. ஏதோ ஒரு பாதரச தொழிற்சாலையின் கழிவு இந்த நீர்வீழ்ச்சியோடு கலப்பதாகவும் அதனால் தோல்வியாதி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தால் போராட்டங்கள்கூட நடந்ததாம். இப்போ வெறும் பார்வைக்கு மட்டுமே இருக்கிறது. மிக வேதனையான விஷயம் இது. அந்த நீர்வீழ்ச்சியின் ஊற்று பார்க்க அகன்றும் பரந்தும் இருந்தது. ஆனால் தண்ணீர் ஒரு கயிறு அளவே கொட்டிக்கொண்டிருந்தது.
சிலர் அருவியின் முன் நின்றுப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். எனக்கு அருவிக்கு முன் காப்பி டீ, கேரட், கடலை என்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடத்தில் ஆர்வம் சென்றது. சுடச்சுட முட்டை வறுவல் செய்து கொடுக்கிறார்கள். அத்தனை சுவையாக இருக்கிறது. பெண்கள் தரையில் உட்கார்ந்தோ அல்லது நாற்காலியில் அமர்ந்தோ வியாபாரத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் பொருள்களை வைத்திருக்கும் மேல் இடத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள்.
வாடிக்கையாளர்களை அப்படியே கூவியழைக்கிறார்கள். விறகு உள்ளிட்ட கடைக்குத் தேவையான பொருள்களை மூட்டையாகக் கட்டி அவர்களே சுமந்து வருகிறார்கள். வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருள்கள் சுத்தமாகவும் புதுசாகவும் இருந்தது. முட்டை வறுவலையும் காப்பியையும் சுவைத்துவிட்டு கிளம்பினேன். 


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக