புதன், 30 மார்ச், 2016

அவள் 6

சூர்ப்பநகை நான்
தண்டகாரண்யத்தை காக்க பிறந்தவள்
ராமனை மயக்கவோ
இலட்சுமனனைக் கூடவோ
பிறந்தவள் அல்ல

நான்
வனத்தின் யட்சியாவேன்...
இயற்கையின் உபாசகி ஆவேன்

இராமா
நீ என் தண்டகாரண்யத்தைத்
தேடி வந்தாய்
என் அனுமதி பெறாமல்
பஞ்சவடியில்
அத்துமீறி குடிசை போட்டாய்
என் கண்ணில் படும்படி
நடமாடினாய்

காரணம் கேட்டேன்
பதில் இல்லை உன்னிடம்
உன் தப்பியை ஏவினாய்

முரடனான அவனோ
என் மூக்கை அறுத்தான்
பின் என் மார்பை அரிந்தான்...
இராமா உன் குரு வம்சம்
பெருமைப் படும் அளவுக்கு
நீ சாதித்தது என்ன?

ஒரு கிழப்பெண்ணை
உன் வில் உண்டையினால்
நோக வைத்தாய்
ஒரு வனப் பெண்ணை இகழ்ந்தாய்
ஒரு பெண்ணைக் காப்பாற்றினாய்
உன் சந்தேக புத்தியால்
பின் அவளையும் இகழ்ந்தாய்

பெண்ணின் மெ(மே)ன்மை
அறியாத நீ
எப்படிக்
காவிய நாயகன் ஆவாய்?

அறிக !
உன்னை விட பலசாலி யாம்
தம்பியை வைத்து
காரியம் சாதித்தவன் நீ

ராமா நீ அறிவாயா
என் தண்டகாரண்யத்தின் பெருமையை!
பஞ்சவடியின் அருமையை
எல்லா பருவத்திலும்
என் அன்பை சொரியும்
இன்பம் வழங்கும்
அனைவரையும் அணைக்கும்
அன்பின் உறைவிடம் அது
காதலின் பெருநிலம் அது

மடைதிறந்துகிடக்கிறது
எனதுதண்டகாரண்யம்

உன்னைக் காவிய நாகனாக்கிய வால்மீகியும்
உன்னைப் போல ஒரு ஆண்தானே

ஆண்கள் விட்ட வரலாற்றுப்பிழையை
பேசப்போவது யார்?

இன்றுவரை
யட்சியான  நானும்
என்வனமும்
எரிந்துக் கொண்டே இருக்கிறோம்
பிழையான அந்த 
வரலாற்றைப்பேசியபடி

-யோகி 

(நன்றி , இளைஞர் முழக்கம் மார்ச் 2016)  

1 கருத்து: