வியாழன், 28 ஏப்ரல், 2016

தெரு ஓவியம்..


தெரு ஓவியர்கள் என்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் வரும் street artist என்பவர்களை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. ஏறக்குறைய மலேசியர்களுக்குக் குறிப்பாக மலாய் சமூகத்தினரிடத்தில் தெரு ஓவியர்கள் குறித்த புரிதல்கள் சிறிதாவது இருக்கிறது எனலாம். தலைநகர் வாசிகளைத் தவிர்த்து மற்றவர்கள் எப்படி இந்தக் கலையைக் காண்கிறார்கள்? அவர்களின் எண்ணத்தில் தோன்றுவது என்னவென்பது கொஞ்சம் ஆய்வு செய்யத்தான் வேண்டியுள்ளது.
எனது இந்திய, இலங்கைப் பயணங்களில் தெரு ஓவியங்களை எங்கும் காணவில்லை. அதுவும் தமிழ்நாட்டுப் பயணங்களில் சுவர்களில் பனியன் விளம்பரத்தையும், சிமெண்ட் விளம்பரத்தையும் சில இடங்களில் திருக்குரள் மட்டுமே காண முடிந்தது. பல சுவர்கள் சிறுநீர் கழிக்கும் கழிப்பிடங்களாகத்தான் இருக்கின்றன.
அண்மையில் டிஸ்கவரிச் சேனலில் பம்பாய் நகரின் சுவர் ஓவியர்கள் குறித்துச் சில நிமிடங்கள் காட்டினார்கள். ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து மாநிலத்தில் புழக்கத்தில் இருக்கும் இந்தப் பழக்கம் ஏன் தமிழ்நாட்டுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றுதான். இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் தெரு ஓவியர்களின் கலாச்சாரம் ஒன்று போலவே எங்கும் உள்ளது என்பதுதான். நாடு, மொழி, இனம், கலாச்சாரம் என மொத்தமாக வேறுபட்டிருந்தாலும் இவர்களில் கொள்கைகள், வரையும் பாணி எனப் பல விஷயங்கள் ஒன்று படுகிறது.
தெரு ஓவியர்கள் தனக்கான அங்கீகாரத்தை எங்கும் தேடுவதில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதுமில்லை. தேவையெல்லாம் வரைவதற்கான சுவரும் ஸ்ப்ரேயும்தான். மலேசியாவைப் பொருத்தவரை தெரு ஓவியர்கள் வரைவதற்கு இரவு நேரத்தைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவர்களின் கருப்பு நிழகள் அசைய வண்ணங்களில் சாம்ராஜியத்தை நடத்துகின்றனர். விடிவதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். திரும்பவும் அவர்கள் அங்கு வருகிறார்களா என்பது தெரியவில்லை.
பெரும்பாலும் கார்ட்டூன் பாணியில் அமையப்பெரும் தெரு ஓவியங்களில் அவ்வப்போது நாட்டு நடப்பையும், அதனால் ஏற்படும் அதிருப்திகளையும் சில ஓவியர்கள் வெளிப்படுத்துவதுண்டு. குறிப்பாகப் பிரதமரைப் பகடிச் செய்யும் ஓவியங்கள் அதில் அடங்கும். ஆனால், அவை சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகக் கருதப்படுவதால் மாநகர மன்றம் அதை ‘துடை’த்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டு அழித்து விடும் என்பது தனிக்கதை.
நான் இதுவரை ஓர் இந்திய ஓவியரையும் தெரு ஓவியர்களாகக் கண்டதில்லை. எந்த ஒரு ச்கெச்சும் போடாமல் மனம் போகும் போக்கில் மூளைக்கு வேலைகொடுத்து நுனுக்கமான ஓவியங்களைத் தெரு ஓவியர்கள் அசால்ட்டாகப் படைக்கிறார்கள். இது மலேசிய தலைநகரை அலங்கரிக்கும் சில தெரு ஓவியங்கள்.
நான் மலேசிய தெரு ஓவியர்களைச் சந்தித்திருக்காவிட்டாலும், மலேசிய இந்தியக் கார்டூனீஸை சந்தித்திருக்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக