வியாழன், 28 ஏப்ரல், 2016

ஜிப்ரானுக்கு ஓரு கடிதம்

அன்பின் கலீல் ஜிப்ரான்...

நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன் என நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் இல்லையா? உண்மையில் நானும் அதை எதிர்பார்க்காத ஒன்றுதான் ஜிப்ரான்.
பிறருடைய கடிதத்தை மட்டுமல்ல, பிறருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலும் தலையிடக்கூடாது என்று நினைப்பவள் நான். ஆனால், இன்று உங்களுடைய கடிதத்தை மட்டுமே வாசித்துக்கொண்டிருக்கிறேன். கிட்டதட்ட 50 கடிதங்கள். 

கனவுகளைப் போல மறைந்து போன அந்த நாட்களின் காட்சிகளை நீங்கள் கடிதத்தில் வகைபடுத்தி இருப்பது என்னையும் சேர்த்து வதைத்துக்கொண்டிருக்கிறது. உங்களுடைய சகோதரர் நகிலுக்கு எழுதிய கடிதத்தில் "மனதில் சோகத்தை உருவாக்கும் அந்தக் கடந்த கால நினைவுகளை நிரந்தரமாக வைத்துக்கொண்டிருப்பேன் என்றும் இதயத்திலுள்ள சோகத்தை எதற்கு ஈடாகவும் தர மாட்டேன்" என்றும் கூறியிருந்தீர்கள்.
அறிவீர்களா ஜிப்ரான், கலைஞர்கள் சோகத்தை கொண்டாடுபவர்களாகவே இருக்கிறார்கள். உங்களை போலவே.
எனதன்பு ஜிப்ரான்...
நீங்கள் மே-க்கு எழுதிய கடிதங்களிலெல்லாம் பாரிசுக்கு பயணம் போவதுபற்றி நிறைய எழுதியிருக்கிறீங்கள். நான் செல்ல நினைக்கும் கனவு நாடும் அதுதான். வாழ்க்கை சாம்பல் போன்ற வெறுமை நிறைந்தது என்று நீங்கள் குறிப்பிட்டது மட்டும் எனக்கு வருத்ததை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் சாம்பல் நிறத்தை கொண்டாடுபவள் இல்லையா?
1921-ஆம் ஆண்டு போஸ்டனில் இருந்த மீஷாவுக்கு எழுதிய கடிதத்தில் பைத்தியக்கார நிலை பற்றி எழுதியிருந்தீர்கள். பைத்தியக்கார நிலை என்பது அருமையான செய்தி என்று நீங்கள் கூறியதை படித்தவுடன் முதலில் சிரித்துவிட்டேன். ஆனால், "பைத்தியக்காரத்தனம் என்பது, தன்னலம் இல்லாத நிலைப்பாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் முதல் அடி எடுத்து வைப்பதைப் போன்றது. பைத்தியக்காரராகவே இருந்து விடுங்கள்" என மீஷாவுக்கு கூறியது நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு கூறும் ஆலோசனையாகவே நினைக்கிறேன்.

இந்த 50 கடிதங்களில் நீங்கள் ஒன்றையாவது செல்மாவுக்கு எழுதியது இருக்குமா என தேடிப்பார்க்கிறேன். ஒன்றுக்கூட இல்லை. ஆனால் பெய்ரூட் நகரில் நீங்களும் செல்மாவும் ரகசியாம சந்தித்துக் கொள்ளும் அந்த பழைமையான கோயில் பற்றி அறிவேன். ஏழு நிர்வாண கன்னியர்கள் சுற்றியிருக்க அரியணையில் அமர்ந்திருக்கும் காதல் தேவதை இஷ்தாரை நீங்களும் செல்மாவும் எத்தனை முறை வணங்கியிருப்பீர்கள். உங்களின் நிறைவேறாத காதலை நினைத்து வருத்தப்படாதவர்கள் இந்த நூற்றாண்டில் இல்லை என நினைக்கிறீர்களா ஜிப்ரான்...
இனியவனே ஜிப்ரான்...
உங்கள் கடிதங்களை பொக்கிஷம் என பாதுகாக்கவிருக்கிறேன். நான் உங்களுக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதத்திற்கான பதில் கடிதம் இந்த 50 கடிதங்களில் ஒன்றாக மறைந்துகிடக்கலாம். அது கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருக்கிறேன் உங்களை....
-யோகி
குறிப்பு: பன்முக ஓவியம் (கடிதங்கள்)
எழுதியவர் : கலீல் ஜிப்ரான்
வெளியிடு: கண்ணதாசன் பதிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக