செவ்வாய், 2 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா?


நான் தலைநகருக்கு வந்த புதிது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றிருந்தேன். தொழிற்சாலை ஏற்படுத்திக் கொடுத்திருந்த பேருந்து சலுகை மிகவும் பாதுகாப்பானது. வீட்டின் அருகிலேயே வேலையாட்களை ஏற்றிக்கொண்டு, வேலை முடிந்ததும் ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிடும். ஆனால், வேலைக்குச் சென்ற பிறகு ஏதும் பிரச்னையால் வீடு திரும்ப வேண்டும் என்றால்,  சொந்தமாகத்தான் வரவேண்டும். நான் பால்முகம் மாறாத குழந்தையைப் போல், இருந்த காலம் அது.

தலைநகரமே எனக்குப் புதிது என்ற படியால் ஒருவகை மிரட்சி இருப்பதை என்னைப் பார்த்த மாத்திரமே கண்டு கொள்ளலாம். ஒரு முறை உடல் நலக்குறைவால் நான் தொழிற்சாலையிலிருந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. நம்பிக்கையானவர்களிடத்தில் எப்படி வீட்டுக்குப் போவதென்ற விவரங்களைக் கேட்டறிந்துகொண்டேன்.
மூன்று ‘இண்ட்ர கோத்தா' பேருந்துகளை மாறிச் செல்ல வேண்டிய நிலை எனக்கு. தொழிற்சாலை மருத்துவமனையில் கொடுத்த மருந்தினை உண்டிருந்த காரணத்தினால், ஒரு அரை மயக்கம் விடாமல் ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த மயக்கத்தினூடே பேருந்தில் வீட்டிற்குச் செல்வதற்கு முடிவெடுத்து, வெற்றிகரமாக இரண்டாவது பேருந்தையும் மாறிவிட்டிருந்தேன். மருந்தின் தீவிரம் தூக்கத்தில் என்னைத் தள்ளிவிட உறங்குவதும் விழிப்பதுமாக வழியைப் பார்த்துக்கொண்டு வந்தேன். அப்படி இடையில் விழித்த போதுதான் முதன் முதலாக அந்த வெங்கல வர்ணத்திலான விவேகானந்தா சிலையைப் பார்த்தேன். தலைநகரில் அப்படி இரு சிலை இருப்பதே எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. விவேகானந்தரை பிடிப்பதற்கு காரணம் சொல்ல வேண்டியதில்லை. அவரின் தோற்றம் அப்படி. அந்த கம்பிரமே நமக்கு பெருமையளிக்ககூடியது.

தலைநகரிலிருந்து போவதற்குள் அந்தச் சிலையினை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எனக்குப் பிறந்தது. ஆனால், அந்தச் சிலை இருக்கும் இடம் பிரிக்பீல்ட்ஸ் என்றெல்லாம் எனக்குக் தெரியாது.

சுமார் 14 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த சிலை  பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது என்று தெரிந்தும் முன்பு காட்டிலும் வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும் இந்த நேரத்திலும் கூட அந்த விவேகானந்தா சிலையை நான் அருகில் இருந்து காண கொடுத்து வைக்கவில்லை.
காரணம் முன்பும், இப்போதும், எப்போதும் அந்தச் சிலை இருக்கும் வாயிற்கதவு சாத்தியே இருப்பதுதான். ஒவ்வொரு முறையும் அந்த வளாகத்தை கடக்கும் போது என்னுடன் வருபவர்களிடத்தில் என் ஏக்கத்தை வெளிபடுத்துவதற்குத் தவறியதே இல்லை.
இப்போது ஒட்டுமொத்த இந்தியர்களின்  போராட்டம் விவேகானந்தா சிலையைக் காப்பாற்றுவதில்  இருக்கிறது. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தச் சிலையை உடைக்க மாட்டோம் என்றும் இடமாற்றம் ஏதும் செய்ய மாட்டோம் என்றும் விவேகானந்தா ஆசிரம நிர்வாகம் கூறியிருந்தும் தொடர்ந்து கண்டனக் குரல்களும் எதிர்ப்புகளும், கிளம்புவதற்கான காரணம் என்ன?
என் தேடலுக்கான கேள்விகளை சுமந்துகொண்டு பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் நோக்கிப் பயணமானேன். வழக்கம் போலவே விவேகானந்தா ஆசிரமம், சிறையில் சிக்கி இருப்பதைப் போன்று வாயிற்கதவு தாழிடப்பட்டிருந்தது.

ஆனால், விவேகானந்தர் மற்றும் அதே மௌனத்துடன் நின்று கொண்டிருந்தார்.   அந்த வளாகத்தின் ஒரே மாற்றம், வாயிற் கேட்டின் இரும்புக் கம்பிகளில் மஞ்சள் நிறத்திலான ரிப்பன் பல நூறு கட்டப்பட்டிருந்ததுடன் வாயிலின் முன் புறம் சிலர், ஆசிரமத்தின் நிலையை எடுத்துக்கூறி பொது மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டிருந்தனர். இது ஒரு புறம் இருக்க, நமக்கும் அதாவது மலேசியாவுக்கும் விவேகானந்தருக்கும் என்ன சம்பந்தம்? என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்தியர்களுக்கும், மலேசியாவுக்கும் 6-7-ஆம் நூற்றாண்டு தொடர்பு உண்டு என்று ஆவணங்கள் கூறினாலும்,  18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியர்கள் கூலி வேலைக்காகக் கொண்டு வரப்பட்டது அடையாளமாகக் கூறுப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, இரும்புப் பெண்மணி  என்று அழைக்கக்கூடிய இந்திரா காந்தி உள்ளிட்ட பல முக்கிய  வரலாற்றுத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மலேசிய இந்தியர்களைச் சந்தித்துச் சென்றது வரலாற்றுப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. சில தலைவர்களின் வருகை வெறும் வாய்ச்சொல்லாகவும், பதிவாக உள்ளது. (அது தொடர்பாக வேறொரு தளத்தில் பதிவு செய்கிறேன்.)

மலேசியாவும் விவேகானந்தரும் உலகம் முழுக்கப் பயணம் செய்த சுவாமி விவேகானந்தா 1893-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார். அவர் வருகையின் நினைவாக, அதைப் பதிவு செய்யும் பொருட்டு  மலாயாவைச் சேர்ந்த சிலோன் தமிழர்கள் அழகிய விவேகனந்தரின் சிலையை நிறுவினர். அந்த ஆளுயரச் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டதோடு, சுவாமி விவேகானந்தரை தத்ரூபமாகப் பிரதிபலித்தது. கூடவே விவேகானந்தா ஆசிரமமும் பெரிய அளவில் கட்டப்பட்டது.
அப்போது, இந்தியர்கள் சம்பந்தப்பட்ட அடையாளங்களைப் பதிவு செய்வதும், நிர்மாணிப்பதும் இன்றுபோல் கடினம் அல்ல. இன்று அடையாளங்களை அடையாளப்படுத்துவதைவிட அதை அழிவிலிருந்து காப்பாற்றுவதே நமது பெரிய தலையாயக் கடமையாக இருக்கிறது.

விவேகானந்தா ஆசிரமத்துக்கு நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் மாதம் ‘தெ ஸ்டார்' நாளேடுதான் முதன் முதலாக பிரிக்பீல்ட்ஸில் இருக்கும் விவேகானந்தா ஆசிரமப் பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. ஆசிரமத்துக்கு அருகில் அமைக்கப்படும் பார்க்கிங் வசதியைக் குறித்த செய்தியையும், ஆசிரம நிர்வாக நிலைப்பாட்டைக் குறித்த செய்தியையும் அந்த நாளேடு பதிவு செய்திருந்தது.  மேலும், 23 மாடிகளைக் கொண்ட  264 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதையும் அந்த நாளேடு சுட்டிக்காட்டியிருந்தது. அதன் பிறகே எல்லா இந்திய தலைவர்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இந்த விவரம் தெரிய வந்தது.

(ஒரு வேளை ‘தெ ஸ்டார்' நாளேடு இந்த விவரத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், மேம்பாட்டுப் பணி தொடங்கியிருந்தாலும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்)
இவ்விவகாரத்திற்கும் லிட்டல் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என கேக்குறீங்களா?

(தேடல் தொடரும்)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக