ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 3


கேஎல் செண்ரல் 
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?

கடந்த தேடலில்...
என்னுடைய ஆதங்கம் இந்த லிட்டல் இந்தியாவில் ஏன் இந்தியர்கள் வாழ்ந்த பல இடங்கள் அழிவை நோக்குகிறது என்பதுதான்.  உதாரணமாக 100 ஆண்டுகள் வரலாற்றை எட்டிப்பிடிக்கப்போகும்  100 குவார்ட்டர்ஸ்  வீடுகளில் மிஞ்சி இருக்கும் சில வீடுகளும் இடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. இந்தியர்கள் வாழ்ந்த அந்த வீடுகளுக்கு மேல்தான் கேஎல்  செண்ட்ரலும் கட்டப்பட்டிருக்கிறது. 
இனி... 

1915-ஆம் ஆண்டு  கட்டப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடமைப்புப் பகுதிகளில் பிரிட்டிஷ் காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் செயல்பட்டு வந்த ‘மலாயன் ரயில்வே' ஊழியர்கள், டெலிகோம் ஊழியர்கள் உட்பட மற்ற துறைகளில் வேலை செய்த அரசாங்க ஊழியர்களுக்காகக் கட்டப்பட்டதாகவும். பிரிக்பீல்ட்ஸின் பிரதான சாலைகளான ஜாலான் சான் அ தோங், லோரோங் சா அ தோங் மற்றும் ஜாலான் ரோஸாரியோ போன்ற சாலைகளின் அந்த வீடமைப்பு அமைக்கப்பட்டது. வீட்டின் வெளிப்புறம், உட்புறமும்  பிரிட்டிஷ் நாட்டு வடிவமைப்பைக் கொண்டிருக்கும் அந்த வீடுகள், தரமான பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டதால் பார்ப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கும் வசதியானவையாகக் கருதப்பட்ட அந்த வீடுகளில் சிலோனிஸ்காரர்களும், தமிழர்களும், சீனர்களும் அதிகமாக வாழ்ந்துவந்தனர்.
பிரிக்பீல்ட்ஸ்  வட்டாராம் மேம்பாடு காணத்தொடங்கியவுடன் 100 குவார்ட்டர்ஸ் அழிவை நோக்கத்தொடங்கியது. தொடக்கத்தில் பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்டது எனவும், இதற்கு வரலாறு உண்டு எனவும், பாரம்பரிய (Heritage) இடம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டதோடு சுற்றுலாப்பயணிகளிடத்திலும் இந்த 100 குவார்ட்டர்ஸ் ஒரு சுற்றுலாத்தளமாகக் காட்டப்பட்டது. அதன் பிறகு அந்நிலத்தின் தேவைகருதி மேம்பாட்டுப்பணிக்காக மக்கள், அங்கிருந்தவர்களை அதைவிடவும் வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்தனர். அவர்களை அருகில் இருக்கும் இடத்திலேயே மாற்றம் செய்ததால் பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வேலை முடிந்தது. ஆனால், அந்த வீடுகளில் இருந்த வரலாறும், பாரம்பரியமும் வேறொரு புதிய வரலாற்றுக்குத் தயாராகிக்கொண்டன.
அண்மையில் நான் நேர்காணல் கண்ட ஹிண்ராஃப் தலைவர் பி.உதயகுமார், இந்த 100 குவார்ட்டர்ஸ் குறித்த ஒரு தகவலைச் சொன்னார். அதாவது லிட்டல் இந்தியாவில் இந்தியர்களின் சரித்திரம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்'-டாக அது மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “குறிப்பாக சுவாமி விவேகானந்தா ஆசிரமத்துக்கு அருகாமையில் எஞ்சி இருக்கும் 100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியின் சாலையில் ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்' அமைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். தலைநகர் பாசார் செனியில் ‘செண்ரல் மார்க்கெட்' பிரபலமாக உள்ளது போல் இந்தியர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்களை விற்பனைக்கு வைத்து ஒரு சந்தை அமைக்கப்பட வேண்டும். அப்படி நடந்தது என்றால் சிங்கப்பூரிலும், லண்டனிலும் இருக்கும் லிட்டல் இந்தியா மாதிரி இதற்கும் உலகத்தர அந்தஸ்து கிடைக்கும். அதைவிடவும் லிட்டல் இந்தியா தொடங்கப்பட்டதற்கான காரணத்திற்கும் ஓர் அர்த்தம் இருக்கும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

100 குவார்ட்டர்ஸ் 
'KL செண்ரல் மார்க்கெட்'
இந்தத் தகவலை பி.உதயகுமார் புதிதாக ஒன்றும்கூறிவிடவில்லை. 2010-ஆம் ஆண்டே ஒரு முறை கடிதம் வாயிலாக அந்த ஆலோசனையை பிரதமரிடமும் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் மேற்கூறிய தகவலுடன்  100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியில்  ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்' உருவானால் லிட்டல் இந்தியா முழுமை பெறுவது மட்டுமல்லாமல் சுற்றுலாத்தளமாகவும் மாறும் எனவும் பி.உதயகுமார் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், எதுக்குமே எந்தப் பதிலும் இதுவரை கிடைக்காத நிலையில் புராதன சின்னம் எனக் கூறப்படும்  விவேகானந்தா ஆசிரமம் அருகே புதிய மேம்பாட்டுப்பணி நடக்கவிருக்கிறது. இந்த மேம்பாட்டுப்பணியின் காரணத்தினால் ஆசிரமம் மற்றும் சிலையின் இயல்பு நிலை பாதிப்படையும் என்று, கருதப்படுகிறது. ஆனால், ஒரு சாரார் எழுப்பப்படும் புதிய கட்டடம் இந்தியர்களுக்காக இருப்பின் அதை வரவேற்பதுதான் உத்தமம் எனவும் கருத்துக்கூறப்படுகிறது. காரணம் இந்தியர்களின் கட்டடம் என்று சொல்லிக்கொள்ள தற்போது ம.இ.கா கட்டடமும், விஸ்மா துன் சம்பந்தன் கட்டடம் மட்டுமே இருக்கிறது. இப்போது மேலும் ஒரு கட்டடம் வருவது வரவேற்கக்கூடியதுதான் என்றும் கூறப்படுகிறது.
விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக எத்தனை பேர் போர்க் கொடிபிடித்தாலும், அது சொந்த நிலத்தில் உரிமையாளர் பராமரிப்பில் இருக்கிறது. பொதுச்சொத்தாக இருப்பின் கதையே வேறாக இருந்திருக்கும். சட்டப்படி நிலத்தின் உரிமையாளர் எடுக்கும் முடிவே நிரந்தரமாகும்.
இந்தப் பிரச்னையில் 100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியின் நிலை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?
(தேடல் தொடரும்)








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக