ஞாயிறு, 7 டிசம்பர், 2014

‘காவியத்தலைவனின்' தலைவன் யார்?




சினிமாதான் இன்று உலகின் முதன்நிலை பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. இருப்பினும், இன்று மாற்று சினிமாவும், கலைபடைப்புகளுமே அதிகமாக உலக மக்களைக் கவர்வதாக உள்ளன. தமிழ் சினிமாவுக்கு 100 ஆண்டு வரலாறு இருந்தாலும் தற்காலத்தில்தான் அதன் போக்கு மாறியிருக்கிறது. ஹீரோம்சத்தை உடைக்கும் காலகட்டமாக இந்திய சினிமா மாறிவருகிறது. பாலீவுட் வட்டாரம்  அந்த மனோநிலைக்கு எப்பவோ போய்விட்ட நிலையில் தமிழ்நாட்டுச் சினிமா இப்போதுதான் தன் நகர்வை நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. அதற்கு இளம் இயக்குர்களும் ஒரு  காரணம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தற்போது வெளியாகியிருக்கும் படம் காவியத்தலைவன். கதைகளம் 60-70 ஆண்டுகள் பின்னோக்கியதாக இருக்கிறது. மேடை நாடக ஆதிக்கத்தையும், சுதந்திர வேட்கையையும், காதலையும், துரோகத்தையும், மன உழைச்சலையும் பேசுகிறான் காவியத்தலைவன்.
முதலில் திரையரங்கத்துக்குப் போய் படம் பார்க்கும் சூழல் கடந்த 6 மாதகாலமாக எனக்கு வாய்க்கவே இல்லை. இதனாலேயே சமீபகாலமாக வெளியீடு கண்ட சில நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்திருந்தேன். ‘காவியத்தலைவனைப்' பார்க்க வைத்தது முகநூலில் வந்த ஒரு விமர்சனம்தான்.  பிரபாகர் வள்ளி என்பவர் பிரபல எழுத்துலக ஆளுமைகளான சுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யப்புத்திரன் ஆகியோரை  மையப்படுத்தி எழுதிய  ‘இலக்கிய உலகினரின் பார்வை' என்ற அந்த விமர்சனம் சுவாரஸ்யத்தை எனக்குள்  ஏற்படுத்தியிருந்தது. அந்த விமர்சனத்தில் சுந்தர ராமசாமியின் பாத்திரத்தை நாசரும், ஜெயமோகம் கதாபாத்திரத்தை பிரிதிவிராஜும், மனுஷ்யப்புத்திரனின் பாத்திரத்தை சித்தார்த்தும் ஏற்றிருக்கிறார்கள் என்ற வரிகள் அநியாயத்துக்கு எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தன. இம்மூவரும் திரையில் என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்கவே திரையரங்கத்துக்குப் போனேன்.
படத்தின்  தொடக்கமே என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. காரணம் பெயர்ப் பட்டியல் ஒளிபரப்புகையில் எழுத்துகளில் ‘கொம்பு' வைத்த எழுத்தைப் பார்த்தபோதே எந்த அளவுக்கு  யோசித்து கதையை கோர்த்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. (நான் கொம்பு போட முடியாமல் கஷ்டப்பட்ட பள்ளி வாழ்க்கையும் கொஞ்சம் எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றது.)  காளியாக சித்தார்த்தும், கோமதி நாயகம் பிள்ளையாக பிரிதிவிராஜும்  பிரதான கதாபாத்திரங்களாக படம் முழுக்க வருகிறார்கள்.
ராஜபாட் கதாபாத்திரத்தை ஏற்று 100 மேடைகளில்  நடித்துப் பெயர் பெற்றிருக்கும் பொன்வண்ணனுக்கும் நாசருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாட்டில் நாடகக் கம்பெனியைவிட்டு  வெளியேறுகிறார் பொன்வண்ணன். அந்த  இடத்திற்கு தற்போது பொருத்தமான ராஜபாட் யார்? நடிகர் தேர்வில்  உணர்ச்சியுடன் நடித்த பிரிதிவிராஜ் ஓரங்கட்டப்பட்டு, புதுமையைச் செய்த சித்தார்த் தேர்வாகிறார். இதனால், மனமுடையும் பிரிதிவிராஜ்  நாசரிடம் தனது அதிருப்தியை வெளிபடுத்துகிறார். சித்தார்த்தின் காதலை நாசரிடம் தெரியப்படுத்துவதிலிருந்து, வேதிகாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும்வரை பிரிதிவிராஜ் எல்லா இடங்களிலும் மிளிர்கிறார். சித்தார்த் அவருக்கு என்ன? நாடகக் கலைஞராக அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் கனக்கட்சிதமாக அவருக்குப் பொருந்தியது என்றே சொல்லலாம்.
காவியத்தலைவனின் உண்மையான தலைவர் யார்? என்ற கேள்வி பல இடங்களில் எட்டிப்பார்க்கிறது. கதையை இயக்கியிருக்கும் வசந்தபாலனா? சித்தார்த்தா? பிரிதிவிராஜா? ஜெயமோகனா, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவா? அல்லது  செட்டமைத்த சந்தனமா?
என்னை பொறுத்தவரை காவியத்தலைவனின் உண்மையான தலைவனே ஏ.ஆர்.ரஹ்மான்தான். கடந்த நூற்றாண்டு கதைக்கு ஏதுவான இசையையும் பாடலையும் நவீன பாணியில் கொடுத்திருக்கும் உண்மையான இசையின் தலைவனாக ஏ.ஆர். ரஹ்மான் வெற்றிபெற்றிருக்கிறார். ஜெயமோகனின் வசனம், கதைகளத்திற்குப் பலமாக அமைந்திருந்தது.  ‘வெயில்', ‘அரவான்', ‘அங்காடித் தெரு' போன்ற படங்களை இயக்கியிருக்கும் வசந்தபாலனின் இந்தப்படத்தை சித்தார்த் தனது லட்சிய படம் எனக்கூறியிருந்தார். ஆனால், நம்மூர் திரையரங்குகளில்தான் நல்ல படத்திற்கு எப்போதும் கூட்டம் இருக்காதே. நான் போன திரையரங்கிளும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட்டம் இல்லைதான். அதனாலேயே விசில் சத்தம், பேச்சு சத்தம் போன்ற இடையூறுகள் இல்லாமல் நிம்மதியாகப் படம்பார்த்து வந்தேன்.
ஒன்றுகூற மறந்துவிட்டேன், சுதேசி நாடகம் போட கிளம்புகிறேன் என்று சித்தார்த் கிளம்பும்போது, மனுஷ்யப்புத்திரன் ‘உயிர்மை' தொடங்கப்போகிறார் என்று எனதருகில் இருந்த துணைவரிடம் கூறினேன். அவர் சபாஷ் என்றார். அதன் அர்த்தம் பிரபாகர் வள்ளி விமர்சனம் படித்தவர்கள் அறிவார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக