திங்கள், 29 டிசம்பர், 2014

‘அழிப்பது இயல்பு, தோன்றுதல் இயற்கை'

யணங்கள் என்னில் ஏற்படுத்தும் குதூகலத்தைப்பற்றி நான் பலமுறை கூறியிருக்கிறேன். குறிப்பாக  செய்திகளைக்  கட்டிக்கொண்டு மாராட்டிக்கும்  என்னைப்போன்ற நிருபர்களுக்கு  பயணங்கள்தான் மீண்டும் புதியவையாக மீட்டெடுக்கின்றன என்று நம்புபவள் நான். இம்முறை நான் தேடலுக்காக செல்லவில்லை. இது மனமகிழ்ச்சிக்காக செல்வது. இதுபோன்ற பயணங்கள் முடிந்து வரும்போதுதான் நான் எவ்வளவு உளவியல் ரீதியில் சோர்வாக இருந்திருக்கிறேன் என்பதை உணருவேன்.

முக்கியமாக வேலை இல்லாத நேரத்திலும் வேலையைப்பற்றியே நினைத்திருக்கும் நான் இதுபோன்ற பயணங்களில்தான் நான் நானாகவே இருப்பேன்.  மொத்தமாக வேலை இடத்து சிந்தனையை முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். தேடல் மனமகிழ்ச்சி தரவில்லையா என்று கேட்கிறீர்களா? தேடல்கள் இல்லாத வாழ்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்று கூறுபவள்தான் யோகி.   எழுத்துத் துறையை சார்ந்து இயங்குபவர்கள் நன்கு உணர்வார்கள் பயணத்தின் வேறுபாட்டை.

மசூரி மாதிரி படம்
இம்முறை நான் தேடலுக்குச் செல்லாவிட்டாலும், தேடலுக்கான துவக்க புள்ளி வைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். அந்த துவக்கபுள்ளி வைத்த இடம் லங்காவியின் மசூரி கல்லறை.

மசூரி. மலேசியர்களுக்கு இவளின் பெயர் புதிதல்ல. இவளின் கதை மலேசியர்களின் ஆரம்ப கல்வி பாடப்புத்தகத்திலேயே உள்ளது.  ஆனால், அது ஒரு நன்னெறிக் கதையாக மட்டுமே, அதுவும் துண்டு பகுதி மட்டுமே இருக்கிறது. அதைத்தாண்டி மசூரியின் வரலாறு குறித்தும் அவர்களின் பரம்பரை குறித்தும் பெரிய அளவில் செய்திகளோ பதிவுகளோ இல்லை என்பது வருத்தமான செய்திதான்.

அவளின் கதை உண்மையாக இருக்குமா என்ற கேள்வி நான் அவளின் கல்லறைக்கு போகும்வரை இருந்தது. காரணம் மலாய் சமூகத்தில் ‘Cerita Dongeng' என்று சொல்லக்கூடிய கற்பனைக் கதைகள் அதிகமாக உள்ளது அதற்கு காரணம்.  மசூரியின் 100 சதவிகிதம் மலாய் பெண்மணி கிடையாது. ஆனால், அவள் லங்காவி தீவில் பிறந்த இஸ்லாமியப் பெண்.

மசூரியின் வரலாறு 

18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவள்  மசூரி. மசூரி பிந்தி பண்டாக் மாயா என்பது அவளின் முழுப் பெயர் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாக் மாயா அவளின் தந்தை. தாய்லாந்தவர். தாய், மாக் அண்டாம், சீனர். இவர்கள் இருவரும் தாய்லாந்தின் கம்போங் கெமாலா, புக்கேட் எனுமிடத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். வேலைக்காக 18-ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் லங்காவி தீவின் உலு மலாக்கா எனும் இடத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்குதான் மசூரி பிறந்தாள். அவள் பிறக்கும்போதே மற்ற குழந்தைகளைவிட அதிக தேஜஸ்சுடன் இருந்தாளாம். முதல் பார்வையிலேயே கொள்ளை கொள்ளும் அழகு அந்த குழந்தை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.  10 வயது குழந்தையாக இருக்கும்போதே நற்பண்புகள் கொண்ட சிறுமியாகவும் அந்த கிராமத்தில் அனைவருக்கும் பிடித்த சிறுமியாகவும் மசூரி, மக்கள் மனதில் இடம் பிடித்தாளாம்.

இளமை பருவத்தில் மசூரி பேரழகியாக கருதப்பட்டாள். அவளின் அழகுக்கு ஈடாக மட்டுமல்ல குணத்திலும் ஈடாக அவளுக்கு மிஞ்சிய பெண் இல்லை என்றே கூறப்பட்டது. கிராமத்து மக்கள் அவள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தனர். இந்தச் செய்தி டத்தோ பெகெர்மா ஜெயா காதுக்கும் எட்டியது. அவர்  கெடா சுல்தானின் பிரதிநிதியாக லங்காவியை ஆட்சி செய்தார். அவளை அடைய வேண்டும் என்று டத்தோ பெகெர்மா திட்டம் தீட்டினார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான்  இந்தோனேசியாவைச் சேர்ந்த டெராமாங் என்பவர் மசூரியின் பெற்றோரிடம் அடைக்கலமடைந்தார். டெராமாங் ஓர் அனாதையாவார். ஆனால், கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் சிறந்தவராக இருந்தார். அவரை மசூரியின் பெற்றோர் தங்கள் வீட்டிலேயே தங்க வைத்தனர். மசூரியின் பெற்றோர் காட்டிய அரவணைப்பில் மகிழ்ந்து டெராமாங்கும் அவர்களை அம்மா-அப்பா என்றே அழைத்தாராம். மசூரிக்கு,  டெராமாங் கவிதை எழுதவும் பாடவும் கற்றுக்கொடுத்தார். இதனால், மசூரியின் பெயர் இன்னும் பிரபலமானது.

ரஷிட்
 உள்ளூரைச் சேர்ந்த போர் வீரரான வான் டெருஸ் என்பருக்கு மசூரியை பெரியோர்கள் சம்மதத்துடன் நிக்கா செய்யப்பட்டது. வான் டெருஸ் கெடா சுல்தானின் பிரதிநிதியாக இருந்த  டத்தோ பெகெர்மா ஜெயா மற்றும் வான் மஹோரா ஆகியோரின் தம்பியாவார்.

தனது கணவர் மசூரிமீது ஆசைப் படுவது  தெரிந்துக்கொண்ட டத்தோ பெகெர்மாவின் மனைவி வான் மஹூரா மசூரி மீது வஞ்சம் கொண்டார். தனது கணவர் ஆசைபடுவது  ஒரு புறம் இருக்க, தனது அழகுக்கும் குணத்துக்கும் போட்டியாக வந்தவள்தான் மசூரி என வான் மஹூரா கடும் சினம் கொண்டாள். ஊர் மக்கள் மசூரியின் புகழ் பாடுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மசூரியை வஞ்சம் தீர்க்க சரியான தருணத்தை வான் மஹூரா எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.
இச்சமயத்தில்தான், சியாம், கெடா மாநிலத்தின் மீது போர் தொடுக்க வருவதாக தகவல் கிடைத்தது.  மசூரியின் கணவனான வான் டெருஸ் போருக்கு புறப்பட்டார். அச்சமயத்தில் தன் அன்பு மனைவியான மசூரியை வான் டெருஸ்  அவளின் பெற்றோரிடம்  விட்டுச்சென்றார்.


மசூரி மரண சம்பவத்தை விளக்கும் படம்
ஒருநாள்  டெராமாங்கும் மசூரியும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வான் மஹூராவின் உதவி ஆட்கள் அதை வான் மஹூராவிடம் தெரிவித்தனர். இதுவே தக்க சமயம் என வான் மஹூராவின் குறுக்கு புத்தி திட்டம் தீட்டியது. டெராமாங்கும், மசூரிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக மஹூரா குற்றம் சாட்டினாள். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தனது கணவனான டத்தோ பெகெர்மாவை தூண்டிவிட்டாள். மசூரியின் குழந்தை டெராமாங்குக்குதான் பிறந்தது என வான் மஹூரா பழி சுமத்தினாள். எந்த விசாரணையுமின்றி மசூரியையும் டெராமாங்கையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இருவரையும் லங்காவி கடற்கரை  அருகில் இருந்த ஒரு புளியமரத்தில் கட்டி போட்டனர்.
மசூரியின் கணவன் வரும்வரை பொறுத்திருக்குமாறு கூறியும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில், அவளின் உயிருக்கு ஈடாக பொருள்களையும் சொத்துக்களையும் கொடுப்பதாக மசூரியின் பெற்றோர்கள் வேண்டினர். அனைத்தும் பலனற்றுப் போனது.

 ஈட்டியைக் கொண்டும் கூறிய ஆயுதங்களைக் கொண்டும் மசூரியை குத்தினார்களாம். எதுவும் அவளின் பரிசுத்த வதனத்தை துளைக்கவில்லை. அவளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. இறுதியாக சக்தி வாய்ந்த ஆயுதமே அவளின் உயிரை பறிக்கும் என்ற உண்மை தெரியவந்தது. அவளின் வீட்டிலிருந்த புனித ‘கிரிஸ்' கத்தி கொண்டு வரப்பட்டு அவளை குத்தினார்கள். அவளின் உடலிருந்து வெள்ளை ரத்தம் பெருக்கெடுத்து பூமியில் சிந்தியது. அதுவே அவள் தூய்மையானவள் என்பதை உறுதிபடுத்தியது. குற்றமிழைக்காத தன்னை நிந்தித்ததற்காக ஆத்திரமடைந்த மசூரி  இந்த லங்காவி தீவு 7 தலைமுறைக்கு நாசமாய் போகட்டும் என சாபமிட்டாளாம். டெராமாங்கும் கொல்லப்பட்டான். தன் மகளின் உயிரை மீட்க பணயம் வைத்த பொருள்களின் அருகிலேயே மசூரியின் உடலை அவளின் பெற்றோர் அடக்கம் செய்தார்களாம்.

போருக்கு போன மசூரியின் கணவன்  தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொருக்க முடியாமல் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு மசூரியின் பூர்வீகமான புக்கெட்டுக்கே போய்விட்டார். மசூரியின் மரணம் 1819-ஆம் ஆண்டு நடந்ததாக விக்கிபீடியா தகவல் கூறுகிறது.

சாப விமோர்ச்சனம்

மசூரியின் சாபம் படியே 1980-ஆம் ஆண்டு வரையில் லங்காவி தீவு எந்த மேம்பாடும் அடையமுடியவில்லை. அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் செயற்பாடுகளும் பயனின்றி போனதானக் கூறப்படுகிறது. அதாவது 1980-ஆம் ஆண்டுக்கு முன்புவரை லங்காவியில் மனிதர்களைவிட எருமை மாடுகளே அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதை லங்காவி மக்களும் கூற நான் கேட்டேன்.
1980-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான்  பல முறை லங்காவிக்கு பயணம் மேற்கொண்டு மசூரியின் கல்லறையை தேடியதாகவும், இறுதியில் மறைவான ஓர் இடத்தில்  மசூரி பெயர் பொறிக்கபட்ட அந்த கல்லறையை கண்டு பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மசூரி பரம்பரையைச் சேர்ந்த 7-வது தலைமுறை குழந்தை பிறந்த பிறகே லங்காவி சாபத்திலிருந்து விமோர்சனம் அடைந்ததாக நம்பப்படுகிறது. (சிலர் அது 8-வது வாரிசு எனவும் கூறுகின்றனர்)  லங்காவி வாசிகள் இந்த சம்பவத்தை (கதையை) அதிக தீவிரமாக நம்புகின்றனர். காரணம் உண்மையில் லங்காவித் தீவு  7 தலைமுறைக்குப்  பிறகுதான்  மேம்பாடு அடையத்தொடங்கியது என்பது வரலாற்று உண்மை. லங்காவி மேம்பாட்டின் முக்கிய நபராக 4-வது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இருக்கிறார். லங்காவி மகாதீரின் தீவு என்றே சிலர் வர்ணிப்பார்கள்.

நோங் மேய் என அழைக்கப்படும் வான் அய்ஷா வான் நவாவி மசூரியின் 7-ஆம் தலைமுறை பெண் வாரிசு; அவ்வப்போது லங்காவிக்கு வந்து மசூரி கல்லறையை தரிசித்துவிட்டுச் செல்கிறார். கெடா சுல்தான், அவருக்கு  குடியுரிமை வழங்கி தங்குவதற்கான இடவசதியையும் செய்து தருவதாக சலுகைகள் வழங்கியும்  அதை அவர் மறுத்துவிட்டாராம்.

எங்களின் சுற்றுலா வழிகாட்டி ரஷிட் சொன்னார், 7-வது தலைமுறை வாரிசே நமக்கு பேரழிகியாக தெரியும் போது மசூரியின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லைதான். வான் அய்ஷா லங்காவிக்கு குடி பெயராமல் இருப்பதுவே நல்லது.  மேலுமொரு சாபத்தை இந்த லங்காவி தாங்காது. வான் அய்ஷா வராமல்  இருப்பதுவே நல்லது என்று மீண்டும் மீண்டும் கூறினார்.

மசூரியின் கல்லறை இருக்கும் இடத்தில் தினமும் இசைக்கருவிகளை பெண்கள் இசைக்கிறார்கள். குழுவாக பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அவளின் கல்லறையில் விட்டு விட்டு ஒரு சுகந்த நறுமணம் வருவதாக சுற்றுப்பயணிகள் கூறுகிறார்கள். (அந்த இடத்தின் பராமரிப்பாளர்களும் பலபேர் இப்படி கூறுவதாகக் கூறினர். எனக்கு எந்த நறுமணமும் வரவில்லை என்பது சத்தியம்) கல்லரையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக்கொண்டிருக்கும் மசூரியின் ஆத்மாவை இன்னும் சாந்தி அடையச் செய்யும் காட்சியாகவே அங்கு நடக்கும் அந்த அமைதியான கேளிக்கைகள்  தெரிந்தன.


புனித கிணறு
மசூரி, மலேசியப் பெண்களுக்கு அதிகம் பிடித்தவள். அவள் தன் அழகைக்கொண்டு  நிலைத்தவள் அல்ல. தனது சாபத்தின் மூலமாக தன் பலத்தையும் பரிசுத்தத்தையும் நிருபித்தவள்.  அவளின் கல்லறைக்கு அருகில் இருக்கும் கிணற்று நீரில் அங்கு வருபவர்கள் முகம் கழுவிக்கொள்கிறார்கள். அதற்கான உண்மைக்காரணம் தெரியாவிட்டாலும், அந்த நீரில் முகம் கழுவிக்கொண்டால் நல்ல சகுனம் கிட்டும் எனவும் முகத்திற்கு புதுப் பொழிவு கிடைக்கும் எனவும் அது மசூரியின் ஆசீர்வாதம் எனவும் கூறுகிறார்கள். (அந்த கிணற்று நீரில்தான் மசூரி தினமும் குளித்து துணி துவைத்தாளாம். மேலும், லங்காவியிலுள்ள மற்ற தண்ணீரை காட்டிலும் இது அதிகமாக குளிர்ந்து இருக்குமாம். எம்மாதிரியான வரட்சியிலும் இந்த கிணற்று நீர் வர்றாதாம். இது அங்கிருந்த குறிப்பில் பெறப்பட்ட தகவல்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த குளத்து நீரில் சுமார் ஒரு வாரகாலத்திற்கு மல்லிகைப் பூ மணம் இருந்தது என ரஷிட் கூறினார். இந்த மசூரி கல்லறை இருக்கும் இடத்தில் அதிசயம் நடப்பது உண்மை என ரஷிட் கூறினார்.  நானும் அந்த நீரில் முகம் கழுவிக்கொண்டேன்.  எனக்கு ஆத்மாநாமின் ‘அழிவு' என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது ...

‘என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை'

குறிப்பு:

கல்லறை விளக்கம்
போருக்கு போன மசூரியின் கணவன் வான் டெருஸ் போரில் வெற்றிபெற முடியாமலேயே தப்பித்து வந்தார். சியாம் போர்வீரர்களுக்கு பயந்து தலைமறைவான டத்தோ பெகெர்மா ஜெயாவை சியாம் போர்வீரர்கள் கண்டுபிடித்துக் கொன்றனர். வான் மஹூராவும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.  சியாம் போர் வீரர்கள் லங்காவியை தாக்கி நாசம் செய்ததாக விக்கிபீடியா தகவல் கூறினாலும்  அதற்கான தரவோ அல்லது ஆதாரமோ எங்கும் ஆவணம் செய்யப்படவில்லை. பின்னாளில் டத்தோ பெகெர்மா ஜெயாவின் வாரிசான வான் முகமட் அலிக்கு, அவரின் தந்தையின் பதவியே கொடுக்கப்பட்டதாம். ஆனால், அவரால் லங்காவியின் வீழ்ச்சியை தடுக்கமுடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

உண்மையில், மசூரி கொல்லப்பட்டதும் அவள் சாபமிட்டதும் உண்மையாக இருக்கலாம். ஆனால், அந்தச் சம்பவத்தை பின்னி பல கதைகள் உருவாகிவிட்டன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக தொடங்கி நகர்ந்து வந்தாலும் முடிவு ஒன்றாகதான் உள்ளது. அதில் எந்தக் கதை அசல் என்பது கூறுவது கடற்மணலை எண்ணுவதற்கு சமம். மசூரியை இந்தியப் பெண் என நம்மவர் கூறுவது இன்னொரு காமெடி.

மசூரியின் கதையை ‘Sumpahan Mahsuri'  என்ற பெயரில் இயக்குநர் ஜாமில் சூலோங் கூட்டணியால் படமாக்கப்பட்டது.  துங்குவே கதை எழுதி அந்த படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது. ஆனால், 1956-ஆம் ஆண்டு முதன் முதலாக மசூரி என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்திருப்பதாக தகவல் கூறினாலும் அதற்கான  பதிவுகள் கிடைக்கவில்லை.
மசூரி மாதிரி படத்தை நினைவுச் சின்னமாக வான் அய்ஷாவின் கொடுக்கப்பட்டபோது

வான் அய்ஷா தனது 14-வது வயதில்

இளைமையில்  வான் அய்ஷா

வான் அய்ஷா தனது குடும்பத்தாருடன்இயக்குநர் ஜாமில் சூலோங்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக