சனி, 20 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 4

லிட்டல் இந்தியா எனும் ‘செட்' கலைக்கப்படும்
100 குவார்ட்டஸ் 

கடந்த தேடலில்...
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?  விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக எத்தனை பேர் போர் கொடிபிடித்தாலும், அது சொந்த நிலத்தில் உரிமையாளர் பராமரிப்பில் இருக்கிறது. பொது சொத்தாக இருப்பின் கதையே வேறாக இருந்திருக்கும். சட்டபடி நிலத்தின் உரிமையாளர் எடுக்கும் முடிவே நிரந்தரமாகும். இந்தப் பிரச்னையில் 100 குவார்ட்டஸ் வீடமைப்புப் பகுதியின் நிலை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இனி

இனியும் இது குறித்துப் பேசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. காரணம் நான் எனது நிருபர் அனுபவத்தில் பல  மக்கள் பிரச்னைகளைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த செந்தூல் ரயில்வே வீடமைப்புப் பகுதி, புத்ரா ஜெயா நிலப்பகுதி, டெங்கில் தாமான் பெர்மாத்தா வீட்டுப்பிரச்னை போன்றவைகளையே உதாரணத்தில் கொள்ளலாம். எத்தனை எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் அரசுக்குத் தேவை எனும்போது அழிவு என்னவோ நிச்சயம்தான்.

இன்று அழகுபடுத்தபட்ட ‘லிட்டல் இந்தியாவில்' கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களின் நடமாட்டம் குறைந்து பிற இனத்தவர்கள் மற்றும் அந்நிய நாட்டவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதை பார்க்கமுடிகிறது. லிட்டல் இந்தியா உருவானால் இந்தியர்களுக்கு வியாபார வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், அவர்கள் பொருளாதார ரீதியில் நன்மையடைவார்கள் என்றும் கூறப்பட்டது. உண்மைதான் பிரிக்பீல்ட்ஸில் மது கடை வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இந்தியர்கள்தான் அதிகமான மதுகடைக்கு அங்கு உரிமையாளராக இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை குறித்து சொல்லத்தேவையில்லை.

நமது தமிழ்மொழியில் இருக்கும் ‘குடியும் குடித்தனமும்' என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அங்கு பார்க்கலாம் தாராளமாக. அதோடு ‘பார்'களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. கடந்த வாரங்களில் பிரிக்பீல்ட்ஸின் நுண் கலை கோயிலில் மாபெரும் கலை திருவிழா 4 நாள்களுக்கு நடந்தது. நம் இந்திய மைந்தர்கள் மது கடையில் காட்டிய ஆர்வத்தை, கொஞ்சம் கலையிலும் காட்டியிருக்கலாம். என்ன செய்வது? (இது குறித்து வேறொரு பதிவில் பேசுவதே சிறப்பாக இருக்கும் )
பிரிக்பீல்ட்ஸ் வரலாறு குறித்து பாலன் மோசஸ் என்பவர் 2007-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எழுதியுள்ளார். பிரிக்பீல்ட்ஸில் பிறந்தவரான பாலன் மோசஸ் அந்தப்புத்தகத்தில் அவர் அனுபவங்களையும், சில பதிவுகளையும் செய்துள்ளார். அந்தப் புத்தகம் ஆய்வுப்பூர்வமான தகவலைக் கொண்டிருக்காவிட்டாலும், பழைய  பிரிக்பீல்ட்ஸ் கதையைப் புகைப்படங்களோடு பேசவே செய்கிறது. மேலும், பிரிக்பீல்ட்ஸ் குறித்து ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
தமிழ் நாட்டுச் சினிமாவில்  பல புராதன திரைப்படங்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் கலை இயக்குநர் தோட்டா தரணி ‘செட்' போட்டால் அது செட் என்று கண்டு பிடிக்கவே ரொம்ப கஷ்டம் என்று கூறுவார்கள். படம் பார்ப்பவர்களுக்கும் ‘செட்' என்றே தெரியாத பிம்பத்தை தோட்டா தரணியால் ஏற்படுத்த முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் பிரிக்பீல்ட்ஸ் எனும் ‘லிட்டல் இந்தியா' டத்தோ சரவணன் போட்ட மாபெரும் ‘செட்'-ஆகும். அந்த செட்டிற்குள் நாம் நடிகர்கள் என்றே தெரியாமல் மிக அழகாக நடித்துக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் நடிப்பதற்கு தள்ளவிடப்பட்டிருக்கிறோம்.  ஒருநாள்  படம் முடிந்து ‘செட்' கலைக்கப்படும்போது, ‘லிட்டல் இந்தியா' எனும் மாயமும் கலைக்கப்படும். நமது வேஷமும் உரிக்கப்படும். அப்போது  பிரிக்பீல்ட்ஸில் நமது அடையாளத்தைத் தொலைத்த  உண்மையைத் தாமதமாகவே உணர்ந்திருப்போம்.
குறிப்பு: நான் இந்தத் தொடரை எழுதத் தொடங்கும்போது விவேகானந்தா ஆசிரமப் பிரச்னையிலிருந்துதான் தொடங்கினேன். அந்த முதல் தொடரில், உலகம் முழுக்கப் பயணம் செய்த சுவாமி விவேகானந்தா, 1893-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார் என்றும், அவர் வருகையின் நினைவாக, அதைப் பதிவு செய்யும் பொருட்டு  மலாயாவைச் சேர்ந்த சிலோன் தமிழர்கள் அழகிய விவேகானந்தரின் வெண்கலத்தால் ஆன சிலையை நிறுவினர் என்றும் கூறியிருந்தேன்.
“Messiah of Resurgent india (2003) எனும் நூலில் 1893-ஆம் ஆண்டு தொடங்கி ஜப்பான், சீனா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற தேசங்களில் அவர் பயணம் செய்ததாகவும், இந்துமத உரை நிகழ்த்தியதாகவும் பதிவு இருக்கிறது. ஆனால், நமது நாட்டிற்கு (மலேசியாவிற்கு) சுவாமி விவேகானந்தா வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. வாய்மொழியாகப் பலரும் பல்வேறு தகவல்களை இங்கு கூறிக்கொண்டிருக்கின்றனர். எனவே, அதில் எது நம்பகத்தன்மையானது என்பதை  ஊடகங்களில் பதிவு செய்பவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. சொல்லப்படும் கருத்தை அப்படியே நம்பி எழுதுவதால் மக்கள் குழப்பம் அடையலாம். மேலும் இக்கட்டுரை எழுதுவதில் உங்கள் நோக்கம் எதுவாயினும், வரலாற்று கருத்தை எந்நோக்கத்தில் எழுதினாலும் அது குறைந்த பட்ச ஆதாரங்களைக்கொண்டிருக்க வேண்டும் என்பதே நமது அவா”  என்று வல்லினம் குழுவினர் வரலாறு குறித்து எழுதுவதின் நம்பகத்தன்மையை எனக்கு சுட்டிக்காட்டினர். காரணம், சுவாமி விவேகானந்தரின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான
<http://vivekananda.gujarat.gov.in/international-visit.aspx>  என்ற அகப்பக்கத்தில் அவர் மலாயாவுக்கு வந்ததற்கான எந்தப் பதிவும் இல்லாதபோது எதன் அடிப்படையில் அதை எழுதினீர்கள் என்பது நியாயமான கேள்விதான். அதற்கு ஏற்றார்போல் வாய்வழி மூலமே அவர் வருகையை இங்கு பேசுகிறார்களே தவிர உண்மையில் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்நிலையில் சுவாமி விவேகானந்தரோ அல்லது மற்ற மற்ற உலக புகழ்வாய்ந்த தலைவர்களோ நமது நாட்டிற்கு வந்தார்கள் என்பதை நிறுபிக்க ஆய்வுப்பூர்வமான ஆதாரங்களை ஆவணப் படுத்துவதின் முக்கியத்துவத்தை வாசகர்களும் எழுத்தாளர்களும், குறிப்பாக தலைவர்களும் உணர வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக