ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 2

லிட்டல் இந்தியாவில் இந்தியர்களின் அடையாளம் அழியும்

பிரிக்பீல்ட்ஸ் என்றாலே கட்டாயமாக  சில இடங்கள் அதன் அடையாளமாக நம் நினைவுகளில் வந்துபோகும். மஹா விஹாரா புத்தர் கோயில்,  தேவாலயங்கள், விவேகானந்தா ஆசிரமம், கற்பக விநாயகர் கோயில் மற்றும் 100 குவார்ட்டஸ் என்று அழைக்கக்கூடிய குடியிருப்புப் பகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். (உண்மையில் பிரிக்பீல்ட்ஸை அடையாளப்படுத்துவதற்குப் பிரபலங்களும் இருக்கிறார்கள்) புத்தர் கோயில் சிலோன்காரர்களின் பராமரிப்பில் உள்ளது. தேவாலயங்கள் அரசாங்க ஆதரவு இல்லாமலே பராமரித்துக்கொள்ளும் பலம் கொண்டுள்ளன. விவேகானந்தா ஆசிரமம் இலங்கை தமிழர்களின் பராமரிப்பில் உள்ளது. கற்பக விநாயகர் கோயில் உட்புறத்தில் அமைந்துள்ளதால் இப்போது அதற்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம். 100 குவார்ட்டஸ் வீடமைப்புப் பகுதி இடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கிறது. பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் அமைந்திருக்கும் பல இந்தியக் கடைகள் இந்தியர்களுக்கே சொந்தமில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சீனர்களுக்குச் சொந்தமானகடையை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வந்தால் அது இந்தியர்களுக்காக ஒதுக்கிய இடமாகிவிடுமா? அல்லது லிட்டல் இந்தியா என்ற பெயர்தான் உண்மையாகிவிடுமா?
பிரிக்பீல்ட்ஸ் வட்டாரம்  2008-ஆம் ஆண்டு மேம்பாடு காணப்பட்டு 2010-ஆம் ஆண்டு ‘லிட்டல் இந்தியா' என்று பெயர் மாற்றம் கண்டது. இந்தத் திட்டம் அப்போது கூட்டரசுப் பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்துறைத் துணை அமைச்சராக இருந்த டத்தோ எம்.சரவணனின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டது.  அவர் வகித்திருந்த பதவிக்குக் குறிப்பிட்ட 5 வருடங்களில் என்ன செய்தார்? என்று கேட்டால் அவர் கைகாட்டுவதற்கு ஏதுவாக அமைந்ததுதான் ‘லிட்டல் இந்தியா'.

பிரிக்பீல்ட்ஸ்  வாசிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வாகனம் நிறுத்தும் வசதிகளை மேம்படுத்தி, கட்டடங்களுக்கு புதுசாயம் பூசுவதற்கும், பூக்கடைகளை ஒரே வரிசையில், கட்டித்தருவதற்கும் இன்னும் சில இத்தியாதி இத்தியாதிகளுக்கும் செலவு செய்த பணம் 35 கோடி வெள்ளி.(இப்போது டத்தோ எம்.சரவணன் இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சராக  இருக்கிறார்)

அந்தச் சாயம் பூசிய சாலையைத் திறக்க நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறப்பு வருகையளித்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திற்கு  ‘லிட்டல் இந்தியா'  என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டி திறந்து வைத்தனர். வரலாற்றுப் பதிவை செய்திருக்கும் இந்த விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங், இந்திய மக்களின் சேவையைக் கருத்தில் கொண்டு, லிட்டல் இந்தியா எனும் ஒரு இடத்தை இந்திய மக்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தது, மலேசிய  பிரதமரின் பெருந்தன்மையை காட்டுவதாகக் கூறியிருந்தார். (இப்போது நினைக்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது)  அன்றைய தினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சரவணன்,நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்திலேயே இந்த மேம்பாட்டை மேற்கொண்டதாகக் கூறியிருந்தார். 4 ஆண்டுகள் முடிந்தவிட்ட நிலையில் லிட்டல் இந்தியாவில் உயர்ந்தது என்ன? வானுயரக் கட்டடங்கள். யார் கட்டியது? இந்திய தொழிற்முனைவர்களா? அல்லது இந்திய நிறுவனங்களா? அல்லது இந்தியர்களுக்காகவாவது கட்டப்பட்டதா?
இந்தியர்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் பிரிக்பீல்ட்ஸும்  அடங்கும். ஆனால், தற்போது புதிதாகக் கட்டப்பட்ட அதிநவீன பேரங்காடிகளும், கண்ணாடிக் கட்டடங்களும், இன்னும் கட்டப்படவிருக்கும் கட்டடங்களும் நிச்சயமாக நமக்கானதாக இல்லாத வேளையில், பிற இனத்தவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கப்போகிறது என்பது உண்மை. எனது தேடலின் போது பிரிக்பீல்ட்ஸ் தபால் அலுவலக எதிர்ப்புறமுள்ள  ஒரு பார்க்கிங் இடத்திற்கு உட்புறம் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யும் கடைவரிசையைக் கண்டேன். குறைந்தது 4 கடைகளாவது இருக்கும். அந்த இடம், லிட்டல் இந்தியாவுக்கு உட்பட்டதா? அல்லது இந்தியர்கள்தான் அவர்களுக்கு அந்த இடத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
பிரிக்பீல்ட்ஸ் சாலையில்  2010-ஆம் ஆண்டுக்கு முன்பு  பயணித்தவர்கள் அறிவார்கள். நாம் அந்தச் சாலையில் பயணிப்பது எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று. இப்போது, இந்தியர்கள் கடைக்குச் செல்ல வேண்டும் என்றால் ஒரு பிரிக்பீல்ட்ஸ்சையே சுற்றித்தான் வரவேண்டியுள்ளது. இடத்தை சற்று தவறவிட்டாலும் மீண்டும் ஒரு பிரிக்பீல்ட்ஸையே வட்டமடிக்க வேண்டிய நிலை. இது ஒரு பிரச்னையா? எனலாம். தினமும் போய் வருபவர்களுக்கு பழகிவிட்ட நிலையில், ஆடிக்கும் அமாவாசைக்கும் போய்வரும் என்னைப் போன்றவர்களுக்கு இது பெரிய பிரச்னையாகத்தான் உள்ளது. அதோடு, அவ்வப்போது கலைநிகழ்ச்சிகள், கலை இல்லாத நிகழ்ச்சிகள் என்று சாலையின் ஓரம் செய்யப்படும் கோலாகல விழாக்களில் நெரிசல் கழுத்தை நெரிக்கிறது.
என்னுடைய ஆதங்கம் இந்த லிட்டல் இந்தியாவில் ஏன் இந்தியர்கள் வாழ்ந்த பல இடங்கள் அழிவை நோக்குகிறது என்பதுதான்.  உதாரணமாக 100 ஆண்டுகள் வரலாற்றை எட்டிப்பிடிக்கப்போகும்  100 குவார்ட்டஸின்  வீடுகளில் மிஞ்சி இருக்கும் சில வீடுகளும் இடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. இந்தியர்கள் வாழ்ந்த அந்த வீடுகளுக்கு மேல்தான் கேஎல்  செண்ட்ரலும் கட்டப்பட்டிருக்கிறது.
அண்மையில் நான் நேர்காணல் கண்ட ஹிண்ராப் தலைவர் பி.உதயகுமார் இந்த 100 குவார்ட்டஸ் குறித்த ஒரு தகவலைச் சொன்னார்.

-தேடல் தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக